Thursday, May 15, 2014

குறி சொல்லி நிஸார் கப்பானி தமிழில்: ரவிக்குமார்



பயம் நிறைந்த விழிகளோடு அமர்ந்திருந்தாள்
சோழிகளைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி
சொன்னாள்: " துயரப்படாதே மகனே! நீ காதலில் விழ சபிக்கப்பட்டிருக்கிறாய்"
மகனே! மனம் கவர்ந்த ஒருத்திக்காகத் 
தன்னை அர்ப்பணிப்பவனும் ஒரு 
தியாகிதான்

********
எத்தனையோ காலமாக குறி சொல்கிறேன்
ஆனால் உனக்கு விழுந்த சோழிபோல எவருக்கும் விழுந்ததில்லை
எத்தனையோ காலமாகக் குறி சொல்கிறேன்
உனது துயரத்தைப்போல ஒருபோதும் நான் பார்த்ததில்லை
என்றென்றும் படகு ஓட்டுவதே உன் தலைவிதி
துடுப்பே இல்லாமல், காதல் என்னும் கடலில்
உனது வாழ்க்கை 
கண்ணீர்ப் புத்தகம்
நீருக்கும் நெருப்புக்கும் இடையில் 
அது சிறைபட்டுக் கிடக்கிறது

*********
அத்தனை வலியிலும்
அத்தனை துயரத்திலும் 
இரவு பகல் 
காற்றடிக்கும்போதும் மழைக்காலத்திலும் 
புயல் அடிக்கும் பொழுதானாலும்
காதல்- அதுதான் மகனே! 
தலைவிதிகளிலெல்லாம் சிறந்தது

************
உன் வாழ்க்கையில் ஒரு பெண் வருவாள் மகனே! அவளது விழிகள் அத்தனை அழகாயிருக்கும்
கடவுளுக்கு நன்றி
அவளது வாயோ ரோஜாப்பூ சிரிப்பெல்லாம் 
சங்கீதம்
வாழ்க்கைமீது அவளுக்கிருக்கும் நாடோடித்தனமான பித்து 
உன் காதலி அவளே உன் உலகம்
ஆனால் மழை நிரம்பியது உன் வானம்
உன் பாதைகள் தடுக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றன மகனே! 
அரணுக்குள் உறங்குகிறாள் உன் தேவதை
அவளது தோட்டத்தின் சுவரை நெருங்குபவர் யாரோ அறைக்குள் நுழைந்து தனது ஆசையைச் சொல்பவர் யாரோ அவளது கேசத்தைக் கோதி சரிசெய்பவர் யாரோ அவர் அவளை இழந்துவிடுவார் மகனே! இழந்துவிடுவார். 

***********
அவளை எல்லா இடங்களிலும் தேடி அலைவாய், மகனே கடல் அலைகளிடம் கேட்பாய் கடற்கரைகளிடம் விசாரிப்பாய்
சமுத்திரமெங்கும் பயணிப்பாய்
ஆறெனப் பெருகும் உன் கண்ணீர் 
உன் வாழ்க்கை முடியும் தருணத்தில் 
நீ கண்டடைவாய் 
உன் காதலிக்கு நாடில்லையென்று 
வீடில்லையென்று
முகவரியில்லையென்று
புகையின் தடயத்தைத்தான் நீ
பின் தொடர்ந்துகொண்டிருந்தாயென்று

மகனே நீ கண்டுகொள்வாய்
நாடும் இல்லாத வீடும் இல்லாத 
ஒரு பெண்ணைக் காதலிப்பது
எத்தனை கடினமானதென்று

Wednesday, May 14, 2014

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை தமிழில்: ரவிக்குமார்


நான் என் கனவுகளைக் கொண்டு
பித்தளை பூச்சாடியொன்றைச் செய்கிறேன்
அழகான நீரூற்று நடுவில் ஒரு சிலை
உடைந்த இதயத்தால் ஒரு பாடலைச் செய்கிறேன்
உன்னிடம் கேட்கிறேன்: 
என் கனவுகள் உனக்குப் புரிகிறதா?
சிலநேரம் புரிகிறது என்கிறாய்
சிலநேரம் புரியவில்லையென்கிறாய்
எப்படியானாலும் பிரச்சனையில்லை
இனியும் கனவுகாண்பேன்

லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதை தமிழில்: ரவிக்குமார்



கூண்டு ஒன்றிலிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பெண் ஒருத்தியைப் பார்த்தேன்

அவளுக்குச் சிறகுகள் இருந்தன

அந்தக் கூண்டின் கதவு அவளது சிறகுகளின் மேல் 

விழுந்தது


அவளது நீண்ட சிறகுகள் தரையில் இழுபட்டன 

அவள் எழுந்து நிற்க முற்பட்டாள் 

ஆனால் தனது சிறகுகளைக் 

கதவின் சுமையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பலம் அவளுக்கில்லை

