Tuesday, June 18, 2013

கலாச்சார ஊழல்




ஹலோ எஃப் எம்மில் நான் இன்று ( 18.06.2013) பேசியது: 
முறையற்ற விதத்தில் பொருளீட்டுவதை நாம் ஊழல் என்கிறோம். இந்தப் பொருளாதார ஊழலைத் தடுப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறோம். சட்டங்களும் இருக்கின்றன. ஆனால் கலாச்சார ஊழல் குறித்து நாம் கவலைப்படுவதில்லை. ஒருவர் அவரது உழைப்பு, ஆற்றல் ஆகியவற்றுக்கு அதிகமாக சமூக மதிப்பை, செல்வாக்கைப் பெறுவது கலாச்சார ஊழல் ஆகும். இதைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ எந்தவொரு ஏற்பாடும் நம்மிடமில்லை. இதை ஒரு பிரச்சனையாகவும் நாம் கருதுவதில்லை. பொருளாதார ஊழலைவிடவும் அபாயகரமானது இந்த ஊழல். பல நூறு ஆண்டுகளாக நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்த கலாச்சார ஊழலை நாம் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம். அதனால் பொருளாதார ஊழலும் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. பிறப்பினாலேயே ஒருவர் உயர்ந்தவர் இன்னொருவர் தாழ்ந்தவர் என்ற சிந்தனை எவ்வளவு மோசமானது என்பதை உணராமல் கலாச்சார ஊழலைக் களைய முடியாது. பொருளாதார ஊழலையும் அதற்கு அடித்தளமாக இருக்கின்ற கலாச்சார ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் முன்வரவேண்டும். 

Thursday, June 13, 2013

மணற்கேணி 18


044 66802911 என்ற என்ணுக்கு டயல் செய்யுங்கள்


வணக்கம்
ஆனந்த விகடன் வார இதழ் வழங்கும் ’ இன்று .. ஒன்று .. நன்று!.. நிகழ்ச்சியில் நான் பேசுகிறேன். 044 66802911 என்ற என்ணுக்கு டயல் செய்யுங்கள். ஒருவாரத்துக்கு ஒவ்வொருநாளும் ஒரு புதிய விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்
ரவிக்குமார்

Wednesday, June 12, 2013

தந்தி சேவைக்கு அஞ்சலி!



2013 ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவையை நிறுத்தப்போவதாக அஞ்சல் துறை அறிவித்திருக்கிறது. மின்னஞ்சல், குறுந்தகவல் முதலான வசதிகளும் மொபைல் ஃபோனின் பயன்பாடும் தந்தியைத் தேவையற்றதாக்கிவிட்டன. தந்தி என்றாலே பதறிய காலம் மலையேறிவிட்டது. தந்தி வாசகத்தைத் தவறாகப் படித்து அதனால் உண்டாகும் சிக்கல்களை வைத்து நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதும் இன்று சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் தந்தி கொடுத்தால் அதை ஒரு உறையில் போட்டு கடிதத்தைப்போல மறுநாள் கொண்டுபோய் கொடுக்கிறார்கள். சட்டரீதியான ஆதாரத்துக்காக மட்டுமே இப்போது தந்தி கொடுக்கப்படுகிறது. அல்லது ஏதாவது ஒரு கட்சி தந்தி அனுப்பும் போராட்டம் அறிவித்தால் அக்கட்சியின் தொண்டர்கள் வரிசையில் நின்று அனுப்புவார்கள்.

