Sunday, August 13, 2017

திரு ஆர்.எம்.டி.சம்பந்தம்: அவியாச் சுடர் -ரவிக்குமார்இன்று (14.08.2016) தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் திரு ஆர்.எம்.டி.சம்பந்தம் அவர்களது நினைவுநாள். தமிழ் இதழியலில் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர் அவர். தற்போது பிபிசி தமிழோசையின் ஆசிரியராக இருக்கும் நண்பர் மணிவண்ணன் அவர்களின் மூலமாகத்தான் எனக்கு அவர் அறிமுகமானார். தினமணியில் நடுப்பக்கக் கட்டுரை எழுதும் வாய்ப்பை அவர் அளித்தார். 'ரஜினியின் காட்சி அரசியல்' என்ற எனது கட்டுரை அப்போதுதான் வெளியானது. கை தெபோர் என்ற ஃப்ரெஞ்ச் சிந்தனையாளரின் politics of spectacle என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி அந்தக் கட்டுரையை நான் எழுதியிருந்தேன். 

அதிமுக ஆட்சியை விமர்சித்துப் பேசி ரஜினி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நேரம் அது. அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என பேசப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் அந்தக் கட்டுரை வெளியானது. அப்போது ரஜினியுடன் நெருக்கமாக இருந்த திரு ஆர்.எம்.வீ அதைப் படித்துவிட்டு தன்னிடம் மிகவும் கோபத்துடன் கடிந்துகொண்டதாக திரு சம்பந்தம் அவர்கள் என்னிடம் சொன்னார். 

திரு ஆர்.எம்.வீ அத்துடன் விடவில்லை அடுத்த சில நாட்களில் பாண்டிச்சேரியில் ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்துக்கு வந்தவர் அந்த நிர்வாகியிடம் தினமணியில் கட்டுரை எழுதும் ரவிக்குமார் யார்? எனக் கேட்டிருக்கிறார். அப்போது தினமணியில் நிருபராக இருந்தவரும் இப்போது குணவதிமைந்தன் என்ற பெயரில் குறும்படங்களை இயக்கிக்கொண்டிருப்பவருமான  ரவி என்ற நண்பரை அந்த நிர்வாகி அழைத்துப்போய் ஆர்.எம்.வீயிடம் நிறுத்தியிருக்கிறார். 'ரஜினியின் காட்சி அரசியல்' என்ற கட்டுரையை எழுதியது அவர்தான் என நினைத்து ஆர்.எம்.வீ அவரிடம் கோபமாகப் பேசியுள்ளார். " அவரை கட்சி ஆரம்பிக்கச்சொல்லி நான் எவ்வளவோ சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். இப்படி கட்டுரை எழுதி கெடுத்துட்டியே" என்று திட்டியிருக்கிறார். 'கட்டுரை எழுதிய நபர் நான் இல்லை' என அவர் விளக்கமளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். 

திரு சம்பந்தம் அவர்களுக்கு ஆர்.எம்.வீயுடன் நெருங்கிய நட்பிருந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அவர் எனது கட்டுரையை வெளியிட்டதற்காக வருத்தப்படவில்லை. மாறாக, தினமணியில் வேலையில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். 

என்னை ஒரு பத்திரிகையாளர் ஆக்கவேண்டும் என்று திரு ஆர்.எம்.டி.சம்பந்தம் ஆசைப்பட்டார். அவர் ஏற்றிய அந்தச் சுடர் இப்போதும் எனக்குள் அணையாமல் இருக்கிறது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஒரு கை விளக்கு - ரவிக்குமார்


நீதித்துறை தொடர்பாக சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் விதமாக எழுதப்படும் நூல்கள் தமிழில் குறைவு. தான் வழங்கிய தீர்ப்புகளுக்கு அம்பேத்கரின் தத்துவம் எப்படி வெளிச்சமாகப் பயன்பட்டது என்பதை நீதிபதி கே.சந்துரு நூலாக எழுதினார்தான் நடத்திய சட்டப் போராட்டங்களில் பெற்ற தீர்ப்புகளை பழ.நெடுமாறன் அவர்கள் இப்போது தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்


