Sunday, January 31, 2016

ரோஹித் வெமுலா தலித் இல்லை என்பதா? - ரவிக்குமார்

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவிவிலகவேண்டும்
==========================

ரோஹித் வெமுலா தலித் இல்லை எனக் கூறும் பாஜக அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் படிக்கவேண்டும். Rameshbhai Dabhai Naika vs State Of Gujarat & Ors என்ற வழக்கில் 2012 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் நீதிபதிகள் அஃப்டாப் ஆலம், ரஞ்சனா ப்ரகாஷ் ஆகியோரைக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் பத்தி 43 ல் இத்தகைய சிக்கல் குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி ரோஹித் வெமுலாவின் தந்தை பிற்படுத்தப்பட்ட சாதியாக இருந்தாலும் அவர் தனது மனைவியையும் குழந்தையையும் கைவிட்டுவிட்டுச் சென்ற காரணத்தால் அதன்பிறகு ரோஹித் தனது தாயின் பராமரிப்பில், தாயின் சமூகச்சூழலில் வளர்ந்த காரணத்தால் தாயின் சாதியைச் சேர்ந்தவராகவே கருதப்படவேண்டும். அதுவே சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட நிலையுமாகும். இதை அறியாமல் பாஜகவினர் பேசுகின்றனர். 

சட்டத்தை அறியாதவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பது இந்த நாட்டுக்கு அவமானம். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாகப் பேசிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகவேண்டும் என ஜனநாயக சக்திகள் வலியுறுத்தவேண்டும். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் குறிப்பிட்ட பகுதியை இங்கே தருகிறேன்: 

 " The determination of caste of a person born of an inter-caste marriage or a marriage between a tribal and a non-tribal cannot be determined in complete disregard of attending facts of the case. In an inter- caste marriage or a marriage between a tribal and a non-tribal there may be a presumption that the child has the caste of the father. 

This presumption may be stronger in the case where in the inter-caste marriage or a marriage between a tribal and a non-tribal the husband belongs to a forward caste. But by no means the presumption is conclusive or irrebuttable and it is open to the child of such marriage to lead evidence to show that he/she was brought up by the mother who belonged to the scheduled caste/scheduled tribe. 

By virtue of being the son of a forward caste father he did not have any advantageous start in life but on the contrary suffered the deprivations, indignities, humilities and handicaps like any other member of the community to which his/her mother belonged. Additionally, that he was always treated a member of the community to which her mother belonged not only by that community but by people outside the community as well."

Saturday, January 30, 2016

முதல்வர் வேட்பாளர்: ஒரு விளக்கம் - ரவிக்குமார்



வணக்கம் 

தேர்தலில் முன்கூட்டியே முதல்வர் வேட்பாளரையோ பிரதமர் வேட்பாளரையோ அறிவித்து அவரை முன்னிறுத்தி வாக்கு கேட்பது இந்திய பாராளுமன்ற தேர்தல் முறைக்கு எதிரானது. அது, அதிபர் ஆட்சி முறைக்கானது எனவே முதல்வர் வேட்பாளர் என எவரையும் அறிவிப்பதில்லை என்பதே மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு. இதில் எனக்கோ எமது இயக்கத் தோழர்களுக்கோ எந்த ஊசலாட்டமும் இல்லை. 

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி நான் 2014 அக்டோபரில் எழுதிய வலைப் பதிவை அடிப்படையாகக் கொண்டதாகும். பீகாரில் திரு மாஞ்சி முதல்வராக்கப்பட்டபோது, 16% தலித் மக்கள்தொகை கொண்ட பீகாரில் ஒரு தலித் முதல்வராகும்போது மக்கள் தொகையில் 21% பட்டியலினத்தவர் இருக்கும்  தமிழ்நாட்டில் அப்படி நடக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதிய பதிவு அது. இலவசங்களுக்கும், பணத்துக்கும், சினிமா கவர்ச்சிக்கும் இந்த மக்களின் வாக்குரிமை விலைபேசப்படுகிறதே என்று மனம் குமைந்து எழுதியது. இப்போதும் அந்த கருத்தில் நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். சமூகநீதிக்கு பெயர்போன தமிழ்நாட்டில் தலித் மக்கள் அதிகாரத்தை நுகரமுடியாமல் புறந்தள்ளப்பட்டிருப்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. 

நான் கேட்பது மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரை அறிவிக்கவேண்டும் என்பதல்ல; தலித் ஒருவர் ஏன் இங்கு முதல்வராக வரமுடியவில்லை என்பதை அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் விவாதிக்க முன்வரவேண்டும் என்பதுதான். 

அதிகாரத்தை நுகர்வதற்கு தலித் என்பதையே தகுதியாக நான் சொல்லவில்லை, எவ்வளவோ திறமைகள் இருந்தாலும் இந்த சமூகத்தில் தலித் என்பதே தகுதியின்மையாக ஆக்கப்பட்டிருக்கிறதே என வேதனைப்படுகிறேன். 

மக்கள் நலக்கூட்டணி விடுதலைச் சிறுத்தைகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். அதைப் பலவீனப்படுத்த நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம். அதுபோலவே 'எளிய மக்களுக்கும் அதிகாரம்! கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்! ' என்ற எமது லட்சியத்திலிருந்தும் பின்வாங்கமாட்டோம். 

நான் 2014 ல் எழுதிய பதிவை இங்கே படிக்கலாம்: 

நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
 
Monday, October 27, 2014
தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக்குவது எப்போது?


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தபோதிலும் இப்போதே அதற்கான அணிசேர்க்கைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. யார் முதல்வர் என்ற கேள்வி ஊடகங்களில் உலாவரத் தொடங்கிவிட்டது. 

தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதென்றும் அதை நிரப்புவதற்கு இந்த நடிகர் வருவாரா அந்த நடிகர் வருவாரா என்றும் ஊடக மாயைகள் உருவாக்கப்படுகின்றன. சினிமாவை வைத்தே பக்கங்களை நிரப்பும் அச்சு ஊடகங்களும், சினிமாவின் நீட்சியாகவே செயல்படும் காட்சி ஊடகங்களும் திரைப்படத் துறையிலிருந்து ரட்சகர்களைக் கண்டுபிடிக்க நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் நாம் அதற்கு இன்னும் எத்தனைகாலம் பலியாகிக்கொண்டிருப்பது? என்ற கேள்வியை யார் கேட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ தலித்துகள் கேட்டுக்கொண்டாகவேண்டும்.