1983 ஆம் ஆண்டு நான் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். உடுமலைக்கும் நெகமத்துக்கும் இடையில் ஆனைக்கடவு என்ற கிராமத்தில் துவக்கப்பட்ட கிளைக்கு (எழுத்தாளர்சுஜாதாவின் வார்த்தைகளில் சொன்னால் அது கிளை அல்ல ‘இலை’) என்னை நியமித்தார்கள். அங்கு வேலையில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாதங்களாவது விடுப்பு எடுத்திருப்பேன். விடுப்பு எடுக்க நான் பயன்படுத்தியது தந்தி சேவையைத்தான். எனது பெர்சனல் ஃபைலில் ஏகப்பட்ட தந்திகள் இருக்கும். ( அங்கிருந்த சப் போஸ்ட் ஆபீஸில் வேலைபார்த்தவரின் பெயர் கடவுள் இல்லை எனக் கேள்விப்பட்டபோது இப்படியும்கூடப் பெயர் வைப்பார்களா என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது). 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்கள் சிலரின் திருமணத்துக்கு வாழ்த்து தந்தி அடித்தது நினைவுக்கு வருகிறது. உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் என்ற வாசகம் கொண்ட தந்தியைத்தான் அப்போது அனுப்புவேன்.
எனது மாமா ஒருவர் ராமசாமி என்று பெயர். அவர் சீர்காழியில் போஸ்ட்மாஸ்டராக இருந்தார். போஸ்ட் ஆபீசும் வீடும் ஒன்றாக இருந்தன. அங்கு போகும்போது தந்தியின் கட்கட ஓசையைக் கேட்டு அதை எப்படியாவது கற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட காலம் ஒன்றுண்டு.
தந்தி சேவையை நிறுத்துவதுபோல தபால் சேவையையும் நிறுத்திவிடுவார்களா? தனி நபர்கள் கடிதம் எழுதிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் அலுவலகக் கடிதங்கள் மட்டுமே இப்போது அஞ்சலில் அனுப்பப்படுகின்றன.(இன்றைய இளைஞர்கள் காதல் கடிதங்கள் எழுதுகிறார்களா?) மின்னஞ்சல் பயன்பாடு அதை ஒருநாள் தேவையற்றதாக்கிவிடும். அப்போது தபால் சேவையும் நிறுத்தப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு இன்னும் ஒரு பத்து வருடங்கள் தேவைப்படலாம்.

இந்தப் பதிவைப் படிக்கிற நண்பர்கள் தந்தி சேவையோடு தங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது அந்த சேவைக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும். 

அத்வானியின் ராஜினாமா: சில கேள்விகள்



நரேந்திர மோடி பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதும், தான் வகித்துவந்த முக்கியமான கட்சிப் பதவிகளிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஊடகங்களுக்கும் அனுப்பினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டுமூன்று நாட்களாக ஊடகங்கள் அந்தச் செய்தியையே மென்று துப்பிக்கொண்டிருந்தன. காட்சி ஊடகங்கள் அத்வானியின் வீட்டு வாசலிலேயே தவமிருந்தன.நல்லவேளையாக சீக்கிரமே அந்த ‘நாடகம் ‘ முடிவுக்கு வந்துவிட்டது. நாடகம் என்பதைவிட இதை கேலிக்கூத்து என்பதே பொருந்தும்.

அத்வானி தனது ராஜினாமாவை மட்டும்தான் வாபஸ் பெற்றிருக்கிறார்.  அவர் பாஜக குறித்தும் அக்கட்சியின் தலைவர்கள் குறித்தும் சொன்ன கருத்துகள் அப்படியேதான் இருக்கின்றன.  வாஜ்பேயி போன்றவர்கள் உருவாக்கிய லட்சியங்களிலிருந்து கட்சி விலகிப்போய்விட்டது. இப்போதிருக்கும் தலைவர்கள் தங்களது சொந்த திட்டங்களை நிறைவேற்றுவதில்தான் ஆர்வம்காட்டுகிறார்கள் என்றெல்லாம் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி விமர்சித்திருந்தார். இந்தப் பிரச்சனைகுறித்து போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை நம் மீது கொட்டிய ஊடகங்கள் அத்வானி சொன்ன விமர்சனம் குறித்து பாஜக தலைவர்கள் ஒருவரிடமும் கருத்து கேட்கவில்லை. ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார் என ராஜ்நாத்சிங் அறிவித்த நேரத்திகூட அந்தக் கேள்வியை எழுப்பவில்லை.  இந்து நாளேட்டின் ரீடர்ஸ் எடிட்டராக இருக்கும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பேக் ஜர்னலிசம் ( Pack Journalism ) என்பதைப் பற்றி அணமையில் எழுதியிருந்தார். அது இந்தப் பிரச்சனைக்கும் பொருந்துமெனத் தோன்றுகிறது.