'உரிமைகளை நிலைநிறுத்திய உன்னதத் தீர்ப்புகள் ' என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்த நூலில் 18 தீர்ப்புகளும், இரண்டு மனுக்களும்  தொகுக்கப்பட்டுள்ளன. கருத்துரிமையை நிலைநாட்டியவை, கறுப்பு சட்டங்களுக்கு எதிரானவை, மரண தண்டனையை தடுத்து நிறுத்தியவை, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவை என நான்கு பிரிவுகளாக அந்தத் தீர்ப்புகள் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு பெறப்பட்ட பெரும்பாலான தீர்ப்புகள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் மூத்த வழக்கறிஞராக இருந்தபோது வாதாடிப் பெற்றவை


மனித உரிமைகளைப் பறிப்பதில் ஆட்சியாளர்கள் காட்டும் ஆர்வம், அவர்களது நோக்கத்தை நிறைவேற்றும் விதமாகக் காவல்துறை செயல்படும் விதம் முதலானவற்றை இந்தத் தீர்ப்புகளில் நாம் அறியமுடிகிறது. அவர்கள் பொய்யாகப் புனையும் வழக்குகளிலிருந்து விடுபட சந்துரு போன்ற சட்ட நுணுக்கங்களும், கடப்பாடும் கொண்ட வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது சட்டத்தின் குரலுக்கு செவிகளையும், இதயத்தையும் திறந்துவைத்திருக்கிற நீதிபதிகளும் தேவைப்படுகிறார்கள்


காவல்துறை சாட்டும் குற்றம் நிரூபிக்கப்படாதபோது குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலைசெய்கிறது. ஆனால் காவல்துறை பொய்யாக ஒரு வழக்கை புனையும்போது அது வெளிப்படையாக நீதிமன்றத்துக்குத் தெரியும்போது அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இந்த நூலில் 15 ஆவதாகக் கொடுக்கப்பட்டுள்ள பரந்தாமன் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு இதற்கொரு சான்று. அவர் தனது கோழிப்பண்ணையில் ஜெலட்டின் குச்சிகளை ஒளித்து வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு எப்படி வேண்டுமென்றே புனையப்பட்டுள்ளது என்பதை பூந்தமல்லி மாவட்ட நடுவராக இருந்த நீதிபதி பி. முருகன் தனது தீர்ப்பில் அம்பலப்படுத்தியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததோடு அவர் நின்றுவிட்டார். பொய்யாக வழக்குப் பதிவு செய்தது மட்டுமின்றி அதற்கு ஆதாரங்களையும் திட்டமிட்ட முறையில் ஜோடித்த காவல்துறைமீது எந்த நடவடிக்கையையும் அவர் பரிந்துரைக்கவில்லை

இத்தகைய வழக்குகளில் நீதிமன்றம் அரசு தரப்பின்மீது சிறு கண்டனத்தைக்கூட பதிவுசெய்யாமல் விடும்போது மீண்டும் அதே காரியத்தில் காவல்துறையினர் பயமின்றி ஈடுபட அது வழிவகுக்கிறது. எனவே, நீதியைக் காப்பாற்றினால் மட்டும்போதாது அநீதியைத் தண்டிக்கவும் நமது நீதித்துறை முன்வரவேண்டும். மார்டின் லூதர் கிங் கூறியதை இங்கே நினைவுகூர்வது பொருந்தும்: " எங்கோ ஒரு இடத்தில் அநீதி இழைக்கப்படும்போது அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது" . இதை நமது நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்


வழக்கறிஞர்கள் மட்டுமின்றி மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் அரசியல் தலைவர்கள் ஆகியோரும்  இந்த நூலை அவசியம் படிக்கவேண்டும்


ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புகளை வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன் படிப்பவர்களுக்குப் புரியும் விதமாகத் தமிழாக்கம் செய்துள்ளார்


