Friday, July 4, 2014

ஒளி நிழல் உலகம்



================


அ.ராமசாமியின் 'ஒளி நிழல் உலகம்' என்றநூலுக்கு 2004 டிசம்பரில் நான் எழுதிய முன்னுரை


================


" பேசும் படங்களில் நமது கண்களில்படும் உருவங்கள்தான் முதன்மையானவை.சப்தம் இரண்டாவது ஸ்தானத்தைத்தான் வகிக்கவேண்டும்........பேசும்படத்திற்கும் பேச்சுப்படத்திற்கும் வித்தியாசமுண்டு.அனேகமாக நமது படங்களில் பல இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவை."எனத் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா ஆண்டில்(1957) நிமாய் கோஷ் எழுதினார்.அதற்குப்பின் அரை நூற்றாண்டு கடந்துவிட்டது.ஆனாலும் அது இப்போதும் பொருத்தமாகவே உள்ளது.வி.சேகர் இயக்குகிற படங்கள்,விசுவின் படங்கள், விஜயகாந்த்தின் படங்கள் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.சிறு வசனங்களைக் கையாளும் மணிரத்னத்தின் பாணி இங்கே கேலிக்கு ஆளாவது வசனத்தின் ஆட்சி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.இதனால்தானோ என்னவோ தமிழ் சினிமா குறித்த விமர்சனம் பெரும்பாலும் அதன் வசனங்கள்-அதன்வழியே முன்வைக்கப்படும் கருத்து- ஆகியனப் பற்றிய விமர்சனமாகவே அமைந்துவிடுகிறது.

      

 தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட சினிமாவைப் பிற கலைகளோடு ஒப்பிட்டால் அதன் வயது கொஞ்சம்தான். ஆனால் அதன் தாக்கமோ அளவிடற்கரியது.1982 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் தமிழில் 2020 திரைப்படங்கள் வெளிவந்திருந்தன.இவற்றுள் சுமார் ஐம்பது சதவீதப் படங்கள் எழுபதுகளில் மட்டும் வெளிவந்துள்ளன.அறுபதுகளின் பிற்பகுதியில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தோடு சேர்த்தே இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


தமிழ்நாட்டு அரசியலுக்கும் சினிமாவுக்குமான உறவு வெளிப்படையானது.தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும்படமான 'காளிதாஸ்'(1931)காங்கிரசின் தேசிய அரசியலைப் பேசியது.தி.மு.க துவக்கப்பட்ட ஆண்டில்தான்(1949) அண்ணாத்துரையின் 'வேலைக்காரி' வெளியானது.எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இணைந்த பிறகு அந்தக் கட்சியின் சினிமா மூலமான அரசியல் பிரச்சாரம் தீவிரமடைந்தது.தி.மு.கவின் கொடி,தேர்தல் சின்னம்,தலைவர்களின் பெயர்கள் யாவும் திரைப்படங்களின் வாயிலாகப் பிரபலப்படுத்தப்பட்டன.வசனங்கள், பாடல்கள்,காட்சிகள் என சினிமாவின் பல்வேறு அம்சங்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.தி.மு.கவின் இந்த யுக்தியை அந்தக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிக் கட்சி துவக்கியபிறகும் எம்.ஜி.ஆர் தொடர்ந்து கையாண்டார்.அவர் முதலமைச்சராகப் பதவியேற்றபிறகு நடித்த'மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்' (1978)என்ற வரலாற்றுக் கதையைக் கொண்ட படமும்கூட சமகால அரசியலைத்தான் பேசியது.அவர் உயிரோடிருந்தவரை (தேர்தல் மூலம்)அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாதுபோனதற்கு சினிமாமூலம் அவர் சேர்த்துவைத்திருந்த செல்வாக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவர்.


 எம்.ஜி.ஆர் முதல்வர் பொறுப்பேற்று கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு இடம்பெயர்ந்த அதே   காலகட்டத்தில்தான் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த 'அன்னக்கிளி'(1976),'பதினாறு வயதினிலே' (1977) முதலிய படங்கள் வெளிவந்தன.கதாநாயகனின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் சினிமாவை மீட்டதோடு மட்டுமின்றி ஒரு புதுவகை யதார்த்தத்தையும் இந்தப்படங்கள் அறிமுகப்படுத்தின."திரைப்பட நடிக நட்சத்திரங்களைப்போல,அத்துறையில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும் நாடும்,மக்களும் நன்முறையில் போற்ற வேண்டும்"என்ற மா.பொ.சி யின் விருப்பம் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அப்போதுதான் நிறைவேறியது.இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள்,ஒளிப்பதிவாளர்கள் முதலானோரின் பெயர்கள் முக்கியத்துவத்தோடு பேசப்படுகிற நிலை  இதனால் உருவானது.

