Monday, August 31, 2015

இந்திதான் இந்தியாவா?

ஐநா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிக்கச் செய்வதற்கு 129 நாடுகளின் ஆதரவு தேவையெனவும் அதைத் திரட்ட இந்தியா முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

ஐநாவின் அலுவல் மொழியாக ஒரு மொழியை அறிவித்தால் அதற்காகும் செலவை அந்த மொழி பேசும் நாடே ஏற்கவேண்டும். இந்தி ஐநாவின் அலுவல் மொழியாக்கப்பட்டால் ஆண்டுக்கு சுமார் 41 மில்லியன் டாலர் அதாவது 267 கோடி ரூபாய் அதற்கு செலவாகுமென்றும் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார். 

கோடிக்கணக்கான ஏழை மக்களின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைத்த மத்திய அரசு இந்திக்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை செலவுசெய்ய முனைப்புக் காட்டுகிறது. 

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்படவேண்டும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழிகளாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள் இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளித்துவருகிறார்கள். 

யோகாவையும் இந்தியையும் இந்தியாவின் அடையாளங்களாகக் காட்டும் முயற்சி இந்த நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற தன்மையை மெள்ள மெள்ள மாற்றுவதற்கான நடவடிக்கையே ஆகும். 


மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015



ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்னும் விருதளித்து கௌரவித்து வருகிறோம். 

2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 

செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு திருச்சி ஓட்டல் ஃபெமினாவில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன் அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார். பேராசிரியர் பா. கல்யாணி வாழ்த்துரை வழங்குகிறார். 

2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் 'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்து பாராட்டப்பட்டனர். 

2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். 

நிகரி விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 



முனைவர் ந.மணிமேகலை: 
===============


சேலம் மாவட்டம்  எடப்பாடிக்கு  அருகில் உள்ள தோப்புக்காடு என்னும் இடத்தில் பிறந்த  முனைவர் ந.மணிமேகலை கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறையை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த அவர் 2005 ஆம் ஆண்டு முதல் மகளிரியல் துறையில் தலைவராக செயல்பட்டுவருகிறார்.
பெண் தொழில் முனைவோர்களுக்கான அமைப்பை நிறுவி ஏராளமான பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு வழிவகுத்தவர். மகளிரியல் ஆய்வுகளுக்கான பிராந்திய அமைப்பை நிறுவி மகளிரியல் ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறார் 

மகளிர் மேம்பாடு, பாலின சமத்துவம் தொடர்பாகப் பல்வேறு மாநாடுகள் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளுக்கும் சென்றுவந்துள்ளார். அடித்தட்டு பெண்களின் மேம்பாட்டுக்காகப் பன்முகத் தன்மையோடுகூடிய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். Young Economist Award உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்

வகுப்பறையில் சமத்துவத்தைப் பேணுவதில் அக்கறை காட்டிவரும் பேராசிரியை ந.மணிமேகலை அவர்களின் பணிகளைப் பாராட்டி நிகரி விருது வழங்கப்படுகிறது. 



திரு க. துளசிதாசன்: 
============



 திரு க. துளசிதாசன் ம.கலியபெருமாள் பவுனாம்பாள் இணையருக்கு 11.03.1966 ல் பிறந்தவர். கடந்த 24 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். 2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப்பெற்றவர்.தற்போது திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.வி மேனிலைப் பள்ளியின் முதல்வராக இருந்து மாணவர்கள் வகுப்பறைகளுக்கு அப்பாலும் கல்வி பயிலவேண்டியதன் தேவையை உணர்த்தி ஆக்கபூர்வமான கல்வியை வழங்கிவருபவர்.

களம் என்ற அமைப்பின் மூலம் இலக்கியப் பணிகளையும் செய்துவருகிறார். படைப்பாளிகளுக்கும் மாணவர்களுக்குமிடையே பாலமாக செயல்படுவதோடு 'நமக்கான புத்தகத்தை நாமே உருவாக்குவோம்' என்ற புதிய கருத்தாக்கத்தை உருவாக்கிச் செயல்படுத்திவருகிறார்.
 
மாணவர்களின் கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர். 'கனவு ஆசிரியர் ' என்ற நூலின் தொகுப்பாசிரியர். கல்வி குறித்த புதிய பார்வையோடு கல்விப் பணியாற்றிவருகிறார். திரு க.துளசிதாசன் அவர்களது பணிகளைப் பாராட்டி நிகரி விருது வழங்கப்படுகிறது. 


இவண்
ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி

Friday, August 28, 2015

நல்லவர்களை விசாரித்தல்


பெர்டோல்ட் ப்ரெக்ட்
தமிழில்: ரவிக்குமார்

" ஆனால் உங்களது தகுதிகள் நற்பண்புகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு
நாங்கள் உம்மை நல்ல சுவரின் முன்னால் நிற்கவைப்போம்
நல்லதொரு துப்பாக்கியைக்கொண்டு நல்லதொரு தோட்டாவால் சுடுவோம்
நல்லதொரு மண்வெட்டியைக்கொண்டு நல்ல நிலத்தில் புதைப்போம் 

Wednesday, August 26, 2015

மதுரைப் புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி நூல்கள்



மதுரைப் புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி பதிப்பக வெளியீடுகள் பாரதி புத்தகாலயம் கடையில் கிடைக்கும். 

எமது புதிய வெளியீடுகள்: 

1. கி.பி.அரவிந்தன்:ஒரு கனவின் மீதி
தொகுப்பாசிரியர்கள்
பா.செயப்பிரகாசம்- ரவிக்குமார்

2. இன்றைய இலக்கியம் தலித் இலக்கியமே- பேராசிரியர் க. பஞ்சாங்கம்

3. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி
தொல். திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ், பேராசிரியர் ஜவாஹிருல்லா, மருத்துவர் மாசிலாமணி, ரவிக்குமார் ஆகியோரின் உரைகள்

4. நடுக்கடல் தனிக்கப்பல்: ரவிக்குமார் படைப்புலகம் 

ரவிக்குமாரின் நூல்கள் குறித்து இந்திரா பார்த்தசாரதி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன், எம்.ஏ.நுஃமான், அ.ராமசாமி, இமையம், சேரன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், அனார் உள்ளிட்ட பலரது கட்டுரைகள்

Sunday, August 16, 2015

தொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் கனவு - ரவிக்குமார்





படிப்பறிவில்லாத மக்களுக்குக் கல்வியைத் தருவதைவிடவும் துணிவற்ற மக்களுக்குத் துணிவைத் தருவதே முக்கியமானது. ’எழுச்சித் தமிழர்’ என நம்மால் போற்றப்படும் தலைவர் திருமா அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது சாதனைகளில்முதன்மையானது எது? என்று கேட்டால் தாழ்த்தப்பட்டு ‘சேரிக்காரர்கள்’ என்று இளக்காரமாகப் பேசப்பட்டிருந்த மக்களை கிளர்ந்தெழச் செய்து அவர்களை ‘சிறுத்தைகள்’ என்று மற்றவர்கள் இன்று அழைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறாரே அதுதான் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்பேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை சொல்ல முற்படுகிற எல்லோருமே கல்வியின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துக்கூறத் தவறுவதில்லை. கல்வி இன்றியமையாததுதான். அதிலும் பொருளாதார வலிமை அற்ற தலித் மக்களுக்கு அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம். ஆனால் கல்வி அவர்களது சமூக இழிவைப் போக்கிவிடுமா என்று கேட்டால் அதற்கு எதிர்மறையாகவே நாம் பதிலளிக்கவேண்டியிருக்கிறது. கல்வியால் உயர்ந்த ஒருவருக்கான உதாரணமாக இருக்கும் அம்பேத்கர், அந்தக் கல்வி ஒருவர்மீது படிந்த சாதி என்னும் கறையைத் துடைக்கப் பயன்படாது என்பதற்கும் சான்றாக இருக்கிறார்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களிடையே கல்வி கற்றவர்களின் விழுக்காடு எவ்வளவோ கூடியிருக்கிறது. அவர்கள் தமது முன்னோர்களைக்காட்டிலும் கூடுதலாக இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தப் புரிதல் அவர்களின் போராட்ட குணத்தை அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் யதார்த்தமோ நேர்மாறாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து வந்தவர்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதிய இழிநிலையை அறிந்தும் அதை எதிர்த்துப் போராட முன்வராமல் தமது வாழ்க்கைப் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பதைப் பார்க்கிறோம்.

அறிவு இந்த நாட்டில் சமூகநீதியைக்கொண்டுவருமா என்று ஆராய்ந்த அம்பேத்கர் அறிவும் சுயநலமும் முரண்படும்போது சுயநலம்தான் வெற்றிபெறுகிறது என்றார். ” அறிவின் ஆற்றலை நம்புகிற பகுத்தறிவாளர் அறிவின் மேம்பட்ட சக்தியால் அநீதி ஒழிக்கப்படும் என நம்புகிறார். மத்திய காலத்தில் சமூகத்தில் அநீதியும் மூடநம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டதாயிருந்தன.எனவே மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் அநீதியும் அழிந்துவிடும் என பகுத்தறிவாளர்கள் நம்பினார்கள்’ எனக் குறிப்பிட்ட அம்பேத்கர் ” இந்திய வரலாறும் சரி ஐரோப்பிய வரலாறும் சரி இந்தக் கரடுதட்டிப்போன கருத்தை ஆதரிப்பதாக இல்லை” என்றார். ஐரோப்பிய நாடுகளில் அநீதிக்கு அடிப்படையாக இருந்த மரபுகளும் மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும் சமூகத்தில் அநீதி இருந்துகொண்டுதான் இருக்கிறது என எடுத்துக்காட்டிய அம்பேதகர் “ இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கே பார்ப்பனர்கள் எல்லோரும் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.ஆன்,பெண் குழந்தைகள் என அந்த சாதி முழுவதுமே கல்வியறிவு பெற்றுள்ளது.ஆனால் எததனை பார்ப்பனர்கள் தீண்டாமையை மறந்திருக்கிறார்கள்? எத்தனைபேர் தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்? எத்தனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள்? சுருக்கமாகச் சொன்னால் எததனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களைத் தங்களுடையதாக நினைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏன் சமூக நீதியைக் கொண்டுவரவில்லை? ”அதற்கான விடை இதுதான்: ஒருவருடைய சுயநலத்தோடு முரண்படாதவரை அறிவு வேலை செய்யும். எப்போது சுயநலத்தோடு அது முரண்படுகிறதோ அப்போதே அறிவு தோற்றுவிடுகிறது” என்று விளக்கினார் அம்பேத்கர்.