தமிழ்த் தேசிய அரசியல் தலைவராக அறியப்பட்ட பழ. நெடுமாறன் அவர்களை இந்த நூல் ஒரு மனித உரிமைப் போராளியாக நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமிழ்த் தேசியம் என்பதை இனவெறியாக, பாசிசமாகக் குறுக்கும் முயற்சி தீவிரமாக நடந்துவரும் இன்றைய சூழலில் இந்தத் தொகுப்பு தமிழ்த் தேசியத்துக்கும் மனித உரிமைப் போராட்டத்துக்குமான உறவை எடுத்துக்காட்டுகிறது. இந்த நூல் வெளியீட்டில் ஈடுபட்ட அனைவருமே நம்  பாராட்டுக்குரியவர்கள்தான்


வெளியீடு :

தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை 43

போன்: 044- 2264 0451 


பக்கங்கள் : 247

விலை 200/- ரூபாய் Sunday, August 6, 2017

திரு சசி பெருமாள் அவர்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் !திரு சசிபெருமாள் அவர்களின் நல்லடக்கத்தின்போது அஞ்சலி செலுத்தி நான் ஆற்றிய இரங்கலுரையின் சுருக்கம் : 
==============
மது ஒழிப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருக்கிறார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சரை வீட்டில் போய் சந்தித்திருக்கிறார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட காலத்திலும் மதுக் கடைகளை அனுமதிக்காத மாநிலம் குஜராத். காந்திக்கு மரியாதை செய்வதற்காக அவர் பிறந்த குஜராத்தில் மதுக்கடைகளைத் திறப்பதில்லை. மது விற்பனையால் வரும் வருவாய் இல்லாமலேயே குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லித்தான் மோடி தேர்தலில் வாக்கு கேட்டார் இன்று பிரதமராகவும் வந்துவிட்டார். 

தமிழ்நாட்டின் முதன்மையான சமூக அரசியல் பிரச்சனையாக மதுவிலக்கு மாறியிருக்கிறது என்பதை பிரதமரிடம் இன்று யாராவது கூறியிருக்கலாம். அதைக் கேட்டிருந்தால் மது விற்பனையால் வரும் வருமானம் இல்லாமலேயே குஜராத் மாநிலத்தில் தான் எப்படி ஆட்சி செய்தேன் என்பதை தமிழக முதல்வரிடத்தில் அவர் கூறியிருக்கலாம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்றும் வாக்களித்திருக்கலாம். ஏனென்றால் மதுவிலக்கு என்பது மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பிரச்சனை. 

அரசியலமைப்புச் சட்டத்திலேயே மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கினார்கள். 

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணையங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டவேண்டும் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன. 

இப்போது தமிழ்நாட்டிலிருக்கும் பாஜக மதுக்கடைகளை மூடவேண்டும் எனப் போராடி வருகிறது. அதை வரவேற்கிறோம். அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை அவர்கள் உணர்வுபூர்வமாக அதை வலியுறுத்துகிறார். இங்கே அமர்ந்திருக்கும் அய்யா இலக்கியச்செல்வரின் மகளாக இருப்பதால் மற்றவர்களைவிடக் கூடுதலான அக்கறை அவருக்கு இருக்கும். அய்யா சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த மேடையிலிருந்து ஒரு வேண்டுகோளை அவரிடம் வைக்கிறேன். நீங்கள் உங்கள் தலைமையிடம் எடுத்துச் சொல்லுங்கள், உங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 'மது ஒழிப்பை தேசியக் கொள்கையாக அறிவியுங்கள்! மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என அறிவியுங்கள்!' என பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அறிவிக்கவேண்டும். அது ஒன்றுதான் அய்யா சசிபெருமாள் அவர்களுக்குத் தமிழக அரசு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

மணற்கேணியின் புதிய நூல்

பெண்ணியத்தின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் முக்கியமான நூல். பிரதிகளுக்கு தொடர்புகொள்க: மணற்கேணி +91 81109 06001Monday, July 17, 2017

ரவிக்குமார் கவிதை

 

பகலில் எரிந்துகொண்டிருக்கும் 
தெருவிளக்குபோல்
இவன் நேசம்

நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன என்கிறாய் நீ

காக்கை வராததால் 
விரதத்தோடு காத்திருக்கிறேன் என்கிறான் இவன்


2015 ல் எழுதியது

Friday, July 14, 2017

மணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்

21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேணி ஆய்விதழ் குறித்து எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.இங்கே அதைப் படியுங்கள்: 