அவள் தனது சிறகுகளால் பிடிபட்டாள் 

சிறைப்பட்டாள்

Monday, May 12, 2014

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை



அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம் 

எப்போதும் 

உனக்கு முன்னால் 

கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறது

சாகும்வரையிலும்

அதை நீ அடைய முடியாது


ஆனால் உன் பிள்ளைகளின் பிள்ளைகள்

அவர்களின் பிள்ளைகள்

இட்டுச் செல்லப்படுவார்கள் ஒரு இடத்துக்கு

அவர்களுக்கு முன்னால்

கொஞ்சதூரத்தில்தான் இருக்கும் 

அந்த நிலம் 

Sunday, May 11, 2014

Phule-Ambedkar 'Samata Ratna Award' to Arundhati Roy



Samata Parva Pratishtan conferred the tenth annual Mahatma Jotiba Phule-Dr Babasaheb Ambedkar Samata Ratna award on Arundhati Roy, renowned author and Booker Prize winner, on Saturday, 10 May 2014, in Yavatmal, Maharashtra.


Prof Madhav Sarkunde, spokesperson for the trust, said, “Arundhati Roy’s introduction to the recently published annotated edition of Dr Babasaheb Ambedkar’s Annihilation of Caste has touched us. Babasaheb was disallowed by caste Hindus from delivering this address in 1936. Arundhati Roy’s comprehensive and incisive introduction corrects the historic injustice done to Dr Ambedkar by non-Dalits. This introduction, we hope, will help Babasaheb’s revolutionary text to reach a wide national and international readership. This is a landmark effort and the Samata Parva feels honoured that Ms Roy has accepted this honour.”


In her keynote address to an audience of over five thousand people, Ms Roy said, “This award to me is as important, if not more important, than the Booker prize. I am moved and truly honoured.”


Prior recipients include the late Narayan Surve (Dalit poet); Baburao Bagul (well-known Dalit writer), political thinker Kancha Ilaiah, social historian Gail Omvedt, economist Bhalchandra Mungekar (currently Rajya Sabha MP), Dalit thinker Dr Yahswant Manohar, social historian Braj Rajan Mani (author of Debrahmising History), and social activist from Gujarat Martin Macwan.



Thursday, May 8, 2014

கீழத்தஞ்சை வரலாறு

தோழர் ஜி ராமகிருஷ்ணன் எழுதிய ' கீழத் தஞ்சை : விவசாயிகள் இயக்கமும் தலித் மக்களின் உரிமைகளும்'என்ற சிறு நூலின் அறிமுகக் கூட்டம் சென்னை கிண்டியில் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தோழர் ஆர்.நல்லகண்ணு பேசிக்கொண்டிருக்கிறார். நான் பார்வையாளராக கலந்துகொண்டிருக்கிறேன். விவசாயத் தொழிலாளர் போராட்ட வரலாற்றைத் தோழர்கள் எப்படி விவரிக்கிறார்கள் என்பதைக் கேட்கவேண்டும் என்ற ஆர்வம். நானும் கீழத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பது ஒரு கூடுதல் காரணம். அந்த நூலை முன்பே வாசித்துவிட்டேன். அதைப் பற்றிப் பின்னர் எழுதுவேன். 

வேண்டுகை கே.சச்சிதானந்தன் தமிழில்: ரவிக்குமார்


அன்பு மகனே! இந்தா இந்த ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக்கொள்

கஃபூரைக் கொன்றுவிடாதே

அவன் என் பேரன்


அன்பு மகனே! இந்த ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொள்

இஸ்மாயிலை விட்டுவிடு

அவன் என் உறவுக்காரன்


அன்பு மகனே! இந்த திராட்சைகளை எடுத்துக்கொள்

ஓர்ஹானை ஒன்றும் செய்துவிடாதே

அவன் என் பக்கத்துவீட்டில் வசிக்கிறான்


அன்பு மகனே! இந்தா இந்த ஆலிவ்களை கொண்டுபோ

நிஸாரை விட்டுவிடு

அவனும் ஒரு மனிதன் தான்


இந்தக் கிழத்தைச் சுடு

சுதந்திரம் செத்துப்போன நாட்டில்

வாழ்வதற்கு நான் விரும்பவில்லை


கடவுளையும் கொன்றுபோடு

வெறுப்பு ஆட்சிசெய்தால்

கடவுளுக்கு ஏது இடம்.


