Wednesday, January 30, 2013

விஸ்வரூபம்' பிரச்சனையை முன்வைத்து சில கேள்விகள் - ரவிக்குமார்




விஸ்வரூபம் திரைப்படம் குறித்த சர்ச்சை மேலும் தொடரும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் சென்னையின் சில பகுதிகளிலும் திரையரங்குகளின்மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியானபோதே உயர்நீதிமன்றம் மீண்டும் தடை விதிக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. இந்தத் தடை  இஸ்லாமியர்களுக்குத் தற்காலிக மகிழ்ச்சியைத் தரலாம்.ஆனால், பொதுஜன அபிப்ராயம் அவர்களுக்கு எதிராக வலுப்பெற்றுவருவதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இது அவர்களுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் உணரவேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்குவதென்று சில இஸ்லாமிய தலைவர்களோடு பேசி முடிவுசெய்திருப்பதாக கமலஹாசன் இப்போது அறிவித்திருக்கிறார். இப்படியொரு முடிவு எட்டப்படாவிட்டாலும்கூட தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் நீக்கப்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. திரையரங்குகளின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தடை விதிப்புக்கான காரணமாகக் காட்டி உயர்நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசு அப்படி தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்திருக்கிறோம் என்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனால் அங்கு தெரிவிக்கும் என நாம் நம்பலாம்.கூடங்குளம் போராட்டக்காரர்கள் இந்த அரசால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது இதற்கொரு சான்று.அதை இஸ்லாமிய சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.  

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து சில விஷயங்களை நாம் விவாதிக்கவேண்டும்: 

1. ஒரு திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கும்போது திரைப்படத் தணிக்கைத் துறையின் விதிமுறைகளை சென்சார் போர்டு உறுப்பினர்கள் நினைவில் கொள்கிறார்களா ? அந்த விதிமுறைகளைப் படித்துப் பார்த்தால் எழுபத்தைந்து சதவீத தமிழ்த் திரைப்படங்களில் வெட்டவேண்டிய காட்சிகள் இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது.வன்முறையைப் போற்றவோ நியாயப்படுத்தவோ கூடாது என்பது அதன் முதல் விதி. இந்த விதியை சரியாகக் கடைபிடித்திருந்தால் ரஜினி,விஜய்,அஜித் படம் ஒன்றில்கூட சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருக்கமுடியாது. நீதிக்காகத் தானே அந்தப் படங்களில் கதாநாயகர்கள் சண்டைபோடுகிறார்கள் என கூறப்படலாம். ஒரு மனித உடல் எந்த அளவுக்கு வன்முறையைத் தாங்கும் என்பதுகுறித்த புரிதலை பார்வையாளர்களிடம் முற்றாக அழிக்கும் விதமாக அந்த சண்டைக்காட்சிகள்  அமைந்திருக்கின்றன. அந்தக் காட்சிகளைப் பார்க்கிறவர்கள் ஒரு மனிதனை கட்டையால் அடிக்கவோ இரும்புக் கம்பியால தாக்கவோ கத்தியால் வெட்டவோ தயங்க மாட்டார்களில்லையா?

2.வன்முறைக் காட்சிகளில் குழந்தைகள் ஈடுபடுவதுபோலவோ,வன்முறைக்கு ஆளாவதுபோலவோ அவர்கள் அததகைய காட்சிகளைப் பார்ப்பதுபோலவோ திரைப்படங்களில் காட்டக்கூடாது. மாற்றுத் திறனாளிகளை கேலிசெய்வதுபோலவோ அவமதிப்பதுபோலவோ காட்டக்கூடாது என்பது மூன்றாவது விதி. நமது திரைப்படங்களில் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறதா? 

3.மத இன சமூக ரீதியில் ஒருவரைப் புண்படுத்தும் விதமான சொற்களோ காட்சிகளோ இடம்பெறக்கூடாது என்பது பன்னிரெண்டாவது விதி. தற்போதைய சர்ச்சை இந்த விதியின்கீழ் வரக்கூடியது. இஸ்லாமியர் குறித்த 'ஸ்டீரியோடைப்' படிமத்தை இந்தியத் திரைப்படங்கள் எப்படி மீண்டும் மீண்டும் பார்வையாளர்களின் மனங்களில் பாதிக்கின்றன  என்பதுபற்றி ஏராளமான ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அதைப்பற்றி திரைத் துறையினரோ தணிக்கைக் குழு உறுப்பினர்களோ எந்தவொரு அக்கறையும் காட்டுவதில்லையென்பது உண்மையில்லையா?  

4.இஸ்லாமியரைச் சித்திரிப்பது மட்டுமல்ல பெண்களைச் சித்திரிப்பதிலும் எந்தவொரு பொறுப்புணர்வும் திரைப்படத் துறையினருக்கு இருப்பதில்லை. இதைப்பற்றித்தான் மிக அதிகமான விதிகளை திரைப்படத் தணிக்கைத் துறை வகுத்திருக்கிறது. 
  • மனித உணர்வுகளைப் பாதிக்ககூடிய வக்கிரமான ஆபாசமான காட்சிகள் இடம்பெறக்கூடாது ( விதி 7)
  • கீழ்த்தரமான அர்த்தம் கொண்ட இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறக்கூடாது ( விதி 8) 
  • பெண்களை எந்தவகையிலும் இழிவுபடுத்தும் காட்சிகள் கூடாது ( விதி 9)
  • பெண்களைக் கற்பழிப்பது, கற்பழிக்க முயல்வது, மானபங்கப்படுத்துவது முதலான காட்சிகள் கூடாது. ஒருவேளை படத்தின் கதைக்கு அது முக்கியம் என்றால் மிகக்குறைந்த அளவில் இருக்கலாம், ஆனால் அதை விவரிப்பதாக அக்காட்சி அமையக்கூடாது ( விதி 10 )
  • *பாலியல் வக்கிரங்களை சித்திரிக்கும் காட்சிகள் கூடாது ( விதி 11)
- இப்படி  ஐந்து விதிகளை இதற்கென்றே தணிக்கைத் துறையினர் வகுத்திருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இந்த விதிகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா? 

