சிறிய வேன் ஒன்றை மாற்றி அமைத்து உருவாக்கப்பட்டிருந்த கிளினிக் அது. ஒரு காலத்தில் வெண்ணிறமாக இருந்த அதன் சுவர்கள் இப்போது பழுப்பாக, தண்ணீர் ஒழுகிக் காணப்பட்டன. டாக்டரின் மேசையில் பாண்டோல் விளம்பரக் காலண்டர் ஒன்றும், ஒரு மேசை விளக்கும், ஒரு தொலைபேசியும் மட்டுந்தான் இருந்தன. புதைகுழி ஒன்றிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கைகளைப்போல படுக்கையின் கால்கள் தரையிலிருந்து நீட்டிக்கொண்டிருந்தன. படுக்கை விரிப்புகளிலிருந்து மட்கிப்போன நாற்றம் அடித்தது. படுக்கைக்கு மேலே ஒரு கடிகாரம் மாட்டப்பட்டிருந்தது. டிக் டாக் டிக் டாக். நொடியைக் காட்டும் நீளமான கை பாம்பைப்போல வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மலிஹாவும் அவளது தோழியும் ’வெய்ட்டிங் ரூமாக’ பயன்பட்டுவந்த இடத்தில் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.
ஒருமணி நேரம் தாமதமாகத்தான் அந்த பெண் டாக்டர் வந்தார். அதற்காக எந்தவொரு வருத்தமும் அவரிடம் தெரியவில்லை. ஹென்னா போட்டு ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டிருந்த அவரது தலைமுடி ஒழுங்காக வாரப்படாமலிருந்தது. அவர் தனது கைகளை அவர்களை நோக்கி ஆட்டினார். நீளமான நகங்களைக்கொண்ட கைகள், சிவப்பு நகச்சாயம் உரிந்திருந்தது, தனது ராச்சியத்தில் ஒரு மகாராணியைப்போல அவர் அமர்ந்திருந்தார், அந்த இருக்கைக்கு முன்னால் வருமாறு அவர்களை அழைத்தார்.
” உனக்குத் திருமணம் ஆயிடுச்சா? “ டாக்டர் கேட்டார்.
ஓ யெஸ் ! தனது விரலில் இறுக்கமாக அணிந்திருந்த திருமண மோதிரத்தை டாக்டரிடம் காட்டியபடி மலிஹா பதில் சொன்னாள்.
“ திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது?”
“இரண்டு வருடங்கள் “
“உன் கணவர் எங்கே ?”
“வேலைக்குப் போயிருக்கிறார்”
“நீ இங்கே வந்திருப்பது அவருக்குத் தெரியுமா?”
” ம் “
“ உன்னோடு வந்திருப்பது உன் நாத்தனாரா?”
“ ம்ஹூம் ,இல்லை”
“ஏன் அவர் வரவில்லை?”
“எனக்கு நாத்தனார் யாரும் இல்லை”
“ அப்படீன்னா உன் மாமியார் எங்கே? உனக்கு மாமியார் இருந்துதானே ஆகணும்?”
“எனக்கு மாமியாரும் இல்லை”
“செத்துப்போய்விட்டார்” மலிஹாவின் தோழி இடைமறித்துச் சொன்னாள், “ அவர் செத்துப்போய்விட்டார்”
“ என்னுடைய ஃபீஸை முதலிலேயே கொடுத்துவிடவேண்டும் தெரியுமில்லையா? டாக்டர் கேட்டார்.
”தெரியும்”
“எவ்வளவு நேரம் ஆகும்?” மலிஹா கேட்டாள்.
“ஐந்தே நிமிடங்கள்தான்”
“ஐந்து நிமிடம்தான் என்றால் சமாளித்துவிடலாம்” மலிஹா தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
வேலை தொடங்கியது. மலிஹாவின் கால்கள் விரிக்கப்பட்டன. அவளது தலைக்கருகில் நின்றபடி அழுக்கடைந்த உபகரணங்களை தாதி எடுத்து டாகடரிடம் தந்துகொண்டிருந்தாள்.மலிஹாவின் தோழி அவலது கைகளைப் பிடித்துக்கொண்டாள்.பின்னாளில் மலிஹாவின் நகங்கள் அழுந்திய இடங்களில் சிவப்புத் தடயங்கள் இருந்ததை மலிஹா பார்த்தாள் என்றபோதிலும் அவளது தோழி அதுபற்றி ஒருநாளும் புகார் சொன்னதில்லை.
