Saturday, January 20, 2018

இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா? - ரவிக்குமார்



“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களைப் பயன்படுத்தியே வகுப்புவாத செயல்திட்டத்தை நிறைவேற்றிவிட முற்பட்டுள்ள மோடி அரசு நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி ஹஜ் மானியத்தை ரத்து செய்தது. இப்போது அதன் அடுத்த தாக்குதல் தலித் மக்களை நோக்கியதாக இருக்கிறது.

இதே போன்ற கோரிக்கை முன்னர் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்டபோது மண்டல் வழக்கு தீர்ப்பையும், சின்னையா வழக்கு தீர்ப்பையும் சுட்டிக்காட்டி அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் தனது பிரமாண பத்திரத்தில் ‘ கிரீமி லேயர் கோட்பாடு’ எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்குப் பொருந்தாது என்பதை விளக்கிக் கூறியிருந்தது.

ஓ.பி.சுக்லா என்பவர் இதே கோரிக்கையை முன்வைத்து 2011 ல் வழக்கு தொடுத்தார். அதில் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி கலிஃபுல்லா, கோபால கவுடா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு “ இதில் பாராளுமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும்” எனக் கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இதுவரை எந்தவொரு துறையிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது ஏன் ? இட ஒதுக்கீட்டைத் தடுப்பவர்கள் யார்? எனக் கேட்டு உச்சநீதிமன்றம் ஏன் ஒரு ஆணையத்தை அமைக்ககூடாது?

நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அப்பட்டமான தலித் விரோதக் கருத்து ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ் சி / எஸ்டி இட ஒதுக்கீட்டை ஒருசிலரே அனுபவிப்பதால் மற்றவர்களெல்லாம் நக்ஸலைட்டாக மாறிவிடுகிறார்களாம். அதற்கு இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கும் எஸ்சி / எஸ்டிகள்தான் காரணமாம்.

இந்தக் கூற்றில் உள்ள ஆபத்தான கருத்தை கவனியுங்கள் ‘ அவநம்பிக்கையடைந்த எஸ்சி / எஸ்டி மக்கள்தான் இந்தியாவில் நக்ஸலைட்டுகளாக உள்ளனர்.  அவர்கள் நக்ஸலைட்டுகளாக மாறுவதற்கும் எஸ்சி/ எஸ்டி களே காரணம்’ என்பதுதான் இந்த மனுவின் முக்கிய அம்சம்.

இப்போது தலித் மக்களின் முன்னால் இருக்கும் ஒரே வழி நாங்களும் கிரீமி லேயரை ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம் எனக் கூறுவதுதான். இல்லாவிட்டால் உங்களால்தான் நக்ஸலைட்டுகள் உருவாகிறார்கள் என்ற பயங்கரவாதி பட்டம் தலித்துகள்மீது சுமத்தப்படும்.

அறிமுக நிலையிலேயே தள்ளுபடி செய்யவேண்டிய இந்த மனுவை  தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு  ஏற்றுக்கொண்டிருப்பதே நமக்கு ஐயத்தை எழுப்புகிறது. இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா என்பது மத்திய அரசு தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தெரிந்துவிடும்.

இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும்  கோரிக்கைகளை வகுப்புவாதிகள் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இட ஒதுக்கீட்டை தனியார் துறையிலும் விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்காமல் தலித் இயக்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் ஏனோ மெத்தனமாக உள்ளன.