- எனது மொழியெங்கும் அவளின் ரத்தச் சிதறல்

தோட்டாக்களால் துளைக்கப்பட்ட சொற்களால் நான் இதை எழுதியுள்ளேன்

அதனால்தான் இதில் ரத்தம் ஒழுகுகிறது


கவிதை இதற்கு சாட்சியாக இருக்குமெனில்

அது விஷத்தை சுவாசிக்கட்டும்

Tuesday, May 6, 2014

காதலின் ஒப்பீடு



நிஸார் கப்பானி

தமிழில் : ரவிக்குமார் 


உனது மற்ற காதலர்களைப் போன்றவன் அல்ல நான் பெண்ணே! 

ஒருத்தன் உனக்கு மேகத்தைத் தருவானெனில்

நான் மழையைத் தருவேன்

ஒருவன் உனக்குக் கைவிளக்கைத் தந்தால்

நான் நிலவைத் தருவேன்

அவன் உனக்கு கிளைகளைத் தருவானெனில் 

நான் மரங்களைக் கொடுப்பேன்

யாரேனும் உனக்குக் கப்பலைத் தந்தால்

நான் பயணத்தைத் தருவேன்

Monday, May 5, 2014

தேமுதிக வாக உருவெடுக்கப்போகும் காங்கிரஸ்



இன்று ஒரு ஆங்கில நாளேட்டின் செய்தியாளரோடு தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றார். கன்யாகுமரி, சிவகங்கை, தேனி,கோவை, மயிலாடுதுறை எனப் பட்டியலிட்டார். மற்ற தொகுதிகளில் முப்பது முதல் அறுபதாயிரம் வாக்குகளைப் பெறும் என்றார். இந்த வாக்குகள் சிதறியதால் ஆளும் கட்சிதான் பலன் அடையப்போகிறது என்றார். 


தேர்தல் முடிவுகள் வெளிவந்ததற்குப் பிறகான கணக்குகளின்போது திமுக + காங்கிரஸ் வாக்குகளைக் கூட்டினால் பல இடங்களில் அது வெற்றி பெற்றிருக்கலாம் என்ற செய்தியை ஊடகங்கள் வெளியிடக்கூடும். அதை வைத்து திமுக காங்கிரஸ் கூட்டணி அமையாதது பெரிய தவறு எனவும் வாதிடக்கூடும். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால் தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சாரமே வேறாக இருந்திருக்கும். ஈழப் பிரச்சனை வலுவாக எழுப்பப்பட்டிருக்கும்; காங்கிரஸ் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் திமுக நியாயப்படுத்தவேண்டியிருந்திருக்கும். தற்போது இருந்ததைப்போல ' தாக்குதல்' நிலையில் இல்லாமல் ' தற்காப்பு' நிலைக்கு திமுக பிரச்சாரம் தள்ளப்பட்டிருக்கும். தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது arithmatic அல்ல chemistry தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 


இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கப்போகும் வாக்குகள் 2009 தேர்தலில் தேமுதிக வாங்கிய வாக்குகளை ஒத்திருக்கக்கூடும். அது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் பேர சக்தியை அதிகரிக்கச் செய்யலாம். தனது நிலைபாட்டில் அக்கட்சி உறுதியாக இருந்தால் 2016 இல் அதன் தலைமையில் மாற்று அணி ஒன்று அமையக்கூடிய வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

மெஜாரிட்டி ஆட்சியின் கேடு!



இந்தத் தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்ற இலக்கோடு பாஜக பிரச்சாரம் செய்தாலும் அதற்கு 172 இடங்களாவது கிடைக்குமா என்ற நிலைதான் உள்ளது. பாஜகவுக்கு மட்டுமல்ல எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.


ஒரு கட்சி ஆட்சி அமைவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதே எனது கருத்து. ஒரு கட்சி ஆட்சியின்போதும் கூட்டணி ஆட்சிகளின்போதும் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை உணரலாம். ஜனநாயக ஆட்சி முறையைவிட சர்வாதிகார ஆட்சி முறையைத்தான் நமது தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதைப் பல உதாரணங்களின்மூலம் நிரூபிக்க முடியும். ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவேண்டும் என்பதுகூட இல்லை அதற்கு 200 இடங்கள் கிடைத்துவிட்டாலே ஆபத்துதான். ஏனெனில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க மாநிலக் கட்சிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. 200 இடங்களை வைத்துக்கொண்டே தனிக்கட்சி ஆட்சிபோல ஆளமுடியும் என்பதைக் கடந்தமுறை காங்கிரஸ் காட்டிவிட்டது. 


2004 ஆம் ஆண்டைப்போல 2009 தேர்தலிலும் காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தால் இடதுசாரிக் கட்சிகளும் அதே அளவு இடங்களைப் பெற்றிருந்தால் இந்த அளவுக்கு மோசமான ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்திருக்காது. 


கூட்டணி ஆட்சி என்றால் அதற்குக் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் இருக்கவேண்டும். அந்த ஆட்சியை வழிநடத்த கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும். பெரிய கட்சியின் விருப்பத்துக்கு அதை விட்டுவிடாமல் இவை இரண்டும் கட்டாயமாக்கப்படவேண்டும். 