கல்வி, அறிவு ஆகியவை குறித்த அம்பேத்கரின் இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மட்டுமானதல்ல. அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பொருந்தக்கூடியதே. கல்வியும், அறிவும் படித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னிலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அந்த விழிப்புணர்வு அவர்களிடம் சமூக அநீதிகளுக்கு எதிரான போர்க்குணத்தை உருவாக்கவில்லை. மாறாக அவர்களை சுயநலமிகளாக மாற்றியிருக்கிறது. தமது நலன்களுக்காகக்கூடப் போராடமுன்வராத கோழைகளாக்கியிருக்கிறது. அவர்கள் தமது சுயநலத்தை மறைத்துக்கொள்ள தமது சமூகத்தையே கேவலமாகப் பேசவும், தமக்காகப் போராட முன்வரும் அரசியல் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தவும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தவும் முனைகின்றனர். இப்படி அந்நியப்பட்டுக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் படிப்பாளி வர்க்கத்தைத் தாண்டித்தான் இன்று எந்தவொரு தலித் அரசியல் இயக்கமும் செயல்பட்டாகவேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் தலைவர் திருமாவளவன் அவர்களின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.

இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் உணர்வோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும்,பெரியசாமிப் புலவரும் முனைப்போடு பணியாற்றிய காலம் அது. திராவிட மகாஜனசபை (1891) ஆதி திராவிட மகாஜனசபை (1892) என இயக்கங்களை உருவாக்கி மாநாடுகள் பலவற்றை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் வைத்து அவற்றில் பலவற்றை வென்றெடுத்திருக்கிறார்கள். பறையன்,தமிழன் என பத்திரிகைகளை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறார்கள். அவர்களது பணிகள் பின்னர் எம்.சி.ராஜா, சிவஷண்முகம் பிள்ளை,சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி,சுவாமி சகஜாநந்தா எனப் பல்வேறு தலைவர்களால் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லப்பட்டன. நமது முன்னோடிகளான இந்தத் தலைவர்கள் பன்முக ஆற்றல் பெற்று விளங்கியபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறச் செய்யவில்லை.

இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக உழைத்த அம்பேத்கர் அரசியல் கட்சி ஒன்றின் தேவையை சரியாகவே உணர்ந்திருந்தார். இந்திய அரசு சட்டம் 1935 என புதிதாக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி வழங்கிட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது 1936 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ‘இண்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டி’ என்ற கட்சியை  அம்பேத்கர் துவக்கினார். 1937 ஆம் ஆண்டுநடைபெற்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் அந்தக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டனர். அம்பேத்கரும் போட்டியிட்டார். அம்பேத்கரைத் தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மிகவும் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அம்பேத்கர் மாபெரும் வெற்றியைப் பெற்றார். இண்டிபெண்டன்ட் லேபர் பார்ட்டி சார்பில் நிறுத்தப்பட்ட 17 பேரில் 15பேர் வெற்றி பெற்றனர்.

அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு அரசியல் கட்சி வேண்டும் என்பதை உணர்ந்து  அம்பேத்கர் 1942 இல் துவக்கியதுதான் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃ பெடரேஷன். அது 1946 இல் மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. 51 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் 34 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றியது. அது அகில இந்திய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அவர் பௌத்தத்தைத் தழுவியதற்குப் பின் உருவாக்கியதுதான் இந்தியக் குடியரசுக் கட்சி. அந்தக் கட்சியைத் துவக்கியதற்குப் பிறகு அவர் அதிக காலம் உயிர்வாழவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசனும், என்.சிவராஜ் அவர்களும் அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார்களே தவிர அவர்கள் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் கட்சி எதையும் துவக்கவில்லை. அம்பேதகரோடு முரண்பட்ட எம்.சி.ராஜாவும்கூட தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் சக்தியாக உருவாக்குவதில் வெற்றிபெறவில்லை. இந்தியாவிலேயே அரசியல் விழிப்புணர்வு பெற்றதாகவும், தனக்கென்று தனித்துவமான தலைவர்களைக் கொண்டதாகவும் இருந்த தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட சமூகம் தனக்கான அரசியல் அடையாளத்தை வலுவாக உருவாக்கிகொள்ளத் தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். இந்தப் பின்னணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உருவாக்கத்தை மதிப்பிடவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேர்தல் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தனி சின்னத்தில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு இரண்டு உறுப்பினர்களை அனுப்பிவைத்தது. பாராளுமன்றத்திலும் 2009 இல் இடம்பிடித்தது. இது சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் அதற்குமுன் நடைபெறாத ஒரு சாதனையாகும். அந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியவர் தலைவர் திருமாவளவன் ஆவார்.

அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும் சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல்மிக்கவர் என்றார் அம்பேத்கர். தலித் மக்களுக்காக அரசியல் கட்சியைத் தலைமையேற்று நடத்துவதென்பது ஒரு அரசியல்வாதியாக இருப்பவரால்மட்டுமே சாத்தியமானதல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தால்மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால் , தலித் மக்களுக்கான ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டிருக்க முடியாது. அது தலித் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யவும் அவர்களை அணிதிரட்டவும் அவர்களைப் போராட்ட களத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும். அதைத் தலைமையேற்று வழி நடத்துவதற்கு தலைமைப் பண்பு மட்டும் இருந்தால் போதாது. அவர் அறிவுத் தேர்ச்சியும் தொலைநோக்குப் பார்வையும் துறவு மனப்பான்மையும் கொண்டதொரு ஆளுமையாக இருக்கவேண்டும்.

வரலாற்றில் தனி மனிதனின் பாத்திரத்தை மார்க்சியம் அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. அது வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே பார்த்தது. ஆனால் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துவதில் தனி மனிதர்களின் பங்கை அங்கீகரித்தவர் அம்பேத்கர். அப்படியான தனி மனிதர்கள் எத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார். ” அறிவாற்றலும் பொறுப்புணர்வும் ஒருவரை மற்றவர்களிலிருந்து உயர்வானவராகக் கருதச் செய்யலாம். ஆனால் அவை மட்டுமே ஒரு மாமனிதருக்குப் போதுமான தகுதிகள் அல்ல. அவற்றுக்கும் மேலே அவருக்கு சில தன்மைகள் இருக்க வேண்டும். அவர் சமூக நோக்கம் ஒன்றினால் உந்தப்படவேண்டும். அவர் சமூகத்தில் சவுக்காகவும் துப்புரவாளனாகவும் இருக்கவேண்டும்” என்று அதற்கான இலக்கணத்தை வரையறுத்திருக்கிறார் அம்பேத்கர். அந்த இலக்கணத்துக்குப் பொருத்தமானதொரு தலைவராக எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் எழுச்சித் தமிழர், பொன்விழாவின்போது  மட்டுமல்ல தனது நூற்றாண்டுவிழாவின்போதும் தலைவராயிருந்து இந்த சமூகத்தை வழிநடத்த வாழ்த்துகிறேன். 

( எழுச்சித் தமிழரின் பிறந்தநாள் பொன்விழாவின்போது எழுதப்பட்ட கட்டுரை) 


சமூக நீதியும் நீதித்துறையும்

நீதிபதி கே.சந்துருவின் முக்கியமான நூல்
- ரவிக்குமார் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~

Legal Profession and Appointment of Judges என்ற தலைப்பில் தனது நூல் ஒன்று வெளியாகியிருப்பதை நீதிபதி கே. சந்துரு சில நாட்களுக்கு முன் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அமேஸான் இணையதளம் மூலம் வாங்குவதற்கு நினைத்திருந்தேன்.  நேற்று (15.08.2015) விழுப்புரம் கூட்டத்தில் சந்தித்தபோது அவரே ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார். 

நீதிபதி கே.சந்துருவின் ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூல். நீதிபதிகள் நியமனத்தில் தற்போதிருக்கும் சிக்கல்களை, நீதித்துறையில் சமூகநீதி நிலைநாட்டப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தும் முக்கியமான கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. 

காலஞ்சென்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். " சந்துருவை சிறுவனாக இருந்தபோதிலிருந்தே நான் அறிவேன். அடிப்படையில் அவர் ஒரு ஜனநாயகவாதி. வழக்கறிஞராக பாட்டாளிகளுக்கான சட்டங்களில் தேர்ந்து விளங்கியவர்; நீதிபதியாக சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பொறுப்போடு நடந்துகொண்டவர்" என அவர் அந்த முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்றபின் உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராக தொழில் செய்திருக்கலாம். தீர்ப்பாயங்களில் பதவி வகித்திருக்கலாம். ஆனால் அவற்றை சந்துரு விரும்பவில்லை. தனது கருத்துகளின் மூலமாக சமூகத்தில் விவாதங்களை எழுப்பவேண்டும் என்பதையே அவர் விரும்பினார். அதை அவர் சிறப்புற செய்துகொண்டிருக்கிறார். 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் குறிப்பிட்ட சில சாதிகளை முன்னிறுத்திப் போராடியவர்களின் வாதம் பிழையானது என்பது குறித்து புள்ளிவிவரங்களோடு அவர் எழுதிய கட்டுரை பலரது கண்டனத்துக்கு உள்ளானது. எனினும் நடுநிலையோடு பார்ப்பவர்களுக்கு அதன் நியாயம் புரியும். 

வி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதிபதி அசோக்குமார் ஆகியோரைப்பற்றியும்; சென்னை உயர்நீதிமன்றம் குறித்தும் சந்துரு எழுதியிருக்கும் கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன. Diversity and Judicial Appointments என்ற கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய ஒன்று. 1950 முதல் 1989 வரையிலான காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்களில் 42.9% பிராமணர்கள்; 49.4% பிராமணரல்லாத உயர்சாதியினர்; பிற்படுத்தப்பட்டோர் 5.2% தாழ்த்தப்பட்டோர் 2.6% என்ற புள்ளிவிவரத்தை அதில் எடுத்துக்காட்டுகிறார். 

