பெங்குவின் பதிப்பகத்தைக் குற்றம் சாட்டுவது பிரச்சனையைத் திசைதிருப்பும்
வெண்டி டோனிகரின் the hindus என்ற புத்தகத்தின் பிரதிகளைத் திரும்பப் பெற்று அழித்துவிடப்போவதாக பெங்குவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நூலுக்கு எதிராக இந்து மதவாத அமைப்பு ஒன்று தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே செய்துகொண்ட உடன்படிக்கையின்பேரில் இந்த நடவடிக்கையை பெங்குவின் எடுத்துள்ளது. அடுத்து பாஜக ஆட்சி அமையக்கூடும் என்ற அச்சமே பெங்குவின் நிறுவனத்தை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறது.
பெங்குவின் நிறுவனத்தின் அறிவிப்பையொட்டி online petition மூலம் இந்துத்துவ அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் நானும் கையொப்பமிட்டேன். அதன் பின்னர் சித்தார்த் வரதராஜனும் இன்னும் ஒரு எழுத்தாளரும் பெங்குவின் மூலம் வெளியிடப்பட்ட தமது நூல்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கூட்டாக பெங்குவினுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இரண்டு அறிக்கைகளும் அடிப்படைவாதிகளைக் கண்டிக்கின்றன. தான் வெளியிட்ட எழுத்தாளரின் உரிமையைப் பாதுகாத்து நிற்காமல் அடிப்படைவாதிகளுடன் சமரசம் செய்துகொண்ட பெங்குவினைக் கண்டிக்கின்றன. அந்த விஷயங்களில் எனக்கும் மறுப்பில்லை. ஆனால் இந்தக் கண்டனங்கள் நமது கவனத்தை அடிப்படைவாதிகளிடமிருந்து திசைதிருப்புகின்றனவோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
தான் தெரிவிக்கும் ஒரு கருத்தை விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப்பிடிக்க வேண்டியது முதன்மையாக அந்த எழுத்தாளரின் பணி. பதிப்பாளர் இரண்டாவதாகத்தான் வருகிறார். பெங்குவின் ஒரு புரட்சிகரப் பதிப்பு நிறுவனம் என்பதற்காக அதன்மூலம் எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடவில்லை. அதன் பதிப்புத் தரம், வினியோக வலைப்பின்னல், brand value ஆகியவற்றுக்காகவே அதன்மூலம் நூல்களை வெளியிடுகிறார்கள். பெரும்பாலான பதிப்பகங்களுக்கும் இது பொருந்தும். அப்படி இருக்கும்போது அவர்கள் போராளிகளாகவும் தியாகிகளாகவும் மாறவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
இந்துத்துவ அச்சுறுத்தலை, வன்முறையை எதிர்த்து நிற்பதே இன்றைய தேவை. அப்படியொரு எதிர்ப்பு வலுவாக இருந்தால் பெங்குவின் இப்படியொரு முடிவை எடுத்திருக்காது. எனவே நமது கவனத்தை இந்துத்துவ எதிர்ப்பில் ஒருமுகப்படுத்துவோம்!
No comments:
Post a Comment