Tuesday, April 26, 2011

புதிய வழிபாடு - 2


மல்லிகை மலர்களாலான 
மாலைகளைவிடவும் 
விலை அதிகம் கொண்டவை 
ரோஜா மாலைகள்
நீ இருந்திருந்தால் மல்லிகை மாலைகளே
போதுமென்றுதான் சொல்லியிருப்பாய்

எனினும் 
சிவப்பு ரோஜாக்களின் அழைப்பை
எவர்தான் மறுக்கமுடியும்?
அதிலும்,
தெளித்த நீர்த் திவலைகள்
குளியலறையிலிருந்து திரும்பும்
உன் முகத்தை 
நினைவுபடுத்தும்போது ?

நீ வருவதற்குள்ளாக 
இரண்டு மாலைகளைப் 
பேரம் பேசாமல் வாங்கினேன்

மாதாவுக்குத்தான் 
வாங்கினோம் என்றாலும் 
அங்கே வந்தது 
வழிபடத்தான் என்றாலும் 

கைகளில் பிடித்திருந்த மாலைகள்
நம்மை ஒருகணம் 
மணமக்களாக்கியதை
சுற்றியிருந்த கூட்டமெல்லாம் 
நம் உறவினர்களாக மாறியதை


நீயும் உணர்ந்தாயா?

புதிய வழிபாடு


அர்ச்சகர்கள் இல்லாத 
தேவாலயத்தில் 
வழிபடுவது எப்படியெனத் தெரியாமல்
அமர்ந்து கண்மூடி
இரந்து விழி திறந்தால் 

மண்டியிட்ட உன் பாதங்கள்

மடங்கிய விரல்களைத் தாண்டி
பளிங்குத் தரையின் சில்லிப்பு
உள்ளங்கால்களில் ஓடிக்கொண்டிருந்தது

நான் பார்க்கப் பார்க்க
பிரம்மாண்டமாய் வளர்ந்தன  
உன் பாதங்கள்

தரைக்கும் கூரைக்குமாய் 
வளர்ந்து நின்ற பாதங்களைக் 
கண்களால் தொட்டேன்
மனதுக்குள் 
ஒற்றிக்கொண்டேன்

எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது" : முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளி


[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 09:39 GMT ] [ தி.வண்ணமதி ]
விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அனைத்துலக சஞ்சிகையான Time [Sunday, Apr. 24, 2011] வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

நன்றி : http://www.puthinappalakai.com/view.php?20110426103702




ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த நேர்காணலின் போது அவள் பதற்றத்துடன் தனது விரல்களைப் பிசைந்துகொண்டிருந்தாள்.

இந்த முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளியுடன் நாங்கள் உரையாட ஆரம்பித்தபோது அவளது கைகளில் இருந்த அழகாக மடிக்கப்பட்ட லேஞ்சி எங்களது உரையாடல் முடிவுக்கு வந்த வேளையில் ஏதோ துணிக்கத்தையினைப் போல் கசங்கியிருந்தது.

நான் அவளது உண்மைப் பெயரைப் பயன்படுத்துவதை அவள் விரும்பவில்லை. பதிலாக தன்னைச் செல்வி என அழைக்குமாறு அவள் கூறினாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல பெண் போராளிகளைப் போலவே இவளும் தானாக அமைப்புடன் இணையவுமில்லை, கட்டாயத்தின் பெயரில் இணைக்கப்படவுமில்லை. தற்போது புலிகளின் கிளர்ச்சி என்பது இல்லையென்றாகிவிட்டது. இவர்களது இராணுவ பலம் மே 2009ன் பின்னால் சிறிலங்கா அரச படையினரால் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

1998ம் ஆண்டு செல்வி 18 வயதினை அடைந்திருந்த வேளையில் இவளது சகோதரனைத் தேடி கிழக்கே மட்டக்களப்பிலுள்ள இவளது வீட்டுக்குப் புலிகள் வந்திருந்தார்கள். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அமைப்பில் இணைந்திருக்கவேண்டும் என்ற கொள்கையினைப் புலிகள் கொண்டிருந்தார்கள். புலிகளின் இந்த விதி அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகள் அனைத்திலும் கடுமையுடன் அமுல்படுத்தப்பட்டது எனலாம்.

இவளது குடும்பத்தினைப் பொறுத்தவரையில் வயதில் குறைந்த சகோதரன் அமைப்பில் இணையவேண்டும் அல்லது இரண்டு மூத்த பெண் பிள்ளைகளில் ஒருவர் இணையவேண்டும்.

வயதில் மூத்தவளாக இருந்த செல்வி புலிகளமைப்புடன் இணைந்துகொள்வதற்குத் துணிந்தாள். அன்று முதல் எட்டு ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றினாள். புலிகளமைப்பு சிறிலங்கா அரச படையினரின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த வேளையில் அவள் அமைப்பினை விட்டு வெளியேறினாள்.

இன்று விடுதலைப் புலிகள் என்றொரு அலகுமில்லை, போருமில்லை என்றாகிவிட்டது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் கையில் ஆயுதம் என்பவற்றுடன் தனது இளமைக்காலத்தினைத் தொலைத்துவிட்ட செல்விக்கு தற்போது ஒரு சில தேர்வுகளே உள்ளன.

"நான் எதனைச் செய்யமுடியும். நான் போதிய கல்வியறிவினைப் பெற்றிருக்கவில்லை, பணமும் இல்லை பணியும் இல்லை" எனத் தளதளத்த குரலில் இவள் கூறுகிறாள். "எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது"

இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த போருக்குப் பலிக்கடா ஆகிப்போன இதுபோன்ற பெண்களின் கதைகள் இதேபோன்றவைதான்.

சிறிலங்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்குவந்துவிட்ட போதிலும் இரண்டு தரப்பிலுமுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னமும் அமைதியின் சிறுதுளிப் பலாபலனைக் கூடப் பெறவில்லை.

"போரின் விளைவாக வெளியே தெரியாமல் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக தனித்துநின்றோ அன்றி கூட்டாகவும் குரல் எழுப்புவது கடினமென இவர்கள் உணர்கிறார்கள்" என பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பினது அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பாளர் அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நாடுதழுவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இந்த அமைப்பு அண்மையில் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வியைப் போல சந்தர்ப்ப சூழமைவாலோ அல்லது கட்டாயத்தின் பெயரிலோ புலிகளமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஏராளம் பெண்கள் இங்குள்ளனர்.

சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் 11,000 உறுப்பினர்களில் 3,000 பேர் பெண்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்களில் அரைப் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதவிர போரின் இறுதிநாட்களில் இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதல்களின் நடுவே சிக்கி பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட கணவனை இழந்தோராக்கப்பட்ட பிறிதொரு தொகுதியினர் உள்ளனர். அத்துடன் கொல்லப்பட்ட, மாற்று வலுவுடையோர் ஆக்கப்பட்ட மற்றும் காயமடைந்த இராணுவத்தினரின் மனைவிமார் குடும்பப் பொறுப்பினைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

"சமூகத்தின் மத்தியில் தனித்து விடப்பட்டிருக்கும் இந்த வகையினரில் அதிகமானோர் தங்களது இருபதுகளில் இருக்கும் அதேநேரம் பொருத்தமான தொழில்வாய்ப்பினையோ அல்லது தொழில்வாய்ப்பினைப் பெறக்கூடிய கல்வியறிவு மற்றும் தொழில்சார் பயிற்சிகளையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை" என அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார்.

போர் இடம்பெற்ற முன்னாள் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் வன்னிப் பிராந்தியத்திலுள்ள 110,000 குடும்பங்களில் 30 சதவீதமானவை பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாகும்.

பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் கனகநேசன் சிவகௌரியின் குடும்பமும் ஒன்று.

2009ம் ஆண்டு ஏப்பிரலில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டு இவளது கணவன் உயிர் நீத்தான். இதன் பின்னர் போதிய கல்வி அறிவினைப் பெறாத 33 வயதுடைய சிவகௌரி தனது வயது முதிர்ந்த பெற்றோரையும் ஐந்து பிள்ளைகளையும் வைத்துப் பராமரிப்பதற்கு தையல் தொழில்செய்து வருகிறாள்.

கண்பாற்வையற்ற தாய், முழங்கால் பாதிக்கக்பட்ட்ட தந்தையுடன் அதிக சிரமப்படுகிறாள் இவள். அதிகளவு வேலை வரும் நாளில் வெறும் இரண்டு டொலர்களையே (200 ரூபாய்) இவளால் சம்பாதிக்க முடிகிறது. "எனது வாழ்வில் தினமும் போராட்டம்தான். வேலை எதுவுமற்ற நாளில் குடும்பம் அதிகம் அல்லலுறும்" எனத் துயரத்துடன் கூறுகிறாள்.

சிறிலங்காவினது கிழக்குப் பிராந்தியத்தில் போர் 2007ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 49,000 கணவனை இழந்தோர் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. அதுவும் இவர்களில் பலர் தங்களது இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கிறார்கள். குடும்பத்தலைவன் மடிந்துவிட்ட நிலையில் புதிய சுமைகளையும் பொறுப்புக்களையும் சுமக்கும் இந்த துணையிழந்த பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டும் என இன்னமும் சமூகம் கட்டளையிடுகிறது.

"இங்குள்ள சமூகக் கட்டமைப்பினைப் பொறுத்தவரையில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருக்கிறது" என்கிறார் அருந்ததி சந்திரதிலகே.

பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பானது இதுபோன்ற குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும் பெண்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதோடு சுயதொழில் திட்டங்களையும் முன்னெடுக்கிறது. தவிர, பெண்கள் தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கான உதவிகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

"நாடு பூராகவும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு இதுபோன்ற உதவிகள் தேவை என்பதை நாங்கள் மெதுவாக உணர்கிறோம்" என்கிறார் அருந்ததி. இந்தப் பெண்கள் தமக்கான தொழில்வாய்ப்பினைப் பெறுகின்றபோதும் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தவர்கள் வேறுபட்ட கோணத்திலேயே இன்னமும் பார்க்கப்படுகிறார்கள். "இங்கு ஏராளம் பிரச்சினைகள் உள்ளன" என அருந்ததி கூறுகிறார்.

தான் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி செல்வியும் நன்கறிவாள். "என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள்?" என்ற கேள்வியினைத் தொடுக்கிறாள் செல்வி. "எனது கிராமத்தவர்கள்கூட என்னிலிருந்து சற்று எட்ட விலகியிருக்கவே விரும்புகிறார்கள். தீண்டத்தகாத ஒருத்தியா, வேண்டப்படாத ஒரு சமூகத்திலிருந்து வந்தவளாகவே என்னை அனைவரும் பார்க்கிறார்கள்" என்கிறாள் செல்வி.

Sunday, April 24, 2011

நல்ல மேய்ப்பர்





ஆட்டுக்குட்டியின் அழகு
அதன் துள்ளலில் இருக்கிறது
இருளில் நனைத்தெடுத்த துண்டைப்போல இருக்கும்
ஆட்டுக்குட்டி
புல்லை மறந்து பாலை மறந்து ஓடுகிறது
மடங்காத கால்கள்
எந்திரம்போல் தாவுகின்றன
அம்மாவைக்கூட அழைக்கத் தெரியாத
ஆட்டுக்குட்டிக்குத்
தெரிந்ததெல்லாம்
சுதந்திரமான ஓட்டம் மட்டும்தான்
கர்த்தரே
அந்த ஆட்டுக்குட்டியை இறக்கிவிடுங்கள்
மேய்ப்பர்கள்
ஆடுகளைப்
பிடித்துவைத்திருப்பதில்லை

Saturday, April 23, 2011

paintings of shuvaprasanna

This paintings will go down in history as crucially timed, with elections in West Bengal just around the corner, and the possible downturn of an unhindered thirty-year-long Communist rule. The bold depiction of the honchos of the Communist party, all without their left hands, sitting surrounding the dead draped body of their oldest ablest comrade leaves little to imagination.  It comes across to me as a bit too propagandist, bereft of all subtlety and unbecoming of an artist of Shuvaprasanna's stature. Formally, however, it evokes the Mexican mural tradition, especially the work of Diego Rivera.  Another image that depicts a lady in white sari leading a band of followers, pied-piper style, is equally blatant and almost illustrative in character. Although the overall mood of the image remains vague insofar as its subject is left ambiguous, the narrative nature of the image detracts from its aesthetic potential.