அதற்குப் பிறகும்கூட நிலைமை மாறிவிடவில்லை. அதனால்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் collegium முறையை சரியென்று தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வும் , அதைக் கடுமையாக விமர்சித்த வி.ஆர்.கிருஷ்ணய்யரும் நீதித்துறையின் உயர்பதவிகளில் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும், பெண்களும் உரிய அளவில் இடம்பெறுவது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்கள். அதை சந்துரு தனது கட்டுரையில் மேற்கோள்காட்டி வழிமொழிகிறார். 

நீதித்துறை குறித்து ஆர்வமுள்ளவர்கள் மட்டுமின்றி சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருமே படிக்கவேண்டிய நூல் இது. 


பக்கங்கள்: 144
விலை: 225/- 
வெளியீடு : Lexlab, Thiruvananthapuram
தொலைபேசி: 0471-6888830

Saturday, August 15, 2015

சாதி நோயாளிகளை மீட்டெடுப்போம்!

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் தமது தெருவிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு மரத்தால் தேர்செய்து அதில் சாமியை வைத்து ஊர்வலம்விட முயன்றதற்காக தலித் மக்களின் ஐந்து வீடுகளை சாதி வெறியர்கள் எரித்துள்ளனர். காவலுக்கு இருந்த போலீஸாரையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். விவரம்

அறிந்ததும் எமது தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி தலித் மக்களின் வீடுகளை எரித்தவர்கள் மீதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். 

தற்போது கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் அங்கு அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சேஷசமுத்திரம் பிரச்சனை நான்கு ஆண்டுகளாக இருந்துவருகிறது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இதுவரை தேர் இழுக்க அனுமதி மறுத்துவந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தலித் மக்களின் பல்வேறு அறவழிப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தேர் இழுக்க அனுமதி தந்தது. நாளை (16.08.2015)தேர்த் திருவிழா நடக்கவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. அந்தத் தேரும் எரிக்கப்பட்டிருக்கிறது. 

சாதி வெறியை முதலீடாக வைத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் அதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளாக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வடமாவட்டங்களில் 1980 களில் அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கும் இப்போது நிகழும் வன்முறைகளுக்கும் பண்புரீதியான வேறுபாடு ஒன்று உள்ளது. அப்போது இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கோரிக்கை அவர்களிடம் இருந்தது. இன்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற அதிகார வெறி மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமின்றி சாதிவெறிக்கு சாதகமான வகுப்புவாத சூழலும் இங்கே ஒப்பீட்டளவில் வலுப்பெற்றிருக்கிறது. 

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்த மது ஒழிப்புப் போராட்டங்களாலும், மக்களிடையே உணர்வுபூர்வமாக உருவாகியிருக்கும் ஒற்றுமையாலும் அரசியல் களத்தில் ஓரங்கட்டப்பட்ட அந்த சக்திகள் சாதிவெறியைத் தூண்டி மக்களைப் பிரித்து மோதவிட்டு அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகத்தின் அமைதியை அவர்கள் நாசம் செய்துவிடுவார்கள். இதைத் தமிழக அரசு உணரவேண்டும். 

தலித் மக்கள் சாதித் தளையிலிருந்து விடுதலைபெற வேண்டுமென்றால் சாதிவெறி நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களையும் அதிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். குடிநோயாளிகளைக் குணப்படுத்தாமல் மது ஒழிப்பு முழுமைபெறாது. அதைப்போலவே சாதிநோயாளிகளைக் குணப்படுத்தாமல் சாதி ஒழிப்பு முழுமை பெறாது. இந்த அறிவு முதிர்ச்சியை அம்பேத்கரும் எழுச்சித் தமிழரும் தலித் சமூகத்துக்கு வழங்கியுள்ளனர். அதனால், சாதிவெறி என்னும் நஞ்சை ஒருபோதும் அவர்களிடம் செலுத்தமுடியாது.

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது! - ரவிக்குமார்



இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்!

சுதந்திர நாளை இந்த நாடு கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இங்கே கூடியிருக்கிறோம். நாம் இங்கே கூடியிருப்பதைப்போல மக்கள் கூடுவதற்கு உலகில் பல நாடுகளில் சுதந்திரம் இல்லை. அண்டையிலே இருக்கிற இலங்கையில் மக்கள் இப்படி சுதந்திரமாகக் கூடி தாம் விரும்பும் கருத்துகளை விவாதிக்க முடியாது, ராணுவம் வந்துவிடும். பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, மியான்மரிலோ இப்படி கூட்டம் நடத்த முடியாது. எத்தனையோ நாடுகள் சர்வாதிகாரிகளின் ராணுவ ஆட்சியின் கீழ் இருக்கின்றன. அந்த நாடுகளோடு ஒப்பிட்டால் நாம் சுதந்திரம் உள்ள குடிமக்களாகத்தான் இருக்கிறோம். எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் அவற்றுக்காக நாம் போராடினாலும் ஒப்பீட்டளவில் இந்த நாடு சுதந்திரமான நாடுதான், நாமும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான மக்கள்தான். 

இந்த சுதந்திரத்துக்கு அடிப்படை நமது அரசியலமைப்புச் சட்டம். நேற்று நாட்டு மக்களுக்கு 69 ஆவது சுதந்திரதின செய்தியை வழங்கிய நமது குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது உரையில் பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டு ஒரு முக்கியமான சிக்கலைப்பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார். 

'நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவான சட்டமன்ற நாடாளுமன்றங்கள், நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகிய மூன்று உறுப்புகளும் இன்று கடுமையான அழுத்தத்துக்கு, நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன' என்று நம் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார். இங்கே கூடியிருக்கிற மனித உரிமை ஆர்வலர்கள் அப்படிச் சொன்னால் அதில் வியப்பேதுமில்லை; பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் அப்படிச் சொன்னால் அதில் புதுமை ஒன்றுமில்லை, சொல்லியிருப்பவர் நம் நாட்டின் முதல் குடிமகன். 

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித் தந்த அம்பேத்கர் அந்த சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசும்போது குறிப்பிட்ட ஒரு கருத்தை குடியரசுத் தலைவர் தனது உரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்:          " அரசியலமைப்புச் சட்டம் ஒரு அரசுக்குத் தேவையான நீதித்துறை, நிர்வாகம், சட்டமியற்றும் அவைகள் என்ற உறுப்புகளைத்தான் வழங்கமுடியும். அந்த உறுப்புகளின் செயல்பாடு மக்களும் அவர்களால் உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. " என்பதுதான் அம்பேத்கர் 1949 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்து. 

மக்களாகிய நாம் என்ன செய்கிறோம்? தேர்தலில் யாருக்காவது வாக்களித்துவிட்டு அத்துடன் மறந்துவிடுகிறோம். நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதி தனது கடமையைச் செய்யாவிட்டாலும்கூட அடுத்த தேர்தல்வரை காத்திருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறவர்களுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கவேண்டும் என்பதல்ல, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்துக்கும்கூட பொறுப்பு இருக்கிறது. மக்களின் பெயரால் செயல்படும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. 

இங்கே சகோதரி லூசினா குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்த இருளர் சமூகப் பெண்ணைப் பார்த்தபோது எழுந்த எண்ணம்தான் அந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்குக் காரணம் என்று அவர் சொன்னார். அப்படியொரு பெண்ணைப் பார்த்தால் ஒரு அரசியல் கட்சி என்ன செய்திருக்கும்? அதிகபட்சம் அரசாங்கத்தைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தைக் கண்டித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் புனித அன்னாள் சபை அப்படி செய்யவில்லை. மாற்றத்தை அதுவே முன்னெடுத்தது. அதனால்தான்  பதினைந்தே ஆண்டுகளில் இருளர் சமூகத்திலிருந்து ஒரு மாணவி மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய நிலை, பட்டதாரிகள் பலபேர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

அத்தியூர் விஜயாவின் பெயரால் இன்று விருது வழங்கப்படுகிறது. பழங்குடி இருளர்கள் ஒரு சங்கமாக உருப்பெறக் காரணமாக இருந்தவர் விஜயாதான். அவருக்கு நடந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு அந்தப் பிரச்சனையை பேராசிரியர் கல்யாணி கையிலெடுத்தார், அவருக்கு நாங்களெல்லாம் துணையாக இருந்தோம். திருநெல்வேலியில் பிறந்தவர் கல்யாணி, அவர் இங்கேயிருக்கும் இருளர்களுக்காகப் பாடுபடுகிறார். எங்கெங்கோ இருந்து பலரை விழுப்புரம் மாவட்டத்தை நோக்கி ஈர்க்கும் மையமாக மாறியிருக்கிறார். அவரது பணி பெருமைக்குரியது. அவர் இருளர் மக்களுக்காகப் பாடுபடவேண்டும் என நினைத்ததால் மட்டும் இந்த சங்கம் உருவாகிவிடவில்லை, போலீஸ்காரர்களின் அச்சுறுத்தலுக்கோ, பணம் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளுக்கோ பலியாகாமல் 'கல்யாணி சார் சொல்வதைத்தான் கேட்பேன்' என்று உறுதியாக இருந்தாரே விஜயா அந்த உறுதியால்தான் இந்த சங்கம் பிறந்தது. கல்யாணி உங்களுக்கு உண்மையாக இருப்பதைப்போல பழங்குடி மக்களாகிய நீங்கள் அவருக்கு உண்மையாக இருக்கிறீர்களே அதனால்தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. 

மாற்றம் அவரால் வரும் இவரால் வரும் என்கிறார்கள்; அந்தக் கட்சியால் வரும் இந்தக் கட்சியால் வரும் என்கிறார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். மாற்றம் உங்களால்தான் வரும். கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நீங்கள்தான் அதிகாரத்தை வழங்குகிறீர்கள். நீங்கள் மனம் வைத்தால்தான் மாற்றம் நிகழும். இன்று இருளர் சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற மாற்றம் நீங்கள் மனம் வைத்ததால்தான் சாத்தியமானது. அத்தகைய மாற்றத்தை சாதித்துக் காட்டிய உங்களது மன உறுதியை மதித்துதான் நீதிநாயகம் சந்துரு அவர்கள் இங்கே வந்திருக்கிறார். 
அதிகாரம் மக்களாகிய உங்களிடமிருந்துதான் பிறக்கிறது. அம்பேத்கரை மேற்கோள்காட்டி இதைத்தான் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

இன்றைக்கு நமது சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை எப்படி தீர்ப்பது? அரசின் உறுப்புகளான நீதி, நிர்வாகம், சட்டமியற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை யார் சரிசெய்வது? மக்களும் மக்களால் உருவாக்கப்படும் அரசியல் இயக்கங்களும்தான் அதைச் செய்யவேண்டும். ஆனால் மக்களால் உருவாக்கப்பட்டு மக்களின் பெயரால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை அடைந்துவிட்டால் அரசின் உறுப்புகளை ஆதிக்கம் செய்ய வாய்ப்புப் பெற்றுவிட்டால் தமக்கு அதிகாரம் வழங்கிய மக்கள்மீதே அதிகாரத்தை அடக்குமுறையை ஏவுகிற நிலையைப் பார்க்கிறோம். அதற்கு நீதி அமைப்பும், நிர்வாக அமைப்பும் துணைபோகிறபோதுதான் சமூக நெருக்கடி அதிகரிக்கிறது. 

இதை நாம் அனுமதிக்கக்கூடாது இன்று ஏற்பட்டிருக்கிற நெருக்கடி இப்போது நமக்கு இருக்கும் சுதந்திரத்தையும் பறித்துவிடக்கூடாது; நாட்டில் இப்போதிருக்கும் சனநாயகத்தையும் செயலிழக்கச்செய்துவிடக்கூடாது. அதை மக்கள்தான் தடுத்து நிறுத்தவேண்டும். 

அதிகாரத்தை வழங்குகிற நாம்தான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். நம் கையிலிருக்கும் அதிகாரத்தின் பலத்தை, ஆற்றலின் தன்மையைப் புரிந்துகொள்வோம்; அதுபற்றிய விழிப்புணர்வை அதிகரித்துக்கொள்வோம். நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க உறுதியேற்போம், நன்றி. வணக்கம்! 

( 15.08.2015 அன்று விழுப்புரம் போதி அய். ஏ.எஸ் அகாடமியில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பேசியதன் சுருக்கம்) 



செல்லம்மாள் மண்பானை சமையல்



செல்லம்மாள் மண்பானை சமையல்: திருச்சியில் ஆரோக்கியமாக உணவருந்த ஒரு அற்புதமான இடம் 
=========
நகரங்களில் வாழ்வோரிடையே உடல் ஆரோக்கியம், உணவுமீதான அக்கறை, அதுகுறித்த விழிப்புணர்வு பெருகிவரும் காலம் இது. இதனால் நடைப்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை கூடிவருவது மட்டுமல்லாது ரசாயன உரம் பூச்சி மருந்து பயன்படுத்தாத ஆர்கானிக் காய்கறிகள்; இயற்கை வேளாண்மை செய்வோரின் எண்ணிக்கை; பழமுதிர் நிலையங்கள்; அருகம் புல் சாறு, சோற்றுக்கற்றாழை ஜூஸ், கேழ்வரகு கூழ் எனப் பல்வேறு விஷயங்களும் நகரங்களில்  பெருகிவிட்டன. 

திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியில் இருக்கும் செல்லம்மாள் மண்பாண்ட சமையல் உணவகம் இந்த 'ஆரோக்கிய விழிப்புணர்வுப்  போக்கின்' தொடர்ச்சிதான் என்றாலும் புதுமையானது. டாமின் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு மோகன் என்பவர் தனது மனைவியின் பெயரில் அந்த சைவ உணவகத்தை நடத்துக்கிறார். எம்.எஸ்.சி ஜியாலஜி படித்தவர். எந்திரங்களைக் கையாண்டு அனுபவம் பெற்றவர். எண்ணெய் வாணிபம் செய்த குடும்பத்தின் பட்டறிவும் சேர்ந்து சிறப்பான முறையில் அந்த உணவகம் நடக்கிறது. 16 விதமான அரிசிகளை வெவ்வேறு இடங்களிலிருந்து தருவித்து சமைத்துத் தருகிறார்கள். சமைப்பது, பரிமாறுவது எல்லாமே மண் பாண்டங்கள்தான். விறகு அடுப்புகள், அம்மி, உரல் எல்லாவற்றையும் அவற்றின் தன்மை கெடாமல் எந்திரமயமாக்கியிருக்கிறார் மோகன். 

ஐந்தாறு வகை கீரைகள், ஏழெட்டுவிதமான பொறியல், வாழைப்பூ வடை சுட்ட அப்பளம், அவல் பாயாசம்- என வியக்க வைக்கும் உணவு வகைகள்.  ஆரோக்கியமென்றாலே அந்த உணவு ருசி இல்லாமல் பத்திய சாப்பாடுபோலத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை அந்த உணவகம் மாற்றுகிறது. 

கீரை, பொறியல் ஒவ்வொன்றும் ஐந்து ரூபாய், குழம்பு பத்து ரூபாய், சாதம் இருபது ரூபாய். அறுபது ரூபாயில் அங்கே சாப்பிடக்கூடிய உணவு வகைகளை ஐநூறு கொடுத்தாலும் பிற ஓட்டல்களில் வாங்க முடியாது. 

மதியம் 12.15 க்கு ஆரம்பித்து மூன்று மணியோடு விற்பனை முடிந்துவிடும், ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை இல்லை. மோகனைத் தவிர மற்ற எல்லோருமே அங்கு பெண்கள்தான். 

திருச்சிக்குப் போக நேர்ந்தால் செல்லம்மாள் மண்பாண்ட சமையலை சாப்பிட மறக்காதீர்கள்.


Wednesday, August 12, 2015

திரு வ.அய்.சுவைப் போல் ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகவேண்டும் - ரவிக்குமார்



செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக தி ரு வ.அய்.சு அவர்கள் இருந்தபோது அதன் எண்பேராயக் குழு உறுப்பினர்களில் ஒருவராக மத்திய அரசால் நான் நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அவர் தலைமையில் நடந்த ஓரிரு கூட்டங்களில் நான் பங்கேற்றேன். 

அவர் ஒரு தமிழறிஞர் என்பதைவிட தொலைநோக்குப் பார்வைகொண்ட சிறந்த நிர்வாகி. அதனால்தான் அவரால் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் பலவற்றை உருவாக்க முடிந்தது. அவரைப்போன்ற visionary எனக் கூறத்தக்க தரிசனம் உள்ள ஆளுமைகள் நம்மிடையே இப்போது இல்லை. அவர் உருவாக்கிய நிறுவனங்களை இப்போது உள்ளவர்கள் காப்பாற்றவும் நிர்வகிக்கவும் திணறுகிற நிலையைப் பார்க்கிறோம். 

அன்றைய ஆட்சியாளர்களிடம் போராடி அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் பெற்றுத் தந்த நிலத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் இப்போது ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்கள். இதுவொரு உதாரணம். ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு நிதியோ, கட்டமைப்பு வசதிகளோ தடையாக இல்லை. அவற்றை நிர்வகிக்கும் ஆற்றல்கொண்ட ஆளுமைகளின் பற்றாக்குறைதான் மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது. 

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை மேலும் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பரிந்துரைக்க இப்போது திரு க.ப.அறவாணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். வ.அய்.சு வின் மாணவராகிய அவர் சிறப்பான ஆலோசனைகளைத் தருவார் என நம்புகிறேன். 

புதுச்சேரி ஒரு மாநிலம் இல்லையென்றாலும் இதற்கெனத் தனியே கல்பி வாரியத்தைத் துவக்குவதுதான் நல்லது. திரு லட்சுமி நாராயணன் கல்வி அமைச்சராக இருந்தபோது அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்துடன் அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. கேரளாவில் கல்வி நிலை சிறப்பாக இருப்பதற்கு அது ஒரு சிறிய மாநிலமாக இருப்பதும் ஒரு காரணம். அவர்களைப்போல இங்கிருக்கும் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கணக்கில்கொண்டு புதுச்சேரியிலும் சுயேச்சையான கல்வி வாரியத்தை கல்வித் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் அப்போதுதான் புதுச்சேரியின் கல்வித் தரம் அடுத்த நிலைக்குச் செல்லும். தமிழ்நாட்டில் கல்விக் கொள்கையை வகுப்பதில் அரசியல் தலையீடு அதிகம். புதுச்சேரியில் அந்த அளவுக்கு இல்லை. தமிழ்நாட்டின் கல்வி வாரியத்தின் அங்கமாக இருப்பது தேவையற்றது. 

இங்கே ஃ ப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தியவியல் நிறுவனம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அங்கே ஈவா வில்டன் அவர்களின் தலைமையில் செவ்வியல் இலக்கியங்களின் செம்பதிப்புகளை உருவாக்கிவருகின்றனர். சில நூல்கள் வெளிவந்துவிட்டன. அந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு நீங்கள் இங்கே PILC ல் வாங்கும் ஊதியத்தில் பாதிகூட கொடுக்கப்படுவதில்லை. அந்தச் சூழலில் அவர்கள் அத்தகைய ஆய்வுப்பணிகளைச் செய்யும்போது நீங்கள் அதைவிட சிறப்பாகச் செய்யமுடியும். PILC ல் அதற்கான ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறீர்கள். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவரும் விதமான செயல் திட்டத்தை அய்யா அறவாணன் அவர்கள் அரசுக்கு அளிப்பார்களெனக் கருதுகிறேன். 