5. திரைப்படங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகைகள் தேவைதானா என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். கேளிக்கை வரியில் விலக்கு அளிக்கப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத் துறைக்கு வழங்கப்படுவதைவிடவும் திரைப்படத் துறைக்கு ஆட்சியாளர்கள் முன்னுரிமை வழங்குவது ஏன்? 

6. மத்திய அரசு திரைப்படத்தை ஒரு கலைப்படைப்பாகப் பார்த்துதான் இந்த  தணிக்கை விதிகளை வகுத்திருக்கிறது. ஆனால் எல்லாத் திரைப்படங்களையும் நாம் கலைப் படைப்பு என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்க முடியுமா? நமது திரைப்படங்களில் பெரும்பாலானவை பண்டங்கள் என்ற வகைப்பாட்டுக்குள்தான் வரும். அவற்றை அந்த விதத்தில்தான் அணுகவேண்டும். அவற்றுக்குப் பிரச்சனை வந்தாலும் அந்த நிலையில் வைத்துத்தான் பரிசீலிக்கவேண்டும். அவற்றுக்குக் கலைப் படைப்பு என்ற மதிப்பைக் கோருவதோ அவற்றின் தயாரிப்பாளர்களையும், அவற்றில் பங்கேற்றவர்களையும் கலைஞர்கள் எனக் கருதவேண்டும் எனச் சொல்வதோ சரியானதுதானா? கமலஹாசனைப் பொருத்தவரை அவர் சினிமா என்ற ஊடகத்தை நன்கு அறிந்தவர். தான் நடிக்கும் படத்தை ஒரு கலைப் படைப்பாக மாற்றுவதற்கு இயன்றவரை முயற்சிப்பவர். அவரை ஒரு கலைஞர் என ஏற்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் அப்பட்டமான கமர்ஷியல் படங்களின் நான்காம்தரக் காட்சிகளில் நடிப்பவர்களையும் கலஹாசனுக்கு இணையாகக் கலைஞர் எனக் கருதுவது  சரியாக இருக்கமுடியுமா?

இப்படிப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால் இந்தக் கேள்விகளைப் புறக்கணித்துவிட்டு இந்தப் பிரச்சனையை கமலுக்கும் இஸ்லாமியர்களுக்குமான பிரச்சனையாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகவும் மட்டுமே நாம் சுருக்கிப் பார்க்கிறோம். 

விஸ்வரூபம் படப் பிரச்சனை இன்னும் சில நாட்களில் ஓய்ந்துவிடும்.ஆனால் அது சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நீண்டநாள் நீடித்திருக்கும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் நமது திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடுகளையும், திரைத்துறையினரின் பொறுப்புகளையும், எல்லாவற்றுக்கும் மேலாக திரைப்படங்கள் நம் மீது செலுத்தும் தாக்கத்தின் தனமையையும் விவாதிக்கவேண்டியது நமது கடமை.   

5 comments:

  1. //இந்தத் தடை இஸ்லாமியர்களுக்குத் தற்காலிக மகிழ்ச்சியைத் தரலாம்.ஆனால், பொதுஜன அபிப்ராயம் அவர்களுக்கு எதிராக வலுப்பெற்றுவருவதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இது அவர்களுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் உணரவேண்டும்.//

    //
    கூடங்குளம் போராட்டக்காரர்கள் இந்த அரசால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது இதற்கொரு சான்று.அதை இஸ்லாமிய சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
    //


    மிகத் தேவையான பொறுப்பான அறிவுரை. மனமார்ந்த பாராட்டுகள். அதோடு, நீங்கள் வைத்திருக்கும் கேள்விகள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவை. போட்டி போட்டுக் கொண்டு திரைத்துறையை ஒவ்வொருவரும் சீரழித்திருக்கிறார்கள். அவர்களின் மனசாட்சிக்கு இக்கேள்விகள் உரைக்க வேண்டும்.

    தமிழ் ஆசிரியரை நல்ல தமிழ் பேச வைத்து அவர் வாயில் பட்டாசு வெடிக்கும் காட்சிகள் கூட இங்கே நகைச்சுவை. தமிழாசிரியர்கள் கூட இதனைக் கண்டிப்பதில்லை. என்ன நடந்தாலும் "தமிழ் வாழ்க!".

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இஸ்லாமிய அமைப்பினரின் தற்போதைய நடவடிக்கை அவர்களை மேலும் தனிமைப்படுத்திவிடும். தணிக்கைத் துறை யின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க இந்த தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

      Delete
    2. Can u pls give link to censor rules preferably in tamil ?

      Delete
  2. //தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் நீக்கப்படும்// இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. Dam999 வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து:

    “The Supreme Court dismissed Mr Roy's petition saying, "Court cannot ignore the apprehension raised by the state and consider only individual rights. We cannot close our eyes to the objections of the state and decide the case purely on legal aspect. We have to respect the sentiments of the people"

    அன்புடன்
    மாலன்

    ReplyDelete
  3. அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.இந்த விஷயத்திலும் அதே வாதம் முன்வைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற மாநில அரசுக்கு இயலவில்லை என்று ஒப்புக்கொள்வதாகவே இருக்கும்.

    ReplyDelete