குஜராத்தின் வளர்ச்சி குறித்த மோடியின் கூற்றுகள் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வியையும் இதுவரை வெகுசன ஊடகங்கள் எழுப்பவில்லை. எக்கானாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி பத்திரிகையில்தான் அதுபற்றி சில ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. இந்து குழுமத்திலிருந்து வெளியாகும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் சீரியஸான ஆய்வுப் பத்திரிகைகள் சம்பந்தப்பட்டவை என்றதொரு எண்ணம் பொதுப்புத்தியில் பதிக்கப்பட்டிருக்கிறது. அதை வெகுசன ஊடகங்கள் தீனிபோட்டு வளர்க்கின்றன.

வாஜ்பேயி இருந்தபோது அவரை மிதவாதியாகவும் அத்வானியை கடும்போக்காளராகவும் பாஜக ஆதரவு ஊடகங்கள் சித்திரித்தன. இப்போதோ அத்வானியை மிதவாதியாக்கி ஓரம்கட்டுகின்றன. மோடிக்கும் கடும்போக்காளர் என்ற முத்திரை விழுந்துவிடாமல் ’முன்னேற்றத்துக்கான தூதுவர்’ என்ற பட்டம்சூட்டி மகிழ்ச்சியடைகின்றன.இந்த நாடகத்தில் நாமெல்லாம் செயலற்ற பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியோடு மேட்ச் ஃபிக்ஸிங் செய்திகள் இலவச இணைப்பாக ஊடகங்களால் நமக்குத் தரப்பட்டன. இப்போது மோடியின் முடிசூட்டு விழாவோடு அத்வானியின் ராஜினாமா நாடகம் நமக்கு இலவச இணைப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.இதுதான் காட்சி அரசியல்.

Friday, June 7, 2013

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திருமா வேண்டுகோள்

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தற்போது சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அமையும்.  

ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அதிக இடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை கவனத்தில்கொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

தற்போது மக்களவையில் மட்டும்தான் இடஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களவையில் கிடையாது.  இதன் காரணமாக மாநிலங்களவையில் பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிய அளவில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை.  இப்போதைய மாநிலங்களவையில் 10 விழுக்காடு மட்டுமே பெண்கள் உள்ளனர். தலித்துகளின் பிரதிநிதித்துவம் 7 விழுக்காடுகூட கிடையாது.  தமிழ்நாட்டில் மொத்தம்  மாநிலங்களவை உறுப்பினர்கள் 18 பேர் உள்ளனர்.  அதில் இருவர் மட்டுமே தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.  அதிலும் ஓர் இடம் இப்போது காலியாகிவிட்டது.   அதைப்போல மக்களவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 22.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பது சமூக நீதியில் அரசியல் கட்சிகள் அக்கறையின்றி இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.  சமூகநீதிக் கொள்கைக்குப் பேர்போன தமிழகத்திலும் இத்தகைய ஏற்றத்தாழ்வான நிலை காணப்படுவது கவலைக்குரியதாகும். 

எனவே, தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்குமாறு தமிழக அரசியல் கட்சிகள் அந்நியமனத்தைச் செய்திட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மாநிலங்களவையிலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மேலவைகளிலும் இடஒதுக்கீட்டு உரிமைகளை விரிவுபடுத்துவதன் மூலமே சமூகநீதியைக் காத்திட முடியும்.  அதற்காகக் குரல் எழுப்புமாறு அனைத்து சனநாயகக் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைக்கிறது.

52 - சிவசேகரம்



சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே 
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்

பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள் 
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.

*25-7-83, 28-7-83 ஆகிய தேதிகளில் வெலிக்கடை (கொழும்பு) சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டோர் தொகை 52.