உருவாகப்போகும் ஆட்சியில் மாநிலக் கட்சிகளுக்கு முக்கிய பங்கிருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த வாய்ப்பைப் பெறப்போகும் கட்சிகள் மாநில நலன்களை முன்னிறுத்தி அதுவொரு கூட்டணி ஆட்சியாக மட்டும் இருந்துவிடாமல் கூட்டாட்சியாக மாறுவதற்கு வழிவகுக்கவேண்டும் என்பதே என் அவா.

2014 பொதுத் தேர்தலும் ஊடகங்களின் பாத்திரமும்

2014 பொதுத் தேர்தலும் ஊடகங்களின் பாத்திரமும் என்பதுகுறித்து ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் 2.5.2014 மாலை  ஒரு விவாதம் நடைபெற்றது. திரு என்.ராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விவாதத்தில் திரு ராபின் ஜாஃப்ரி,திரு சசிகுமார், திரு. ஶ்ரீகுமார் மேனன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


திரு என். ராம் கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அறிவியல்பூர்வமாக அவை எடுக்கப்படுகின்றனவா? எனக் கேட்ட அவர் சாம்பிள் சைஸ் முதலான விவரங்களைக் காட்சி ஊடகங்கள் மறைப்பது பற்றி லவலை தெரிவித்தார். அச்சு ஊடகங்களிலும் நீண்ட விரிவான ஆய்வுகள் வெளியாவதில்லை. அதனால் சீரியஸான பிரச்சனைகளை விட்டுவிட்டு பரபரப்புக்கு முக்கியத்துவம் தருவதாக செய்திகள் சுருங்கிவிட்டன என்றார். 


திரு ராபின் ஜாஃப்ரி அவர்கள் ஆஸ்திரேலிய தேர்தல் முறையோடு இந்தியத் தேர்தலை ஒப்பிட்டார். கருத்துக் கணிப்புகள் ஜோதிடத்தைப் போல சில சமயங்களில் பலித்துவிடுவதுண்டு என்றார். 


திரு சசிகுமாரும் அந்தக் கருத்துகளை ஆமோதித்ததோடு நரேந்திர மோடி குறித்துப் பெரும்பாலான ஊடகங்கள் சாதகமான சாஃப்டான அணுகுமுறையைக் கையாண்டது எப்படி எனக் கேட்டார். 


திரு ஶ்ரீகுமார் மேனன்இடது சாரிக் கட்சிகள் தேய்ந்து வருவதை சுட்டிக்காட்டி அந்த வெற்றிடத்தைப் பல புதிய குழுக்கள் நிரப்ப முன்வந்திருப்பதை நம்பிக்கையோடு குறிப்பிட்டார். 


மாணவி ரிச்சா பேசும்போது இண்டர்நெட் என்பது எப்படி தாக்கம் மிகுந்ததாக மாறியுள்ளது என்பதை பல உதாரணங்களோடு விளக்கினார். ஆனால் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் வெறும் 12.6% தான் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி போன்ற விவரங்களை இணையத்தில் செயல்படும் சில தளங்கள் வெளியிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியபோது " எஃப் ஐ ஆர் போட்டதாலேயே ஒருவர் கிரிமினல் என அர்த்தமில்லை" என்று திரு என்.ராம் இடைமறித்துச் சொன்னார். 


பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட  சிலர் கருத்து தெரிவித்தனர். நான் பின்வரும் கருத்துகளைப் பதிவுசெய்தேன்:

" இந்தத் தேர்தலின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களோடு இரண்டு பக்கங்களில் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் சந்திக்க வைத்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இவை இரண்டும் முக்கியமான பாராட்டத்தக்க பங்களிப்புகள்.

பொதுவாக ஊடகங்கள் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கட்சிகளுக்கும்  கட்சித் தலைவர்களுக்கும்தான் முக்கியத்துவம் தருகின்றன. தனிநபர் வழிபாட்டை ஊக்குவிப்பதாக அது இருக்கிறது. நான் எனது தொகுதிக்கென தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டேன். அதில் கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி முதலியவற்றுக்கு முக்கியத்துவம் தந்திருந்தேன். ஆனால் அதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதன்மூலமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்" என நான் குறிப்பிட்டேன். 

நிகழ்ச்சியில் திரு ராஜ்மோகன் காந்தி, நீதியரசர் கே சந்துரு, ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், இந்து நாளேட்டின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தோழர் ஜி. ராமகிருஷ்ணன், பிரசன்னா ராமசாமி, சதானந்த் மேனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



அழைப்பு



நீதியரசர் கே. சந்துரு அவர்கள் எழுதிய ' அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் ' நூல் வெளியீட்டுவிழா 9.5.2014 அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் பா.கல்யாணி, பத்திரிகையாளர் ஞாநி, 'இந்து' என்.ராம், 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கின்றனர். நீதியரசர் கே.சந்துரு ஏற்புரை வழங்குகிறார். 


