Thursday, July 3, 2014

இசையெனும் காலயந்திரம்




இசையெனும் காலயந்திரம்

---------------


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரு இளையராஜா அவர்களை அவரது ரெக்கார்டிங் தியேட்டரில் சந்தித்தபோது அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம். அன்று அவரது பிறந்தநாள் என நினைவு. 

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் இளையராஜா புகழ் ஏணியில் தாவித் தாவி மேலேறிக்கொண்டிருந்தார். இப்போது புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தின்கீழ் மறைந்துபோன பாலமான் கரை என அழைக்கப்படும் இடத்தில் வரிசையாக இருந்த கடைகளில் நேரு ஸ்டோர், ஹேப்பி டெய்லர்ஸ், பாண்டு டீக்கடை ஆகிய இடங்கள்தாம் எனக்கு பொழுதுபோக்கும் இடங்கள். பாண்டு டீக்கடையில் ஒரு பிலிப்ஸ் ரெக்கார்டு பிளேயர் உண்டு. அப்போதுதான் இன்ரிக்கோ, எக்கோ இசைத்தட்டுகள் அறிமுகமாயின. பாண்டு என்னைப்போலவே இளையராஜா பைத்தியம். ஒரு ரெக்கார்டு ரிலீஸ் ஆகிறதென்றால் சென்னைக்கு ட்ரெயின் ஏறிவிடுவார். அது தேயும்வரை கேட்பதற்கு என்னைப்போல இன்னும் சில பைத்தியங்கள் இருந்தார்கள். நான் சட்டக் கல்லூரியில் வகுப்பறையில் அமர்ந்திருந்த காலத்தைவிட பாண்டு கடையில் உட்கார்ந்திருந்த நேரம் அதிகம், நான்குடித்தத் தண்ணீரைவிட அங்கு குடித்த டீ அதிகம். இளையராஜாவின் இசை எனது இளம் பிராயத்தின்மீது செலுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல. 


இப்போது அவர் இசை அமைக்கும் பாடல்களில் மனம் லயிக்க மறுக்கிறது. என் மனசுக்கு வயதாகிவிட்டதா அல்லது அவரது இசையில் முதுமை ஏறிவிட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் இப்போதும் அவரது துவக்ககாலப் பாடல்களைக் கேட்கும் கணத்தில் கால யந்திரத்தில் ஏறாமலேயே முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடுகிறேன்.

No comments:

Post a Comment