சட்டத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு ஒரு நாடகம்

தர்மபுரியில் தொடங்கி தமிழகமெங்கும் பரப்பப்பட்ட சாதிவெறியாட்டத்துக்கு மூல வித்தாக அமைந்த இளவரசன் திவ்யா காதல் திருமணத் தம்பதியினர் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

04.05.2013 அன்று மாலை திவ்யாவைக் காணவில்லையென அவரது கணவர் இளவரசன் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாயின. தனது தாயைப் பார்ப்பதற்காகச் செல்வதாகக் கூறிவிட்டுப்போன திவ்யாவின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை என அவர் கூறியிருந்தார். இதனிடையில் திவ்யாவின் அம்மாவால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் காரணமாக திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் 06.05.2013 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது அம்மாவும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களும்தான் அவரை ஆஜர்படுத்தியுள்ளனர். அவரை நீதிபதி விசாரித்தபோது தான் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவும் சிலநாட்கள் அம்மாவுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் இருந்த திவ்யாவின் கணவர் இளவரசன் அவருடன் பேச முயன்றபோது சுற்றிலுமிருந்த சூழலின் நெருக்குதல் காரணமாக திவ்யா மறுத்துள்ளார். அதனால் அவரை அவரது அம்மாவுடன் செல்வதற்கு நீதிபதி அனுமதிவழங்கியுள்ளார். 

இன்று (07.05.2013) டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியில் திவ்யா கூறியதாக சில தகவல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. " சாதியால் பீடிக்கப்பட்ட சமூகத்துக்காக எனது காதலையும் எனது திருமணத்தையும் நான் தியாகம் செய்கிறேன்" என்று அந்த செய்தியில் கூறியுள்ள திவ்யா,  " கணவரை விட்டுவிட்டு வந்துவிடுமாறு எனக்கு நெருக்கடிகள் தரப்பட்டன" எனவும் கூறியிருக்கிறார். தனது கணவரும் அவரது வீட்டாரும் தன்னை மிகவும் அன்போடு நடத்தியதாகவும் தனது கணவரைத் தன்னால் வெறுக்கமுடியாது என்றும் திவ்யா தெரிவித்திருக்கிறார். 
2012 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இளவரசனும் திவ்யாவும் கடந்த 8 மாதங்களாகச் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஒரு அரசியல் கட்சியின் சுயநலத்துக்காக அவர்களது வாழ்க்கை இப்போது சிதைக்கப்பட்டிருக்கிறது. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ளக் காரணமான அந்த சுயநலவெறியே இப்போது திவ்யாவின் வாழ்க்கையைப் பலிவாங்கியிருக்கிறது. 
இப்போதைய சம்பவம் நமக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன: 
1. தான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பதாக திவ்யா சொன்ன நிலையில், அவரது திருமணம் குறித்தும் அதன் பிறகான கலவரங்களைப் பற்றியும் நன்றாக அறிந்த நீதிமன்றம் அவரை ஒருசில நாட்கள் காப்பகத்தில் இருக்குமாறு உத்தரவிட்டு அதன்பிறகு நிதானமான மனநிலையில் அவரது முடிவைக் கேட்டறியாமல் உடனடியாக அவரை அவரது அம்மாவுடன் அனுப்பியது இயற்கைநீதிக்கு உகந்ததுதானா? 

