இன்று( 1.2.2014) காலை நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். இன்றைய கூட்டத்தில் பேராசிரியரைப் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. உடல் கொஞ்சம் மெலிந்திருந்தார் என்றாலும் கருத்துகளில் அதே வலிமை!
டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது வழக்கம். அப்போது திரு கலைஞர் அவர்களும் திரு பேராசிரியர் அவர்களும் சொல்லுகிற திருத்தங்கள் அவர்களது கூர்மையான அரசியல் பார்வையை வெளிப்படுத்துவது மட்டுமின்றி தமிழ் மொழிமீதான அவர்களது ஆளுமையையும் புலப்படுத்தும். மற்றவர்களின் கருத்துகளுக்கு அவர்கள் தரும் மதிப்பில் ஜனநாயகம் மிளிரும்.
இன்று நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில் " இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள், சமீபத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திலும்" என்று எழுதப்பட்டிருந்தது. அதைக் கேட்ட கலைஞர் சமீபத்தில் என்ற சொல்லைநீக்கிவிட்டு அண்மையில் என்ற சொல்லைப் போடுமாறு கூறினார். " தூரத்தைக் குறிப்பிடும்போதுதான் சமீபத்தில் என்று சொல்லவேண்டும். இங்கு காலத்தைக் குறிப்பிடுகிறோம் எனவே அண்மையில் என்று சொல்வதுதான் சரி" என்று அவர் விளக்கமளித்தார்.
பேராசிரியர் சொன்ன பல திருத்தங்கள் பொருள் குழப்பம் இல்லாமல் உரைநடையை எழுதுவதற்கான பயிற்சியாக இருந்தன.
டெசோ கூட்டத்தின்போது மட்டுமல்ல ஒவ்வொரு முறை கலைஞரைப் பார்க்கும்போதும் இப்படி ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. நம்மை மாறா வியப்பில் ஆழ்த்தும் இத்தகைய ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர் வேறு யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?
No comments:
Post a Comment