வணக்கம்
====
`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`
திமுக தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
ஆளுநர் ஆட்சி என்ற சிறு குறுக்கீடுகளைத் தவிர திமுகவும் அதிலிருந்து உருவான அதிமுகவும் தான் இந்த மாநிலத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்துள்ளன.
திமுக, அதிமுக இரண்டும் பொதுவாக 'திராவிடக் கட்சிகள்' என அழைக்கப்பட்டாலும் அரசியல் அணுகுமுறைகளில் அவற்றுக்கிடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது.
பிராமணரல்லாதார் இயக்கம், நீதிக் கட்சி ஆகியவற்றின் கருத்தியல் தொடர்ச்சியை திமுகவின் ஆட்சி நிர்வாகத்தில் பார்க்கலாம்.
அதற்கு மாறாக, அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரின் கவர்ச்சிவாத (Populism) அரசியலை அதிமுக ஆட்சி நிர்வாகத்தில் காணலாம்.
1967 -2017 க்கு இடைப்பட்ட அரை நூற்றாண்டுகால ' திராவிடக் கட்சிகளின் ' ஆட்சியை தலித் நோக்கில் மதிப்பிடவேண்டுமெனில் இந்த இரு கட்சிகளின் அடிப்படையாய் அமைந்த பிராமணரல்லாதார் அரசியலையும், கவர்ச்சிவாத அரசியலையும் நாம் தனித்தனியே ஆராய்ந்தாகவேண்டும்.
தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பு ஏன்?
கடந்த ஐம்பதாண்டுகளில் தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் ஒப்பீட்டளவில் உயர்ந்து வந்திருக்கிறது எனினும் அதிகாரத்தை சுவைப்பதிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், திமுக பின்பற்றிய பிராமணரல்லாதார் அரசியல் தலித்துகளை விலக்கி வைத்து வஞ்சித்தது, அதிமுகவின் கவர்ச்சிவாத அரசியலோ தலித்துகளை உள்வாங்கி ஒழித்துக்கட்டியது.
பிராமணரல்லாதார் அரசியலும் தலித்துகளும்
பிராமணரல்லாதார் அரசியல் துவங்கிய காலந்தொட்டே தலித்துகளை உள்ளடக்குவதில் அக்கறை காட்டவில்லை.1906 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பி. சுப்பிரமணியம் மற்றும் எம். புருசோத்தம் நாயுடு ஆகியோர் இணைந்து 'தி மெட்ராஸ் நான் பிராமின் அசோசியேசன்' என்ற அமைப்பை உருவாக்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்த காரணத்தால் 1916இல் வெளியிடப்பட்ட 'பிராமணரல்லாதார் பிரகடனமே' பின்னாளில் வந்த திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
SEBASTIAN D'SOUZA/AFP/GETTY IMAGESஅந்தக் கொள்கைப் பிரகடனத்தைத் தொடர்ந்து 1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை விக்டோரியா மன்றத்தில் கூடிய 'பிராமணரல்லாத' சாதிகளைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் அரசியல் இயக்கமொன்றைத் துவங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (சவுத் இண்டியன் லிபரல் ஃபெடரேசன்) எனப் பெயரிடப்பட்ட அந்த இயக்கத்தின் சட்டதிட்டங்களில், "பிராமணரல்லாதார்' என்ற சொல் முகமதியர்கள் இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் இங்கே வாழும் ஐரோப்பியர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த இயக்கத்தின் குறிக்கோளிலோ, உறுப்பினர் தகுதி பற்றிய விளக்கத்திலோ,பிராமணரல்லாதார் யார் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறையிலோ தலித்துகள் உள்ளடக்கப்படவில்லை.
பிராமணர் அல்லாதார் இயக்கம் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கோருவதாக இருந்ததே தவிர சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லை. அதனால்தான் பிராமணரல்லாதார் என்ற வகைப்பாட்டை துவக்கத்திலேயே அயோத்திதாசப் பண்டிதர் கேள்விக்குட்படுத்தினார்.
சாதி ரீதியான ஜனத்தொகை கணக்கெடுப்பு தேவையா?
" சாதி ஆச்சாராங்களையும் சமய ஆச்சராங்களையும் தழுவிக் கொண்டே 'நான் பிராமின்ஸ்' ( Non Brahmins ) என்று சங்கம் கூட்டியிருக்கின்றனரா அன்றேல் சாதியாசாராங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து 'நான் பிராமின்ஸ்' என்ற சங்கம் கூடியிருக்கின்றனரா விளங்கவில்லை….. பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு நான் பிராமின்ஸ் எனக் கூறுவது வீணேயாகும்" , என்று அவர் விமர்சித்தார் ( தமிழன், செப்டம்பர் 15, 1909 )
பிராமணரல்லாதார் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உருவெடுத்த நீதிக்கட்சி, 1920ஆம் ஆண்டில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.
