ஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர்,
'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். நீங்கள் ஒரு வாக்குறுதி தரவேண்டும்' எனக் கேட்டாராம். குழந்தைக்காக எதையும் செய்ய சித்தமாக இருந்த அவர்கள் ' நீங்கள் என்ன செய்யச்சொன்னாலும் செய்கிறோம்’ என்று கூறினார்களாம். ‘ குழந்தை பிறந்ததும் ஒருமுறை அந்தக் குழந்தையின் மலத்தை நீங்கள் உண்ணவேண்டும்’ என நிபந்தனை விதித்தாராம். அவர்களும் சம்மதித்தார்களாம்.
அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷத்தில் திளைத்த அவர்களுக்கு இறைவனுக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவிலிருந்தாலும் மலத்தை எப்படி சாப்பிடுவது என்ற தயக்கம். வரம் வாங்கி பெற்றபிள்ளையானாலும் மலம் மலம் தானே! ஒருநாள் அவர்களது கனவில் வந்த இறைவன் அவர்கள் தந்த வாக்குறுதியை நினைவுபடுத்தினாராம்.
அந்தத் தம்பதியினர், “குழந்தை வேண்டும் என்பதால் அந்த நிபந்தனைக்கு சம்மதித்தோம். பெற்ற பிள்ளைதான் என்றாலும் மலத்தை எப்படி சாப்பிடுவது? இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் “ என்று கெஞ்சினார்களாம்.
“ சரி ஒரு பரிகாரம் சொல்கிறேன். நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஊரில் எவன் வட்டிக்குவிட்டு சம்பாதிக்கிறானோ அவனது வீட்டுக்குச் சென்று அந்த வீட்டின் நிழலில் அமர்ந்து அந்த உணவை சாப்பிடுங்கள். அது மலத்தை சாப்பிடுவதற்கு சமம்தான்” என்று கூறினாராம் இறைவன்.
எனது ஊரான கொள்ளிடத்தில் நியூ ஜவுளி ஸ்டோர் என்ற துணிக்கடை இருந்தது. 1970 களின் முற்பகுதியில் துணி எடுக்க என் அப்பா அங்கு என்னை அழைத்துச்செல்வார். அதன் உரிமையாளர் பிஏ படித்தவர். கல்லாவுக்கு அருகில் குர்ஆன் உட்பட பல புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். சிறுவனாக இருந்த என்னை அருகில் உட்காரச்சொல்லி அவர் எனக்குக்கூறிய நீதிக்கதைதான் இது. இப்படி பல கதைகளை அவர் சொல்வார்.
நான் வங்கியில் வேலையில் சேர்ந்து பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப்போனேன். நான் பணிபுரிந்த சிண்டிகேட் வங்கியில் பிக்மி டெபாசிட் என தினசரி சேமிப்புத் திட்டம் ஒன்று இருந்தது. அதில் சேமித்து அந்த கணக்கு முதிர்ந்ததும் வட்டியோடு சேமிப்புத் தொகை தரப்படும். முஸ்லீம் வர்த்தகர்கள் சிலர் அந்தக் கணக்கு வைத்திருந்தனர். அவர்கள் வட்டி வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். வட்டி வாங்குவது ஹராம் என்று
சொல்வார்கள். அப்படி கூறுகிற பலர் இப்போதும் உள்ளனர்.
அந்தமாதிரியான சமூக மதிப்பீடு எல்லோருக்கும் இருந்திருந்தால் நெல்லையில் நடந்தது போன்ற கொடுமை நடந்திருக்காது.
கந்து வட்டி வலையில் ஏழைகள் ஏன் சிக்குகிறார்கள்? மணமதிப்பு அழிப்பு , GST இரண்டும் சிறு தொழில்களை அழித்து வேலை வாய்ப்புகளே இல்லை என்றாக்கிவிட்டது. விவசாயம் நசிந்துவிட்டது. கிராமப்புறங்களில், சிறு நகரங்களில்
வரலாறு காணாத வறுமை.
தான் வாழ்வதற்காக மனிதனையே சாப்பிடலாம் என நினப்பவர்கள் கந்துவட்டி என்னும் மலத்தை சாப்பிடத் தயங்கவா போகிறார்கள்? கந்து வட்டிக்காரர்களை இப்போது நீதிக்கதைகளால் திருத்த முடியாது. கடுமையான சட்டங்களும் அவற்றை நிறைவேற்றும் துணிவுகொண்ட அரசும்தான் ஏதாவது செய்யவேண்டும்.