இந்தியாவில் தலித் மக்கள்தொகை இருபது விழுக்காட்டுக்குமேல் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிற்படுத்தப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பே தலித்துகள் அமைப்பாகத் திரண்டு போராடிய நீண்ட வரலாறுகொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஆந்திராவிலும், உத்தரப்பிரதேசத்திலும், மஹராஷ்டிராவிலும், ஏன் வெறும் 16% தலித் மக்கள்தொகைகொண்ட பீஹாரிலும்கூட தலித் ஒருவர் முதலமைச்சராக முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத நிலை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த இழிநிலைத் தொடர்வது? தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என அறிவிக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என எப்போது தமிழ்நாட்டு தலித்துகள் உறுதிபூணுகிறார்களோ அப்போதுதான் இந்த நிலை மாறும். அந்த அரசியல் தற்சார்பு நிலையை உருவாக்குவதே இன்று தலித் இயக்கங்களின் முதன்மையான பணி

Monday, January 25, 2016

கலாச்சார மூலதனத்தைத் திரட்டுங்கள் - ரவிக்குமார்

 

நேற்று (25.1.2016) மதுரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் படிப்பு வட்டம் துவக்க நிகழ்வு. ஆய்வாளர்கள் பழனிக்குமார், அ.செகன்னாதன், பேராசிரியர் ஜே.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரின் முயற்சியால் இந்தப் படிப்புவட்டம் உருவாகியுள்ளது. 

படிப்பு வட்டத்தைத் துவக்கிவைத்து நான் ஆற்றிய உரையின் சில அம்சங்கள்: 

1. ரோஹித் வெமுலாவின் மரணம் உருவாக்கிய தாக்கத்தை அதன் முன்னர் 2008 ல் நிகழ்ந்த செந்தில்குமாரின் மரணம் உருவாக்கவில்லை. தற்போது விழுப்புரம் அருகில் நிகழ்ந்துள்ள மூன்று மாணவிகளின் மரணமும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரோஹித்தின் மரணத்துக்கு மதவாத சக்திகளின் தலையீடு காரணமாக அமைந்தது ஆனால் செந்தில்குமாரின் மரணம் சாதிய பாகுபாட்டால் மட்டும் நிகழ்ந்தது. விழுப்பிரம் மாணவிகள் தற்கொலை கல்வி பண்டமாக்கப்படுவதன் விளைவு. 

2. மதவாத எதிர்ப்பு அரசியல் உருவாக்கிவைத்திருக்கும் கலாச்சார மூலதனமே ரோஹித்தின் மரணத்தை மலையைவிட கனமானதாக மாற்றியிருக்கிறது. சாதி எதிர்ப்பு அரசியலோ, கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கு எதிரான அரசியலோ அந்த அளவுக்குக் கலாச்சார மூலதனத்தை உருவாக்கவில்லை என்பதால்தான் அந்த மரணங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை. 

3. . அம்பேத்கரை வாசிப்பது கலாச்சார மூலதனத்தை உருவாக்கும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறது. அந்தப் புரிதலோடு இந்த படிப்பு வட்டத்தை நடத்துங்கள். 

4. அம்பேத்கரின் முக்கியமான பிரதிகளை (key texts)அடையாளம் காண்பது மட்டுமின்றி முக்கியமான கருத்தாக்கங்களையும் (key concepts) அடையாளம் காணவேண்டும். 

5. அம்பேத்கர் தனது ஆய்வுகளுக்கு உலக அளவிலான சிந்தனைகளையெல்லாம் பயன்படுத்தினார். இந்தியாவில் இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிந்தனைகளை இந்தியாவுக்குள் மட்டும் தேடிக்கொண்டிருக்கக்கூடாது. இதுதான் நாம் ச்ம்பேத்கரிடம் கற்கும் முதல் பாடமாக இருக்கவேண்டும். 

6. communal majority / political majority என்ற வேறுபாட்டை அவர் சுட்டிக்காட்டினார். அதுவொரு முக்கியமான concept. அதை சாதிப் பெரும்பான்மைவாதம் என விரிவுபடுத்தி பிராந்தியக் கட்சிகளின் செயல்பாடுகளை விளக்க நான் கையாண்டுவருகிறேன். இதுபோல இன்னும் பல கருத்தாக்கங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்தவேண்டும்; அவற்றைப் பொதுவெளியில் ஏற்கும்படிச் செய்யவேண்டும். 

Saturday, January 23, 2016

ஈழம்: Uprooting the Pumpkin: தன்னெழுச்சியும் கூர்மையும் குன்றாத மொழிபெயர்ப்பு - ரவிக்குமார்



2009 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னர் ஈழப் பிரச்சனை சர்வதேச கவனத்தைப் பெற்றது. ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானங்களும் அவற்றையொட்டி கிடைத்த ஊடக கவனமும் ஈழத் தமிழ் படைப்புகளுக்கு புதிய வாசகர்களைக் கொண்டுவந்து சேர்த்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பரவி வாழும் ஈழத் தமிழர்கள் இந்தச் சூழலை சரியாகவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதில் முன்னோடியாக செயல்பட்டவர் செல்வா கனகநாயகம் (1952-2014) கனடாவின் டொரன்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியராக இருந்த அவர் ஈழத் தமிழ் இலக்கியத்தை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை சோர்வின்றி செய்துவந்தார். (இனி அவரது இடத்தை சேரன்தான் நிரப்பவேண்டும்)

அவரது முன்முயற்சியில் ஈழ இலக்கியத்தின் இன்னொரு ஆங்கிலத் தொகுப்பு இப்போது வெளிவந்திருக்கிறது. இதை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 

24 கவிதைகள்,ஒரு நாடகம், 15 சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. லஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம், சிவசேகரம், பத்மா நாராயணன் உள்ளிட்ட 10 பேர் இந்தப் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பட்டியல் 1971 ல் இறந்த மஹாகவியில் தொடங்கி 1974 ல் பிறந்த அனாரில் முடிகிறது. 

நவீன ஈழத் தமிழ் இலக்கியம் வளமான கவிதை மரபைக் கொண்டது. எப்படித் தொகுத்தாலும் சிலபேர் விடுபட்டுப் போய்விடுவார்கள். எனவே தர அளவுகோலை வைத்து அளந்து பொறுக்கியெடுத்து கவிதைகளை சேர்க்கலாம். ஈழத்து கவிதை மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது எனக்கென்று ஒரு சோதனை முறையை நான் வைத்திருக்கிறேன். சேரனின் தன்னெழுச்சியும் பா.அகிலனின் கூர்மையும் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறதா என்று முதலில் சோதிப்பேன். இந்தத் தொகுப்பு அந்தச் சோதனையில் தேர்ச்சிபெற்றுவிட்டது. 