மயக்க மருந்து எதுவும் இல்லை. அந்த இடுக்கி மலிஹாவை இரண்டாகப் பிளந்தது. சக்ஷன் உபகரணம் அவளுக்கு உள்ளே இருந்தவற்றையெல்லாம் உறிஞ்சி எடுத்தது. அவள் தனது சிறு பிராயத்தை நினைத்துக்கொண்டாள். முட்டியில் பட்ட சிராய்ப்பில் அயோடினை வைத்தது நினைவுக்கு வந்தது. எரிச்சல் தரும் குமட்டலெடுக்க வைக்கும் கரைசலுக்குள் நழுவவிடப்பட்ட உடம்பு முழுக்க சிராய்ப்பாக மாறிவிட்ட ஒரு பிண்டமாகத் தன்னை உணர்ந்தாள்.
மலிஹா அந்த கடிகாரத்தை வெறித்தாள். ஐந்து நிமிடம் ஆகி நெடுநேரம் கடந்திருந்தது. அவள் ஒரு விரல் ந்நிளமே இருந்த அந்த உயிரியைப்பார்த்து ஒரு நிமிடத்தில் லட்சம் தரம் ’சாரி” சொல்லிக்கொண்டாள் .அவள் கத்துகிறாளா என்று பார்ப்பதுபோல் டாக்டர் அவளைக் கிள்ளிப் பார்த்தார். அவளது கால்களில் அறைந்தார்.
”ஷட் அப்” மலிஹாவின் கால்களுக்கிடையிலிருந்து டாக்டர் சொன்னார், “ஷட் அப்”
அதற்கு முக்கால் மணிநேரம் பிடித்தது. ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆகிவிடுமோ அல்லது ரத்தப் பெருக்கு நிற்காமல் செத்துப்போய்விடுவோமோ என்று பயந்தபடி மலிஹா வீட்டுக்குப் புறப்பட்டாள். எது நடந்தாலும் அதை வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று அஞ்சினாள். இப்படியொரு காரியத்தை எந்தவொரு நல்ல பெண்ணும் செய்யமாட்டாள். எல்லாம் முடிந்தது மலிஹா தனது விரலில் அணிந்திருந்த தனது தோழியின் திருமண மோதிரத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள்.
பத்து வருடங்கள் ஓடிவிட்டன. மலிஹாவின் சகோதரி .திரும்ணம் ஆனவள். ஏழு குழந்தைகள். அவளுக்குப் பிடித்தமான நம்பர் ஏழுதான். மறுபடியும் கர்ப்பமாகிவிட்டாள். அவளுக்கு ஆப்பரேஷன் செய்வதென முடிவு செய்யப்பட்டது. மலிஹாவும் அவளது அம்மாவும் அவளை ஒரு கிளினிக்குக்கு அழைத்துச் சென்றனர். பளபளப்பான பச்சைநிற வராந்தாவும் வெள்ளை மார்பிளும் பதிக்கப்பட்ட கிளினிக். ஒரு விஐபி அறையில் வசதிக்கேற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதிகொண்ட ஒரு படுக்கையில் அவள் படுக்க வைக்கப்பட்டாள்.
அழகான தலைமுடியை கொண்டையாகப் போட்டிருந்த டாக்டர் வந்தார்.
” குட் மார்னிங்! பேஷ்ண்ட் இப்போ எப்படி இருக்கிறாள்?” டாக்டர் கேட்டார்.
“ஃபைன்” என்றாள் மலிஹாவின் சகோதரி. அவள் விரலில் அணிந்திருந்த வைரம் பதித்த திருமண மோதிரம் சூரிய கிரணங்களோடு போட்டிப் போட்டுக்கொண்டிருந்தது.
” சீக்கிரம் முடியவேண்டும் என்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றாள் அம்மா.
பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. அனஸ்தீஸியா கொடுத்திருந்ததில் மலிஹாவின் சகோதரி கொஞ்சம் சோர்வாயிருந்தாள் ஆனால் ஒரு ரோஜாப்பூவைப் போல அவள் மணந்துகொண்டிருந்தாள்.
திருமணம் செய்யாத அம்மாக்களை சமூகம் பாடாய்ப்படுத்துகிறது ஆனால் திருமணம் செய்துகொண்டிருந்தால் அப்பர்ஷனை கருத்தடைக்கான வழிமுறையாகப் பார்க்கிறது. அதற்கு சம்மதிக்கிறது.
( மணற்கேணி ௧௦ ஆவது இதழின் சிறப்புப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளர் சோனியா கமாலின் சிறுகதை . தமிழில் :ரவிக்குமார்
No comments:
Post a Comment