-- Paroma Maiti

--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

painting of shyamal datta ray



--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

மாநில புத்தக ஆதரவுக் கொள்கை - ரவிக்குமார்


                  

                   ( மணற்கேணி - 5 இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம் )


      சர்வதேச அளவில் எத்தனையோ தினங்கள் உலக தினங்களாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான சர்வதேச தினங்கள் நம் கவனத்துக்கே வருவதில்லை. உலகத் தாய்மொழி நாளை நம்மில் எவ்வளவுபேர் கடைபிடித்தோம்? அதுபோல பலவற்றை நாம் பட்டியலிடலாம்.ஆங்கிலப் புத்தாண்டைத்தவிர அதிக அளவில் பிரபலமான சர்வதேச தினம் ஒன்று இருக்கிறது என்றால் அது காதலர் தினம் என்றுதான் சொல்ல வேண்டும். அதை எதிர்ப்பவர்களும் சரி, ஆதரிப்பவர்களும் சரி அந்த நாளை ஏதோ ஒருவிதத்தில் கடைபிடிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். காதலர்தினத்தின் அறிவார்ந்த வடிவமாகத் தொடங்கி இன்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நாள்தான் உலகப் புத்தக நாள்.
      ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக நாளாக கடைபிடிக்க வேண்டுமென்று யுனெஸ்கோ நிறுவனம் 1995ஆம் ஆண்டில் அறிவித்தது. அதுமுதற்கொண்டு ஆண்டுதோறும் அந்த நாளில் உலகின் பல்வேறு நாடுகள் புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் விதமாக ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகின்றன. பள்ளி மாணவர்கள் அதிக அளவில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என பலத்தரப்பினரும் இணைந்து இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதன்மூலம் புத்தகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்தியாவிலும்கூட ஆங்காங்கே இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
       உலகப் புத்தக நாளைக் கொண்டாடும் இந்த வழக்கம் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆரம்பித்ததாகும். அந்த நாட்டில் பிறந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மிகேல் தெ செர்வாந்தஸை கௌரவிக்கும் நோக்கோடு அந்த நாளை ஸ்பெயின் அரசாங்கம் கடைபிடிக்கத் தொடங்கியது. அந்த நாளில்தான் செர்வாந்தஸ் மரணம் அடைந்தார். அவரை நமக்கும்கூட நன்றாகத் தெரியும். காற்றாலைகளோடு சண்டை போட்ட டான் கெஹாத்தேவின் வீரதீர சாகசங்களை நாம் பள்ளிப் பருவத்தில் படித்துச் சிரித்திருக்கிறோம். அந்த புகழ் பெற்ற நூலை எழுதியவர்தான் செர்வாந்தஸ். அவரது நினைவு நாள் மட்டுமல்ல ஷேக்ஸ்பியரின் நினைவு நாளும் அதே ஏப்ரல் 23தான். அதுமட்டுமன்றி அது புகழ் பெற்ற பல எழுத்தாளர்களின் பிறந்த நாளும்கூட. உலகம் அறிந்த எழுத்தாளர் விளாதிமிர் நபக்கோவ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் பலர் அந்த தேதியில் பிறந்துள்ளனர். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அந்த நாளை உலகப் புத்தக நாளாக அறிவிப்பதென யுனெஸ்கோ முடிவு செய்தது என்றாலும் அதற்கு வழிகோலியது ஸ்பெயின் நாடுதான்.
      ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலூனா என்ற பகுதியில் ஒரு வழக்கம் இருந்தது. ஏப்ரல் 23ஆம் தேதியை அங்கே புனித ஜார்ஜ் நாள் என்று பல நூற்றாண்டுகளாகக் கடைபிடித்து வந்தார்கள். அந்நாளில் காதலர்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களை பரிசளிப்பார்கள். அதற்குப் பதிலாக பெண்கள் தமது காதலர்களுக்குப் புத்தகம் ஒன்றைக் கொடுப்பார்கள். இப்படி வருடத்திற்கு குறைந்த பட்சம் பல லட்சம் புத்தகங்கள் அங்கே விற்பனையாகி வந்தது. இந்த வழக்கத்தை கணக்கில் கொண்டுதான் உலகப் புத்தக நாளை அந்த தினத்தில் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
      இங்கிலாந்து அரசாங்கம் உலகப் புத்தக நாளை வேறொரு நாளில் கடைபிடித்து வருகிறது. மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமையை அவர்கள் உலகப் புத்தக நாள் என்று கொண்டாடி வருகிறார்கள். அந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பவுண்டு மதிப்புள்ள டோக்கன் ஒன்று கொடுக்கப்படும். அதைக்கொண்டுபோய் புத்தகக் கடைகளில் கொடுத்து அவர்கள் தமக்கு விருப்பமான புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இந்த வழக்கத்தை இங்கிலாந்து அரசாங்கம் துவங்கியவுடன் அங்கிருந்த பதிப்பாளர்கள் ஒரு பவுண்டு விலையுள்ள புத்தகங்களை இந்த நாளுக்கென்றே தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலில் ஒரு புத்தகம் என்று ஆரம்பித்து இன்று அந்த நாளில் ஒரு பவுண்டு விலையுள்ள ஏராளமான புத்தகங்கள் பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அயர்லாந்தும் பின்பற்றி வருகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.
      ஏப்ரல் 23 என்பது உலகப் புத்தக நாளாக மட்டுமின்றி பதிப்புரிமை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர் எழுதி வெளியிடுவதை எவர் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடுவதிலிருந்து தடுக்கவே பதிப்புரிமை குறித்த விதிகள் உருவாக்கப்பட்டன. ஒருவருடைய படைப்பை வேறு ஒருவர் திருடுவதிலிருந்து தடுப்பதும் ஒரு படைப்பாளிக்கு அவரது படைப்பு தொடர்பான அனைத்து விதமான வர்த்தக உரிமைகளையும் வழங்குவதுதான் பதிப்புரிமை என்பதாகும். இது தொடர்பாக பல்வேறு சட்டங்கள் உலகெங்கும் உள்ள நாடுகளால் இயற்றப்பட்டுள்ளன. நமது நாட்டிலும்கூட பதிப்புரிமைக்கென்று சட்டம் இருக்கிறது. ஒரு எழுத்தாளர் இறந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பதிப்புரிமை தானாகவே காலாவதியாகி விடும் என்பது நம்முடைய பதிப்புரிமைச் சட்டத்தின் முக்கியமான அம்சமாகும்.
      பதிப்புரிமை, காப்புரிமை என்று பலவாறாக பேசப்பட்ட போதிலும், இன்று எழுத்தாளர்கள் வறுமையில்தான் தொடர்ந்து வாடவேண்டி இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குப் போதுமான 'ராயல்டி' கொடுக்கப்படுவதில்லை. தமிழை எடுத்துக்கொண்டால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையும் செய்யப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் புத்தக விற்பனை கூடிக்கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி பலப் பதிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இத்தனை நடந்தும் புத்தகங்களை உழைத்து உருவாக்குகின்ற படைப்பாளிகள் இந்த வளர்ச்சியினால் பயன்பெற்றிருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்ற பதிலைதான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட முன்னணி பதிப்பகங்கள் சிலவற்றைத் தவிர பெரும்பாலான பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி எதையும் வழங்குவதில்லை. முறைப்படி அதற்கான ஒப்பந்தங்களையும் போட்டுக் கொள்வதில்லை. பதிப்பாளர்களின் இத்தகைய நேர்மையற்ற அணுகுமுறையால் எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். ராயல்டி தராமல் ஏமாற்றும் பதிப்பாளர்களால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் இப்போது தாங்களே பதிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். இது அவர்களது பொருளாதாரப் பிரச்சனையை வேண்டுமானால் தீர்த்துவைக்கலாம். ஆனால் அவர்களின் படைப்புத்திறனை இது கெடுத்துவிடும். அதனால் ஏற்படும் இழப்பு சமூகத்துக்குத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
      எழுத்தாளர்களை வருத்தமடைய வைக்கும் ராயல்டி பிரச்சனை ஒரு பக்கம் என்றால், பதிப்பாளர்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நம்முடைய சமூகத்தில் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிற பழக்கம் மிக மிகக் குறைவு. அதிலும் இதுவோ தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர் யுகம். அப்புறம் இருக்கவே இருக்கிறது கிரிக்கெட். இந்தக் கவர்ச்சிகளையெல்லாம் தாண்டி ஒருவரைப் புத்தகத்தைநோக்கி ஈர்ப்பதென்பதே பெரிய சவால்தான். தாங்கள் வெளியிடும் நூல்களைத் தமிழ்நாடு முழுக்க வினியோகித்து ஆங்காங்கே இருக்கும் புத்தகக் கடைக்காரர்களிடமிருந்து விற்ற பணத்தை வசூலிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நம்பகமான வினியோக வலைப் பின்னல் இல்லாத காரணத்தால் அழிந்துபோன பதிப்பாளர்கள் ஏராளம். இது ஒருபுறமென்றால் 'கள்ளப்பதிப்பு' என்பது இன்னொரு பக்கம் பூதாகரமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுவது போலவே, கள்ளப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு விற்கப்படுகின்றன. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் சந்தைக்கு வருகின்ற அதே நாளில் அந்த நூல்களின் கள்ளப்பதிப்புகளும் சந்தைக்கு வந்து விடுகின்றன. குறிப்பாக ஆங்கில நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள்தான் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. பிளாட்பார புத்தகக்கடைகளில் இந்த கள்ளப்பதிப்புகள் நிறைந்திருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் ஹாரிபாட்டர் புத்தகங்கள் முதல் அருந்ததி ராயின் நாவல்வரை கள்ளப்பதிப்புகளாக வந்துவிட்டன. ஒருமுறை ஹாரிபாட்டர் புத்தகம் சந்தைக்கு வருவதற்கு முதல் நாளே அதன் கள்ளப்பதிப்பு பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு கள்ளப்பதிப்பாளர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக புத்தகங்களின் கள்ளப்பதிப்புகளை வெளியிடுவது எளிதாகிவிட்டது. இதைத் தடுப்பதற்கு எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும்கூட திருட்டு வீடியோ போல இது மேலும்மேலும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை.
     நல்ல புத்தகங்கள் வெளிவருவதற்கான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பொதுநூலக அமைப்பை வலுப்படுத்துவது, நல்லநூல்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் நிதி உதவி செய்வது, இளைய தலைமுறையினரிடம் அதிலும் குறிப்பாக மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது முதலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது நூல்களின் விற்பனைக்கான வலைப் பின்னலை ஏற்படுத்துவதாகும். பொதுநூலகங்களில் விற்பனைப் பிரிவுகளைத் துவக்குவதன்மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகத் தீர்த்துவிடலாம். தற்போது அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. அவற்றைத் தேர்வுசெய்யும் பொறுப்பு பள்ளி மட்டத்திலேயே இருக்கிறது. இதனால் தரமான நூல்கள் அந்த நூலகங்களில் இடம்பெற முடியாத நிலை உள்ளது. பொது நூலகங்களுக்கும், பள்ளி நூலகங்களுக்கும் நூல்களைத் தேர்வுசெய்யும் குழு ஒழுங்காக செயல்பட்டால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
    பள்ளிக் கல்வித்துறையில் பலவிதமான சீர்திருத்தங்களை தமிழக அரசு  செய்துள்ளது . தமிழக அரசு இங்கிலாந்தின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி இனிமேல் ஆண்டுதோறும் உலகப் புத்தக நாளன்று ஐம்பது ரூபாய்க்கோ நூறு ரூபாய்க்கோ டோக்கனை மாணவர்களுக்குத் தரலாம். அந்த டோக்கனுக்கு இருமடங்கு  மதிப்புகொண்ட புத்தகங்களைப் பதிப்பாளர்கள் கொடுக்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். தனியார் பள்ளிகள் இந்த  ரூபாயைக் கல்விக்கட்டணத்துடன் முதலிலேயே வசூலித்துப் பிறகு மாணவர்களிடம் அளிக்கலாம்.
 