கவிதைகளைப்போல சிறுகதையில் அப்படியொரு காத்திரமான மரபு அங்கு இருப்பதாகக் கூறமுடியாது. எனவே தர அளவுகோலை ஓரமாக வைத்துவிட்டுத்தான் அந்தத் தொகுப்பைச் செய்யவேண்டும். அதனால்தான் சிறுகதைகளைத் தொகுக்கும்போது செ. யோகநாதனும், அ.முத்துலிங்கமும் தவிர்க்கமுடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். 

ஈழத்துப் பேராசிரியர்களை/ கருத்தாளர்களை மார்க்சியம் அறிந்த தமிழ்த்தேசியவாதிகள், மார்க்சியம் அறியாத தமிழ்த்தேசியவாதிகள் என இரண்டாகப் பிரித்தால் செல்வா கனகநாயகம் இரண்டாவது பிரிவுக்குள் வருவார். இந்தப் பிரிவினரிடமும் புலமைத்துவம் நிறைந்திருந்தது, இவர்களது பார்வையை எந்தக் கோட்பாடும் வடிவமைக்காததால் இத்தகையோரின் தெரிவுகள் அகவயப்பட்டவையாக அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது. இது தனிநபரின் குறை என்பதைக்காட்டிலும் அவர்களது கருத்தியலின் விளைவு என்றே கூறவேண்டும். 

இத்தொகுப்பில் நாவல் பகுதிகள் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம். அப்படி சேர்த்திருந்தால் டானியல், மு.தளையசிங்கம், கோவிந்தன் உள்ளிட்டோரின் எழுத்துகள்  இடம்பெற்றிருந்திருக்கும். 

இத்தொகுப்பை சாத்தியப்படுத்திய பத்மநாப அய்யர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ் இலக்கிய உலகம் கடன்பட்டுள்ளது.