திரு வ.அய்.சு பல்துறை அறிவு கொண்டிருந்தார். அதுபோல இங்கிருப்போர் திகழவேண்டும். சங்க இலக்கியங்களின் செம்பதிப்புகளைக் கொண்டுவரவேண்டுமெனில் அதற்கு சுவடிகளைப் படிக்கவும், கல்வெட்டுகளைப் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். இலக்கணத்திலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் புலமை வேண்டும். அத்தகைய பல்துறை அறிவுகொண்டவர்கள் தற்போது அருகிவிட்டனர். அந்தக் குறையை ஈடுகட்டும் விதத்தில் ஆராய்ச்சி மாணவர்களை இங்கே உருவாக்கவேண்டும். பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தை அதன் பணிகளை உலகமெங்கும் அறிவார்கள். அதுபோல உலகப் புகழ்பெறும் விதத்தில் இங்கிருந்து ஆய்வுகள் வெளிவரவேண்டும் என வாழ்த்துகிறேன். திரு வ அய் சு அவர்களது படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரைப்போல நாம் வரவேண்டும் என இங்கிருக்கும் ஆய்வு மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டால் நிச்சயம் இந்த நிறுவனத்தைப் புகழ்பெற வைக்கமுடியும். நன்றி வணக்கம் 

( 12.08.20-5 அன்று புதுச்சேரி PILC நிறுவனத்தில் திரு வ.அய்.சு அவர்களின் உருவப் படத் திறப்பு நிகழ்வில் பேசியதன் சுருக்கம்) 



Tuesday, August 11, 2015

ரவிக்குமார் கவிதை

தோளில் அமர்ந்த மரணம் 
- ரவிக்குமார்


மின் கம்பத்திலிருந்து
காக்கை உருவில் கரைந்து கரைந்து
அழைத்தது மரணம்

'என்னை நினைவுகூர
எந்தத் தடயமும் இருக்கக்கூடாது
அவற்றையெல்லாம் அழித்துவிட்டு
அழைத்துப்போ' என்றேன்

எங்கெங்கே இருக்கும்?
என்றென்னைக் கேட்டது

படித்த புத்தகங்களில் இருக்கும்
பார்த்த மலர்களில் இருக்கும்
குளித்த நதிகளில் இருக்கும்
கொஞ்சிய குழந்தைகளில் இருக்கும்
நடந்த வழிகளில் இருக்கும்
நனைந்த மழையினில் இருக்கும்

கடற்கரையில்
புல்வெளியில்
பாதையோர மரநிழலில்

கண்ணீரில்
புன்னகையில்
காற்றில்லா நடுப்பகலில்

எல்லாவற்றிலுமே
இருக்கும் என் தடயம் என்றேன்

உன்னை நினைவுகூர்வார்
யாருளர்? என்றது
ஒருத்தர் பெயரும் தோன்றாது திகைத்தேன்

பறந்து வந்தென்
தோளில் அமர்ந்தது


Monday, August 10, 2015

பெண்கள் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பவர்கள் யார்? - ரவிக்குமார்



இன்று (11.08.2015) தி இந்து ஆங்கில நாளேட்டில் Wife,Mother,Lawyer,Priest என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கும், பெண்கள் அர்ச்சகராக்கப்படுவதற்கும் தடையாக இருக்கும் பழமைவாத சக்திகளை விமர்சிப்பதற்குப் பதிலாக சமூக சீர்திருத்தத்தை முன்னெடுப்பவர்களைக் குறை கூறுகிறது. பெண்களுக்கு உரிமை அளிக்கும் விஷயத்தில் அவர்கள் மௌனம் சாதிப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. அவர்கள் மௌனம் காப்பது பெண்களுக்கு உரிமை தரப்படக்கூடாது என்பதற்காக அல்ல, பழமைவாதிகளின் பிடி நீதித்துறையின்மேல் இன்னும் வலுவாக இருப்பதைப் பார்த்த அச்சத்தால் தான். 

அம்பேத்கரின் ' இந்து சட்ட மசோதாவை' சட்டமாக்க விடாமல் தடுத்த சக்திகள்தான் இப்போதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளன. இந்த ஆபத்தை சுட்டிக்காட்டாமல் சமூக சீர்திருத்தத்தை முன்மொழிபவர்களை விமர்சிப்பது பழமைவாதிகளுக்குத் துணைபோவதாகவே முடியும். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டபோது அந்த சட்டத்தை வரவேற்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய நான் ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்தேன். அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்தும் வேண்டினேன். ' இந்த சட்டத்தையே செயல்படுத்த விடாமல் தடை செய்யப்பார்க்கிறார்கள். பெண்களையும் உள்ளடக்கினால் அதையே காரணமாகக் காட்டி இந்த சட்டத்தைத் தடுத்துவிடுவார்கள் . முதலில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரட்டும். அதன் பின்னர் அந்தத் திருத்தத்தைச் செய்வோம்" என அவர் பதிலளித்தார். 

இந்து நாளேட்டில் கட்டுரை எழுதியவர்களும் அதில் கருத்து கூறியிருப்பவர்களும் இந்தப் பிரச்சனையில் மிகவும் புரட்சிகரமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே. சந்துரு வழங்கிய தீர்ப்பு அது. " இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்" என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதி கே. சந்துரு குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தீர்ப்பை கட்டுரையாளர்களோ கருத்து சொன்னவர்களோ அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அந்தத் தீர்ப்பைப்பற்றி 
26.09.2008 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ' தீர்ப்பு அல்ல நீதி' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் நான் எழுதியிருக்கிறேன். 

தற்போது உச்சநீதிமன்றத்தில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் குறித்த விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அதை வெளியிடவேண்டும் என சமூகநீதியில் அக்கறையுள்ளோர் வலியுறுத்தவேண்டும். 

http://m.thehindu.com/opinion/op-ed/wife-mother-lawyer-priest/article7522954.ece

Sunday, August 9, 2015

தமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்

தமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்
=========
( 09.08.2015 அன்று புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற திரு க.ப.அறவாணன் அவர்களின் வைர விழா நிகழ்வில் ஆற்றிய உரை) 
==========

தமிழ் எதிர்காலம் என்றால் அதில் மொழி, இலக்கியம், அரசியல் என்று பல்வேறு தளங்கள் உள்ளன. திரு அறவாணன் அவர்கள் மானுடவியல், வரலாறு, இலக்கியம், பண்பாடு எனப் பல தளங்களில் செயல்படுகிறவர். அவரது வைர விழாவில் தமிழ் என்றால் அதை மொழி என்பதாக மட்டும் நான் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. 

தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் ஏராளம். நமது அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். அந்தப் பேரவலம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர்கள் தமது உரிமைகளுக்காக வாய் திறந்து பேசக்கூடிய நிலையில் இல்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் அந்த இனப்படுகொலை குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. அந்த விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. 

இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வசதியாக அந்த அறிக்கையை வெளியிடாமல் ஒத்திப்போட்டார்கள். செப்டம்பர் மாதம் அந்த அறிக்கை வெளியிடப்படவேண்டும். ஆனால் அப்போதும் வெளியிடுவார்களா எனத் தெரியவில்லை. தற்போது இலங்கையில் தேர்தல் நடக்கப் போகிறது. புலம்பெயர் தமிழர்களின் குரல்களும் மங்கித் தேய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கான அழுத்தத்தைத் தமிழ்நாடுதான் கொடுக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் அதுகுறித்த குரல்கள் வலுவாக எழுந்தன. ஆனால் இப்போது அந்தக் குரல்கள் பலவீனமடைந்துவிட்டன. 

இந்த நிலை மாற்றப்படவேண்டும். செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும் என்று நாம் வலுவாக இப்போதிலிருந்தே குரல் எழுப்பவேண்டும்.

இலங்கையில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலோடு ஆட்சி மாற்றம் என்ற செயல்திட்சம் முற்றுப்பெற்றுவிடலாம். அத்துடன் ஐநா சபை ஈழத் தமிழர்களை கைகழுவி விடக்கூடும். ஐநா மனித உரிம்சிக் கவுன்சிலின் நோக்கம் ஈழத் தமிழர்கள் உரிமை பெற வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்படவேண்டும், அமெரிக்க மேலாதிக்கம் தொடரவேண்டும் என்பதுதான். 

இலங்கையில் சீன ஆதிக்கம் வலுப்பெறுவது இந்துமாக்கடலிலும் அதன் ஆதிக்கம் வலுவடைய உதவும் என்பதால் அதைத் தடுத்த நிறுத்துவதற்குத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையை ஐநா சபை கையிலெடுத்தது. உலகின் பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளையும் இதேவிதமாகத்தான் அது கையாண்டுவருகிறது. 

இந்துமாக்கடல் இன்று உலக அளவில் ஆதிக்கப்போட்டி நிகழும் களமாக மாறியிருக்கிறது. உலகின் எதிர்கால அரசியல் இந்துமாக்கடலில்தான் தீர்மானிக்கப்படப்போகிறது என போரிதல் வல்லுனர்கள் குய்றுகின்றனர். ஒரு காலத்தில் அந்த ஆதிக்கப்போட்டியில் இந்தியாவும் ஈடுபட்டிருந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா பின்பற்றிவரும் வெளியுறவுக்கொள்கை இந்திய நிலையை பலவீனப்படுத்தி அதன் தற்சார்பு நிலையை, பக்கச்சார்பற்ற நிலையை அழித்துவிட்சது. இப்போது அமெரிக்காவின் ஆதரவு நாடு என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கென்று சுயேச்சையான நிலைப்பாடு இல்லை. அதுதான் ஈழத் தமிழர்கள் பிரச்சனையிலும் வெளிப்படுகிறது. 

இந்துமாக்கடலை மையமாக வைத்து நடக்கும் அதிகார விளையாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை பகடையாக உருட்டப்படுக்கிறது. எனவே ஐநா மனித உரிமைக் கவுன்சில் செப்டம்பர் மாதத்தில் இலங்கை குறித்த அறிக்ஜையைத் தாமாகவே வெளியிட்டுவிடும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கான அழுத்தற்றைத் தமிழகம் தான் ஏற்படுத்தவேண்டும். இப்போதிருந்தே அதை நாம் வலியுறுத்தவேண்டும். 

அரசியல் களத்தில் தமிழ் இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்வதற்கு நமக்கிருக்கும் கடமையைகளைப்போலவே பிற களங்களிலும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எதிர்வினையாற்றக்கூடிய விழிப்புணர்வுகொண்ட அறிவாளிகள் நம்மிடையே இருக்கிறார்களா? 

அறிவுத்துறையினரை இரு வகைப்படுத்தலாம்: வெகுமக்களிடம் கலந்துரையாடித் தாக்கத்தை ஏற்படுத்துவோர் ஒரு வகை; சிறு குழுக்களோடு உரையாடி ஆழமான விவாதங்களைத் தூண்டும் சிந்தனையாளர்கள் இன்னொருவகை. தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளில் எதிர்வினையாற்றி வெகுமக்களின் கருத்தை மாற்றியமைக்கும் திறன்கொண்ட பொதுநிலை அறிவாளிகள் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? 'பப்ளிக் இண்டெல்லக்சுவல்ஸ்' என அடையாளப்படுத்தப்படும் தகுதிவாய்ந்தவர்கள், அத்தகைய மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்கள் எத்தனைபேர் இங்கு இருக்கிறார்கள்? 

உலக அளவில் தத்துவ அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பட்டியலைப் பார்த்தால் ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்துதான் மிக அதிகமான எண்ணிக்கையில் அதில் இடம்பெற்றிருப்பார்கள். தமிழில் தத்துவ அறிஞர் என எவரேனும் உண்டா? சிந்தனையாளர் என எத்தனைபேரைச் சொல்லமுடியும்? திரைப்படப் பாடலாசிரியர்களைத்தான் இங்கே சிந்தனையாளர்கள் என விருதளித்துப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைவிடவும் வெட்கக்கேடு வேறென்ன வேண்டும்! 

தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை- இப்படி எத்தனையோ நிறுவனங்கள். ஆனால் அந்த நிறுவனங்களைத் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதி வாய்ந்தோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? இதற்காக நாம் யாரைக் குற்றம் சாட்டுவது? எவரைப் பழிப்பது? ஆட்சியாளர்களை, அரசியலாளர்களை இதற்காகக் குறை சொல்வதால் சிக்கல் தீராது. நாம் எல்லோருமே இதற்குப் பொறுப்பு. 

மத்திய அரசால் செம்மொழித் தகுதி தமிழுக்கு வழங்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை நினைவுகூரக்கூட தமிழ்நாட்டில் எவரும் இல்லை. மணற்கேணி சார்பில் ஒரு கருத்தரங்கை நடத்த ஒரு சிறப்பிதழை வெளியிட முயற்சித்துப் பார்த்தேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை. 

வரலாற்றில் ஒன்றின் தாக்கத்தை மதிப்பிட பத்து ஆண்டுகள் என்பது கணிசமானது. இந்தப் பத்து ஆண்டுகளில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாதித்தவை எவை என்பதை ஆய்வு செய்வதற்கு இந்தத் தருணத்தை நாம் பயன்படுத்தியிருக்கலாம். 2004 ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் இதுவரைக்கும் அந்த நிறுவனத்துக்கு ஒரு முழுநேர இயக்குனரைக்கூட கண்டறிய முடியவில்லை. அதற்கான தேர்வுக்குழு எத்தனையோ முறை கூடிவிட்டது. இதுவரை ஒருத்தரைக்கூட அது கண்டுபிடிக்கவில்லை. தமிழின் அவலநிலைக்கு இதைவிடச் சான்று வேறென்ன வேண்டும்? செம்மொழிக்காக என்ன செய்யப்பட்டது? செவ்வியல் இலக்கியங்களை மக்களிடம் பிரபலப்படுத்துகிறோம் என்று பேரணிகள் நடத்தப்பட்டன. இப்படியான கேலிக்கூத்து வேறு எந்த மொழியிலாவது நடந்திருக்குமா? 

நமது அண்டை மாநிலமான கர்னாடகத்தில் நாராயண மூர்த்தி என்ற தனிநபர் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நமது நிறுவனங்களின் அவலம் புரியும். இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கிய நாராயணமூர்த்தியின் பெயரால் 'மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா ' என ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சமஸ்கிருத அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கின் வழிகாட்டுதலில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து அது செயல்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து செவ்வியல் இலக்கியப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். மூல மொழியிலும் ஆங்கிலத்திலும் அந்தப் பிரதிகள் வெளியிடப்படுகின்றன. உலகமெங்கும் இருக்கும் இந்தியவியல் அறிஞர்கள் எல்லோரும் அதில் ஆலோசகர்களாக உள்ளனர். ஐந்து நூல்கள் வெளியாகிவிட்டன, தெரிகதாவும், ஸூஃபி பாடல்களும், அக்பரின் வரலாறும் அதில் இடம்பெற்றுள்ளன. துளசிதாசரின் ராமாயணம் உட்பட ஜனவரி மாதத்தில் நான்கு நூல்கள் வெளியாகவுள்ளன. இப்படி ஒரு வேலையையாவது தமிழ்நாட்டிலிருக்கும் தமிழ் நிறுவனங்கள் செய்துள்ளனவா? 

நாராயணமூர்த்தி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். " கடந்த அறுபது ஆண்டுகளாக உலக அளவில் தாக்கத்தை நிகழ்த்தும் விதமாக ஒரு கண்டுபிடிப்பைக்கூட இந்தியா முன்வைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிந்தனையையும் இந்தியா வெளியிடவில்லை" என்று கூறினார். அந்தக் கருத்து ஆங்கில ஊடகங்களிலே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களால் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதை விவாதிப்பதற்குக்கூட ஆள் இல்லை. இந்தக் கருத்தை மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்தஎந்தவொரு கருத்தையும் விவாதிக்கக்கூடிய நுண்ணுணர்வுமிக்க அறிவாளிகள் நம்மிடம் இல்லை.

தமிழ்ச் செம்மொழியாகிவிட்டது என்பதில் பெருமைகொள்கிற நாம் தமிழின் செவ்வியல் வளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எந்த அளவுக்குத் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறோம்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும்  தமிழ்த் துறைகள் இருக்கின்றன. கல்லூரிகள் பலவற்றிலும் தமிழ்த் துறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர்? செவ்வியல் இலக்கியப் பிரதிகளை சொல்லிக்கொடுக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாடத் திட்டங்களை வகுக்கும்போதே தொல்காப்பியம் வேண்டாம், சங்க இலக்கியம் வேண்டாம் என்று சொல்கிற நிலைதானே இருக்கிறது!

இதைப்பற்றி ஷெல்டன் பொல்லாக் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். செவ்வியல் இலக்கியக் கல்வி எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை அவர் அந்தக் கட்டுரையிலே விவாதித்திருக்கிறார். முதன்மையான சிக்கல் உயர்கல்வி பற்றிய அரசாங்கத்தின் கொள்கை. தற்போது தொழில் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. humanitiess எனப்படும் சமூகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. தத்துவம், உளவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஐஐடிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அமெரிக்காவிலும்கூட இதே நிலைதான் என்று ஷெல்டன் பொல்லாக் சுட்டிக்காட்டுகிறார். இது செவ்வியல் கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலுவடைந்துவரும் மதம் சார்ந்த மனோபாவம் பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளைப் புறக்கணிப்பதில் முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் வட இந்தியாவில் பெர்ஷியனும் அரபியும் படிக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அந்த மொழிகளில் இருக்கும் செவ்வியல் இலக்கிய வளம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை" என்று பொல்லாக் குறிப்பிடுகிறார். அது மறுக்க முடியாத உண்மை. இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள்கூட இந்த அம்சம் குறித்து அக்கறை காட்டியதில்லை.

"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிகழ்ந்த பிராமணரல்லாதார் எழுச்சி சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை இறுக்கமடையச் செய்துவிட்டது" என்றும் ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுகிறார். பெர்ஷியன், அரபி மொழிகள் குறித்து நடுநிலையான கருத்தைச் சொன்னவர் சமஸ்கிருதம் என வரும்போது பக்கச்சாய்வுடன் பேசுகிறார். இது அவரது தமிழகத் தொடர்பாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட மனச்சாய்வு எனக் கூறவேண்டும். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதரவாக காலனிய ஆட்சியாளர்களின் மனோபாவத்தை வடிவமைத்த சக்திகள்தான் இப்போது ஷெல்டன் பொல்லாக் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையையும் திரிபுபடச் செய்கிறார்கள்.

நாராயணமூர்த்தி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். " கடந்த அறுபது ஆண்டுகளாக உலக அளவில் தாக்கத்தை நிகழ்த்தும் விதமாக ஒரு கண்டுபிடிப்பைக்கூட இந்தியா முன்வைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிந்தனையையும் இந்தியா வெளியிடவில்லை" என்று கூறினார். அந்தக் கருத்து ஆங்கில ஊடகங்களிலே வட இந்தியாவைச் சேர்ந்தவர்களால் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதை விவாதிப்பதற்குக்கூட ஆள் இல்லை. இந்தக் கருத்தை மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்தஎந்தவொரு கருத்தையும் விவாதிக்கக்கூடிய நுண்ணுணர்வுமிக்க அறிவாளிகள் நம்மிடம் இல்லை.

தமிழ்ச் செம்மொழியாகிவிட்டது என்பதில் பெருமைகொள்கிற நாம் தமிழின் செவ்வியல் வளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எந்த அளவுக்குத் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறோம்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும்  தமிழ்த் துறைகள் இருக்கின்றன. கல்லூரிகள் பலவற்றிலும் தமிழ்த் துறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே தொல்காப்பியத்தைக் கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர்? செவ்வியல் இலக்கியப் பிரதிகளை சொல்லிக்கொடுக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாடத் திட்டங்களை வகுக்கும்போதே தொல்காப்பியம் வேண்டாம், சங்க இலக்கியம் வேண்டாம் என்று சொல்கிற நிலைதானே இருக்கிறது!

இதைப்பற்றி ஷெல்டன் பொல்லாக் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். செவ்வியல் இலக்கியக் கல்வி எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை அவர் அந்தக் கட்டுரையிலே விவாதித்திருக்கிறார். முதன்மையான சிக்கல் உயர்கல்வி பற்றிய அரசாங்கத்தின் கொள்கை. தற்போது தொழில் கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. humanitiess எனப்படும் சமூகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. தத்துவம், உளவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஐஐடிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அமெரிக்காவிலும்கூட இதே நிலைதான் என்று ஷெல்டன் பொல்லாக் சுட்டிக்காட்டுகிறார். இது செவ்வியல் கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலுவடைந்துவரும் மதம் சார்ந்த மனோபாவம் பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளைப் புறக்கணிப்பதில் முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் வட இந்தியாவில் பெர்ஷியனும் அரபியும் படிக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அந்த மொழிகளில் இருக்கும் செவ்வியல் இலக்கிய வளம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை" என்று பொல்லாக் குறிப்பிடுகிறார். அது மறுக்க முடியாத உண்மை. இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள்கூட இந்த அம்சம் குறித்து அக்கறை காட்டியதில்லை.

"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிகழ்ந்த பிராமணரல்லாதார் எழுச்சி சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை இறுக்கமடையச் செய்துவிட்டது" என்றும் ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுகிறார். பெர்ஷியன், அரபி மொழிகள் குறித்து நடுநிலையான கருத்தைச் சொன்னவர் சமஸ்கிருதம் என வரும்போது பக்கச்சாய்வுடன் பேசுகிறார். இது அவரது தமிழகத் தொடர்பாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட மனச்சாய்வு எனக் கூறவேண்டும். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதரவாக காலனிய ஆட்சியாளர்களின் மனோபாவத்தை வடிவமைத்த சக்திகள்தான் இப்போது ஷெல்டன் பொல்லாக் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையையும் திரிபுபடச் செய்கிறார்கள்.

காலனிய ஆட்சி காலத்து கேடுகளைப்போலவே இப்போது உருவாக்கப்படும் கருத்துத் திரிபுகளால் விளையும் கேடுகளும் ஆபத்தானவை. தமிழ்ச் சமூகம் குறித்தும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் குறித்தும் பிழையான கருத்தாக்கங்கள் அயல்நாட்டு அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை மறுத்து ஆங்கிலத்தில் நூல்களை ஆய்வுக் கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் நம்மிடையே இல்லை. இதுவொரு முக்கியமான சிக்கல்.

தமிழ் அறிஞர்கள் உடனடியாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய இரண்டு ஆய்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மானுடவியல் ஆய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் லூய் துய்மோன் என்ற அறிஞர். அவர் இந்திய சாதி அமைப்பைப் பற்றி எழுதிய Homo Hierarchicus என்ற நூல் அதற்குப் பின்னர் வந்த அத்தனை சமூகவியல் ஆய்வுகளின்மீதும் மிகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது. சாதியின் தோற்றம் குறித்து அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளை நமது மானுடவியல் ஆய்வாளர்கள் விவாதிக்கவேண்டும்.

துய்மோன் எழுதிய நூலின் தாக்கத்தால் தமிழ்ச் செவ்வியல் பிரதிகளை ஆய்வுசெய்த ஜார்ஜ் ஹார்ட் எழுதிய ஆய்வுக் கட்டுரை Early evidence of caste in south india என்பதாகும். சங்க காலத்திலேயே தமிழர்கள் சாதியப் படிநிலைகளோடுதான் வாழ்ந்தார்கள், இப்போது செய்வதைப்போலவே தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என அதில் அவர் வாதிடுகிறார். அதற்கு ஆதாரமாக சங்க இலக்கியப் பிரதிகளைக் காட்டுகிறார். இந்த ஆய்வுக் கட்டுரையும் விவாதிக்கப்படவேண்டும். இவற்றை விவாதித்து ஆங்கிலத்தில் நூல்களை , கட்டுரைகளை எழுதவேண்டும்.

தமிழில் ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இத்தகைய நூல்களை நமது பேராசிரியர்கள் அறிமுகம் செய்கிறார்களா? அவர்களே இவற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் மாணவர்களுக்கு எப்படி அறிமுகம் செய்வார்கள்? தற்போது பல்கலைக்கழக மானியக் குழு புதிதாக ஒரு விதியை அறிமுகம் செய்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வு செய்பவர்கள் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையாவது ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்கவேண்டும், அவற்றை ஆய்வேட்டுடன் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. மாணவர்கள் தரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு இந்த விதி உதவும். ஆனால் இந்த விதியைக்கூட பொருளீட்டும் வழியாக சிலர் மாற்றிவிட்டனர். ஆய்வு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கென்றே சில பத்திரிகைகள் ஐஎஸ்பிஎன் எண்ணோடு முளைத்திருக்கின்றன. அவற்றில் கட்டுரை வெளியிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்படுகிறேன்.

இன்றைக்கு தமிழில் ஆய்வுசெய்யும் ஒரு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை வெளியிடவேண்டுமென்றால் அதற்கு ஆய்விதழ்கள் இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகமோ, செம்மொழித் தமிழாய்வு நிறுவனமோ ஆய்விதழ் எதையும் நடத்தவில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடும் பத்திரிகையும் காலத்தில் வருவதில்லை. தமிழில் peer reviewed journal எனக் கூறத்தக்க ஆய்விதழ் ஒன்றுகூட நமது நிறுவனங்களால் நடத்தப்படவில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

தமிழறிஞர்கள் பலதுறை சார்ந்த அறிவோடுத் திகழ்ந்தார்கள்; பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சோழர் கால வரலாற்றுக்கு இன்றைக்கும்கூட நம்பகமானதொரு வரலாற்று நூலாக இருப்பது சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய நூல்தான். அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர்தான். சதாசிவப் பண்டாரத்தாரின் மரபுத் தொடர்ச்சி எங்கே எப்படி அறுபட்டது என்பதை நாம் சிதிக்கவேண்டும். அதை சரிசெய்யவேண்டும். அதற்கு பலதுறை சார்ந்த அறிவும் பன்மொழிப் புலமையும் நமது தமிழ்ப் பேராசிரியர்களுக்கு இருக்கவேண்டும்.

philology என்னும் மொழிநூல் அறிவின் தேவையை பொல்லாக் வலியுறுத்துகிறார். சங்க இலக்கியங்களை மட்டுமின்றி சமகால இலக்கியப் பிரதிகளைப் புரிந்துகொள்வதற்கும் அது அவசியம். ஒரு பிரதியில் படைப்பாளி தெரிவிக்க விரும்பும் பொருள், மரபு வழங்குகிற பொருள், வாசகன் உருவாக்கிக்கொள்ளும் பொருள் ஆகிய மூன்றுக்குமான சமன்பாட்டை மொழிநூல் அறிவு வலியுறுத்துகிறது. மொழியியல் என்பதும் மொழிநூல் அறிவு என்பதும் ஒன்று அல்ல. இதை நமது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கற்றுத்தரவேண்டும்.

அகராதியியலில் தேர்ச்சிகொண்டோர் இப்போது அருகிவிட்டனர். நிதி நல்கைகளைப்பெற்று தமிழில் வட்டார வழக்குச் சொல் அகராதிகளை நமது எழுத்தாளர்கள் உருவாக்கியுள்ளனர். கி. ரா, பெருமாள் முருகண் உள்ளிட்ட பலபேர் அதைச் செய்திருக்கின்றனர். அகராதியியலின் இலக்கணப்படிப் பார்த்தால் அவை ஒன்றுகூட அகராதி என்று சொல்வதற்குத் தகுதியானதில்லை என்று அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். முறையான அகராதியியலை தமிழ்த்துறை மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

க்ரியா என்ற தனியார் நிறுவனம் தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழ்ப் பேரகராதியின் புதிய பதிப்பைக் கொண்டுவருவதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பணியைக்கூட இன்று செய்ய முடியவில்லை.

தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி அக்கறை காட்டுகிற நாம் எந்தவொரு மொழியையும் பகையாகப் பார்க்கக்கூடாது. வெறுப்போடு அணுகக்கூடாது. தமிழ் மட்டுமே தெரிந்தால் தமிழின் சிறப்பு புரியாது. இங்கே வந்திருக்கும் பேராசிரியர் மா.லெ.தங்கப்பா சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். ஜார்ஜ் ஹார்ட்டின் மொழிபெயர்ப்பைவிட தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. இதுவரை வெளிவந்திருக்கும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறன் நமது ஆய்வு மாணவர்களுக்கு இருக்கவேண்டும். தங்கப்பாவின் சிறப்பு அப்போதுதான் தெரியும். அவரது மொழிபெயர்ப்புகளைப்பற்றி பேராசிரியர் மருதநாயகம் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை தவிர வேறு ஒன்றுகூட எழுதப்படவில்லை. நம்மிடம் இருக்கும் அறிஞர்களை அடையாளம் காணக்கூட நம்மால் முடியவில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்க வேண்டாம், அரசியலாளர்கள் செய்வார்கள் என நம்பவேண்டாம். அறிவுத் தளத்தில் முன்னெடுக்கவேண்டிய பணிகளை நாமே நம்மால் இயன்ற அளவில் செய்வோம். அரசியல் தளத்தில் குரல் கொடுத்தால் அதற்கு ஆதரவு இருக்கும், பாராட்டு கிடைக்கும். ஆனால் அறிவுத் தளத்தில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு இருக்காது. அரசியல் தளத்தில் பணியாற்ற கூட்டம் தேவை, ஆனால் அறிவுத் தளத்தில் செய்யும் பணிகளைத் தனியேதான் செய்யவேண்டும். அதிகபட்சம் ஒருசில நண்பர்கள் இருந்தால் போதும். நல்வாய்ப்பாக பேராசிரியர் அறவாணன் அவர்களின் அறிவுத்துறை வாரிசுகளாக முனைவர் சிலம்பு செல்வராஜ், முனைவர் அறவேந்தன் முதலான நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். உங்களால் நல்ல தாக்கத்தை தமிழ் ஆய்வுலகில் ஏற்படுத்த முடியும்.

நான் ஒரு தமிழ் அறிஞனல்ல, ஒரு தமிழ் மாணவன். மணற்கேணி என்ற ஆய்விதழை நடத்துவதன் வழியாக என்னாலியன்ற தமிழ்ப்பணியைச் செய்துவருகிறேன். இங்கே குழுமியிருக்கும் தமிழறிஞர்கள் நினைத்தால் நிச்சயம் வியத்தகு சாதனைகளைப் புரியமுடியும். இந்த வைர விழா நிகழ்வு அத்தகைய முன்னெடுப்புக்கான துவக்கமாக அமைந்தால் அதுவே திரு அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் மிகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்தாக அமையும் எனக் கருதுகிறேன். நன்றி வணக்கம் 

Friday, August 7, 2015

மது விலக்கு : தமிழக பா.ஜ.க வுக்கு ஒரு வேண்டுகோள்!

