Thursday, July 18, 2013

தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களின் கருத்துகளும் சமூக நீதி அரசியலின் எல்லையும்


-  ரவிக்குமார் 


இந்தியாவின் தலைமை நீதிபதியாக திரு. சதாசிவம் அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்.சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக வருவது இதுவே முதல் முறை. இந்தியக் குடியரசுத் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்தமுறை வர முடியவில்லை; பிரதமராக இதுவரை ஒருமுறைகூட வர முடியவில்லை இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தமிழர் ஒருவர் வந்திருப்பது முக்கியமானதாயிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டின் அடிப்படையான பல பிரச்சனைகள் குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. காவிரி நதிநீர் பிரச்சனை; முல்லைப் பெரியாறு பிரச்சனை; கச்சத்தீவு பிரச்சனை என்பவை அவற்றுள் சில.இவை எல்லாவற்றையும்விட 69% இடஒதுக்கீடு வழக்கும் பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில்  உள்ளது.இந்த வழக்குகளில் இவரது பதவிக்காலத்தில் தீர்ப்புகள் வந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் இவர் ஓய்வுபெற ஒன்பது மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் இந்த வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வருமா எனத் தெரியவில்லை. இவற்றுக்கு அப்பால் தலைமை நீதிபதி என்னும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நீண்டகாலத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை முடிவுகளை அவர் எடுக்க முடியும்.அதற்கான அறிகுறிகள் அவரது பேச்சில் தென்படுகின்றன. அது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்னர் அளித்த பேட்டிகளில் சில கருத்துகளை வெளிப்படையாகவும் உறுதியாகவும் பேசியிருக்கிறார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களும், பெண்களும் உரிய அளவில் பங்கேற்க வழிசெய்யப்பட வேண்டுமென அவர் சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப தற்போதிருக்கும் நீதிபதிகள் நியமனம் குறித்த விதிகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முன்முடிவோடு இருக்கும் ஆங்கில ஊடகங்கள் இதை நிச்சயம் வரவேற்கப் போவதில்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் அதிலும் குறிப்பாக சமூகநீதிக்காக குரல்கொடுக்கும் கட்சிகளால் நடத்தப்படும் ஊடகங்களாவது இதை முக்கியத்துவம் தந்து விவாதித்திருக்கவேண்டும். நேற்றிரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் இது அலசப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்றவர்கள் போதிய தயாரிப்போடு வந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் சிலவற்றைப் பற்றி கூறிய செய்திகள் நமது நீதி அமைப்பில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டின என்றாலும் அந்த விவாதம் இன்னும் சீரியஸான விதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

நீதி அமைப்பில் நியாயமான பிரதிநிதித்துவம் ( Fair Representation)  என்பதற்கு அர்த்தம் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பது மட்டும் அல்ல. இட ஒதுக்கீடு என்பது நியாயமான பிரதிநிதித்துவத்துக்கு நாம் கண்டறிந்திருக்கும் ஒரு வழிமுறை.இட ஒதுக்கீடு என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேகூட நாம் நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்கமுடியும். நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை ஐந்து பெண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வர முடிந்திருக்கிறது.நமது மக்கள் தொகையில் பாதி அளவினராக இருக்கும் பெண்களின் நிலையே இதுவென்றால் தலித்துகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம். தலித் சமூகத்திலிருந்து ஒருவர் தலைமை நீதிபதியாகவே இருந்தாரே என்று கேட்கப்படலாம். குடியரசுத் தலைவராக ஒரு தலித் இருந்ததைப் போலத்தான் அது.அத்தகைய பொறுப்புகளுக்கு யார் வரமுடியும் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு அவர்கள் இருவருமே சான்றுகள்.தங்களை ஒருசார்பு கொண்டவர்கள் எனச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் தாம் நியாயமாகச் செய்யவேண்டியவற்றைக்கூட அவர்கள் செய்யாமல் போய்விடுகின்றனர். குடியரசுத் தலைவராக இருந்த திரு கே.ஆர்.நாராயணன் சற்றே துணிச்சலாக சில நடவடிக்கைகளை எடுத்தார். 1996 - 2001 தி.மு.க ஆட்சியின்போது பொடா சட்டத்துக்கு முன்னோடியாக தயாரித்து அனுப்பப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவர் செய்த நல்ல காரியங்களில் ஒன்று. ( தமது கூட்டாளியாக இருந்த திமுக ஆட்சி உருவாக்கிய அந்த சட்டத்தைப் பார்த்துதான் அப்போது மத்தியில் ஆண்டுகொண்டிருந்த பா.ஜ.க தலைமையிலான அரசு பொடா சட்டத்தையே வடிவமைத்தது)  அதைப்போலவே அரசியலமைப்புச் சட்டத்தை மதவாத நோக்கில் திருத்துவதற்காக பாஜக செய்த முயற்சிகளை முறியடித்தது அவரது மிகப்பெரும் சாதனை! ஆனால் தலித்துகளுக்காக ஒரு குடியரசுத் தலைவராக அவரால் என்ன செய்ய முடிந்தது எனப் பார்த்தால் ஒரே ஒரு விஷயத்தைத்தான் குறிப்பிட முடியும்.  தலித் மக்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாநில ஆளுநர்கள் சிலரைக் கொண்டு ஒரு கமிட்டியை அவர் ஏற்படுத்தினார். ஆனால் அன்றிருந்த பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவு சற்றும் இல்லாத நிலையில் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை.அது பிறந்தபோதே இறந்துவிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் திரு கே.ஆர்.நாராயணன் அளவுக்குக்கூட எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. அவர்மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டபோதுதான் அவர் ஒரு தலித் என்பதே அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும்! இப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலையில்கூட அவர் தலித் மக்கள்மீதான வன்கொடுமைகள் குறித்து வாய்திறப்பதில்லை. அந்த அளவுக்கு அவர் நடுநிலையானவர்!

தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் திரு சதாசிவம் அவர்கள் நீதித்துறையில் சமூகநீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக இருந்தாலும் நம்முடைய அரசியல்,சமூக அமைப்பு அதை எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்பது தெரியவில்லை. அதை நிறைவேற்றுவதற்கான சூழலை அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் தாம் உருவாக்கித் தரவேண்டும். திரு.சதாசிவம் அவர்கள் நீதிபதிகளின் நியமனம் குறித்து சொன்ன கருத்தைப் போலவே முக்கியமானது கௌரவக் கொலைகள் குறித்து அவர் சொல்லியிருக்கும் கருத்தாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் திரு.மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் அளித்த தீர்ப்பில்( Arumugam Servai VS State of Tamilnadu , 2011 ) கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். சட்டக் கமிஷனும் அதற்கான மசோதாவைத் தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்து விட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கென அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி தனது அறிக்கையில் இதற்காக ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கி பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு இதற்காக இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தலித் மக்களின் குடிசைக்குள் நுழைந்து பார்த்து அவர்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பதுபோல போஸ் கொடுத்தாலே அவர்களது வாக்குகளை வாங்கிவிடலாம் என காங்கிரஸ் நம்புகிறது போலும். ’இளம் தலைவர்’ ராகுல் காந்தி ஆரம்ப காலத்தில் அடித்த ‘ஸ்டண்ட்டுகளைக்’கூட இப்போது மறந்துவிட்டார். அவர் பாராளுமன்றத்தில் தனது அலங்காரமான உரை ஒன்றில் குறிப்பிட்ட கலாவதி என்ற கற்பனைப் பாத்திரம் இப்போது காற்றில் கரைந்துவிட்டது. பா.ஜ.கவைப் பற்றிப் பேசவே தேவையில்லை. அவர்களது அரசியல் திட்டத்தில் தலித்துகளுக்கு எந்த இடமும் இருந்ததில்லை. அவர்கள் மீட்டெடுக்க முனையும் வர்ணாஸ்ரம அரசியல் தலித்துகளை மீண்டும் முழு அடிமைகளாக்கும் உள்ளடக்கத்தைக்கொண்டது.

இந்திய அரசியல் இப்படி வெளிப்படையான அடிப்படைவாதிகளுக்கும் , போலி ஜனநாயகவாதிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு சீரழிகிறது.இந்த இரண்டு ’தேசிய தீமைகளுக்கு’ மாற்றாக முன்மொழியப்படும் மாநிலக் கட்சிகளோ எவ்வித தொலைநோக்குமின்றி அதிகாரவெறியால் மட்டுமே உந்தப்படுபவையாக இருக்கின்றன. அவை ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையே அதற்கு சாட்சி! இந்நிலையில்தான் சற்றே ஆறுதல் அளிப்பதுபோல் நமது தலைமை நீதிபதி பேசியிருக்கிறார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.

ஆனால், நீதித் துறையில் நியாயமான பங்கேற்பு குறித்த அவரது கருத்துகளை விவாதிப்பவர்கள்கூட,  கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் குறித்து அவர் பேசியுள்ளவற்றை ஒதுக்கித் தள்ளுவது வேதனை அளிக்கிறது.இடதுசாரிக் கட்சிகளும் இதில் வாயளவில் ஆதரவு தெரிவிப்பது என்பதோடு முடித்துக்கொள்வது ஏனென்று புரியவில்லை. பா.ஜ.கவுக்குப் போட்டியாக பாராளுமன்றத்தை முடக்குவதில் முன்னணியில் நிற்கும் தமிழக எம்.பி க்கள் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி துவங்க இருக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரிலும் அவரவர் கட்சியின் நலனுக்கு ஏற்ப போராட்டங்களை நடத்துவார்கள். தி.மு.கவுக்கு சேது சமுத்திரத் திட்டம், அதி.மு.க வுக்கு காவிரிப் பிரச்சனை என அவர்களுக்குக் கைகொடுக்க பிரச்சனைகளும் ‘ஸ்டாக்கில்’ இருக்கின்றன. ஒன்றுமட்டும் நிச்சயம்! அவர்கள் எவரும் கௌரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த சட்டம் இயற்றுங்கள் எனக் கேட்கப்போவதில்லை. இதுதான் நமது சமூக நீதி அரசியலின் எல்லை! 

No comments:

Post a Comment