Friday, January 22, 2016

முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைந்தார்



தலித் கலை இலக்கிய எழுச்சியின் அடையாளம் முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைந்தார்
~~~~~~~~
நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இன்று திடீரென அவர் உயிர் பிரிந்தது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு, இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் நானும் சில தோழர்களும் முன்னெடுத்தபோது எங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. 

இன்று தி இந்து நாளேட்டின் சார்பில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் இன்று மாலை நான், அவர், நீதியரசர் கே.சந்துரு, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இப்படியொரு செய்தி வந்துவிட்டது. 

தலித் கலை இலக்கிய எழுச்சியின் அடையாளமான கே.ஏ.ஜிக்கு என் அஞ்சலி.

Thursday, January 21, 2016

.... அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை


தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக நடந்த விவாதத்தின் போது பதிலளித்த அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்கள் தமிழகத்தில் மதுக் கடைகளை மூடமுடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அமைச்சரின் குரல் முதல்வரின் குரல்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.  தமிழக முதல்வரின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கவில்லை என்றாலும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

மதுஒழிப்புக்காக போராடிய தியாகி சசிபெருமாளின் சாவுக்கு பின்னர், தமிழகத்திலெழுந்த மாபெரும் போராட்டத்தையொட்டி முதல்வரின் நிலைப் பாட்டில் சற்று தளர்வு ஏற்பட்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவானது. தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடாவிட்டாலும் படிப்படியாக, பகுதிவாரியாக மதுக்கடைகளை மூடுவதற்கு முன்வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், ஆளும்கட்சியைத்தவிர, தமிழகத்திலுள்ள அனைத்து கட்சியினரும் சமூக அமைப்புகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஒருமித்தகுரலில் மதுக்கடைகளை மூடும்படி வலியுறுத்திப் போராடினர். எனவே, முதல்வர் மக்களின் உணர்வுகளை மதிக்கும்வகையிலும், பெண்களின் மீது இரக்கம் காட்டும்வகையிலும் தனது பிடிவாதத்திலிருந்து கீழ்இறங்குவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘யார் வாழ்க்கை இழந்தாலும் அரசு வருமானத்தை இழக்க முடியாது’ என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்பதை அமைச்சர் நத்தம் விசுவாதன் தெளிவுப்படுத்தியிருக்கிறார். 

மதுக்கடைகளை மூடினால் தமிழகத்திற்கு வரவேண்டிய வருமானம் அண்டை மாநிலங்களுக்கு போய்விடும் என்பதும், இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டுவந்தால் தான் தமிழ்நாட்டிலும் அதனை நடைமுறைப்படுத்தமுடியுமென்றும் அமைச்சர் நத்தம் விசுவாதன் அவர்கள் விளக்கமளித்திருக்கிறார். இதற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அப்போதைய விளக்கங்களை தற்போது மேற்கோள் காட்டியிருக்கிறார்.
அதாவது,மதுவியாபாரம் செய்வதில் அதிமுக அரசு, திமுக தலைவரைப் பின்பற்றுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தியிருக்கிறார். இவர்கள் அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு கலைஞர்  வழியில்தான் ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை  வெளிப்படுத்தியிருக்கிறார்.  அதிமுக அரசின் நிலைப்பாடு மதுவிலக்குக் கொள்கையில் மிகவும் உறுதியாகயிருந்த தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் அவமதிப்பதாகயுள்ளது. பெரியார், அண்ணா ஆகியோரின் புகழைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இவர்கள் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிராக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தியா முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ‘மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை அரசாங்கமே வியாபாரம் செய்யக்கூடாது’ என்பதை ஒரு விதியாக பதிவு செய்திருக்கிறார். எனவே, மதுவிலக்கை இந்தியா முழுவதும் ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க அரசியல் அமைப்பு சட்டமே ஏதுவான வாய்ப்பளித்துள்ளது. எனினும், இந்திய ஆட்சியாளர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லையென்பது வேதனை அளிக்கிறது. இந்திய அளவில் மதுவிலக்கு நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுவதாக தெரியவில்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதென்பதற்கு ஒரு நொண்டிச்சாக்கு தேடுவதாகவே தெரிகிறது. பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் மதுவிலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? மக்கள் மீது அக்கறையும் முற்போக்கு சிந்தனையும் இருந்தால் மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நாங்கள் செய்து காட்டுவோமென தமிழக முதல்வர் மதுகடைகளை மூட முன்வந்திருப்பார். ஆனால் ‘மதுக்கடைகளை மூடமுடியாது, வருமானத்தை இழக்கமுடியாது' என்று தமிழக அரசு மிகுந்த பிடிவாதத்துடன்  ஈவிரக்கமற்ற முறையில் வெளிப்படையாக இந்த நிலைப்பாட்டை அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், பெண்கள் என பரவலாக தமிழ்ச் சமூகம் சீரழியும் வகையில் குடிக் கலாச்சாரத்தை ஒரு பொதுக் கலாச்சாரமாக மாற்றியுள்ள தமிழக அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.  வெகுமக்களின் துணையோடு தமிழகத்தில் முழுமையாக மதுவை ஒழித்திட மக்கள் நலக்கூட்டணி தொடர்ந்து போராடும்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, January 19, 2016

Senthil Kumar : first Dalit victim of Hyderabad Central University

                                                                           

Senthilkumar Solidarity Committee

--------------------------------------------------------------------------------------------------

 

Press Note

 

 

The Senthilkumar Solidarity Committee is a group of university teachers, students and independent researchers based in Hyderabad. It was formed following the suicide of Senthilkumar, a research scholar at the School of Physics, University of Hyderabad in February 2008. 

 

A fact finding committee appointed by the University found that - 

 

• '…it is a fact that most of the students affected by the inconsistencies and ambiguities in procedures were SC/ST students.' (p4)

 

• ’…many of the dalit students who have come from backgrounds where such practices are not uncommon, tended to attribute the problems they were facing in the School to caste-based discrimination.' (p4)

 

• '…Senthil was aware of all the problems being faced by other SC students in the School. He was not only beginning to believe that the SC/ST students were 'being targeted' in the School, but was also getting anxious about it.' (p5)

 

• 'All the Physics students that this Committee could meet have reported their sense that the School was acting against the interests of the SC/ ST students.' (P4)

 

The Report concludes that 

 

• There has been a 'lack of transparency and standardization in the administration of the Ph.D. course work for the 2006 batch in the School of Physics' and that it has 'created unacceptable uncertainty in the minds of students.' (p7)

 

• There has been '…inconsistency and subjectivity in the standards applied for course work and for allocation of Supervisors…' and that it has lead to '…an understandable perception among SC/ST students … that they are being discriminated against on the basis of their caste.' (p7)

 

The vice chancellor's recent press statement, however, distorts the findings of the report to state blandly that "the committee did not find any caste discrimination on the campus". One wonders what more 'deliberate or systematic discrimination' the administration is looking for! 

 

In fact, we all know that such hidden but powerful discrimination is rampant in our universities, not least in the University of Hyderabad itself. This is the first time that it has been 'recognized' officially, and we believe that some exemplary action must be taken against the authorities that are clearly responsible, though the Report falls short of calling them to account. An internal 'meeting', attempted 'sensitization' of faculty in responsible positions and procedural changes are welcome, but far from adequate. 

 