தற்போது மத்திய அரசு தேசிய புத்தக ஆதரவு வரைவுக் கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதைப்போல தமிழக அரசு மாநில கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டும் என நான் சட்டப் பேரவையில் வலியுறுத்தினேன். புதிய அரசு அதை நிறைவேற்றவேண்டும் . அதற்கு பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் அழுத்தம் தரவேண்டும். 

    

Thursday, April 21, 2011

மணற்கேணி இதழ் 5



மணற்கேணி இதழ் 5 இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. 

அதில் இடம்பெற்றிருக்கும் ரவிக்குமார் கவிதைகளில் சில:




1.

மழையில் அழுத கண்ணீராய்
தடயம் காண முடியாததாயிருக்கிறது உன் நேசம்

'கடிதமில்லை கனவுகண்டு விழித்ததில்லை
பார்க்காமல் இருந்தாலும் பதற்றம் வந்ததில்லை
சந்திக்கும்போதும் சந்தோஷம் மலர்ந்ததில்லை
நீ இல்லாவிட்டாலும் இருப்பேன்'
என்கின்றாய்

அலமாரியின் சாவி தேடி
அலைமோதும்  திருடன்போல
ஒவ்வொரு தருணத்தையும்
திறந்து  பார்த்துத் தவிக்கின்றேன்

'அம்மாவின் பொய்கள்' பற்றி
சொன்னான் ஒரு கவிஞன்
அது உனக்கும் பொருந்தும்தான்
அறிவேன் என்றாலும்
சொல்லிவிடு
கண்ணீரைக் கண்ணீரென்று
காதலைக் காதலென்று

2.

கொசுபத்தியின் புகை
செங்குத்தாய் நிற்கும்
காற்றில்லாத அறையில்
உணவுத் துணுக்குகளைத் தேடிவரும்
கரப்பான் பூச்சிகளைப்போல
சூழ்கின்றன உன் நினைவுகள்
குளத்து மீன்களிடம்
சிரங்கைத் தின்னக்கொடுத்துவிட்டுக்
கண்மூடி நிற்கும் சிறுவனைப்போல்
அவற்றுக்குத் தீனியாகி
அசையாமல் கிடக்கின்றேன் .

