Showing posts with label rape. Show all posts
Showing posts with label rape. Show all posts

Monday, January 7, 2013

பாலியல் வன்கொடுமை : புதுச்சேரி அரசின் புதுமைத் திட்டம்



கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட புதுச்சேரி பள்ளி மாணவி பிரச்சனை பல்வேறு போராட்டங்களுக்குக் காரணமாகியிருக்கிறது .அதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு அறிவித்த - செல் பொங்கலுக்குத் தடை, மாணவிகளுக்குத் தனிப் பேருந்து , அவர்களின் யூனிபார்மின் மீது ஓவர்கோட் - என்ற அறிவிப்பு பலரது விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது.
பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் நிகழ பெண்களே காரணம் என்ற ரீதியில் அடிப்படைவாதிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல் ஜெய்ப்பூர் சாமியார் வரை அப்படித்தான் பேசியுள்ளனர். பெண்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை முடக்கிப் போடும் இவ்விதமான கருத்துகள் மிகவும் ஆபத்தானவை . புதுச்சேரி செய்தியை மடல் குழுவில் இட்டிருந்தேன். அதையொட்டி வந்த எதிர்வினைகளை  இங்கே பாருங்கள் :

நாக இளங்கோவன் : 
எதனாச்சும் இடக்குமடக்கான திட்டங்களைக் கூட்டத்தைக் கூட்டி

அறிவித்துவிட்டால் போதும் என்பதே அரசாங்கங்களின் போக்காக
இருக்கிறது. இதைவிட, ஆண்கள் வெளியே போகும்போது
இரும்புக் கோவணம் கட்டி, அதைப் பூட்டி, திறக்குச்சியைக் காவல்துறையிடம்
கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்ற சட்டம் வந்தால் இன்னும் நல்லா இருக்கும் :-))
அரசு, ஆட்சி, அரசாங்கம் என்று போய்விட்டால் ஏற்படும் மூளைவறட்சி 
ஆராயப்படவேண்டிய ஒன்று. 
both the sides have inverse relationship it seems :(

தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் : 


புதுச்சேரியின் திட்டத்தைக் கிண்டலிக்க எனக்குத் தோன்றவில்லை. ஆண், பெண் இருவருடைய உடையிலும் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று தோன்றுகிறது. இப்போது இருக்கும் உடைகளையும் எப்படி ஒழுங்காக அணிவது என்று பெண்களுக்குச் சொல்லித்தரவேண்டும்!!! அந்தத் துப்பட்டாவோ என்னவோ இருக்கிறதே ... அதன் நோக்கம் என்ன, அதை எப்படி ஒழுங்காக அணியவேண்டும் என்றே பெண்களில் பலருக்கும் தோன்றுவதில்லை! கால் வீசி நடக்க வசதியாக இருக்கும் கால் உடுப்பு நல்லதே. அவசரத்தில் ஓடுவதற்கும் உதவுகிறது. ஆனால் அந்தத் துப்பட்டா இருக்கே ... அது மறைக்கவேண்டிய உறுப்புகளை மறைக்கும்படிப் பலரும் அணிவதில்லையே! கொடுமை, கொடுமை. 
  

ஆனால் உடுப்பு மாற்றத்தோடு, அடிப்படையான மாற்றம் ஏற்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது. பாலியல் உணர்வு, ஈர்ப்பு, உணர்வும் ஈர்ப்பும் கட்டுக்கடங்காமல் போனால் உண்டாகும் கொடுமைகள், யார் யார்க்கு என்ன இழப்பு, துன்பம், துயரம் ... போன்றவை பற்றிப் பள்ளிகளில் பாடத்திட்டம் உண்டாக்கலாம். ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக்கொடுக்கலாம். திரைப்படங்களில் ஆண் பெண்ணைக் கலாட்டா செய்யும் காட்சிகளையும், ஆண்களை ஈர்க்கப் பெண்கள் ஆட்டம் போடும் காட்சிகளையும் அனுமதிக்கக் கூடாது.  தொடக்கநிலைப் பள்ளியிலிருந்தே பெண்களுக்கு ஏற்ற வகையில் தற்காப்புப் பயிற்சியை  (கராத்தே, கங்ஃபூ, வர்மக்கலை .. போல) ஒரு கட்டாய பாடமாகக் கொண்டுவரவேண்டும். இப்படி, உருப்படியாக நினைத்துச் சிறிதளவாவது செயல்படுத்தலாம்.    

ஒரு சிறு குறிப்பு: இங்கே அமெரிக்காவில் ஒரு சிறு குழந்தை கூட (ஆணோ பெண்ணோ) அயலவர் எவரையும் தன்னைத் தொடவிடாது. பிற்காலத்தில் rape அது இது என்று நடப்பது வேறு. தன் துணையைத் தானாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாய நிலையில் நடக்கும் செய்திகள் வேறு. ஆனால் குழந்தைப் பருவத்திலேயே இந்தப் "பயிர்ப்பு" உணர்ச்சியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்தப் "பயிர்ப்பு" எல்லாம் தமிழகத்திலும் இருந்ததுதானே. ஆனால், அது பெண்ணுக்கு மட்டும் என்று சொன்னவர்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். கொடுமை. 

கொஞ்சம் பழங்கதை பேசுகிறேன்; பேசித்தான் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்.  

முசிபூர் இரகுமான் (முஜிபூர் ரஹ்மான்) காலத்தில், வங்காளத்தில் கலவரம் உண்டான காலத்தில் என்று நினைக்கிறேன், நான் கல்லூரியில் தமிழாசிரியை. பெரியபுராண வகுப்பு; பிள்ளைக்கறி சமைத்த சிவனடியார் சிறுத்தொண்டர் புராணம் பாடம். சிவனடியாருக்காகத் தாய் தந்தை அறுத்துக் கறி செய்த 5-வயதுச் சிறுபிள்ளையை, "சீராளா, வாராய்" என்று அழைத்தவுடன் உயிரோடு பள்ளியிலிருந்து திரும்பினான் சிறுபிள்ளை என்று பாடம் சொல்லவேண்டியிருந்தது.

பக்தி, இலக்கிய, நயம் எல்லாம் உணர்ந்து உரைத்த பிறகு உள்ளுணர்ச்சி வெளிப்பட்டுவிட்டது; சொன்னேன்: 'உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் இருந்தால் ... இப்போது வங்காளத்தில் கற்பழிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் நிலையையும் உணருவான். ஒரு பெண்ணை அவள் வேண்டாத வகையில் பார்த்து, தொட்டு, அவளைக் கற்பழிக்க முயலும் ஒவ்வோர் ஆணின் உடலும் அந்தந்த நேரத்தில் அப்படி அப்படியே மரத்துப் போகவேண்டும்; இதைச் செய்யாத கடவுள் என்ன கடவுள்?' கண்ணீரும் நெஞ்சு நெகிழ்வும் குரலை அடைக்க, நல்லவேளை வகுப்பு முடிந்தது. இடைவேளை நேரத்தில் சில மாணவியர் என்னைத் தேடிவந்து மிகவும் அன்போடும் கவலையோடும் கேட்டார்கள்: 'மிஸ், நீங்க நாத்திகரா?' எனக்குச் சிரிப்பு வந்தது. பிறகு அவர்களுக்குப் பெண்களின் கவலைக்குரிய நிலையை எடுத்துச் சொன்னேன்: சீராளனை உயிர்ப்பித்த கடவுள் இன்று இல்லை. இருக்கும் கடவுளர்க்கும் வேறு வேறு கவலைகளும் பொறுப்புகளும் இருக்கும்; கற்பழிப்புப் பற்றி என்ன கவலை? அதனால், இழிந்த நிலையில் இருக்கும் பெண்களே தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். இதுக்கெல்லாம் கடவுள் உதவமாட்டார்.  

கடவுளைக் குற்றம் சொல்லி என்ன பயன்? பெரும்பாராட்டுக்குரிய நம் பண்டைத் தமிழக அரசர்களே பிற நாட்டை வென்ற செருக்கில் அந்தந்த நாட்டு மகளிரைக் "கொண்டி மகளிர்" என்ற பெயரில் கொண்டுவந்து ... பிற்காலத்தில் அவர்களைத் தேவதாசி ஆக்கியவர்கள்தாமே! பெண்ணைத் தன் இன்ப நுகர்ச்சிக்காகக் கையாளுவது தமிழினத்துக்குப் புதிதில்லையே!!!  