The conduct of the University authorities smacks of complete insensitivity and indifference to the demands of justice in this case. The death of a student in an institution is a serious enough issue; in this case, a young man has been driven to take his own life as a result of institutional caste-based discrimination. Senthilkumar represented the hopes and aspirations of an entire community; his death must not be allowed to become just another statistic in the growing list of Dalit dropouts and suicides in institutions of higher learning. 

 

We demand 

 

• That stringent action be taken against those who are responsible for Senthilkumar's suicide.

 

• That the compensation which the university has agreed to pay to Senthil Kumar's parents should be increased to Rs.10 lakhs and be paid immediately. We strongly object to the tone of philanthropy that the VC has adopted in this regard. This is the least that can be done by the University and is, in fact, two months too late! 

 

• That the University acknowledge the spirit of the report and take cognizance of the widespread caste discrimination in the functioning of the departments.

 

• That it should take prompt steps to institute Grievance Redressal cells in every School, in consultation with the dalit students and faculty on the campus. 

 

Premier institutions like the Hyderabad Central University must be made accountable to students who have to overcome innumerable obstacles to enter higher education. It is about time the academic community began to respond to the demand made on them by the increasing democratization of elite spaces of higher education!

 

 

6th May 2008

Sunday, January 17, 2016

தலித் ஆய்வு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது ஏன்? - ரவிக்குமார்


ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் ஆய்வு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பல்கலைக்கழகம் தலித் விரோத செயல்பாடுகளுக்குப் பெயர்போனது. 2008 ஆம் ஆண்டில் இப்படித்தான் செந்தில்குமார் என்ற தலித் மாணவர் தற்கொலைசெய்துகொண்டார். 

செந்தில்குமார்  தற்கொலைசெய்துகொண்டபோது நான் தலையிட்டு அந்த மாணவரின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் இறந்துபோன மாணவரின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு மட்டும்தான் பெற்றுத்தர முடிந்தது. ஆய்வு மாணவர்களுக்கு உதவ இந்திய அளவில் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு நான் மேற்கொண்ட முயற்சிக்கு மாணவர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அதைக் கைவிட நேர்ந்தது. 

2008 ஆம் ஆண்டு நான் அப்போதைய துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதத்தை இங்கே தருகிறேன். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நிலவும் தலித் விரோத சூழலை இதில் உள்ள விவரங்கள் எடுத்துரைக்கும்: 

To
The Vice chancellor
Hyderabad Central University
Hyderabad
                          Sub: Tragic death of P.Senthilkumar reg.
                          Ref: Telephonic talk with you on 02.05.2008
Respected Sir
                    Thank you very much for your sympathetic telephonic conversation. I hope that the demand draft for the ex gratia which you have promised is in process. If you tell me the date I will bring the parents of Senthilkumar to you to facilitate it's handing over. 

                    After hearing the news about the tragic death of Senthilkumar I have personally visited Jalakandapuram,the native place of Senthilkumar on 4th March and met the parents of the victim. After that I have submitted a memorandum to the Higher education minister of Tamilnadu on 5th March asking him to write to the Andhra Pradesh government to expedite the investigation.

                    Meanwhile I got a copy of the fact finding committee report submitted by Prof. Vinod Pavarala. I appreciate the fact finding team for its early submission of the report. The committee recorded in page number 4 column 1.2 as follows: "students admitted in this batch were allotted supervisors soon after the initial process of ascertaining mutual interests.However,4 students from the reserved categories, including 2 recommended by the SC/St Admissions committee, did not initially find a Supervisor. Of the 4 who were not initially allotted a Supervisor, 2 eventually left the programme." The report also said in column 1.7 "it is a fact that most of the students affected by the inconsistencies and ambiguities in procedures were SC/ST students" and also rightly recorded that "All the physics students that this committee could meet have reported their sense that the School was acting against the interests of the SC/ST students". Though the committee had absolved the authorities in its findings we can understand the discriminatory attitude of the Physics School from these observations.

                         I once again thank you for your concern towards the poor parents of the victim and appreciate your generosity for granting five lac rupees as ex gratia. I believe this is only a beginning in rendering justice to the victim's family. Taking stringent action to curb the discriminatory practices of the Academic community and fixing the persons who are responsible for the tragic death of Senthilkumar are the other measures to follow.

                                       Thanking You Sir              
                                                                                    Yours Truly
                                                                                     D.Ravikumar
                                                                                        03.05.2008

Saturday, January 16, 2016

" Campaign For Common Crematorium "


Creating crematorium or burial ground on the basis of caste is a crime. An elected govt cannot do this with public fund. Laying separate path also illegal. 

SC ST (Prevention of Atrocities) Amendment Act 2015 Section 3 Sub section (za ) clearly says : 

" obstructs or prevents a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any manner with regard to—(A) using common property resources of an area, or burial or cremation ground equally with others or using any river, stream, spring, well, tank, cistern, water-tap or other watering place, or any bathing ghat, any public conveyance, any road, or passage.

This crime 'shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to five years and with fine' the law said.  

I invite you all to join this ' Campaign for Common Crematorium '

- Ravikumar
Former Legislator 
Gen Secretary, VCK

Friday, January 15, 2016

இரவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதவுங்கள்!


விழுப்புரம் மாவட்டம் கடப்பேரிகுப்பம் கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து இரவுப் பாடசாலை ஒன்றை நடத்துகின்றனர். தினமும் ஐம்பது மாணவர்கள் அதில் படிக்கின்றனர். 

ஒரு சமூகநலக் கூடம் போல காட்சியளிக்கும் அந்தப் பாடசாலை தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. அந்தப் பாடசாலையில் இதற்குமுன் படித்து பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி ஆசிரியராகவும் வேலைக்குப் போனவர்கள் இப்போது அங்கே இரவு நேரத்தில் வகுப்பு எடுக்கிறார்கள். 

அந்த இரவுப் பாடசாலை மாணவர்களுக்கு பின்வரும் உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன: 

1. மாணவர்கள் அமர்ந்து படிக்க பெஞ்ச், நாற்காலிகள்

2.அவர்களுக்கு ஒரு சிறு நூலகம்

3. இரவுப் பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிக்க கணினி 

4. மின் தடை அடிக்கடி ஏற்படுவதால் ஒரு இன்வெர்ட்டர் 

உதவிசெய்ய விரும்புவோர் தொடர்புகொள்ள: 

ஏழுமலை, ஆசிரியர் 97-90-030941

கலாச்சார கணியர்கள் - ரவிக்குமார்

 

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக புதுவகை 'குறி சொல்லிகள்' ஓரிருவர் உருவாகியுள்ளனர். உலகமயமாதலின் உபவிளைவுகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றுகிறது. 