அந்த ஆட்சி, தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அக்கறை காட்டாதது மட்டுமின்றி, 1921 ல் நடைபெற்ற பி அண்டு சி மில் போராட்டத்தின்போது தலித்துகளை சென்னை நகரைவிட்டே வெளியேற்றவும் முயற்சித்தது என அப்போது தலித் மக்களின் நாடறிந்த தலைவராக விளங்கிய எம். சி. ராஜா குற்றம் சாட்டினார் (The Oppressed Hindus, The Huxley Press,Madras,1925 )
திமுகவும் தலித்துகளும்
1967 ல் திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளிலும் பிராமணரல்லாதார் முக்கியத்துவம் பெற்றனர்.
அரசியல் அதிகாரத்தின் ருசிகண்டதாலோ என்னவோ பிராமணரல்லாதார் தமது வலிமையை சமூகப் படிநிலையில் தமக்குக் கீழிருந்த மக்கள்மீது சோதித்துப் பார்க்கத் தலைப்பட்டனர்.
அதன் விளைவாகவே உலகத்தையே அதிரவைத்த கீழ்வெண்மணிப் படுகொலை (1969) நிகழ்த்தப்பட்டது.
REUTERSஅந்தக் கொலைகாரர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்குக்கூட அன்றைக்கிருந்த திமுக ஆட்சி அக்கறை காட்டவில்லை. அதனால்தான் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேரையும் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்யும் நிலை ஏற்பட்டது.
திமுக ஆட்சியிலிருந்த சுமார் 22 ஆண்டுகளில் தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த பள்ளிகளை உருவாக்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல், குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல், உயர்கல்வி பெறுவதற்கு லோன் ஸ்காலர்ஷிப், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி - எனப் பல்வேறுவிதமான நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மைதான்.
அந்த நலத் திட்டங்கள் தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்பட்டன என்பதையும் மறுக்கமுடியாது.
ஆனால் தலித் மக்களை அரசியல்ரீதியாக அதிகாரப்படுத்துவதில் திமுக போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தவில்லை.
கட்சியில் வலிமைவாய்ந்த மாவட்டச் செயலாளர் பதவிகளிலோ, ஆட்சியில் அதிகாரம் வாய்ந்த துறைகளிலோ தலித்துகளுக்கு போதிய வாய்ப்புகளை திமுக அளிக்கவில்லை. அரசு வேலை வாய்ப்புகளிலும்கூட தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு திமுக ஆட்சிக்காலங்களில் சரிவர நிறைவுசெய்யப்பட்டதே இல்லை.
தலித்துகளை நோக்கிய திமுகவின் அணுகுமுறை பெரும்பாலும் அடையாளவாதமாகவே (Tokenism ) நின்றுபோய்விட்டது.
அதுமட்டுமல்லாது திமுக ஆட்சிக் காலங்களில் வலிமைபெற்ற இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம், கிராமப்புறங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அதிகரிக்கச்செய்தது.அதனால் திமுகவை தமக்கான கட்சியாக தலித் மக்களால் உணரமுடியாது போயிற்று.
கவர்ச்சிவாத அரசியலும் தலித்துகளும்
திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆருக்கு இருந்த சினிமா செல்வாக்கு தலித் மக்களை அக்கட்சியை நோக்கி ஈர்த்தது.
அதுவரை பெரும்பாலும் காங்கிரஸின் ஆதரவாளர்களாக இருந்த தலித்துகள் அதிமுகவின் வாக்குவங்கியாக மாறினர்.
ஆனால், தனக்கு மிகப்பெரும் ஆதரவு சக்தியாக இருந்த தலித்துகளை எம்ஜிஆர் அரவணைக்கவில்லை. மாறாக திமுக உயர்த்திப்பிடித்த அதே பிற்படுத்தப்பட்டோர் அரசியலைத்தான் அவரும் பின்பற்றினார்.
REUTERSகட்சியிலும் ஆட்சியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கே முக்கியமான பதவிகளை அளித்தார். அதே நேரத்தில் கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிமுகப்படுத்தி தலித் மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டார்.
கவர்ச்சிவாதம் என்பது திராவிட இயக்கத்தின் கருத்தியலிலேயே கலந்திருந்த ஒன்றுதான் என்ற போதிலும் எம்ஜிஆர் கையாண்ட கவர்ச்சிவாதம் தனித்தன்மை கொண்டது.