பனியில் நமத்திருக்கிறது கூரை
படர்ந்திருக்கும் சுரைக் கொடியில்
கனக்கும் காயின் சுமைதாங்க முடியாமல்
உள்வாங்குகிறது கீற்று

3.

அப்போது வெயில் இல்லை
வியர்க்கும் விதமாக வெக்கையும் இல்லை
இரவு
ஊரின் ஒதுக்குப்புறம்
கட்டிடங்களில்  நெரிபடாத காற்று
உடைகளைக் கலைக்க தலைமுடியைக்  கலைக்க
அடையாளம் தெரியாத செடிகளை அலைக்கழிக்க
இருளின் பாதுகாப்பில்
துணிந்து உன்னை முத்தமிட்டேன்
மேலுதட்டில் படிந்திருந்த வியர்வை
கரித்தது
கண்ணீரைப் பருகியது போல
ஒருகணம் திடுக்கிட்டேன்
மறுகணம் திறந்த வாய்க்குள் நழுவிய நாவில்
தட்டுப்பட்டது உன் இதயம்
நான்
காணாமல் போனேன்

4.

தேவாலயத்தில்
ஒவ்வொருவரும்
நம்பிக்கையால் ஏற்றுகிறார்கள்
மெழுகுவர்த்திகளை

அலைக்கழியும் நாவுகளால்
மன்றாடும் மெழுகுவர்த்திகளை
கவனிக்கத்  துணிவின்றி
கூரையைப் பார்க்கிறாள்
மேரி

அங்கே
அணைந்த திரிகள்
புகையால் எழுதுகின்றன
ஆசீர்வதிப்புகளின்
படுதோல்வியை



5.

ஆயிரம் ஆண்டுகள் கண்ட
கோயில்

விரல்களுக்கிடையே நழுவிய காற்றாகத்
தொலைந்த காலத்தை
எண்ணிப்பார்க்கிறான் அந்த முதியவன்

கடந்துசெல்லும் ரயிலின்
கடைசிப் பெட்டியைப் பார்ப்பதுபோல்
பார்க்கிறான்
தனது வாழ்வை

துருவேறிப் போய்விட்டன
நாளைக்கு என ஒத்திவைத்த
தேவைகள்

சிறுவயது உடைகளைப்போல்
பொருந்தாமல் போய்விட்டன
தவறவிட்ட ஆசைகள்

பறப்பதுபோல் பாவனைகாட்டிவிட்டு
திரும்ப வரும்
கோயில் புறாக்களிடம்
எதைக் கற்றுக்கொள்வது?

குழப்பத்தோடு அமர்ந்திருப்பவன்மீது
சாய்கிறது
கோபுரத்தின் நெடிய நிழல்

Sunday, April 17, 2011

ோர்க்குற்ற அறிக்கையை வெளியிடக்கோரி பான் கீ மூனுக்கு கடிதம் அனுப்புங்கள்: ஆம்னஸ்டி இண்டர்ேஷனல்



இலங்கையில் நடத்தப்பட்ட இன அழிப்புப் போரின் போது  மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இப்ோது முனைப்பு காட்டி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற ோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்த ஐ.நா மன்றம் அதுகுறித்த அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. நிபுணர் குழு ஒன்றால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை இப்ோது ஐ.நா செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  அந்த அறிக்கை எதிர்வரும் 18 ஆம் ேதி பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு உடனடியாக வெளியிடுமாறு  கோரி ஐ.நா செயலாளர் அவர்களுக்கு மனுக்களை அனுப்பும்படி ஆம்னஸ்டி இண்டர்ேஷனல் அமைப்பு   வேண்டுோள் விடுத்துள்ளது.

ஐ.நாவுக்கு ேண்டுோள் அனுப்ப விரும்புோர் ீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்:


http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

Saturday, April 16, 2011

தேர்தல் காலத்தில் முதல்வர் பதவி தேவையில்லையா? ரவிக்குமார்




(இக்கட்டுரை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது எழுதப்பட்டு( 18.04.2009)  ஜுனியர் விகடன் இதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பொருத்தப்பாடு கருதி இங்கு வெளியிடப்படுகிறது.)