வரலாற்றறிவைத் துச்சமாக நினைத்து ஊதியப் போட்டிக்குள் தொலைந்த, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இளைஞர்கள் சிலர் சற்றே பொருளாதாரத் தன்னிறைவு அடைந்ததும் தான் இழந்துபோன 'பண்பாட்டு பொக்கிஷங்கள்' குறித்த ஆற்றாமையிலும், பழமை ஏக்கத்திலும் ' மரபு' ' பண்பாடு' என்பவை குறித்த தமது குழப்பங்களுக்கு 'உடனடி விடைகளை'த் தேடுகிறார்கள். அவர்களின் தேவையை இந்த கலாச்சார கணியர்கள் நிவர்த்தி செய்கின்றனர். 

காட்சி ஊடகங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கைகொடுக்க சில ' கருத்தாளர்கள்' இருப்பதைப்போல இந்தக் கணியர்கள் பழமை ஏக்கத்தால் பீடிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களையும் கணித்துச் சொல்வதில் இவர்கள் வல்லவர்கள் என ஆங்காங்கே விளம்பரங்கள் தென்படுகின்றன. 

மார்க்சியம் என்ற கத்தியால் கொஞ்சம் கீறிப் பார்த்தால் இவர்களின் அடிப்படைவாதத்தை அடையாளம் கண்டுகொள்ளலாம்.   

Thursday, January 14, 2016

கல்வியே சிறந்த 'மாடு'! - ரவிக்குமார்



பசு மாட்டை வைத்து அரசியல் பண்ணுகிறவர்கள் அதை இந்திய கலாச்சாரம் என்கிறார்கள்; காளை மாட்டை வைத்து அரசியல் பண்ண விரும்புகிறவர்கள் இதைத் தமிழ்க் கலாச்சாரம் என்கிறார்கள். 

'மாடு' என்பதற்கு வேறொரு பொருளும் இருக்கிறது. அந்த சொல்லை செல்வம் என்ற பொருளில் கையாண்டிருக்கிறார் திருவள்ளுவர். ஒருவர்க்கு கல்வியே 'கேடில் விழுச் செல்வம்'  என்று கூறும் வள்ளுவர் மற்றவையெல்லாம் ' மாடு அல்ல' என்று நிராகரிக்கிறார். 

நாம் போற்றவேண்டிய மாடு பசு மாடோ காளை மாடோ அல்ல, கல்வியே சிறந்த மாடு! திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவிருக்கும் நேரத்தில் இதைத் தமிழர்கள் புரிந்துகொண்டால் நல்லது. 

தை முதல் நாளில் உறுதியேற்போம்


சாதி ஒழிப்பில் நம்பிக்கைகொண்டு சமத்துவத்தை விரும்பும் நண்பர்களே! சாதி இழிவோடு  பிணைக்கப்பட்ட பறை அடிப்பதை இனி ஆதரிக்கமாட்டோம் என உறுதியெடுத்துக்கொள்ளுங்கள். 

பறை என்பது உயர்ந்த கலை என்று கூறி மீண்டும் நவீன தீண்டாமையை விதைக்கும் சதிக்கு துணைபோகாதீர்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திதாசப் பண்டிதர் பறைக்கும் பூர்வ பௌத்தர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை விளக்கியுள்ளார். அதை மனதில் கொள்ளுங்கள். 

தமிழக கிராமங்கள் அனைத்தையும் இழிதொழில் ஒழிக்கப்பட்ட கிராமங்களாக்க சபதம் மேற்கொள்ளுங்கள். 

தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்வதை அரசாங்கம் கைவிடவேண்டும் என வலியுறுத்துங்கள்.

Wednesday, January 13, 2016

பொது மயானம்: தமிழக அரசு கர்னாடக உதாரணத்தைப் பின்பற்றவேண்டும் - ரவிக்குமார்


தோழர்களே!

தமிழ்நாட்டில் ஊடகங்களெல்லாம் தமிழ்நாட்டின் முதன்மையான பிரச்சனையாக ஜல்லிக்கட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது திருநாள்கொண்டசேரியில் நடந்த அநீதியைக் கண்டித்து நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

அங்கே இறந்துபோன முதியவரின் சடலத்தை யாருடைய தனிப்பட்ட வீட்டின் வழியாகவும் எடுத்துப்போக தலித் மக்கள் முயற்சிக்கவில்லை. பொதுப்பாதையின் வழியாகத்தான் எடுத்துப்போக விரும்பினார்கள். அதை சாதியவாதிகள் தடுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அதற்கு அனுமதியும் பெற்றார்கள். நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் " பொதுப்பாதை வழியாக அந்த சடலத்தை எடுத்துச்செல்ல காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும்' எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார். " நாங்கள் அவர்களுக்குத் தனியே பாதைபோட்டுத் தருகிறோம். அதற்காக இருபத்தோரு லட்சம் ரூபாயை ஒதுக்கிவிட்டோம். மார்ச் மாதத்துக்குள் பாதை அமைக்கிறோம்' எனத் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. பொதுப்பாதையின் வழியாக எடுத்துச்செல்ல பாதுகாப்பு கொடுங்கள் என்று நீதியரசர் உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால் ' நீதிமன்றம் சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம், நீதிமன்ற அவமதிப்பு வந்தாலும் பரவாயில்லை  சாதியவாதிகளைத் திருப்திபடுத்துவதே எங்கள் வேலை' என்ற போக்கில் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.

ஒரு முதியவரின் சடலத்தை நான்கு நாட்கள் நாறடித்து வயல் வரப்புகளின் வழியாக போலீசே சுமந்துசென்ற கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சிசெய்த திமுகவும் அதிமுகவும் செய்திருக்கும் சாதனை இதுதான்.

தமிழக காவல்துறை அப்பட்டமாக நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறது. இதை நீதிமன்றம் அறிந்திருக்கும்.எனவே வழக்கு தொடுத்தவரே மீண்டும் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவேண்டும் எனக் காத்திருக்காமல் உயர்நீதிமன்றம் தானே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடைமுறையைத் துவக்கவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்கவில்லை. தீண்டாமையைக் கடைபிடிப்பது குற்றமென சட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கமே சாதிக்கொரு மயானம் என்று உருவாக்குகிறது. அரசாங்கமே தனித்தனி மயானப் பாதைகளை அமைக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது இல்லையா? அரசாங்கமே தீண்டாமையைக் கடைபிடிப்பது சட்டவிரோதமில்லையா? இதை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்துமா?

அண்டை மாநிலமான கர்னாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கே சிறப்பானதொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். கர்னாடகாவில் இருக்கும் மயானங்களை அரசே கையகப்படுத்தி கடந்த 2014 ஆம் ஆண்டில் அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். இனி ஒரு கிராமத்துக்கு ஒரு மயானம்தான் என அறிவித்துவிட்டார்கள். காங்கிரசுக்கு இருக்கும் சமத்துவ உணர்வு இங்கே ஆள்கிறவர்களுக்கும் இல்லை ஆண்டவர்களுக்கும் இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்கிறார். அப்படி ஆட்சி அமைத்தால் கர்னாடகாவைப்போல இங்கும் பொது மயானங்களை அமைப்போம் என அவர் அறிவிக்கவேண்டும்.

கர்னாடக அரசு இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறது. பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மயான நிலங்களை மீட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அப்படி செய்யவேண்டும். கிராமம்தோறும் குடியிருக்க பட்டா கேட்டு ஆயிரக்கணக்கானவர்கள் மனு போட்டிருக்கிறார்கள். வீடுகட்ட நிலம் இல்லை எனக் கைவிரிக்கும் தமிழக அரசைக் கேட்கிறேன், சாதிக்கு ஒரு மயானத்தை ஒதுக்குவதற்குமட்டும் நிலம் இருக்கிறதா? பொது மயானம் அமைத்தால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் அரசாங்கத்துக்குக் கிடைக்குமில்லையா? அதைப் பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தலாமில்லையா? நில ஆக்கிரமிப்பாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறும் தமிழக அரசு மயான ஆக்கிரமிப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

பொது மயானம் வேண்டும் என்ற கோரிக்கையை நாம் இப்போது புதிதாகக் கேட்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையிலேயே இந்தக் கோரிக்கையை எழுப்பியிருக்கிறோம். ' சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சென்னை முதலான பெரு நகரங்களில் மின்மயானங்கள் அமைக்கப்படுவதாக அன்றைய திமுக அரசு அறிவித்தபோது, " நகரங்களைவிடவும் கிராமப்புறங்களில்தான் மின் மயானங்களின் தேவை அதிகம் உள்ளது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்ல சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்கும் உதவக்கூடியது. எனவே கிராமம்தோறும் பொதுவான மின்மயானங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என நான் வலியுறுத்தினேன்.

இப்போது தேர்தல் நெருங்குகிறது, தலித் மக்களின் ஓட்டுகளை வாங்கும் நோக்கத்திலாவது பொது மயானங்களை அமைத்துத்தர தமிழக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

(திருநாள்கொண்டசேரியில் தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து 12.01.2016 அன்று காலை விசிக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)

Tuesday, January 12, 2016

உலகமயம் உருவாக்கும் புதிய கொத்தடிமைகள்



சென்னை லயோலா கல்லூரியின் சமூகவியல் துறை சார்பில் கொத்தடிமை ஒழிப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று இன்று (12.01.2016) நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அதைப்பற்றி தமது நிலைபாட்டைத் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டது. 
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பின்வரும் கருத்துகளை நான் முன்வைத்தேன்: 

1. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகு உலகமயமாக்கலின் விளைவாக தீவிரமடைந்திருக்கும் இடப்பெயர்வு புதிய கொத்தடிமைகளை உருவாக்கியுள்ளது. 

2. கொத்தடிமைகளை சொந்த ஊரில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள்; வேறு ஊர்களில் / மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவுகளில் அடக்கலாம். சொந்த ஊரில் கொத்தடிமைகள் பெரும்பாலும் விவசாயத் துறையில் உள்ளனர். இந்த கொத்தடிமைத்தனத்தைப் பாதுகாப்பதில் சாதியமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. இவர்களைவிட ஒப்பீட்டளவில் அயல் மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். 