நேரடியாக வெகுமக்களோடு தொடர்புகொள்ளும் ஆற்றல் வாய்ந்த, ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர், அதிகாரம் அனைத்தையும் தன் கையில் குவித்துக்கொள்வது என்ற புதுவிதமான கவர்ச்சிவாதத்தை எம்ஜிஆர் கையாண்டார்.
சர்வாதிகாரத்தன்மையை உள்ளீடாகக்கொண்ட அந்த கவர்ச்சிவாதம் வெகுமக்களை செயலற்ற மந்தைகளாக சுருக்கியது. அப்படி சுருக்கப்பட்ட மக்கள் திரள் ஒரு அவதாரப் புருஷராக, தமது மீட்பராக அவரைக் கண்டது.
அவர்களுக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட அல்ல, தமது மீட்பரின் தரிசனம் மட்டுமே.
தமது காட்சிக்காக தவம் கிடந்த மக்களை நோக்கி தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளோடு சில இலவச திட்டங்களையும் எம்ஜிஆர் அவ்வப்போது வீசிக்கொண்டிருந்தார்.
அதிலேயே அவர்கள் ஆறுதல் கண்டனர். இலவச பல்பொடி, இலவச செருப்பு, இலவச மதிய உணவு என சிறுவர் முதல் பெரியவர்கள்வரை இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் இரவலர்களாக மாற்றப்பட்டனர்.
அந்த மயக்கத்தில் மக்கள் ஆழ்ந்திருந்த நேரத்தில் இன்னொருபுறம் வரம்பற்ற சுரண்டலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவற்றை எதிர்த்து உரிமைகளுக்காகக் குரலெழுப்பியவர்கள் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர்.
எம்ஜிஆர் பின்பற்றிய அதே நடைமுறைகளை மேலும் மூர்க்கத்தோடு செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
விளிம்புநிலை மக்களுக்காகப் பேசுதல், அவர்களை மையநீரோட்ட அரசியலுக்குள் கொண்டுவருதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துதல் என்பன போன்ற கவர்ச்சிவாதத்தின் சாதகமான பண்புகளை ஒதுக்கிவிட்டு, அடிப்படை உரிமைகளைப் புறக்கணித்தல், சிறுபான்மையினரின் உரிமைகளை அலட்சியப்படுத்துதல் உள்ளிட்ட அதன் எதிர்மறை அம்சங்களையே ஜெயலலிதா அதிகம் பயன்படுத்திக்கொண்டார்.
சாதிப் பெரும்பான்மையிலிருந்து சமயப் பெரும்பான்மைக்கு
சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மக்களின் கைகளுக்கு அதிகாரம் வரவேண்டும் என்பதைத்தான் பிராமணரல்லாதார் இயக்கமும், திராவிட இயக்கமும் வலியுறுத்தின.
அவர்கள் விரும்பியபடியே இன்றைய தமிழ்நாட்டில் ஏறக்குறைய பிராமண ஆதிக்கம் துடைத்தெறியப்பட்டு, பெரும்பான்மை சமூகக் குழுவாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோரின் கைகளில் சமூக, அரசியல், பொருளாதார,ஊடக அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
'சாதி,மத பாகுபாடுகளுக்கு இடமில்லை': இந்தியப் பிரதமர்
திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் பலம்பெற்றிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் என்னும் இந்த சமூகப் பெரும்பான்மையானது சமயச் சார்பின்மையை உள்ளீடாகக் கொண்டதும், சமத்துவத்தை ஊக்குவிப்பதுமான 'அரசியல் பெரும்பான்மையாக' ( Political Majority ) செயல்படவில்லை.
மாறாக, அம்பேத்கர் சுட்டிக்காட்டிய 'வகுப்புவாதப் பெரும்பான்மையாகவே' (Communal Majority ) அது தன்னைக் கட்டமைத்துக்கொண்டுள்ளது.
அதைத்தான் ஆணவக் கொலைகள் , வெறுப்புப் பிரச்சாரம் முதலான அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு அரசியலுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் உகந்தவாறு திராவிட அரசியல் மறுவார்ப்பு செய்யப்படவில்லையெனில், கடந்த ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியால் வலுப்பெற்றிருக்கும் சாதிப் பெரும்பான்மைவாதம் தன்னை சமயப் பெரும்பான்மைவாதமாக உருமாற்றிக்கொள்வதை எவராலும் தடுக்க முடியாது.
http://www.bbc.com/tamil/
No comments:
Post a Comment