அதற்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம். தங்களது மேலான வருகையை விழைகிறோம்


இவண்

மணற்கேணி பதிப்பகம்

சென்னை600005


குறிப்பு: ரூபாய் 95/- விலைகொண்ட இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் 50/- ரூபாய்க்குக் கிடைக்கும்



அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) நினைவு நூற்றாண்டு




அயோத்திதாசப் பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.  அவரது தந்தையாரின் பெயர் கந்தசாமி, தாயாரின் பெயர் நமக்குத் தெரியவில்லை.  அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் என்பதாகும்.  அவரது தாத்தா கந்தப்பன் என்பவர் ஜார்ஜ் ஆரிங்டன் பிரபு என்பாரிடம் பட்லராகப் பணியாற்றியவர். அவரும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர்.  அவர்தான் திருக்குறள் மற்றும் நாலடி நானூறு ஆகிய நூல்களின் ஓலைப் பிரதிகளைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்து எல்லீஸ் துரையிடம் கொடுத்தவர்.  அந்தப் படிகளே பின்னர் அச்சில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த காரணத்தால் கந்தப்பனுக்கு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

சென்னையில் இருந்த காலத்தில் பத்ர தேசிகானந்தர் என்பவரிடமும்,  அயோத்திதாச கவிராஜ பண்டிதர் என்பவரிடமும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் அயோத்திதாசர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார்.  இவை மட்டுமன்றி. சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.  தனது இயற்பெயரை விடுத்து  தனது ஆசிரியர்களில் ஒருவரான அயோத்திதாச கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டார்.  இதனிடையே அவரது தந்தையாருடைய பணியின் நிமித்தமாக அயோத்திதாசரின் குடும்பம் குன்னூருக்குக் குடி பெயர்ந்தது.

இளம் வயதினராயிருந்த அயோத்திதாசர் தான் ஈட்டிய அறிவைப் பூட்டி வைத்திருக்கவில்லை.  அதை அரசியலில் துணிவோடு இணைத்து நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டார்.  குன்னூர் பகுதிகளில் வாழ்ந்திருந்த தோடர் என்னும் பழங்குடியினரிடையே அரசியல் பணிகளை மேற்கொண்டு அவர்களை அமைப்பாக்கிட முயன்றார்.  அந்த சமூகத்துப் பெண் ஒருவரை மணந்து பின்னர் அவரோடு ரங்கூனுக்குச் சென்றார்.  அங்கு ஆண் குழந்தையன்று பிறந்ததெனவும் அங்கே அவர் மனைவி இறந்து போனதால் அயோத்திதாசர் சென்னைக்குத் திரும்பி வந்தாரெனவும் தி. பெ. கமலநாதன் கூறுகிறார்.  (பார்க்க: போதி _ காலாண்டிதழ் ஏப்ரல் 2005, பக் 15).  ரங்கூனில் பிறந்த மகன் அங்கேயே தங்கிவிட்டாரெனவும் அவர் குறிப்பிடுகின்றார்.  இந்தச் செய்தியைத் தவிர பண்டிதரின் ரங்கூன் வாழ்க்கை குறித்த செய்திகள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை.

அயோத்திதாசர் தமது இருபத்தைந்தாவத வயது முதற் கொண்டே (1870) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரெனத் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை தனித்துவமான தத்துவப் பார்வையன்றை நோக்கி அவரை இட்டுச் சென்றது. அவரது மெய்யியலின் உள்ளீடாகத் தொடக்ககாலம் முதலே பகுத்தறிவு என்பதுதான் இடம் பெற்றிருந்தது.  கடவுள் நம்பிக்கை, சடங்குகளை உயர்த்திப் பிடித்தல், பார்ப்பன வைதீக மதக் கொள்கை முதலானவற்றை முற்றாக நிராகரித்து மானுட விடுதலைக்கான ஒரு தத்துவமாகவே அவரது பார்வை உருப்பெற்றிருந்தது.

அயோத்திதாசரின் அரசியல் பணிகள் தொடங்குவதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1779ஆம் ஆண்டிலேயே- _ பறையர் சமூகத்தவர் ஒன்று திரண்டு தமது உரிமைகளுக்காக ஆங்கில அரசிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.  புனித சார்ச் கோட்டைக்கு அருகில் குடியிருந்த பறையர்களை அங்கிருந்து காலி செய்துவிட்டு வெளியேறும்படி ஆங்கில அரசாங்கம் கூறியபோது, தாமும் தமது முன்னோரும் ஆங்கில அரசுக்குச் செய்த பணிகளைக் குறிப்பிட்டு அப்பகுதியில் தாம் தொடர்ந்து குடியிருக்க இசைவுதரும்படி அம்மனுவில் அந்த மக்கள் கேட்டிருந்தனர்.