3. குறைந்தபட்ச கூலியைவிட குறைவாகக் கொடுத்தால் அது கொத்தடிமைத் தனமாகவே கருதப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இதைக் குறிப்பிட்டுத்தான் குறைந்தபட்ச கூலியை உயர்த்த வைத்தேன். குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலியை உயர்த்தவேண்டும். அதற்காக நாம் குரலெழுப்பவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்தபட்ச கூலி முழுமையாகக் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். 

4. தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலிலும் ஹோட்டல் தொழிலிலும் பீகார், ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் பலர் அரை கொத்தடிமை நிலையிலேயே உள்ளனர். அவர்களைக் கணக்கெடுப்புச்செய்து அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

5. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அரபுநாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்கின்றனர். அவர்களையும் இதில் கவனத்தில்கொள்ளவேண்டும். 

6. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Global Slavery Index அறிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் அடிமைகள் இருப்பதாகக் கூறியுள்ளது. சுமார் ஒன்றரை கோடி பேர் இந்தியாவில் அடிமைகளாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

7. இங்கே விவாதிக்கப்படும் விஷயங்களைத் தொகுத்து அவற்றின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்து அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அதற்கு ஆதரவு திரட்டலாம். 

Monday, January 11, 2016

எதல்பர்ட் மில்லர் கவிதைகள்


தமிழில் : ரவிக்குமார்

1.
போராடுகின்றன கறுப்பு முகங்கள்
மாற்றம் என்பது நீலவானம் அல்ல
சூரியனை மறைக்கின்றன வெள்ளைக் கரங்கள்

2.
நாங்கள் சாகிறோம் சிறிய அறைகளில்
இலைகள் வீழ்ந்துகொண்டேயிருக்கின்றன தரையில்
வசந்தத்தை நேசிக்கிறது நோய் 

3.
உடைகளைக் களைகிறது குளிர்காற்று 
சோகம் என்பது தனிமை
பூங்காவில் ஒரு முதியவர்

4.
அழுது புலம்புங்கள் எனக்காக
ஆறுதல்படுத்தட்டும்
பாடல்
மரணத்தைப்போல் மிதப்பது ஏதுமில்லை

Sunday, January 10, 2016

ஒரு தலித் காதல் கவிதை - ரவிக்குமார்



நான் உன்னை நேசிக்கிறேன் திருவள்ளுவர் தமிழை நேசித்ததைப்போல, அயோத்திதாசர் பௌத்தத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் சகஜானந்தா கல்வியை நேசித்ததைப்போல,  ரெட்டைமலை சீனிவாசன் தன்மானத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் வெண்மணிமக்கள் உரிமையை நேசித்ததைப்போல, ஜான் தாமஸ், ஏழுமலை நிலத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் இளையபெருமாள் பொறுமையை நேசித்ததைப்போல, மேலவளவு முருகேசன் துணிவை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் கக்கன் நேர்மையை நேசித்ததைப்போல, கேபிஎஸ் மணி வீரத்தை நேசித்ததைப்போல, 

நான் உன்னை நேசிக்கிறேன் அம்பேத்கர் ஜனநாயகத்தை நேசித்ததைப்போல 

நான் உன்னை நேசிக்கிறேன் 

Tuesday, January 5, 2016

தி இந்து நாளேட்டின் புதிய ஆசிரியர் திரு சுரேஷ் நம்பத் அவர்களுக்கு வாழ்த்துகள் !



தி இந்து நாளேட்டின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிவந்த மாலினி பார்த்தசாரதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
புதிய ஆசிரியர் நியமிக்கப்படும்வரை திரு சுரேஷ் நம்பத் ஆசிரியப் பொறுப்பில் தற்காலிகமாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.அவர் இதழியல் துறையில் நீண்ட அனுபவமும் முற்போக்கு மனோபாவமும் மதச்சார்பின்மையில் பற்றும் கொண்டவர். அவரே நிரந்தர ஆசிரியராக நியமிக்கப்பட  என் வாழ்த்துகள் ! 

கடந்த ஒராண்டாக்கு முன்னர் மாலினி பார்த்தசாரதி ஆசிரியராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அந்த நாளேட்டில் பணியாற்றிவந்த பி.சாய்நாத் உள்ளிட்ட பல மூத்த பத்திரிகையாளர்கள் பதவி விலகினர். தமிழ்நாட்டிலும்கூட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டு அதிருப்தியடைந்தனர். அரசியல் செய்திகளைத் தருவதில் முதிர்ச்சியும் தெளிவான பார்வையும் சமூகப் பொறுப்பும் கொண்ட சிலர் ஃப்ரண்ட்லைனுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் இளம் பத்திரிகையாளர்களை ஊக்குவிப்பதில், முக்கியமான தலையங்கங்களை அடையாளம் காண்பதில், பிற ஊடகங்களைவிட வித்தியாசமான  செய்திகளை முந்தித் தருவதில் அவர் ஆர்வம் காட்டினார் என்பதையும் மறுக்க முடியாது. 

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. தமிழில்
காட்சி ஊடகங்கள் யாவும் கட்சி ஊடகங்களாக இருக்கும் சூழலில்  ஆங்கில நாளேடுகளே ஒப்பீட்டளவில் நடுநிலையோடு செய்திகளை வெளியிடுகின்றன. மக்களின் அரசியல் நிலைபாட்டை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் ஒரு நாளேட்டில் நடைபெற்றிருக்கும் இந்த மாற்றம் கவனத்துக்குரியது. இது தமிழ்நாட்டின் நலனுக்கு உதவும்விதமாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு

Monday, January 4, 2016

பாமக எம் எல் ஏ குரு சொல்வதை எப்படி நம்புவது?

எனது முகநூல் பதிவின்  ( https://www.facebook.com/WriterRavikumar/posts/10153174211262062) உந்துதலில் இன்று (05.01.2016) டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில நாளேட்டில் வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை

ஒரு காஷ்மீரிக் கவிதை

கைவிடப்பட்ட சடலம்

- பஷீர் அத்தர்

தமிழில்: ரவிக்குமார்

அவன் கைகளில் இட்ட மருதாணி இன்னும் மங்கவில்லை
 முகத்தில் தாடி முழுதுமாய் முளைக்கவில்லை

 ........... சகோதரிகள் தேடிக்கொண்டிருக்கலாம்
அம்மா அவனுக்காகக் கதவருகில் காத்திருக்கலாம்
வயதான தந்தை பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கலாம்
கருணையே இல்லாமல் கைவிடப்பட்டுக் கிடக்கிறது 
அந்த சடலம்

 சில நாட்கள் சென்றபின் உருது பத்திரிகை ஒன்றில் செய்தி வந்தது
 ‘ நாங்கள்தான் கொன்றோம், அவன் ஒரு ஆள்காட்டி,  இயக்கத்தை எதிர்ப்பவன், துரோகி’
அதைப் படித்த ஒருவர் சொன்னார் : ‘அவன் ஒரு போராளி ,நாட்டின் எதிரி , எதிரிகளின் கையாள் ‘
 இன்னொருத்தர் முணுமுணுத்தார் : ‘அவன் போராளியும் அல்ல 
கையாளும் அல்ல
 நேசம் நிறைந்த காஷ்மீரின் புத்திரன்’
 
கொடூரமாகக் கொல்லப்பட்ட இளைஞன்
 கருணையின்றிக் கைவிடப்பட்ட அவன் சடலம்.

Saturday, January 2, 2016

ஆணவக் கொலைகளின் காலத்தில் 'ஆரியமாலை'



சிறந்த சிறுகதை நூலுக்காக தமுஎகச விருதுபெற்ற 'கூனல் பிறை' என்ற தொகுப்பில் 'ஆரியமாலை' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது. நா.வானமாமலை பதிப்பித்த காத்தவராயன் கதைப்பாடலை எடுத்து தனது பாணியில் சிறுகதையாக்கியிருக்கிறார் தேன்மொழி. இக்கதையில், காத்தவராயனின் தாயும் ஆரியமாலையும் சாதிப்பிரச்சனை குறித்துப் பேசிக்கொள்வதாய் வரும் உரையாடல், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆணவக் கொலைகளில் முடியும் இன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. 

காத்தவராயனின் இசையில் மயங்கி அவனோடு ஆரியமாலை செல்வதாக வரும் சித்திரிப்பு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்ட தேன்மொழியின் உரைநடைக் கவிதை மொழிக்கு உதாரணம். அதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்: 

" ஆரியமாலையின்செவிகளில் அந்த இசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. அதுஇசைதானா அல்லது உயிரை உலர்த்திச் சருகுபோல்ஆக்குவதற்கு இறைவன் கண்டுபிடித்த உபாயமா என்று அவள்குழம்பினாள்.   அந்த இசை காத்தவராயனின் கையிலிருந்த கிண்ணரியிலிருந்து வந்ததா அல்லது அவனது குரலில் பெருக்கெடுத்துக் காற்றில் வண்ணங்களைப் பூசியதா என்றுஅவளால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியவில்லை.அந்த இசைஅவளை நதியின் ஆழத்தில் மூழ்கடித்தது. அவள் அல்லிமலரைப்போல மலர்ந்தாள், அடுத்தகணம் அன்னத்தைப்போல நீந்தினாள். மழையின் அழுகையைப்போல  நிறுத்த முடியாது நீண்டுகொண்டிருந்தது அந்த இசை. காற்றின் முனகலாக அவளதுகாதுகளுக்குள் கிசுகிசுத்தது அவனது குரல். வானம் இறங்கிவந்துஒரு நீலநிறச் சேலையாக தன்னைப் போர்த்துவதுபோல்உணர்ந்தாள் ஆரியமாலை." 

யதார்த்தம் கடந்ததொரு சித்திரிப்பைக் கொண்ட இந்தச் சிறுகதை தலித் பெண்ணிய நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது. சாதியைக் கடந்த காதலின் வலிமையைப் பெண்ணின் நோக்கிலிருந்து பார்க்கவேண்டியதன் அவசியத்தையும், பெண்ணாக இருந்தபோதிலும் ஒரு பிராமணப் பெண்ணுக்கும் ஒரு தலித் பெண்ணுக்கும் இடையே சமூகப் புரிதலில் இருக்கும் வேறுபாட்டையும், அந்த வேறுபாடு உண்மையான நேசம் மழையாய்ப் பொழிகையில் கரைந்துபோய்விடும் என்ற உண்மையையும் இந்தக் கதை உணர்த்துகிறது. தலித் வாழ்க்கைமுறையின் தனித்துவத்தையும் அழகியலையும் இந்தக் கதை ஆர்ப்பாட்டமில்லாமல் பேசுகிறது. 

இலக்கிய ருசி அறியாத சாதிய மனம் கொண்ட கோட்பாட்டாளர்கள் தமிழில் அவசர அவசரமாகக் கட்டமைத்த 'தலித் ஸ்டீரியோடைப்'புக்குள்  அடங்காத சிறுகதை இது. இலக்கியத்தை மதிப்பவர்கள் நிச்சயம் இக்கதையை விரும்புவார்கள் என்பதென் நம்பிக்கை. 


Friday, January 1, 2016

மாசடைந்த காற்று:

டெல்லியின் தடுப்பு நடவடிக்கையை சென்னையிலும் அமல்படுத்தவேண்டும்
~~~~~~~~~