நண்பர் ஒருவரின் மேஜையில் ரவிக்குமார்  நடத்தும் "மணற்கேணி' இருமாத இதழின் நவம்பர் - டிசம்பர் 2012 இதழ் இருந்தது.  இப்படி ஓர் அற்புதமான இலக்கிய ஆய்வு இதழை நண்பர் ரவிக்குமார் நடத்தி வருவதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

புதுவையில் "மணற்கேணி' சார்பில் நடத்திய, "தமிழும் சமஸ்கிருதமும்' என்கிற ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. அ. மணவாளன், இரா. கோதண்டராமன், பெ. மாதையன், இரா. அறவேந்தன், பக்தவத்சல பாரதி ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் வருங்கால ஆய்வுகளுக்கே கூடத் தரவுகளாக அமையும் தன்மையன.

அம்பை எழுதியிருக்கும் "மரத்தடியில் திருவள்ளுவர்' என்கிற சிறுகதை, தமிழும் தமிழனும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. படித்து முடித்து விட்டு, அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கு பதிலாக, மீண்டும் ஒருமுறை படிக்கத் தோன்றியது.
அரை நூற்றாண்டு காலத் தொல்லியல் ஆய்வைப் பற்றிய சிறப்புப் பகுதியில் படிக்க வேண்டிய 33 நூல்களையும், தொல்லியல் துறை தொடர்பாகச் செய்ய வேண்டிய 50 பரிந்துரைகளையும் தொகுத்து வழங்கி இருப்பது பயனுள்ள முயற்சி.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து "மணற்கேணி'யின் புரவலராகலாம்; மூவாயிரம் கொடுத்து "மணற்கேணி' குழாமில் சேரலாம்; ஆயிரம் கொடுத்து "ஊருணி' திட்டத்தின் மூலம் யாருக்காவது "மணற்கேணி' பரிசளிக்கலாம். முன்னூற்று அறுபது கொடுத்து ஆண்டு சந்தாதாரர் ஆகலாம். என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் "மணற்கேணி' தொடர்ந்து வெளிவர உதவாமல் இருந்து விடாதீர்கள். தொடர்புக்கு9443033305 அல்லது manarkeni@gmail.com.

Saturday, July 8, 2017

நாம் என்ன செய்யப்போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமிழில்: ரவிக்குமார்எண்ணற்ற ஏக்கங்கள்
சமைந்து கிடக்கின்றன 
உனது விழிகளில் எனது விழிகளில்
வகிரப்பட்ட இருதயங்கள்
திருகிக்கொண்டு கிடக்கின்றன 
உனது தேகத்தில் எனது தேகத்தில்
மரத்துப்போன விரல்கள்
செயலற்ற எழுதுகோல்கள்
விறைத்துச் சிதைந்த மனங்கள்
நமது விருப்பத்துக்குரிய 
நகரின்
ஒவ்வொரு வீதியிலும் 
சமாதியாக்கப்பட்டுள்ளன 
உனது தடங்கள் எனது தடங்கள்

நமது இரவு விண்மீன்கள்
திறந்த புண்கள் 
நமது காலை ரோஜாக்களின்
உதிர்ந்த இதழ்கள்
இருட் காற்று சூறையாடி
பிய்த்தெறியப்பட்ட விழித்திரைகள்
குணப்படுத்தமுடியாதவை
நமது வாதைகள்
ஆற்ற இயலாதவை 
நமது காயங்கள் 
சிலவற்றின்மீது 
நிலவின் சாம்பல்
சிலவற்றின்மீது
காலைப் பனியின் ரத்தம்
இது நிஜமா? 
இது பிரமையா? 
இது
உனது எனது மூடநம்பிக்கையெனும் 
சிலந்தி பின்னிய வலை மட்டும்தானா ? 

இது உண்மையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இது உண்மையில்லையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனது புத்தியில் கூர் ஏற்று.
எனக்குப் புரிதலை உண்டாக்கு. 
சொல்!

( ஃபைஸ் அகமது ஃபைஸின் O City of Lights , OUP, 2006 தொகுப்பிலிருந்து )