சென்னை சார்ச் டவுனில் பறையர் குடியிருந்த பகுதி பெரிய பறைச் சேரி எனவும், பின்னர் அது ப்ளாக் டவுன் எனவும் வழங்கப்பட்டது.  அங்க குடியிருந்தவர்கள் அரசுக்கு வரி கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அந்த வரியை ரத்து செய்ய வேண்டுமென 1810ஆம் ஆண்டு அங்கே குடியிருந்த அரசுக்கு வேண்டுகை ஒன்றை அளித்தனர்.

தீண்டாத மக்களின் இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் ஆங்கிலேயர் நிலை பெற்றதற்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது.  இக் காலகட்டத்தில்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என அம்பேத்கார் குறிப்பிடுகிறார். (தொகுதி 23 பக்கம் 122_123) 1757ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப்போர் தொடங்கி 1818இல் நடைபெற்ற கோரேகௌன் போரின் வெற்றியோடு ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் உறுதிப்பட்டது.

"பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள்.  அவர்கள் தீண்டாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  கோரேகௌன் போரில் பங்குகொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள்.  அவர்களும் தீண்டாத சமூகத்தவரே ஆவார்கள்." என அம்பேதகர் குறிப்பிடுகின்றார்.  ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தாங்கள் தந்த பலிகளையும் உழைப்பையும் குறிப்பிட்டே தீண்டாத மக்கள் வேண்டுகைகளை அளித்தார்கள்.

இப்படிக் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கைகளை அளிப்பதே அக்காலத்தில் தீண்டாதாரின் போராட்ட மரபாக இருந்துள்ளது.  ஆனால், அதே காலகட்டத்தில் பிராமணர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அச்சுறுத்துவது, தம்முடைய குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வது, அவர்களை உயிரோடு எரிப்பது முதலான வழிமுறைகளைக் கையாண்டு வந்தனர்.  இந்த வழக்கத்தைத் தடைசெய்து 1795ஆம் ஆண்டு வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் என்றொரு சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்தனர். (அம்பேத்கார் நூல் தொகுதி 23 பக்கம் 165_ 177)

சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சாதியற்ற தொல்குடி மக்களின் அரசியலில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்தியவர் அயோத்திதாசர் ஆவார்.  இந்தியாவில் குடிக்கணக்கெடுப்பு எடுக்கும் வழக்கம் தொடங்கியபோது அதனை ஒரு அரசியல் போராட்டத்துக்கான வாய்ப்பாக அயோத்திதாசர் அடையாளம் கண்டார்.  தீண்டாதாராய் வைக்கப்பட்டிருந்த தொல்குடி மக்களிடம் அரசியல் ரீதியான விழிப்புணர்வை உண்டாக்க, அவர்கள் தம்மை "சாதியற்ற திராவிடர்கள்" எனக் குடிக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்ள் வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

1881ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன் முதலாக பொதுக்குடிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகையைக் கண்டறிந்து இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை அளவிடுவது ஒன்றே அந்த குடிக்கணக்கெடுப்பின்போது சாதிவாரியகக் கணக்கெடுக்குமட் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.  1901இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது "உள்ளூர் மக்களின் கருத்துகிணங்க சமூக ரீதியில் வகைப்படுத்துதல்" என்ற புதிய முறையை ஆங்கில அரசு அறிமுகப்படுத்தியது.

1911ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது குடிக்கணக்கெடுப்பின் போதுதான் தீண்டாத மக்கள் எவ்வளவு பேர் இந்த நாட்டில் உள்ளனர் என்று தனியே கண்டறிவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது.  இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்தான் இந்திய அரசியலில் முஸ்லிம்களின் போராட்டம் எழுச்சி பெற்றது.

சட்டமன்றங்களில் தங்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் போராடி வந்தனர்(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக்கம் 229_246) 1909ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசுலாமியர்களின் குழு ஒன்று மார்லி பிரபுவைச் சந்தித்து மனு ஒன்றைத் தந்தது.  அதுவரை தீண்டாத மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத சாதி இந்துக்கள் அப்போதுதான் தீண்டாதாரின் மக்கள்தொகை முகாமைத்துவத்தை உணர்ந்தனர்.  தீண்டாத மக்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்வது ஆங்கில ஆட்சியாளர்களும் இசுலாமியர்களுக்கும் செய்யும் கூட்டுச்சதி என அவர்கள் கூக்குரலிட்டனர்.  ஆனால், அந்த எதி£ப்புகளைத் தாண்டி குடிக்கணக்கெடுப்பு முற்றுப் பெற்றது.  

