Friday, July 11, 2014

அத்தியூர் விஜயா மறைந்தார் !



விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினப் பெண் விஜயா இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தியை பேராசிரியர் கல்யாணி மூலம் அறிந்து வருந்தினேன். 


1993 ஆம் ஆண்டில் புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த சிலரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட அவர் நீதிக்காக நடத்திய துணிச்சலான சமரசமற்ற போராட்டத்தால்தான் பின்னர் ' பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்' என்ற அமைப்பு உருவானது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த படிப்பறிவற்ற விஜயாவின் வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. 


விஜயாவின் வழக்கை வெளிப்படுத்தியவர் பத்திரிகையாளர் அசதுல்லா ஆவார். அவர்தான் பேராசிரியர் கல்யாணியிடம் அதைச் சொன்னவர். அதன் பின்னர் கல்யாணி அதைக் கையிலெடுத்தார். நானும் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கோ. சுகுமாரன், அபிமன்னன், பாஸ்கரன், மதியழகன், முத்துக்கண்ணு, இலக்கியன், வ.சு.சம்பந்தம் உள்ளிட்ட பலரும் அவருக்கு உறுதுணையாக இருந்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முதன்மைச் செய்தியாளராக இருந்த திரு. மணிவண்ணன் அளித்த ஆதரவும், வழக்கறிஞராக இருந்த திரு கே. சந்துரு, பொ.ரத்தினம் முதலானோர் அளித்த ஆதரவும் முக்கியமானவை. போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு விஜயாவுக்கு இழப்பீடு வழங்கியது. 


இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ( victim) உறுதியாக இருந்தால்தான் நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். எத்தனையோபேர் சமரசத்துக்காக முயற்சித்தும் விஜயா சம்மதிக்கவில்லை. அதுதான் அவரது சிறப்பு. 


விஜயாவின் வழக்கின்மூலம்தான் இருளர் சமூகத்து மக்களின் அவல வாழ்க்கை வெளியே தெரிந்தது. இன்று அவர்கள்மீதான வன்கொடுமைகள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. அந்தப் பிள்ளைகளில் பலர் கல்விபெற்றுள்ளனர். எனினும் அவர்களது அவலநிலை பெரிதாக மாறிவிடவில்லை. 


விஜயாவுக்கு இப்போது முப்பத்தெட்டு வயதுதான். அதற்குள் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் முடங்கிவிடாமல், அதிலிருந்து தனது சமூகத்துக்கான பாதுகாப்பு அரணை ஏற்படுத்தும் ஆற்றலை உருவாக்கிக்கொண்ட விஜயாவை வணங்குகிறேன்! 

No comments:

Post a Comment