Thursday, January 17, 2013

காலம் உறைந்த 'காலம்'




கனடாவிலிருந்து நண்பர் செல்வம் மிகவும் சிரமப்பட்டு நடத்திவரும் காலம் இதழ் சிறப்பிதழ் போல வெளியாகியிருக்கிறது. அதில் வெளியிடப்பட்டிருக்கும் அம்பையின் சிறுகதை கவனத்துக்குரியது. இந்திரா பார்த்தசாரதி தொகுத்து வெளியிட்ட ஆதவனின் சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருந்த கையோடு அம்பையின் அந்தச் சிறுகதையைப் படித்தேன். இரண்டும் ஒரு காலத்தில் எழுதப்பட்டது போன்ற பிரமை உண்டாயிற்று. அது எனது தனிப்பட்ட உணர்வாகவும் இருக்கலாம். 

அம்பையின்  கதை வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் உணர்வுகள் சிலவற்றை மிகவும் நுட்பமாகச் சொல்லியிருக்கிறது. கர்நாடக சங்கீதம் குறித்த அவரது  ஞானம் அதில் மேலும் ஒரு பரிமாணத்தைச் சேர்த்திருக்கிறது. எனினும் அதில் நாம் காண்பது நமது சம காலத்தையா என்ற கேள்வி எழுகிறது. 

மணற்கேணி இதழில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதையும்கூட காலத்தின் பின்னே பயணித்து எழுதப்பட்டதாகவே தெரிகிறது.அப்படி எழுதுவது தவறல்ல. ஆனால், அம்பை தனது சமகால அனுபவங்களை எழுதினால் இன்னும் பல விஷயங்கள் நமக்குத் தெரியவரும். அவரைப் போல பரந்த அனுபவம் கொண்ட எழுத்தாளர்கள் குறைவு என்பதால் இதைச் சொல்கிறேன். 

தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் இப்படித்தான் காலத்தின் பின்னே சென்று தமது படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவர்களில் பலர் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே சிறு , பெரு நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள் என்பது அதற்கொரு காரணமாக இருக்கலாம். அண்மைக்காலத்தில் கிராமங்களில் நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை அவர்களது படைப்புகளில் காண்பது அரிதாகவே இருக்கிறது.

காலம் இதழில் எஸ்.என்.நாகராசன் அவர்களின் நேர்காணல் ஓன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்கும்போது காலம் உறைந்துவிட்டதுபோன்ற உணர்வு. அவரை மகான் ஆக்கிப்  பார்க்கவேண்டும் என நேர்காணல் செய்தவர்கள் விரும்பி இருப்பார்கள் போலும் . அது அவர்களது உரிமை. புகைப்படத்தில் பார்க்கும்போது நாகராசன் ஆரோக்கியமாகத் தெரிகிறார் . இத்தகைய நேர்காணல்கள் மார்க்சியத்தைக் காலம்கடந்த தத்துவம் என்று உணரச்செய்கின்றன. 

மார்க்சியர்கள் என்று யாரைக் குறிப்பிடுவது ? மார்க்ஸ் எழுதிய நூல்களைப் படித்தவர்களையா ? அல்லது அவரது தத்துவத்தை தனது அணுகுமுறையின் அடிப்படையாகக் கொண்டவர்களையா ? நேர்காணல் எடுத்திருப்பவர் தமிழ்நாட்டில் நான்கு பேர்களை மார்க்சியர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கிற காரணத்தால் தனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அந்தப் பட்டியலில் பேராசிரியர் முத்துமோகனை அவர் சேர்த்திருக்கிறார். ( இதைவிடப் பெரிய விருது முத்துமொகனுக்கு  வேறென்ன இருக்கமுடியும் ) இன்னும் கொஞ்சம் கருணை வைத்து அந்தப் பட்டியலை நேர்கண்டவர்  நீட்டலாம். ஏனென்றால் இந்தப் பட்டியலை அதில் இடம்பெற்றிருப்பவர்களே கூட முழுமையானதென்று ஏற்கமாட்டார்கள். இத்தனை பெரிய தமிழ் நாட்டில் நாலே நாலு மார்க்சியர்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அது மார்க்சியத்துக்கும் அவமானம் அல்லவா!

No comments:

Post a Comment