நடக்கவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு பணியாற்றி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு சில பகுதிகளில் வாக்குப்பதிவும் துவங்கி விட்ட நிலையில் தற்போதுள்ள அரசாங்கம் முழுமையான அதிகாரத்துடன் செயல்பட முடியாது. இந்நிலையில் இப்போது அரசாங்கம் என்றாலே தேர்தல் ஆணையம்தான் என்ற அளவுக்கு மக்களிடம் தேர்தல் ஆணையம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளோ தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடிகளைப் பார்த்து விழி பிதுங்கி நிற்கின்றன. தேர்தலில் எவ்விதமான முறைகேடுகளும் நடந்து விடக்கூடாது, வன்முறை எதுவுமின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகளை அது வெளியிட்டிருக்கிறது. பல்வேறு விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவுவதில் கில்லாடிகள் என்பது தேர்தல் ஆணையத்திற்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்தமுறை கடுமையான கண்காணிப்பை அது மேற்கொண்டிருக்கிறது.
நமது பாராளுமன்ற ஜனநாயகத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் இருப்பதென்பது ஒருவிதத்தில் பலம் என்ற போதிலும், அதனால்வரும் இடையூறுகளும் ஏராளம். சுயேச்சை வேட்பாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு தடையாக மாறி விடாமல் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதுபோலவே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அது எடுத்திருக்கிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை பரவாமல் தடுக்கவும் தேர்தல் ஆணையம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த அக்கறை சில நேரங்களில் பாராளுமன்ற ஜனநாயகத்தை மூச்சுத் திணற வைப்பதுபோல் அமைந்து விடுகிற நிலையையும் நாம் பார்த்து வருகின்றோம். இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதும், தலைமை தேர்தல் அதிகாரிகள் மீதும் கடுமையான புகார்கள் எழும்பி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். கோடிக்கணக்கான மக்கள் தமது வாக்குரிமையைச் செலுத்தி ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நடைமுறை எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என தேர்தல் ஆணையம் விழிப்போடு இருப்பது நல்லதுதான். இங்கே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டபோது தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்க முடியாது என்ற காரணத்தினால்தான் அந்தப் போட்டிகள் வேறு நாட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன. இந்த அளவுக்கு பாதுகாப்பு குறித்து நமது அரசாங்கமும் விழிப்போடு இருந்ததை நாம் பார்த்தோம். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்ற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவின் பாதுகாப்புக்கு பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் இருக்கின்ற சூழலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இலங்கையிலும் உள்நாட்டு போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நமது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு உள்ளது. சொல்லப்போனால் தேர்தலைவிடவும் முன்னுரிமை அளித்து செய்யப்பட வேண்டிய பணி அதுதான். இப்படியான சூழலில் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு நமக்கெல்லாம் வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி தேர்தல் ஆணையம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள செய்திதான் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மாநில முதலமைச்சர்களுக்கு ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்திலுள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கமளிப்பது வழக்கம். காவல்துறையின் தலைமை அதிகாரியோ அல்லது உளவுத்துறையின் தலைமை அதிகாரியோ இந்த விளக்கத்தை முதல்வருக்கு அளிப்பார்கள். அதன்மூலம் மாநிலத்திலுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முதல்வர் தெரிந்து கொள்ள முடியும். பல மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். தமிழ்நாட்டிலும்கூட அப்படித்தான். இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை போட்டிருக்கிறது. இனிமேல் காவல்துறை அதிகாரிகள் மாநில முதல்வர்களுக்கு பாதுகாப்பு நிலவரம் பற்றி விளக்கமளிக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தலைமைச் செயலாளரோ அல்லது உள்துறைச் செயலாளரோ விளக்கமளித்தால் போதும். தவிர்க்க முடியாத சூழல் எழுந்தால் மட்டுமே காவல் அதிகாரியை உடன் அழைத்துச் செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நடவடிக்கை சரிதானா? என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை கவனித்து அதற்கேற்ப உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது. எந்தக் காரணம் கொண்டும் அந்த கடமையை நாம் தடுத்துவிட முடியாது. அப்படி செய்வது மாநிலத்தின் பாதுகாப்புக்கே குந்தகமாக அமைந்துவிடும். காவல்துறை அதிகாரிகளுக்குப் பதிலாக தலைமைச் செயலாளரோ, உள்துறைச் செயலாளரோ அதை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருப்பது அவசியம்தானா? என்பதே நமக்குள் எழுந்துள்ள கேள்வியாகும். காவல்துறை அதிகாரிக்கும், தலைமைச் செயலாளருக்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடு அவர் ஐ.பி.எஸ். அதிகாரி, இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதுதான். போலீஸ் பணியில் இருப்பவர்களை இரண்டாம் தரமாக தேர்தல் ஆணையம் கருதுகிறதோ என்ற ஐயப்பாட்டையும் இது எழுப்பியிருக்கிறது. நேரடியாக முதல்வரிடம் விளக்கமளித்த காவல்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின்படி தலைமைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க, அதன்பிறகு அவர் சென்று முதலமைச்சரிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நிலை. இதனால் காவல்துறை அதிகாரி சொல்ல நினைப்பது முழுமையாக முதலமைச்சரிடம் சென்று சேரமுடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதனால் காலதாமதமும் ஏற்படும். முதலமைச்சருக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையில் இன்னொரு நிலை குறுக்கிடுவதால் தேவையற்ற தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே இது அவசியம்தானா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தேர்தல் வழக்கில் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன்படி மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தினந்தோறும் தலைமை தேர்தல் அலுவலரிடம் சட்டம் ஒழுங்கு நிலையை எடுத்துச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழிகாட்டுதலை தந்திருக்கிறது. இதன்படி பார்த்தால் முதல்வரிடம் காவல்துறை அதிகாரிகள் விளக்கமளிக்கக்கூடாது. மாறாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்தான் விளக்கமளிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. இது முதல்வரின் அதிகாரத்தையே பறிப்பதாக அமைந்துவிடாதா? தேர்தல் ஆணையம் இந்த முடிவை எதனடிப்படையில் எடுத்தது, இதற்கான காரணக்காரியங்கள் எவை என்பதை அது தனது உத்தரவில் தெளிவாக விளக்கவில்லை. எனவே இது குழப்பத்திற்கே இட்டுச்செல்லும் என்ற ஐயம் இப்போது பரவலாக இருந்துள்ளது.
தேர்தல் நடைபெறும்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கூடுதலாகக் கண்காணித்து அதுபற்றி உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பொறுப்பானவராக முதலமைச்சர்தான் இருக்க முடியும். ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்து விட்டால் அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார் என்றுதான் பொருள். தேர்தல் நேரத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அதனால் அவரது நடுநிலைமை பாதிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமல்ல. இப்போது தேர்தல் ஆணையம் எடுத்துவருகிற நடவடிக்கைகள் முதலமைச்சர் என்பவரை ஒரு கட்சிக்காரராகவே பார்த்து அணுகுவதாக அமைந்துள்ளது. அரசு அலுவலகங்களிலிருந்து முதலமைச்சரின் படங்களை அகற்றிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. இது முதலமைச்சர் என்ற பொறுப்பின்மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக் கூடிய அபாயம் இருப்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தவேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. அதுபோலவே தேர்தலில் ஒரு தரப்புக்கு கூடுதல் அனுகூலம் இருந்துவிடக்கூடாது என்பதிலும் நமக்கு உடன்பாடுதான். ஆனால், இதை நடைமுறைப்படுத்தும்போது ஏற்கனவே இருக்கின்ற பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை நாம் பலவீனப்படுத்தி விடக்கூடாது. தேர்தல் என்பதே அதிகாரத்தை பரவலாக்குகிற ஒரு வழிமுறைதான். ஆனால் அந்த தேர்தலை ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களைப் பறிப்பதற்கான கருவியாக மாற்ற முனைந்தால் அது நமது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக ஆக்கிவிடும்.

Friday, April 15, 2011

கூவாகத்தில் திரைப்பட விழா




அரவாணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கூவாகம் விழா இந்த ஆண்டு புதிய பரிமாணம் பெறுகிறது. அங்கு ஆண்டுதோறும் அழகிப் போட்டி நடத்தப்படுவதை நாம் அறிவோம். இந்த வருடம் அங்கே திரைப்பட விழா ஒன்றை நடத்துவதற்கு நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ள்னர். அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருக்கின்றனர். அரவாணிகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட நானும் காரணமாக இருந்தேன். அந்த நலவாரியம் அமைக்கப்பட்ட ஏபரல் பதினைந்தாம் தேதியை ’அரவாணிகள் தினம்’ எனத்  தமிழக அரசு அறிவித்திருக்கிறது.அரவாணிகளுக்காகத் தமிழக முதல்வர் கலைஞர் செய்துள்ள நற்காரியங்களில் இதுவும் ஒன்று.  