காற்று மாசு உயிருக்கு ஆபத்தான மட்டத்தை எட்டிவிட்ட காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்றுமுதல்  ஒற்றைப்படை இலக்கம் கொண்ட வாகனங்களை ஒரு நாளிலும் இரட்டைப்படை இலக்கம் கொண்ட வாகனங்களை மறுநாளிலும் இயக்கவேண்டும் என்ற டெல்லி அரசின் ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படிச் செய்ததால் இன்று நடுப்பகல் அளவில் கணக்கிட்டபோது காற்று மாசு கணிசமாகக் குறைந்திருக்கிறது என டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காற்று மாசின் அளவைப் பொருத்தவரை டெல்லியைவிட சென்னையின் நிலை மோசம் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சென்னை மாநகரின் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடும் கார்பன் மோனாக்ஸைடும் அதிக அளவில் கலந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ( இந்த செய்திக் கட்டுரையில் அது தொடர்பான விவரங்கள் உள்ளன- http://m.thehindu.com/news/national/the-quality-of-air-you-breathe-in-chennai-is-worse-than-in-delhi/article7422559.ece ) 

நிலக்கரியைப் பயன்படுத்தி அனல்மின்சாரம் தயாரிப்பதன்மூலமும் வாகனப் புகையின் மூலமும் காற்றில் சல்பர் ஆக்ஸைடு அதிகரிக்கிறது. கார்பன் மோனாக்ஸைடும் வாகனப் புகையால்தான் காற்றில் அதிகரிக்கிறது. இந்த மாசுகளால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் உண்டாகும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயிரிழப்புகூட நேரலாம். 

சென்னை மாநகரின் காற்று மாசைக் கட்டுப்படுத்த எந்தவொரு தீவிர நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. டீசல் வாகனங்களைக் கட்டுப்படுத்துதல், ஐடி முதலான நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் தனித்தனி வாகனங்களில் செல்லாமல் நிறுவனப் பேருந்தில் செல்வதையோ அல்லது ஒரே காரில் பலர் சேர்ந்துசெல்வதை ஊக்குவித்தல்; பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்; அரசு அலுவலகங்களை சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும். 

சென்னை மாநகரை நீரால் அழியவிட்டவர்கள் அது காற்றால் அழியாமல் காப்பாற்றுவார்களா?