1911ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்பின் போது இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் பிரித்தறிய கேட்கப்பட்ட வினாக்களை ஆதரித்து அயோத்திதாசர் எழுதினார் (31.11.1910), "பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேற தெய்வமென்று பாடித் திரிகின்றவர்களும்; பறையனை பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்வது போல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற மனுசாஸ்திரம் எழுதி வைத்துக் கொண்டிருப்பவர்களும்" சென்சஸ் கமிஷனர் தான் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என வீண் கூச்சல் போடுவது ஏனென்று கேட்டார்.  "இக்குடிமதிப்புக் காலத்தையே குலச் சிறப்பின் காலமெனக் கருதி சீலம் பெற்று இராஜாங்கத்ததார் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும் நற்சீரும் அடைய வேண்டும்" என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

நமக்கு இப்போது கிடைக்கிற விவரங்களைக் கொண்டு பார்த்தால் இந்திய அளவில் குடிக்கணக்கெடுப்பின்போது அயோத்திதாசரைப் போல அதனை ஓர் அரசியல் பிரச்சினையாக மாற்றியவர்கள் வேறு யாரும் கிடையாது.  இந்துக்களை விட்டு அகன்ற கிறித்தாவ்களாகவோ, இசுலாமியர்களாகவோ, பௌத்தர்களாகவோ மாறிவிடுங்கள் என தீண்டாத மக்களுக்கு அப்போது அவர் ஆலோசனை கூறினார்.

1881 குடிக்கணக்கெடுப்பின்போது தொடங்கி பின்னர் 1911இல் குடிக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேண அவர் கடுமையாகப் போராடியிருப்பது வியப்பளிக்கிறது.

"இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும்.  இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள்.  பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள்.  இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள்.  அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது 'சாதிப்பேதமற்ற திராவிடர்களென' ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்," என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (174.12.1910)

அதுமட்டுமல்லாது கிருத்தவர்களையும், இசுலாமியர்களையும் தவிர்த்து பிறர் அனைவரையும் இந்துக்களென்றே குடிக்கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும் என்று வடநாட்டினர் சிலர் ஏடுகள் வாயிலாகத் தெரிவித்துவந்த கருத்துக்களையும் கடுமையாக அவர் எதிர்த்துள்ளார்.

ஏசு கிறித்துவின் போதனைகள் கிருத்தவ மதத்தின் மையமாக இருப்பது போல; நபிகளின் போதனைகள் மகம்மதியர்களின் மதநம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்து போல இந்து மதத்துக்கு எதுவும் கிடையாது என்பதை கேலியோடு அவர் சுட்டிக் காட்டினார்.  "இந்து என்பவனுக்கு தேசமும் கிடையாது.  பெற்று வளர்த்த தந்தையாரும் கிடையாது. அவன் போதித்த தர்மமும் இன்னதென்று கிடையாது.  அவனால் சீர்திருத்திய மக்கள் கூட்டமும் கிடையாது.  அவனது சரித்திரமும் கிடையாது.  இத்தகைய யாதுமற்றோன் மதம் இந்து மதமாம்.  எந்த மதத்திற்கும் சொந்த மில்லாத மாம் இந்து மதமெனில் அவை யாருக்குரியவை? யார் அவற்றைத் தழுவுவார்?. . . . . .  இந்து ஒருவன் உண்டாவென்னில் வேதாந்தி மதம் என்பதும்; வேதாந்தி ஒருவன் உண்டாவென்னில் அத்துவித மதம் என்பதும்; அத்துவிதி என்பவன் ஒருவன் உண்டாவென்னில் விசிட்டாத்துவித மதம் என்பதுமாகிய மாறுதலைக் கூறிவருவார்களன்றி எதற்கும் தக்க ஆதாரங்களைக் கொடுக்கமாட்டார்கள்." என்று குறிப்பிட்ட அயோத்திதாசர், கிருத்தவர்களும் மகமதியர்களும் இந்த தேசத்தாருடன் சகல பாவனைகளிலும் சம்பந்தித்திருக்கின்றார்கள்.  அவர்களை விலக்கச் சொல்வின்றவர்கள் இந்த தேசத்தோருடன் ஒரு சம்பந்தமும் வைத்துக் கொள்ளாத ஆரியர்களை இந்த நாட்டிலிருந்து அகற்ற முன் வருவார்களா? என்றும் கேட்டார்.

ஆக, அயோத்தி தாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது.  தனித்துவமானது. அது, கிறித்தவர்களை, இசுலாமியர்களை சகோதரர்களாகப் பார்க்கின்ற ஓர் அடையாளமுமாகும்.  