The Transgender Film Festival
Koovagam Chithirai Pournami Koothandavar Festival
Date: 18th April, 2011 (Monday)
Time: 11:00am to 02:30 pm
Venue: KCT Kalyana Mandapam, Villupuram

Back Ground to the Festival
The Chithirai Pournami Koothandavar festival is celebrated every year ay the small otherwise sleepy village of Koovagam in Villupuram District of Tamilnadu. Every year around 100,000 Transgender Women, known as Aravanis, among others throng to this tiny village for these few days and participate in the Koothandavar Festival at Koovagam. The ritualistic marriage of Lord Aravan and Mohini and her subsequent widowhood is the theme of this grand festival held in Koovagam. Aravan is the son of Arjuna.  According to the Mahabharata, the Pandavas decide to sacrifice Aravan in order to win the war.  But Aravan wants to marry before he is sacrificed.  No one wants to marry him and become a widow immediately thereafter.  Lord Krishna touched by Aravan’s condition transforms himself into a woman, marries Aravan and spends the night with him.  To celebrate this occasion thousands of devotees visit this village ever year in April/May. On the last night the priest ties the Thali around the neck of devotees (which signifies their marriage to Aravan).  A night full of wild celebrations begins.  In the morning an image of Aravan is paraded in the streets after which it is destroyed.  The Thalis and bangles are then broken and devotees wear a white sari.  This marks the end of this incredible Indian festival.
The Film Festival
The Festival is an opportunity for the Tamilnadu State AIDS Control Society and its community partners to organise various programs aimed at creating behaviour change among Transgender Women for safer and healthy practices. It is also an occasion to talk about other larger issues that concern the life and times of Transgender Women. Thamilnaadu Aravanigal Association is organising a Transgender Film Festival featuring short films/documentaries on Transgender Women. Two of the films have been directed by Transgender Activists, and the others by students and mainstream film makers.
The Films that will be screened:
The following Seven Films on the life and stories of Transgender Women will be screened:
  1. Third Eye-Amitava Sarkar, Transgender Activist
  2. Transgender Folk-art’s – Priya Babu, Transgender Activist
  3. Agrinaigal – Elangovan et al
  4. Kothi – Muthukumar
  5. Appal – Rajanayagam et al, Oodaga Kalaigal Dept, Loyola College, Chennai
  6. Naanum Oru Penn – Ramanathan, Film Institute, Chennai
  7. Acchu Pilai - Vigneswaran, Oodaga Kalaigal Dept, Loyola College, Chennai
Each of these films is for a duration of 30 minutes on average.
The Program Schedule
At the conclusion of each film screening the director of the film will be invited to talk about his/her film. This will be followed by remarks by the Special Chief Guests and concluded by interaction with the participants of the program who will be Transgender Woman attending the festival, NGO activists, health care workers and policy makers.

நரிக்குறவர்கள் காட்டிய நன்றி




நரிக்குறவர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தி அதை அமைக்கச் செய்தவன் நான். அதை அந்த மக்கள் நன்றியோடு மனதில் வைத்திருக்கிறார்கள். எனது காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உட்பட்ட குமாரக்குடி பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு வாக்கு சேகரிக்கச் சென்றிருந்தேன். அந்த மக்கள் எனக்கு அளித்த வரவேற்பும் காட்டிய ஆதரவும் நெகிழ வைத்தன.


ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருக்கும் அவர்களின் குடியிருப்புக்குப் போயிருந்தபோது அங்கு ஒரு சிறப்புப் பல்ளியைத் துவக்கவேண்டுமெனக் கேட்டார்கள். எனது முயற்சியால் ஏற்கனவே வடலூரில் இருக்கும் நரிக்குறவர் குடியிருப்பில் சிறப்புப் பள்ளி ஒன்று துவக்கப்பட்டு அது சிறப்பாக நடந்துவருகிறது. அதை அறிந்த காரணத்தால்தான் ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளி வேண்டுமென அவர்கள் கேட்டார்கள். வெற்றி பெற்றால் செய்யவேண்டிய பணிகளில் முதன்மையானதாக அதை நான் மனதில் குறித்து வைத்திருக்கிறேன்.

மார்க்சிஸ்ட் தோழருக்கு அளிக்கப்பட்ட சாதிப் பட்டம்




தேர்தல் - எத்தனையோ வினோதக் காட்சிகளை நம் முன் நடத்திக் காட்டுகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற ’நியாயத்தை’ எல்லோருமே ஏற்றுக்கொண்டிருப்பதாக நாம் நம்புகிறோம். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் தோழர்கள் சாதி அடையாளத்தைத் தேர்தலில் பயன்படுத்தினார்கள் என்பதை எப்படி நாம் புரிந்துகொள்வது? அதிலும் நான் பெரிதும் மதிக்கக்கூடிய தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு சாதிப் பின்னொட்டு சேர்க்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கே.பி என்று தோழர்களால் அழைக்கப்படும் தோழர். கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க அணியின் சார்பில் நிறுத்தப்பட்டிருப்பவர் மூ.மு.க வைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார். 1998 ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் கத்தரிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ம.தி.மு.க பிரமுகர் பழனிவேலு என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் பின்னணியில் ஸ்ரீதர் வாண்டையார் இருந்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. அதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளும் களம் இறங்கின. அதில் முனைப்பாக பங்காற்றியவர்களில் தோழர் கே.பியும் ஒருவர். அந்த நேரத்தில் சிதம்பரத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த தோழர் சங்கரய்யாவின் கார் தாக்கப்பட்டது. அது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தேர்தல் களத்தில் கே.பியும் ஸ்ரீதர் வாண்டையாரும் மோதுகிற நிலையில் ம.தி.மு.கவினரே மறந்துபோய்விட்ட அந்தப் படுகொலை சம்பவத்தை அ.தி.மு.க அணி தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது. வார இதழ் ஒன்றில் அதுகுறித்த கட்டுரை வெளியிடப்பட்டு அதன் விளம்பரம் கிராமங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

கத்தரிமேடு பழனிவேலு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்து மக்களை ஸ்ரீதர் வாண்டையாருக்கு எதிராகத் திருப்பிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு அங்கமாகவே தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கும் சாதி முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.எனது தொகுதியில் வாக்கு சேகரிக்கப் போய்க்கொண்டிருந்தபோது  பழனிவேலுவின் சொந்த ஊர் அமைந்திருக்கும் பகுதியான வல்லம்படுகையில் நான் ஒரு சுவர் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ’ பாலகிருஷ்ணன் படையாட்சி’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தோழர் கே.பியும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் அதிர்ந்துதான் போயிருப்பார். அவருடைய இயல்பு எனக்குத் தெரியும். நிச்சயம் அவர் அந்த விளம்பரத்தைப் பார்த்திருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அனுமதிபெற்று செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை அவரது கூட்டணிக் கட்சிக்காரர்கள் எவரேனும் செய்திருக்ககூடும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

எழுச்சித் தமிழர் திருமாவின் பிரச்சாரம்



எனது தொகுதியில் எழுச்சித் தமிழர் திருமா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். ஸ்ரீமுஷ்ணத்தில் ஆரம்பித்த பிரச்சாரம் பாளையங்கோட்டை, சோழத்தரம் வழியாக சென்றது.அங்கிருந்து புவனகிரி தொகுதிக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.