திரு சசிபெருமாள் அவர்களது இறுதி நிகழ்ச்சியில் அவருக்கு அஞ்சலி செலுத்தி நான் ஆற்றிய இரங்கலுரையின் சுருக்கம் : 
==============
மது ஒழிப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருக்கிறார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சரை வீட்டில் போய் சந்தித்திருக்கிறார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட காலத்திலும் மதுக் கடைகளை அனுமதிக்காத மாநிலம் குஜராத். காந்திக்கு மரியாதை செய்வதற்காக அவர் பிறந்த குஜராத்தில் மதுக்கடைகளைத் திறப்பதில்லை. மது விற்பனையால் வரும் வருவாய் இல்லாமலேயே குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லித்தான் மோடி தேர்தலில் வாக்கு கேட்டார் இன்று பிரதமராகவும் வந்துவிட்டார். 

தமிழ்நாட்டின் முதன்மையான சமூக அரசியல் பிரச்சனையாக மதுவிலக்கு மாறியிருக்கிறது என்பதை பிரதமரிடம் இன்று யாராவது கூறியிருக்கலாம். அதைக் கேட்டிருந்தால் மது விற்பனையால் வரும் வருமானம் இல்லாமலேயே குஜராத் மாநிலத்தில் தான் எப்படி ஆட்சி செய்தேன் என்பதை தமிழக முதல்வரிடத்தில் அவர் கூறியிருக்கலாம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்றும் வாக்களித்திருக்கலாம். ஏனென்றால் மதுவிலக்கு என்பது மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பிரச்சனை. 

அரசியலமைப்புச் சட்டத்திலேயே மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கினார்கள். 

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணையங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டவேண்டும் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன. 

இப்போது தமிழ்நாட்டிலிருக்கும் பாஜக மதுக்கடைகளை மூடவேண்டும் எனப் போராடி வருகிறது. அதை வரவேற்கிறோம். அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை அவர்கள் உணர்வுபூர்வமாக அதை வலியுறுத்துகிறார். இங்கே அமர்ந்திருக்கும் அய்யா இலக்கியச்செல்வரின் மகளாக இருப்பதால் மற்றவர்களைவிடக் கூடுதலான அக்கறை அவருக்கு இருக்கும். அய்யா சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த மேடையிலிருந்து ஒரு வேண்டுகோளை அவரிடம் வைக்கிறேன். நீங்கள் உங்கள் தலைமையிடம் எடுத்துச் சொல்லுங்கள், உங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 'மது ஒழிப்பை தேசியக் கொள்கையாக அறிவியுங்கள்! மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என அறிவியுங்கள்!' என பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அறிவிக்கவேண்டும். அது ஒன்றுதான் அய்யா சசிபெருமாள் அவர்களுக்குத் தமிழக அரசு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். 



Wednesday, August 5, 2015

தமிழ்நாட்டில் பெண்களுக்கு தனி கட்சி உருவாகுமா? - ரவிக்குமார்



பெண்கள் சமத்துவக் கட்சி ( Women's Equality Party ) என்ற பெயரில் பெண்கள் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு புதிய கட்சி இங்கிலாந்தில் துவக்கப்பட்டுள்ளது. 

* அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமமான பிரதிநிதித்துவம் 

* கல்வியில் சம வாய்ப்பு 

* சம ஊதியம்

* ஊடகங்களில் சமத்துவத்தோடு நடத்தப்படுதல் 

* குழந்தை வளர்ப்பில் சம பங்கேற்பு

* பெண்கள் மீதான அனைத்துவித வன்முறைகளுக்கும் முடிவுகட்டுதல் 

என்ற ஆறு நோக்கங்களை முன்வைத்து இந்தக் கட்சியைத் துவக்கியுள்ளனர். க்ரீன் பார்ட்டி எப்படி சுற்றுச்சூழல் என்னும் ஒற்றை இலக்கை முன்வைத்து நடத்தப்படுகிறதோ அதுபோல இந்தக் கட்சியும் பெண்களுக்கு சமத்துவம் என்ற ஒற்றை செயல்திட்டத்தோடு ( single point agenda) செயல்படும் என இக்கட்சியைத் துவக்கியுள்ள சேண்டி டோக்ஸ்விக் ( Sandi Toksvig) கூறியிருக்கிறார். 

கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருசில நாட்களிலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உருவாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் லண்டன் மேயர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக சேண்டி டோக்ஸ்விக் அறிவித்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் இப்படியொரு கட்சியை ஆரம்பியுங்கள் என ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் சிவகாமி ஐஏஎஸ் அவர்களிடம் கூறினேன். அப்போது அவர் திருச்சியில் பெண்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் நான் கூறியபோது அதை வேடிக்கையாகச் சொல்கிறேன் என அவர் அலட்சியப்படுத்திவிட்டார். திருச்சி மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் திரண்டனர். அந்த எழுச்சியை அவரால் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அதிலிருந்து விலகி இப்போது ஒரு சிறிய அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். 

இடதுசாரி கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகள் மட்டுமே பெண்களுக்கான சமத்துவத்தை வென்றெடுக்கப் போதுமானவை அல்ல. அவர்களுக்கென சுயேச்சையான அமைப்புகள் இருந்தால் இன்னும் அழுத்தமாக அவர்களது பிரச்சனைகளை முன்வைக்க முடியும். அப்படியொரு கட்சி உருவானால் பாலின சமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட கட்சிகள் அதை ஆதரிக்கவேண்டும். 

இன்றைய சூழலில் வசந்திதேவி. சிவகாமி, சுதா ராமலிங்கம், ஓவியா, அஜிதா உள்ளிட்ட சமூக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் ஒருங்கிணைந்து பெண்களுக்கான கட்சியைத் துவக்கலாம். இடதுசாரிக் கட்சிகளின் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் அதில் இணைந்தால் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Monday, August 3, 2015

Prohibition demand in Tamil Nadu: what about Puducherry?

By D. Ravikumar

Tamil Nadu’s long-standing demand for prohibition has finally achieved pre-dominance in the state’s political landscape. The death of prohibition activist Sasi Perumal has made it even more so – protests have erupted in various parts of the state. 

Kalingappatti, a small hamlet in the southern part of the state has witnessed a bloody confrontation with the police; liquor shops have been ransacked by protesters across the state; several parties such as the MDMK, VCK, MMK have called for a statewide bandh on August 4 which is being supported by traders’ associations and political parties such as the Congress and the DMDK.

None of this however, has touched the neighbouring union territory of Puducherry, even though the major political parties functioning in Puducherry, except for the ruling NR Congress, are offshoots of those in Tamil Nadu.

Prohibition crusaders like the PMK have never demanded prohibition in Puducherry. It is only the Left parties and the VCK who have made this demand in the union territory. 

Impact of alcoholism

There has been no serious research on the impact of alcoholism on public health in Puducherry, even though there may be a direct link between the high suicide rate and alcoholism. Puducherry has the highest suicide rate in the country - 40.4, which is three times higher than the national average of 10 (National Crime Record Bureau data, 2014). In 2014, 644 persons had committed suicide in the union territory. 

Alcohol economy

Puducherry has an alcohol economy: it is dependent on liquor sales. According to the Puducherry government, a large portion of the union territory’s revenue comes from the excise department. This has been true since the time of French colonization. One of the first distilleries in the union territory – Ariyankuppam – was established by the government itself over 100 years ago to produce arrack.

Today, the state-owned PAPSCO, PASIC and Amudhasurabi run 40 retail outlets, but almost all of the Indian Made Foreign Liquor, arrack and toddy shops are owned by private parties. Even though the economy of Puducherry depends to a large extent on the income accruing from duties on alcoholic beverages, the UT government has never tried to nationalize the liquor trade.

The reluctance of Puducherry’s political parties is demanding prohibition in the union territory is hardly surprising given that most liquor shops are run directly or indirectly by local politicians.

The UT government annually earns around Rs 100 crore through licences granted to 130 arrack shops, 109 toddy shops and 417 IMFL outlets.

Excise revenue from liquor sales in 2014 was Rs 375.03 crore and the government’s target for 2015 is Rs 560 crore, but when per capita consumption is taken into consideration, this figure is rather low. This low revenue accruing to the government is the direct result of the trade being in the hands of private players, who have benefited from the liquor policy of the UT government.

It is high time prohibition for Puducherry is discussed. People are anxious to know what the Congress, DMK and BJP is on this demand.

(The writer is the General Secretary of Viduthalai Chiruthaigal Katchi, a political party in Tamil Nadu)

- See more at: http://www.thenewsminute.com/article/prohibition-demand-tamil-nadu-what-about-puducherry-32862#sthash.MItj4XPb.dpuf

Sunday, August 2, 2015

புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லையா ?


தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது. ஆளும் கட்சியைத் தவிர பிற கட்சிகள் யாவும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் அண்டையிலிருக்கும் புதுச்சேரியில் இந்தக் கோரிக்கை இன்னும் வலுவாக எழவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம், ஐக்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதலான ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இதைப்பற்றிப் பேசிவருகின்றன. 

கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலமுறை மதுவிலக்கு நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மதுவிலக்கு குறித்த பேச்சுகூட எழுவதில்லை.   புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தினர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் சாராய ஆலையைத் திறந்து சாராயம் உற்பத்தி செய்துள்ளனர். 

" புதுச்சேரியில் தற்போது 654 மதுக்கடைகள் இருக்கின்றன. 130 சாராயக் கடைகளும் 129 கள்ளுக்கடைகளும்  395 IMFL மதுக்கடைகளும் உள்ளன. 1700 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற விகிதத்தில் மதுக்கடைகள் செயல்படுகின்றன" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் அதிக அளவில் மது அருந்தப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகப் புதுச்சேரி உள்ளது. 

மதுப் பழக்கத்துக்கும் தற்கொலைக்கும் உள்ள தொடர்பைப் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தற்கொலைகள் நிகழும் பகுதியாக புதுச்சேரி இருக்கிறது. தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாக புதுச்சேரியில் தற்கொலைகள் நடக்கின்றன என NCRB புள்ளிவிவரம் கூறுகிறது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 644 தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கும் புதுச்சேரியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மதுக்கடைகளுக்கும் நேரடியான தொடர்பிருப்பதை எவரும் மறுக்க முடியாது. 

புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதற்காக மட்டுமின்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும்கூட புதுச்சேரியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.