        

சினிமாவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த(1967) திராவிட அரசியலின் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பதைவிடவும், பத்தாண்டு கால தி.மு.க ஆட்சி மீதான வெறுப்பின் வடிகாலாக அவரைப் பார்ப்பதே பொருந்தும். ஆனால் அவரது கவர்ச்சிவாத அரசியல் தி.மு.கவின் அரசியலைவிட அபாயகரமானது என்பதை படித்தவர்க்கம் சீக்கிரமாகவே புரிந்துகொண்டுவிட்டது. இந்த காலகட்டத்து மன நிலையை 'பசி'(1980) 'தண்ணீர் தண்ணீர்' (1981)  முதலிய படங்களில் நாம் உணரலாம்.

        

தமிழ் நாட்டு அரசியலின் பின்னணியில் வைத்து தமிழ் சினிமாவை விமர்சிக்கும் போக்கு இச் சமயத்தில்தான் கூர்மையடைந்தது.கா.சிவத்தம்பி எழுதிய 'தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும்' என்ற நூலை இதற்கான சான்றாகக் கொள்ளலாம்.எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டத் தொழில்  நுட்ப வளர்ச்சி அதை 'பேச்சுப் படம்'என்பதிலிருந்து மாற நிர்ப்பந்தித்தது.இந்தப் புதிய சூழலைப் புரிந்துகொண்டு படம் எடுக்க முற்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.ஆனால் அவர்கள் உருவாக்கிய 'காட்சிக் கலாச்சாரத்தை' சரியாகப் புரிந்துகொண்டு வரவேற்கவோ விமர்சிக்கவோ தேவையான விமர்சன மொழியை நமது சினிமா விமர்சகர்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை.படத்தின் கதையை அல்லது வசனத்தை விமர்சித்துப் பழகிப்போன அவர்கள்,தெளிவான கதையோ, நீள நீளமான வசனங்களோ இல்லாத புதியவகைப் படங்களை எதிர்கொள்ளமுடியாமல் திகைத்தனர்.எம்.ஜி.ஆர் படங்களைப்போல தனது கருத்தியலை நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த படங்களை விமர்சிப்பதில் சிக்கல் எதுவும் இல்லை.ஆனால் இந்தப் புதுவகைப் படங்களின் கருத்தியலோ அவற்றின் காட்சியமைப்பில்,படத் தொகுப்பில்,காமிரா கோணத்தில் பொதிந்திருந்தது.   அதைக் கண்டறிந்து விமர்சிப்பது அவ்வளவு

எளிதானதாக இல்லை .எனவே சினிமா 'வணிகமயமாகிவிட்டது' சினிமாவில் 'ஆபாசம் கூடிவிட்டது' என முகம் சுளிப்பதத் தாண்டி நமது விமர்சகர்களால் எதுவும் சொல்லமுடியாமல் போனது. இதற்கு நேரெதிரானக் கருத்துகளைச் சிலர் முன்வைத்ததை இங்குக் குறிப்பிடுதல் அவசியம். சினிமாவின் 'ஆபாசத்தை' அவர்கள் போற்றிக் கொண்டாடினர்.

      

எண்பதுகளில் தமிழில் அரைகுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்பியல், குறியியல், உளப்பகுப்பாய்வு முதலான சிந்தனைகள் வழங்கிய கலைச் சொற்களைக் கொச்சையான, திரிந்த பொருளில் உள்வாங்கிக்கொண்ட சிலர் தமிழ் சினிமாவைப் போற்றித்துதித்து அதற்குப் புதிய வியாக்கியானங்களை வழங்க ஆரம்பித்தனர்.'உள்ளே வெளியே' என்ற படத்தை மிகப்பெரிய புரட்சிப்படமாக சித்திரித்து எழுதப்பட்ட கட்டுரைகள் இதன் உச்சமாகும். பாலியலை வக்கிரமாகக் கையாண்ட நாலாந்தர மலையாளப்படங்களை பிரெஞ்சு சினிமாவின் புதிய அலை இயக்குனர்களின் படங்களோடு ஒப்பிட்டுப் பேசவும் அவர்கள் தயங்கவில்லை. பிரதியின் புனிதத்தை மறுக்கும் முனைப்பில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளும்(சரோஜாதேவியின்)மட்டரகமான 'போர்னோ'கதைகளும் ஒன்றுதான் என வாதிட்டதுபோலவே சினிமாகுறித்த இவர்களது அனுகுமுறையும் இருந்தது. இன்னொருபுறம் இப்படியான 'தடாலடிகள்' இவர்களுக்கு பிழைப்புக்கு வழியேற்படுத்தித் தந்தன. தீவிர இலக்கியம் தெரிந்த நபர்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவைப்பட்டனர். கற்பனையேயில்லாத தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு தமிழின் தீவிர இலக்கியப் பிரதிகளிலிருந்து பல விஷயங்களைத் திருடிக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையைச் செய்ய ஆட்கள் தேவைப்பட்டபோது அதை இவர்கள் கச்சிதமாக நிறைவேற்றினர். சிற்றிதழ் இப்படித்தான் இவர்களால் சினிமாவுக்கானப் பின்வாசல் கதவாக மாற்றப்பட்டது.

 

      

இந்தச் சூழலைத் தமிழ் நாட்டின் மைய நீரோட்ட இடதுசாரிகள் எதிர்கொண்டவிதம் வினோதமானது. 'சோஷலிச யதார்த்தவாதம்'என்பது தமிழ் இலக்கிய உலகில் செலாவணி இழந்தபோது இவர்கள் பின்னோக்கிப் பயணப்பட ஆரம்பித்தனர். சோவியத் யூனியனின் உடைவு,சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த நிகழ்வுகள் முதலியவை இவர்களது கண்களைத் திறக்கவில்லை.எண்பதுகளில் திராவிட அரசியல் மறையத் தொடங்கியபோது அதன் பிற்போக்கான அம்சங்களை இடதுசாரிகள் ஸ்வீகரித்துக்கொண்டனர். தமிழ் சினிமா இயக்குனர்களில், நடிகர், நடிகைகளில் புரட்சியாளர்களைக் கண்டுபிடிப்பது அவர்களது (தோல்விப்) படங்களைப் பாராட்டி அங்கீகாரம் செய்வது என்பதாக இவர்களது கலைச்சேவை மாறியது.தமிழக இடதுசாரி இயக்கம் கோர்க்கிகளையோ, மாயகோவ்ஸ்கிகளையோ லூசுன்களையோ உருவாக்கவில்லை, அது லியோனிகளைத்தான் உருவாக்கியது. இது கவனத்துக்குரிய வரலாற்றுத் துயரமாகும். திராவிட அரசியல் சினிமாவைத் தனது  நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இடதுசாரி அரசியலோ சினிமாக்காரர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

       

 இப்படியானச் சூழலில்,சினிமாவை பார்த்து முகம் சுளிக்காமல் அதை ஒரேயடியாகக் கொண்டாடவும் செய்யாமல் விமர்சித்தவர்களில் முக்கியமானவர் அ.ராமசாமி. நாடகத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியதாலும், நவீன நாடகங்களை எழுதி இயக்கியதாலும், நடிப்பு பற்றிய நவீன சிந்தனைகளைப் பயின்றதாலும் கிடைத்த அனுபவங்கள் அவரது பார்வையைச் செழுமைப் படுத்தியுள்ளன.மிகுந்த வேட்கையோடு சினிமாவை அணுகுபவர் அவர்.ஒரு விமர்சகராகவன்றி முதலில் ஒரு ரசிகராக சினிமாவைப் பார்க்கத் தெரிந்தவர்.

      

 ராமசாமியின் விமர்சனங்கள் பெரும்பாலும் திரைப்படத்தின் கருத்தியலை ஆய்வு செய்வதாக இருக்கின்றன. அதைச் செய்வதற்கு அவர் திரைப்படத்தின் கதையை மட்டும் சார்ந்திருப்பதில்லை. பாத்திர வார்ப்புகள், காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ள விதம் போன்றவற்றோடு சினிமாவுக்கு அப்பால் செயல்படும் அரசியலையும் அவர் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ஒரு நடிகரின் அல்லது இயக்குனரின் படத்தை இவர் தனியே எடுத்துக்கொண்டு ஆராய்வதில்லை. அவர்களது பிற படங்களோடு அதனைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறார். அதன்மூலம் அந்தப்படங்களினூடே ஓடும் கருத்தியலை அவரால் புரிந்துகொள்ளமுடிகிறது.சமூகத்தின் மத்தியில் சினிமாவைப் பொருத்திப் பார்ப்பதால் மற்ற விமர்சகர்களின் கண்களுக்குப் புலப்படாத பல விஷயங்களை அவரால் பார்க்க முடிகிறது.இதனால் பலரின் பாராட்டுகளைப் பெற்ற படங்கள் அவரது கண்டனத்துக்கு ஆளாகின்றன. இதில் அவருக்குள்ள இலக்கிய ஈடுபாடும் கைகொடுக்கிறது.தங்கர் பச்சானின் 'சொல்ல மறந்த கதை'யை கி.ராவின் சிறுகதை ஒன்றோடு அவர் இணைத்து வாசிக்கும்போது வேறுவிதமான அர்த்தம் கிடைக்கிறது.

        

சினிமாவைப்பற்றிப் பேசிய இலக்கியவாதிகள் பலர் 'சீரியஸான'ஆட்கள் சினிமாத் துறைக்குள் வந்தால் மட்டுமே அந்தத் துறையைத் திருத்தமுடியும் என்பதாகப் பேசியுள்ளனர். அவர்கள் குறிப்பிடும்'சீரியஸான ஆட்கள்' வேறு யாருமல்ல,அவர்களேதான்.அவர்கள் இருக்கிற இலக்கியத் துறை சீரழிந்து கிடப்பதைப்பற்றி எவ்வித வெட்கமும் அவர்களுக்கு இருப்பதில்லை. இதேவிதமான கருத்துதான் அரசியல்பற்றியும் கூறப்படுகிறது. சினிமாத்துறையை மிகவும் நெருக்கமாக அறிந்திருப்பவர் அசோகமித்திரன்.அவரது இலக்கிய ஆளுமைகுறித்து இருவித கருத்துகள் இருக்க முடியாது. ஆழமான சினிமா விமர்சனங்களை அவர் எழுதியிருக்கமுடியும் ஆனால் அவர் அப்படி எதையும் எழுதவில்லை. 'தமிழ்ப்படங்களின் கதானாயகிகள் எண்ஜாண் உடம்பையும் நாற்புறமும் அசைக்கவல்ல பொம்மைகளாகிவிட்டனர்' எனப் பெருமூச்சுவிட்டதோடு சரி.அத்தகைய நடனக் காட்சிகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை 'பார்வையாளர்களை வெறும் திளைப்பை விரும்பும் உடல்களாகக் கருதும்'தமிழ் சினிமாவின் வெளிப்பாடாக அந்த நடனங்களை விளக்கும் ராமசாமி அதன்காரணமாகப் பார்வையாளன் எப்படித் தனது உடலையே வெறுக்கும்படியாகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அது மட்டுமின்றி' எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்களில் தவறாது இடம்பெற்ற முதலிரவுக் காட்சிகள் இத்தகைய நடனக் காட்சிகளால் பதிலீடு செய்யப்பட்டதையும் விவரிக்கிறார்.

        

ராமசாமியின் எழுத்துக்களில் சினிமாவைப்பற்றிய கோட்பாடுகளின் நீண்ட மேற்கோள்களை நாம் காண முடிவதில்லை. அப்படியான கோட்பாடுகளை ஆங்காங்கே தெளித்து வைப்பதால் பயனெதுவும் ஏற்படப் போவதில்லை. ஆனால்  சினிமாவைப் பார்ப்பதற்கு பல புதிய அணுகுமுறைகளை அவரது எழுத்துக்களினூடே நாம் காணமுடிகிறது. 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் ஒரு பாலம் இரண்டு பண்பாடுகளைப் பிரிப்பதற்கானக் குறியீடாகச் செயல்படுவதை அவர் எடுத்துக் காட்டும்போது அந்தப்படத்தை வேறுவிதமாகப் புரிந்துகொள்கிறோம்.

        

எண்பதுகளின்பிற்பகுதியிலிருந்து இந்திய அரசியல் களத்தை ஆக்கிரமித்துக்கொண்ட இந்துத்துவத்தின் நுணுக்கமான வெளிப்பாடுகளை தமிழ் சினிமாவில் அடையாளம் கண்டு சொல்வதாக பல கட்டுரைகள் இத் தொகுப்பில் உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் வெற்றிபெற்ற சினிமாக்கள் பலவற்றின் உள்ளீடாக இந்தக் கருத்தியலே செயல்பட்டுள்ளது என்பது யதேச்சையாக நடந்ததல்ல. ஆனால் இடதுசாரிகளைப்போல வெறுமனே மதவாதத்தை மட்டும் தனியாகப் பிரித்துவைத்துக்கொண்டு பேசாமல் அத்துடன்சேர்த்து சாதிப் பிரச்சனையையும் ராமசாமி பார்த்துள்ளார். இது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு அம்சமாகும்.

        

 மோசமானப் படங்களை அம்பலப்படுத்துவதில்  நாம் காட்டும் அக்கறை, நல்ல படங்களை அடையாளம் காட்டுவதில் வெளிப்படுவதில்லை. ராமசாமியும் அதில் விதிவிலக்கல்ல என்றே சொல்லவேண்டும்.  நாசரின் 'தேவதை'குறித்துப் பேசும்போது அதற்கான வாய்ப்பு இருந்துள்ளது, ஆனால் சிலக் குறிப்புகளாக மட்டுமே அதை அவர் முடித்துவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது. அதுபோலவே தமிழ் சினிமாவில் நகைச்சுவை பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் ராமசாமி விரிவாகப் பேசியிருக்கலாம்.திரை இசையில் இங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களும் விரிவானப் பரிசீலனைக்கு உரியவை. அதிலும் குறிப்பாக இளையராஜாவின் பங்களிப்பு விரிவான ஆய்வுக்குரியது. திராவிடக் கட்சிகளின் போராட்டங்களால் விரட்ட முடியாத இந்தியை அவரது இசை விரட்டியடித்தது ஒரு மாபெரும் வரலாற்று சாதனையாகும். (அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்கள் அவரது இசைபற்றித் தெரியாதவர்களால் வேறு நோக்கம் கருதி எழுதப்பட்டது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். சாஸ்திரீய இசையில்,நாட்டுப்புறப் பண்பாட்டில் ஆழ்ந்த அறிவும், இளையராஜா மீது மதிப்பும் கொண்ட கி.ராஜநாராயணன் இதை எழுதத் தகுதியுள்ளவர்.)

         

திரைப்படப் பாடல்களை இலக்கிய அந்தஸ்து தந்து ஆய்வு செய்ய  சிவத்தம்பி முயற்சித்தார்.அந்த முயற்சி பிறரால் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை.இதுவும் தமிழ் சினிமா விமர்சகர்கள் அக்கறை கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும். 'வெகுமக்கள்'சினிமாவை மட்டுமின்றித் தமிழில் மேற்கொள்ளப்பட்ட விவரணப்பட முயற்சிகள்,எடுக்கப்பட்ட குறும்படங்கள் என எல்லாவற்றையும் ராமசாமி கவனத்தில் கொண்டுள்ளார். இது அவரது விரிந்த பார்வையைக் காட்டுகிறது.வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அவை வெளிவந்த காலம்,அவற்றை வெளியிட்ட பத்திரிகைகளின் தன்மை முதலானவற்றின் வரையறைகளைச் சுமந்து கொண்டுள்ளன. தனி நூலாக எழுதும்போது அந்தப் பிரச்சனைகள் எழாது.ராமசாமி அடுத்து அப்படியான முயற்சியில் ஈடுபடவேண்டும்.

        

தமிழ் சினிமாவுக்கும், தமிழ் அரசியலுக்கும், தமிழ் சமூகத்தில் அதிகரித்துவரும் பாசிசக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவைத் திறந்து காட்டுவதன்மூலம் அதை முறியடிக்க முயல்வது இன்றைய அரசியல் போராட்டத்துக்கு மிகவும் அவசியமாகும். அதை ராமசாமியின் கட்டுரைகள் சரியாகவே செய்துள்ளன. அந்தவகையில் தமிழ் சினிமா குறித்த இந்த நூல் தமிழ் அரசியல் களத்திலும் பயன்படக்கூடியது.


சினிமாவைப் புறக்கணிப்பதோ,கண்களை இறுக மூடிக்கொள்வதோ சினிமாபற்றிய விமர்சனமாக இருந்து விடமுடியாது. இந்த 'மோசமான'படங்களைப் புரிந்துகொள்ளாமல் நல்ல சினிமாவை உருவாக்க முடியாது. இந்த நூல் தமிழில் நல்ல சினிமாவை உருவாக்குவதற்கான தூண்டுதலைத் தருகிறது. சினிமாவின் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கும் இது  பயனளிக்கக்கூடிய கையேடாக இருக்கும். 


No comments:

Post a Comment