கலைஞரை சந்தித்தோம்


மரியாதை நிமித்தமாக முதல்வர் கலைஞரை இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தோம். 


விஜயகாந்த் தொகுதியின் வினோத நிலை




விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் ஒரு வினோதமான நிலையைப் பார்க்க முடிகிறது . அங்கு பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். அங்கு பதிவான மொத்த வாக்குகள் 171067. அதில் ஆண்கள் 79296 வாக்குகளையும், பெண்கள் 91771 வாக்குகளையும் அளித்துள்ளனர். வாக்களித்த பெண்களின் சதவீதம் 91.76 ஆகும்.இது மாநில சராசரியைவிட சுமார் 13 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ரிஷிவந்தியம் இடம்பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வாக்களித்த பெண்களின் சதவீதம் 83.18 ஆக இருக்கும்போது மாவட்டத்தின் சராசரியைவிட சுமார் 8 சதவீதம் கூடுதலாகப் பெண்கள் அங்கு வாக்களிக்கக் காரணம் என்ன?

விஜயகாந்த்தின் சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பார்கள் என சிலர் கூறக்கூடும். ஆனால் விஜயகாந்த்துக்குப் பெண்களின் மத்தியில் அப்படி ஆதரவு பெரிதாக இல்லை. அதிலும் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் தள்ளாட்டத்தைப் பார்த்தபிறகு பெண்கள் அவருக்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று நம்பமுடியவில்லை.மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதைப் பல இடங்களிலும் அறிய முடிகிறது. அப்படியான ஒரு நிலையைத்தான்   ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் மேற்கொண்டார்களா?

தி,மு,க கூட்டணியைச் சேர்ந்தவர்களிடையே உற்சாகமாக உலவிவரும் செய்திகளில் ஒன்று ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றிபெறப் போவது கடினம் என்ற செய்தியாகும். ரிஷிவந்தியம் தொகுதிப் பெண் வாக்காளர்கள் சினிமா கவர்ச்சிக்கு ஆட்பட்டவர்களா? அல்லது தள்ளாட்ட அரசியலுக்கு எதிரானவர்களா? அவர்கள் எந்த செய்தியை இந்த நாட்டுக்குச் சொல்லப்போகிறார்கள் என்பது மே 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.

Thursday, April 7, 2011

தேர்தல் களத்திலிருந்து ...







தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுத்த பிறகு தினமும் வலைப்பூவில் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், பிரச்சாரம் முடிவது பத்து மணிக்கு என்றாலும் அறைக்கு வருவதற்கு நள்ளிரவு ஆகிவிடுவதால் அது சாத்தியமாகவில்லை. இன்று எப்படியும் எழுதவேண்டும் என நினைத்து உட்கார்ந்துவிட்டேன். நேரம் இரண்டை நெருங்குகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நாட்கள் சீக்கிரம் முடிந்து எனது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று தவிப்பாயிருக்கிறது. படிக்கவேண்டிய நூல்கள் அழைத்தபடி இருக்கின்றன. என்னைத் தூக்கிக் கொள் என்று கைகளை விரித்துக்கொண்டு நிற்கும் குழந்தையை நிராகரித்துவிட்டுப் போவதுபோல் இருக்கிறது நல்ல புத்தகம் ஒன்றைப் படிக்காமல் வைத்துவிட்டுச் செல்வது. எழுதவேண்டிய விஷயங்களும் சேர்ந்துகொண்டே போகின்றன. அது இன்னும் பெரிய அவஸ்தை. கைகளைக் கூப்பியபடி ஜீப்பில் பயணிக்கும்போது கண்ணில் தூசு வந்து விழுவதுபோல மனசில் வார்த்தைகள் வந்து விழுகின்றன.சற்று நேரத்தில் அவை கரைந்துபோய்விடுகின்றன. அல்லது மனசின் ஆழத்துக்குப் போய் படிந்துவிடுகின்றன.அவற்றைத் தேடி அளையும்போது எதிரே என்னை வரவேற்பவர்களின் முகங்களைத் தாண்டி என் கண்கள் எங்கோ வெறிக்கின்றன. இன்று கொள்ளிடக் கரையில் இருக்கும் ஊர்களில் வாக்கு சேகரித்தேன். நான் சட்டமன்றத்தில் வாதாடிக் கொண்டுவந்த திட்டம் - கொள்ளிடக் கரையை உயர்த்திப் பலப்படுத்தும் 115 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்- அங்கே செயல்வடிவம் பெற்று வருவதைப் பார்த்தபோது மனம் நிறைந்தது. அந்தத் திட்டத்தால் வெள்ளப் பாதிப்புக் குறையும் என்பது மட்டுமின்றி கரையின் அமைய இருக்கிற சாலையால் அப்பகுதி மக்களின் பல பிரச்சனைகள் தீரும். நண்பர் இமையம் அங்கே வந்திருந்தார். நான் சற்று நேரம் நின்று கொள்ளிடத்தின் மணல் வெளியைப் பார்த்தேன். நீரற்றுப் போனாலும் ஆறு அழகுதான். மணல் பெருகும் ஆறு. மணலும் பொங்கிப் பாய்ந்தோடுவதுபோல் ஒரு பிரமை. தேர்தல் பணிகளித் துவக்கிய நாளிலிருந்து ஒரு கேள்வி என்னுள் குளவியைப் போல ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது
. இப்படியான பதவிகளால் என்ன வரப்போகிறது? வாழ்வில் இதைவிடவும் உருப்படியான காரியங்கள் இல்லாமலா போய்விட்டது? மக்கள் என்பதை அருவமான ஒரு அரசியல் வகைப்பாடாகப் பார்த்துப் பணியாற்றியது ஒரு காலம். இப்போது அந்த மாயை உடைந்துவிட்டது. ஆனால் சுவாரஸ்யம் கூடிவிட்டது. எத்தனைவிதமான மனிதர்கள் என்று வியப்பாக இருக்கிறது. இன்னும் சில நாட்கள் இந்த மகிழ்ச்சிகரமான வேலை தொடரும், அப்புறம் எதை நோக்கி மனம் நகரப்போகிறதோ தெரியவில்லை. பார்ப்போம்.....