வாழ்க்கை வரலாறு (Biography) எழுதும் வழக்கம் தமிழில் அவ்வளவாகக் கிடையாது. ஒருவரைப் புகழ்ந்து எழுதப்படும் நூல்களைத்தான் ( Hagiography) இங்கே வாழ்க்கை வரலாறு என்று அழைக்கிறோம். வாழ்க்கை வரலாறு உண்மை விவரங்களை ஆய்வுசெய்து நிறை குறைகளை மதிப்பிட்டு எழுதப்படுகிறது. அத்தகைய கலாச்சாரமே தமிழில் இல்லை என்பதால்தான் நம் சமகாலத்தில் வாழ்ந்த தலைவர்களான அண்ணா, காமராஜர், பெரியார், எம்ஜிஆர் என எவருக்குமே உருப்படியான வாழ்க்கை வரலாறு தமிழில் எழுதப்படவில்லை. இத்தகைய சூழலில் தலைவர் ஒருவருக்கு 12 வால்யூம்கள் கொண்ட வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது என்ற செய்தியே நமக்கு வியப்பளிப்பதாகத்தான் இருக்கும். அம்பேத்கருக்கு மராத்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறுதான் அது. சி.பி. கயர்மோடே என்பவரால் எழுதப்பட்ட அந்த வாழ்க்கை வரலாறு அம்பேத்கரின் பல்வேறு பரிமாணங்களைப் புலப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள். அதன் முதல் பதிப்பு அம்பேத்கர் உயிரோடு இருந்தபோதே 1952 இல் வெளியாகியுள்ளது.
தனஞ்சய் கீர் எழுதிய வாழ்க்கை வரலாறுதான் நமக்குத் தெரியும். அதன் தமிழாக்கம் தோழர் ஆனைமுத்து அவர்களின் முன்முயற்சியால் வெளியானது. கயர்மோடே எழுதிய வாழ்க்கை வரலாறு இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.
அம்பேத்கர் நூற்றாண்டின்போது மகாராஷ்ட்ர அரசால் அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் ஆங்கிலத்தில் தொகுப்புகளாக வெளியிடும் திட்டம் துவக்கப்பட்டது. அது ஏறக்குறைய முற்றுப்பெற்றுவிட்டது. அம்பேத்கர் மராத்தியில் எழுதியவையும் பேசியவையும் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. மகாராஷ் ட்ர மாநில அரசே அதைச் செய்தால் நல்லது. அப்படிச் செய்யும்போது கயர்மோடே எழுதிய வாழ்க்கை வரலாறும் மொழிபெயர்க்கப்பட்டுவிடும். அதற்கான அழுத்தத்தை தலித் இயக்கங்கள் ஏற்படுத்தவேண்டும்.
இதை மகாராஷ்ட்ர அரசுதான் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. மாயாவதி நினைத்திருந்தால் அம்பேத்கர் பூங்காக்கள் அமைத்த செலவில் ஒரு சிறு பகுதியைக்கொண்டு இதை செய்திருக்கலாம். ஆனால் அம்பேத்கரை வெற்றுக் குறியீடாக மட்டுமே பயன்படுத்த விரும்பும் மாயாவதி போன்ற அரசியல் தலைவர்களுக்கு இதில் ஆர்வம் இருக்காது. அவர் மட்டுமல்ல எந்தவொரு தலித் கட்சியாலும் செய்யக்கூடிய ஒன்றுதான் இது. ஒரு வால்யூமை மொழிபெயர்க்க ஒரு லட்சம் தருவதாகச் சொன்னால் ஒரே மாதத்தில் 12 வால்யூம்களையும் மொழிபெயர்த்துவிடலாம்.அந்தத் தொகையைத் திரட்டுவது தலித் இயக்கங்களால் முடியாத ஒண்ட்ரு அல்ல. அதற்குத் தேவை அரசியல் உறுதி மட்டும் தான்!
No comments:
Post a Comment