ஏன் சில நிகழ்வுகள் நமக்கு மறப்பதில்லை? தடயமே இல்லாமல் எங்கோ மறைந்துகிடக்கும் சில நினைவுகள் நொடிப்பொழுதில் எப்படி மேலெழும்பி வருகின்றன? ஒரு வாசனை, ஒரு ஒலிக்கீற்று, ஒரு வண்ணம், ஒரு சாயல் ஏன் ஒரு சீதோஷ்ண நிலையும்கூட எப்படி ஒரு நினைவோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது? குறிப்பிட்டதொரு மனநிலையில் இருக்கும்போது அது குறிபிட்டவொரு பாடல் வரியை உங்கள் காதில் ஒலிக்கச் செய்ததுண்டா? உஷ்ணம் அதிகமில்லாத நண்பகலில் வெதுவெதுப்பான வெயிலில் நடந்துபோகும்போதெல்லாம் எனக்கு என் அம்மா வைக்கும் மீன்குழம்பின் வாசம் அடிப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகும். உங்களுக்கு அப்படி நேர்ந்ததுண்டா? அதுபோலத்தான் வெள்ளை பேண்ட் வெள்ளை முழுக்கை சட்டை அணிந்த ஒடிசலான கறுப்பு நிற இளைஞர் எவரைப் பார்த்தாலும் எனக்கு கவிஞர் வைரமுத்துவை முதன்முதலில் பார்த்த காட்சி மனசில் படமாக ஓட ஆரம்பித்துவிடும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் பி எல் படித்துக்கொண்டிருந்த நேரம். சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கும் போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டலில்தான் எனக்கு அறை. ஆனால் நான் பெரும்பாலும் எஞ்சினியரிங் ஹாஸ்டலில்தான் தங்குவேன். நண்பர்கள் துரைக்கண்ணு, சதாசிவம் ஆகியோருடன் சேர்ந்து அரசியல் பணி ஆற்றிக்கொண்டிருந்த நேரம் அது. எஞ்சினியரிங் ஹாஸ்டலில் ஹாஸ்டல் டே என்றால் அது மறக்கமுடியாத கொண்டாட்டம். சேவியர் என்றொரு மாணவர்- அவர்தான் ஹாஸ்டலுக்கு செயலாளர் என நினைவு. ஹாஸ்டல் டேவுக்கு வித்தியாசமாக சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களை ( மாணவியரும் சேர்த்துதான்) அழைத்துவந்து நாடகம் போட்டார். அவர்களோடு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரையும் கவிஞர் வைரமுத்துவையும் அழைத்துவந்திருந்தார். அந்திமழை பொழிகிறது பாடலின்மூலம் பலருக்கும் அறிமுகமாயிருந்த கவிஞர் வைரமுத்து நிழல்கள் படத்தின் பாடல்களால் இளைஞர்களைக் கவரத்தொடங்கியிருந்த நேரம் அது.
ஹாஸ்டல் டே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் முன்பே போதைப் பெருக்கில் மைதானமெங்கும் சகதியாகிப்போயிருந்தது. மாணவர்களில் பெரும்பாலோர் காது அடைபட்டு, கண்கள் குன்றி காற்றில் நடந்துகொண்டிருந்தார்கள். திரைப்படக் கல்லூரி தாரகைகளைப் பார்த்து குடல் வெளியே வந்துவிடுமோ என அஞ்சும் அளவுக்கு ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போதுபோய் யாராவது கவிஞர் வைரமுத்துவை பேசச்சொல்வார்களா! அந்த நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கே வந்து பேசியிருந்தாலும் மாணவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்களது கூக்குரலைப் பொருட்படுத்தாமல் அவர் ஏதோ நாலுவார்த்தைப் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். பாஸ்கரும் இரண்டொரு வார்த்தைப் பேசியதாய் ஞாபகம். அன்று இரவு சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் ரிலீஸாகியிருந்த பன்னீர் புஷ்பங்கள் படம் பார்க்கப் போனோம்.
தமிழரசு இதழில் வேழவேந்தன் போன்றவர்களின் பாடல்களுக்கிடையில் வைரமுத்து என்ற பெயரில் வெளியான மரபுக் கவிதைகள் சிலவற்றை முன்னர் வாசித்திருந்தேன். ( அவற்றில் இன்று அவரது சில திரைப்பாடல்களில் வெளிப்படும் வசீகரமான வார்த்தைகளைப் பார்த்திருக்கிறேன்) அந்தக் கவிதைகள் அவற்றை எழுதியவரை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடியவை அல்ல. எனவே அவரிடம் பேச நான் ஆர்வம்காட்டவில்லை.
அன்று, கார்ல் மார்க்ஸை தீவிரமாக வாசிக்கத் தொடங்கியிருந்த எனது கண்களுக்கு கவிப் பேரரசாய் அவர் ஆட்சிசெய்யப்போகும் மனப்பரப்பு தென்படாததில் வியப்பில்லை. இன்று கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக ஹாஸ்டல் டே நினைவிருக்குமா தெரியவில்லை.
---------
ஒரு பின்னொட்டு:
80 களில் தமிழ் சினிமா மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. பாரதிராஜா இளையராஜா நிவாஸ் வைரமுத்து கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதெல்லாம் உண்மைதான். பீம்சிங் படங்களிலிருந்து நல்ல அம்சங்களின் தொடர்ச்சியாக 'சீரியஸ் சினிமா' உருவாகியிருக்கக்கூடிய புறச்சூழல் அப்போது தமிழ்நாட்டில் இருந்தது. அந்தச் சூழலைப்பற்றிய பிரக்ஞையின்றி மேற்சொன்ன கூட்டணி தமது கிராமத்து உட்டோப்பியாவைக் கொண்டு அதைக் காலிசெய்துவிட்டதோ என்ற ஐயம் இப்போது எனக்கு எழுகிறது. ராமசாமி,ராஜன்குறை முதலான விமர்சகர்கள் இதைப்பற்றி விவாதிக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment