Monday, September 28, 2015

சாதிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுங்கள் - ரவிக்குமார்

 

தோழர்களே! நாம் இங்கே  குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக ஒரு கோரிக்கைக்காகக் கூடியிருக்கிறோம். விஷ்ணுப்ரியா மரணத்தையும் கோகுல்ராஜின் படுகொலையையும் சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கூடியிருக்கிறோம். இந்த வழக்குகளில் மட்டும் அல்ல கடந்த நான்கு ஆண்டுகளாகவே தலித் மக்களுக்கு எதிரான எந்தவொரு வன்கொடுமையையும் தடுப்பதற்கு இந்த அரசு போதிய அக்கறைகாட்டவில்லை. ஒவ்வொரு நாளும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். ஆணவக் கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 72 தலித்துகள் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதை மத்திய அரசு நிறுவனமான தேசிய குற்ற ஆவண மையத்தின் அறிக்கை கூறுகிறது. சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் மாநிலமாக பீகாரைத்தான் சொல்வார்கள். ஆனால் அந்த பீகாரில் கூட இத்தனை தலித்துகள் கொல்லப்படவில்லை.53 பேரோ என்னவோதான் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பீகாரைவிட மோசமான நிலைக்குத் தமிழ்நாடு போய்விட்டது.

டிஎஸ்பி பொறுப்பிலிருந்த விஷ்ணுப்ரியா ஏன் சாகிறார்? காவல் துறையில் ஏராளமான தலித்துகள் இருக்கிறார்கள். கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் பதவிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித்துகள் நியமிக்கப்படுகிறார்கள். காவல்துறையில் கீழ்மட்டத்தில் இட ஒதுக்கீடு ஓரளவு பின்பற்றப்படுகிறது. ஆனால் எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என உயர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருப்பதில்லை. காவல்துறை மட்டுமல்ல வருவாய்த் துறையிலும் அப்படித்தான்.

கஷ்டப்பட்டுப் படித்து ஐ ஏ  எஸ், 
ஐ பி எஸ் தேர்வுகளில் வெற்றிபெற்று தலித்துகள் வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர் பதவிகளில் , மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பதவிகளில் அவர்களை அதிக நாட்களுக்கு பணிசெய்ய அனுமதிப்பதில்லை. செயலாளர்களாகப் போனாலும் அதிகாரம் இல்லாத பதவிகளைத்தான் தருவார்கள். வருவாய்த் துறை செயலாளராக , நிதித்துறை செயலாளராக , உள்துறை செயலாளராக தலித்துகளை நியமிப்பது கிடையாது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதற்காக முதலமைச்சரிடத்தில் தலைவரும் நானும் சென்று எத்தனையோமுறை மனுகொடுத்தோம் , தலித் அதிகாரிகளை அதிகாரமுள்ள பதவிகளில் அமர்த்துங்கள் என்று கேட்டோம். அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தோம் . ஆனால் அவர்கள் செய்யவில்லை. 

திமுக ஆட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியாக இருந்தாலும் தலித் அதிகாரிகளின் நிலை இதுதான். எதற்காக இப்படி தலித் அதிகாரிகளைப் புறக்கணிக்கிறார்கள் ? அவர்களிடம் திறமை இல்லையா ? அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் இருக்கிறதா ? விஷ்ணுப்ரியாவின் தோழி மகேஸ்வரி கேட்டாரே 'எவரிடமாவது ஒரு டீ  வாங்கிக் குடித்தோம் என்று சொல்ல முடியுமா ? திறமை இல்லை என்று சொல்ல முடியுமா ?' என்று கேட்டாரே. அதற்கு யாராவது பதில் சொன்னார்களா ? இப்போது விஷ்ணுப்ரியாவைப் பற்றி எத்தனையோ அவதூறு செய்திகளைப் பரப்புகிறார்கள் . ஆனால் அவர் திறமை இல்லாதவர் என எவராது சொல்ல முடிகிறதா ? அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றம் சாட்ட முடிகிறதா ? அப்புறம் ஏன் இந்தப் புறக்கணிப்பு ? ஏன் இந்த அவமதிப்பு ? சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டுவதால்தானே ? வேறு என்ன காரணம் இருக்கிறது? 

ஆட்சியாளர்களே நீங்கள் இப்படியெல்லாம் செய்வீர்கள் எனத் தெரிந்துதான் இந்தியாவுக்குத் தன்னாட்சி வழங்கப்போகிறோம் உங்கள் கருத்து என்ன என்று அப்போதிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வட்டமேசை மாநாடு கூட்டி அம்பேத்கரை அழைத்துக் கேட்டபோது நிர்வாகத்திலே எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் வேண்டும், காவல்துறையில் நீதித்துறையில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என அம்பேத்கர் கேட்டார். 1930 ஆம் ஆண்டிலேயே கேட்டார். அதன் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியாவிலும் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார். அப்படிப் பெற்றுத் தந்தும் கூட தலித்துகளை இந்தப் பாடு படுத்துகிறீர்கள் , இந்த  இட ஒதுக்கீடும் இல்லாது போனால் என்ன ஆகும் ? வருவாய்த் துறையிலே காவல் துறையிலே உயர் பதவிகளில் சாதிப் பாகுபாடு தொடரும் வரை இப்படி விஷ்ணுப்ரியாக்கள் சாவதும் தொடரத்தான் செய்யும். எனவே அதைப்  போக்குவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.அப்போதுதான் இதை ஜனநாயக ஆட்சி என்று சொல்ல முடியும். அப்போதுதான் இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலே இந்த ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது எனக் கூற முடியும்.  

தலித்துகள்மீதான தாக்குதலை சாதி அடிப்படையிலான வன்முறையை வன்கொடுமை என அரசாங்கம் அழைக்கிறது. அட்ராசிட்டி (atrocity ) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். தீண்டாமைக் கொடுமைகளை, சாதிய ரீதியான பாகுபாடுகளை நாம் வன்கொடுமை என்ற வகைப்பாட்டில் வைக்கலாம். ஆனால் சாதிவெறியின் அடிப்படையில் செய்யப்படும் திட்டமிட்டப் படுகொலைகளை வன்கொடுமை atrocity எனச் சொல்வது பொருத்தமாக இல்லை. அந்த வன்முறையின் தீவிரத்தை எடுத்துச் சொல்வதாக இல்லை. இந்தப் படுகொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அரசு பார்க்க வேண்டும். நேற்று கூட நமது பிரதமர் அமெரிக்காவில் பேசியிருக்கிறார். பூமி வெப்பமடைவதும் பயங்கரவாதமும் தான் இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்சனை என்று பேசியிருக்கிறார். பயங்கரவாதக் குற்றங்களை புலனாய்வு செய்வதற்காக மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு என ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நாட்டில் எங்காவது குண்டு வெடித்தால் உடனே அந்த அமைப்பு புலனாய்வு செய்ய வந்துவிடும் மாநில அரசின் அனுமதிகூட தேவையில்லை பயங்கரவாதக் குற்றத்தை அந்த அளவுக்கு இந்த அரசாங்கம் தீவிரமானதாகப் பார்க்கிறது. 

பயங்கரவாதக் குற்றம் என்பதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் ? " பொதுமக்களுக்கு எதிராக ஒரு அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது மதம் சார்ந்த நோக்கத்துக்காகவோ அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையிலோ திட்டமிட்ட முறையில் வன்முறையைப் பயன்படுத்தி கொலை செய்வது அல்லது அச்சத்தை ஏற்படுத்துவது அல்லது பிளவினை உண்டாக்குவது அல்லது பொது அமைதிக்குக் கேடு செய்வது - அதுதான் பயங்கரவாத நடவடிக்கை " என்று வரையறை செய்திருக்கிறார்கள். கோகுல்ராஜ் படுகொலை எப்படி நடந்தது ? அவர் பொறியியல் பட்டதாரி , அவர் எந்தப் பெண்ணையும் காதலிக்கவில்லை, அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, வீட்டைவிட்டு ஓடிவிடவில்லை. நண்பர்களாகப் பழகியிருக்கிரார்கள்.அவரைப் பிடித்துப் போய் அவரை மிரட்டி தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதவைத்து , தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அவரை மிரட்டிப் பேசவைத்து அதை வீடியோ எடுத்து அதற்குப் பிறகு தலையை அறுத்துப் படுகொலை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக் கொலைகளுக்கும் , சாதிவெறிப் படுகொலைகளுக்கும் கோகுல்ராஜ் படுகொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்று உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் 
ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் கையாளும் டெக்னிக்கைப் பயன்படுத்தி கோகுல்ராஜைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே பேச வைத்து வீடியோ செய்து அதன் பிறகு கழுத்தை அறுத்திருக்கிறார்கள். இது வெறும் வன்கொடுமை என்ற விளக்கத்தில் அடங்காது. இது பயங்கரவாதக் குற்றம் . இத்தகையப் படுகொலைகளை வன்முறையை சாதிப் பயங்கரவாதம் என்றுதான் அழைக்கவேண்டும். இப்படியான குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கவேண்டும் என நாம் வற்புறுத்தவேண்டும். சாதிய வன்கொடுமை அல்ல , இது சாதிப் பயங்கரவாதம். மதத்தின் அடிப்படையில் செய்தால்தான் பயங்கரவாதமா ? சாதியின் அடிப்படையில் செய்யப்படும் இப்படியான திட்டமிட்டப் படுகொலைகள் பயங்கரவாதம் ஆகாதா ? இதனால் மக்களிடையே பிளவு உண்டாகவில்லையா ? இதனால் பொதுமக்களிடம் அச்சம் உருவாகவில்லையா ? இந்த சாதிப் பயங்கரவாதிகளை அனுமதித்தால் அது தலித்துகளுக்கு மட்டும் ஆபத்து இல்லை, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆபத்து. ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் எப்படி சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொன்று ஒழிக்கிறார்களோ அப்படி இந்த சாதிப் பயங்கரவாதிகள் தமது சுய நலத்துக்காக தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களையும் கொலை செய்வார்கள். இந்த சாதிப் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தவறினால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்காது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். அதற்கு இந்தப் போராட்டம் வழிவகுக்கும் என நம்புகிறேன், வணக்கம். 

(28.09.2015 அன்று கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை )




No comments:

Post a Comment