அவர்கள் தொலைபேசியில் அழைக்கிறார்கள்
குண்டுகளைப் போடுவதற்கு முன்பு
தொலைபேசி அடிக்கிறது
எனது பெயரைத் தெரிந்த யாரோ அழைக்கிறார்கள்
சுத்தமான அரபியில் சொல்கிறார்கள் " டேவிட் பேசுறேன்"
குண்டுகள் விழும் ஒலியும் கண்ணாடிகள் நொறுங்கும் சப்தமும் கலந்த இசைக் கோர்வையின் பின்னணியில் நான் சிந்தித்துப் பார்க்கிறேன் " எனக்கு டேவிட் என்று யாரையாவது தெரியுமா? "
அவர்கள் ஃபோன் செய்து ஓடச் சொல்கிறார்கள்
இந்தச் செய்தி முடிந்ததும் உங்களுக்கு 58 நொடிகள் உள்ளன
உங்கள் வீடுதான் அடுத்த இலக்கு
போர்க்காலக் கருணையென இதை அவர்கள் நினைத்திருக்கலாம்
ஓடுவதற்கு ஒரு இடமும் இல்லையென்றாலும்கூட
இதற்கு எந்த அர்த்தமுமில்லை
எல்லைகள் மூடப்பட்டுவிட்டன உங்கள் கடவுச்சீட்டு செல்லாமல்போய்விட்டது
கடலால் சூழப்பட்ட இந்த இடத்தில் நீங்கள் ஆயுள் கைதியாக இருக்கிறீர்கள்
பாதைகள் குறுகிப்போய்விட்டன
உலகில் வேறு எந்த இடத்தைவிடவும் மனிதர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் பகுதி இது
' ஓடுங்கள்' அவர்கள் சொல்வது அவ்வளவுதான்
நாங்கள் உங்களைக் கொல்வதற்கு முயற்சிக்கவில்லை
நாங்கள் தேடும் நபர்கள் உங்கள் வீட்டில் இல்லையென்பதை நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டுமென்பதுகூட அவசியமில்லை
நீங்களும் உங்கள் குழந்தைகளும்தவிர வேறெவரும் வீட்டில் இல்லை
கால்பந்துப் போட்டியில் நீங்கள் அர்ஜெண்டினாவுக்காக ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறீர்கள்
இந்த வாரத்து ரேஷன் ரொட்டியின் கடைசித் துண்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
மின்சாரம் நின்றுபோனால் கொளுத்துவதற்கு மிச்சமிருக்கும் மெழுகுவர்த்திகளைக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
எதுவும் பொருட்டல்ல
உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றன என்பதுகூட ஒரு விஷயமல்ல
நீங்கள் தவறான இடத்தில் வாழ்கிறீர்கள்
இல்லாத இடத்தைத் தேடி
ஓடுவதற்காகக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு
இந்த 58 நொடிகளில்
உங்கள் திருமண ஆல்பத்தைத் தேடியெடுக்கமுடியாது
உங்கள் மகனுக்குப் பிடித்த போர்வையை எடுத்துக்கொள்ள முடியாது
உங்கள் மகளின் அரைகுறையாய் பூர்த்தி செய்யப்பட்ட கல்லூரி விண்ணப்பத்தை எடுத்துக்கொள்ள முடியாது
வீட்டிலுள்ளவர்களைக் கூப்பிடக்கூட முடியாது
எதுவும் பொருட்டல்ல
நீங்கள் யாரென்பதுகூட பொருட்டல்ல
நீங்கள் மனிதர்தான் என்பதை நிரூபியுங்கள்
நீங்கள் இரண்டு கால்களில்தான் நிற்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள்
ஓடுங்கள்"
( பாலஸ்தீனிய அமெரிக்க எழுத்தாளரான லேனா கலாஃப் துஃபாஹா 21.7.2014 அன்று எழுதிய கவிதை இது. )
No comments:
Post a Comment