1916இல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதார் பிரகடனம், 1917இல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்பவற்றையே இன்றைய திராவிட இயக்கத்துக்கான முன்னோடி முயற்சிகளெனப் பதிவு செய்யும் திராவிட இயக்க ஆய்வாளர் சிலர் 1885இல் திராவிடப் பாண்டியன் என்ற இதழை ரெவரன்ட் ஜான் ரத்தினம் என்பாருடன் சேர்ந்து நடத்தியவரும், 1891இல் திராவிட மகாஜனசபையை நிறுவியவருமான அயோத்தி தாசரின் பங்களிப்புகளை ஏனோ  குறிப்பிடுவது இல்லை. 

தமிழ்ச் சமூகத்துக்கு இன்றும் உதவக்கூடிய சிந்தனைகளை முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இயற்கை எயதினார். இன்று (05.05.2014) அவரது நினைவு நூற்றாண்டு. 
           




Friday, May 2, 2014

2014 பொதுத் தேர்தலும் ஊடகங்களின் பாத்திரமும்




2014 பொதுத் தேர்தலும் ஊடகங்களின் பாத்திரமும் என்பதுகுறித்து ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் இன்று மாலை  ஒரு விவாதம் நடைபெற்றது. திரு என்.ராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விவாதத்தில் திரு ராபின் ஜாஃப்ரி,திரு சசிகுமார், திரு.ஶ்ரீகுமார் மேனன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


திரு என். ராம் கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அறிவியல்பூர்வமாக அவை எடுக்கப்படுகின்றனவா? எனக் கேட்ட அவர் சாம்பிள் சைஸ் முதலான விவரங்களைக் காட்சி ஊடகங்கள் மறைப்பது பற்றி கவலை தெரிவித்தார். அச்சு ஊடகங்களிலும் நீண்ட விரிவான ஆய்வுகள் வெளியாவதில்லை. அதனால் சீரியஸான பிரச்சனைகளை விட்டுவிட்டு பரபரப்புக்கு முக்கியத்துவம் தருவதாக செய்திகள் சுருங்கிவிட்டன என்றார். 


திரு ராபின் ஜாஃப்ரி அவர்கள் ஆஸ்திரேலிய தேர்தல் முறையோடு இந்தியத் தேர்தலை ஒப்பிட்டார். கருத்துக் கணிப்புகள் ஜோதிடத்தைப் போல சில சமயங்களில் பலித்துவிடுவதுண்டு என்றார். 


திரு சசிகுமாரும் அந்தக் கருத்துகளை ஆமோதித்ததோடு நரேந்திர மோடி குறித்துப் பெரும்பாலான ஊடகங்கள் சாதகமான சாஃப்டான அணுகுமுறையைக் கையாண்டது எப்படி எனக் கேட்டார். 


திரு ஶ்ரீகுமார் மேனன் இடது சாரிக் கட்சிகள் தேய்ந்து வருவதை சுட்டிக்காட்டி அந்த வெற்றிடத்தைப் பல புதிய குழுக்கள் நிரப்ப முன்வந்திருப்பதை நம்பிக்கையோடு குறிப்பிட்டார். 


மாணவி ரிச்சா பேசும்போது இண்டர்நெட் என்பது எப்படி தாக்கம் மிகுந்ததாக மாறியுள்ளது என்பதை பல உதாரணங்களோடு விளக்கினார். ஆனால் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் வெறும் 12.6% தான் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி போன்ற விவரங்களை இணையத்தில் செயல்படும் சில தளங்கள் வெளியிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியபோது " எஃப் ஐ ஆர் போட்டதாலேயே ஒருவர் கிரிமினல் என அர்த்தமில்லை" என்று திரு என்.ராம் இடைமறித்துச் சொன்னார். 


பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட  சிலர் கருத்து தெரிவித்தனர். நான் பின்வரும் கருத்துகளைப் பதிவுசெய்தேன்:

" இந்தத் தேர்தலின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களோடு இரண்டு பக்கங்களில் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் சந்திக்க வைத்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இவை இரண்டும் முக்கியமான பாராட்டத்தக்க பங்களிப்புகள்.

பொதுவாக ஊடகங்கள் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கட்சிகளுக்கும்  கட்சித் தலைவர்களுக்கும்தான் முக்கியத்துவம் தருகின்றன. தனிநபர் வழிபாட்டை ஊக்குவிப்பதாக அது இருக்கிறது. நான் எனது தொகுதிக்கென தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டேன். அதில் கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி முதலியவற்றுக்கு முக்கியத்துவம் தந்திருந்தேன். ஆனால் அதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதன்மூலமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்" என நான் குறிப்பிட்டேன். 

நிகழ்ச்சியில் திரு ராஜ்மோகன் காந்தி, நீதியரசர் கே சந்துரு, தோழர் ஜி. ராமகிருஷ்ணன், பிரசன்னா ராமசாமி, சதானந்த் மேனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.