திவ்யாவின் மனக்குழப்பத்துக்கான காரணிகளில் ஒன்றாக அவரது அம்மா இருக்கிறார். அத்துடன் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூகக் காரணங்கள் நீதிமன்றத்துக்குத் தெரியாததல்ல. அவ்வாறிருந்தும் இப்படித் தீர்ப்பளித்தது சரிதானா? 
2. திருமணமான ஒரு பெண் தனது கணவர்மீதோ அவரது வீட்டார்மீதோ எந்தவிதப் புகாரும் சொல்லாத நிலையில் அவரை அவரது அம்மாவுடன் அனுப்ப சட்டத்தில் இடமுண்டா? அங்கு கணவரின் சட்டபூர்வ உரிமை என்ன? 
3. இளவரசன் திவ்யா திருமணம் இரண்டுபேருக்கிடையிலான தனிப்பட்ட விஷயம் என்றாலும் அந்தத் திருமணத்தைத் தொடர்ந்து ஏவப்பட்ட திட்டமிட்ட வன்முறை அதை அரசாங்கத்தின் வரம்புக்குள் கொண்டுசென்றுள்ளது. எனவே இதை அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா? அல்லது திவ்யாவையும் அவரது அம்மாவையும் சாதிவெறியர்களிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப் போகிறதா? 
4. சட்டத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு ஒரு கடத்தல் நாடகம் அரங்கேறியுள்ளது. இதை தமிழகத்திலிருக்கும் ஜனநாயக சக்திகள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? 

Monday, June 3, 2013

கலைஞர் 90



இன்று தொண்ணூறாவது பிறந்தநாள் காணும் தலைவர் கலைஞருக்கு வாழ்த்துகள். அவரது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கட்சியின் ஒற்றுமை குறித்தே அவர் அதிகம் பேசியிருக்கிறார்.  அதற்கான தேவை இருக்கிறது எனினும் இத்தகைய சந்தர்ப்பங்களில் கட்சி நலன் தாண்டி நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் பேசுவாரென்றே என்னைப் போல பலரும் எதிர்பார்த்திருப்பார்கள். 

இன்று வந்திருக்கும் இரண்டு செய்திகள் மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவிக்க விரும்பும் காங்கிரஸின் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே சிபிஐ விசாரணை நடத்த வழிசெய்யும் சட்டத் திருத்தம்; உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியனமனத்தில் மாநில அரசின் பரிந்துரை தேவையில்லை என ஆக்கி மத்திய அரசின் பிரதிநிதிக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் திட்டம். கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிவிட்ட சூழலில் மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் இந்தத் திட்டங்களை காங்கிரஸ் நடைமுறைப்படுத்த நினைப்பது அதன் பாரம்பரிய குணம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. 

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணி பாத்திரம் வகித்தவர் கலைஞர். அதற்காக அவர் முனைப்போடு செயலாற்றிய 1970களைவிட அதற்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கும் இன்று மீண்டும் அந்த வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றுவதற்கு அவர் முன்வருவாரா? தன் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா? 

அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழப் பிரச்சனையில் அவர் அக்கறை செலுத்திவந்தாலும் 2009 ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின்போது தமிழக முதல்வராகவும் மத்திய அரசின் முக்கியமான கூட்டாளியாகவும் இருந்த அவர் ஈழத் தமிழரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லையென்ற பழி இருக்கிறது. அந்தப் பழியைத் துடைக்கும்படி ஈழத் தமிழருக்கு ஆதரவான செயல் திட்டம் ஒன்றை அவர் இன்று அறிவிக்கவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இன்று நடக்கவிருக்கும் அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அவரது புகழ்பாடுவதாக மட்டும் இருந்துவிடாமல் தமிழ்ச் சமூகத்துக்குப் பயனுள்ளவிதத்தில் அமையுமானால் இந்நாள் என்றும் பேசப்படும் நாளாக அமையும் 

Saturday, June 1, 2013

நட்பு

நீண்டகாலம் வாழ்ந்தாய்
இப்போதும் வாழ்க்கைச் சூறாவளிகளிலிருந்து தப்பித்திருக்க உன்னால் முடிகிறது
உன் இதயத்துக்கு இதம்தரும்
நண்பனென யாரையும் உன்னால்
சொல்லமுடியவில்லை

ஆண்டுகள் பல கடந்து
இன்னும் நீ முதுமையடையும்போது
மக்கள் உன்னைப் பார்த்துச் சொல்வார்கள்
" நூறு வயதிருந்தான்
பாவம்
ஒரு நாளைக்கூட வாழவில்லை"

- ரஸூல் கம்ஸதேவ்
தமிழில்: ரவிக்குமார்