அது கிடக்கட்டும். 
இந்தக் கால நிலையைப் பார்த்தால் ...

தலை முதல் அடிவரை, விண்வெளிப் பயணம் போகிறவர்களைப் போல ஓர் இரும்புக் கூட்டுக்குள் பூட்டிவைத்துத்தான் சில ஆண்களை வெளியே அனுப்பவேண்டும். அவனுடைய முயற்சி இல்லாமல், அவனுக்கு என்று வாய்த்த பிறவியில் கிடைத்திருக்கிற ஆணுறுப்பு மட்டுமில்லை, அவனுடைய தோளும் கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதை என் 40 வயதுக்கும் மேல் எனக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியின், அதுவும் மதுரை மீனாட்சி கோயிலுக்குத் தொட்டடுத்த ஒரு தெருவில் நடந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் வைத்துச் சொல்கிறேன். சில மருத்துவர்கள்கூடக் கேவலமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். எந்த வயதுப் பெண்ணையும் எந்த ஓர் அயலவனும் முறையில்லாமல் தொடக்கூடாது. அதுவும் ... தெருவில் ... 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணின் மார்பகத்தை இடித்துப் போவதனால் ... நாசமாய்ப் பாழாய்ப் போகிற ஒருவனுக்கு (இந்த வகை இழிமொழியைப் பொது மன்றத்தில் பயன்படுத்துவதற்கு அன்புகூர்ந்து மன்னிக்கவும்; பொறுக்காத, மறக்காத, ஆறாத புண்பட்ட நெஞ்சு அப்படித்தான் எழுதவைக்கிறது.) என்ன சுகம் கிடைத்ததுவோ? என் உடலைத் தொட அந்தத் தடியனுக்கு என்ன உரிமை? கத்தினேன்; என்னால் செய்ய முடிந்தது அவ்வளவே. அப்போது நினைத்தேன் ... என் புடைவையில்/ரவிக்கையில் ஒரு முள்வேலி இருந்திருந்தால் இந்தத் தடியனுக்கு ஆகா எவ்வளவு சுகமாக இருந்திருக்கும் என்று. மனதில் அவனை முள்வேலியால் சுற்றிச் சுழற்றி உருட்டிப் புரட்டிப் பார்த்தேன்;  அவ்வளவே. 
கல்லூரிக் காலத்தில் நானே நினைத்திருக்கிறேன் ... மருத்துவர்கள் அணிகிற மாதிரியே எல்லாப் பெண்களுக்கும் ஒரு மேலாடை இருந்தால் ... தேவையில்லாத "நோக்கு" என்பதைத் தவிர்க்கலாமே என்று.

மேலே நான் குறிப்பிட்டதுபோல ... அடிப்படை மாற்றம் வேண்டுவது எண்ணத்தில், மக்களைப் பார்க்கும் பார்வையில்.

நாக இளங்கோவன் :
அன்பின் அம்மா,
தங்கள் நேரிய கருத்துகளோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. பெரியபுராணம் உட்பட.
உடை விதயத்தில் மேலும் முன்னேற்றம் செய்யலாம் என்றாலும் எனக்கு அதன்பால்
பெரிய நம்பிக்கை இல்லை. தங்கர் பச்சானின் புதினம் ஒன்று படித்தேன். பெயர் குடிமுந்திரி என்று நினைவு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் படித்தது. அதில், ஒருவன்
காமம் முற்றிப்போய், பசுமாட்டை வஞ்சமாக மரங்களிடைச் சிக்கவைத்துப் புணர்ந்து விடுகிறான். பல நாள் கோபத்தை உள்ளே அடக்கிக் காத்திருந்த அந்தப் பசு ஒருநாள் அவனை முட்டிக் கொன்று விடுகிறது. இது யாருக்கும் தெரியாமல் இருப்பதாகக் கதை போகும். அண்மையக் கற்பழிப்புச் செய்திகளைப் படிக்கும்போது எனக்கு இதன் நினைவுதான் வந்தது. இந்த மனித உணர்வு நோயா? ஆணவமா? விலங்கு குணமா? என்று பார்த்தால் இதன் மொத்த உருவமாகவே தெரிகிறது. ஆனால், அந்தக் கதை ஒரு செய்தியை உள்வைத்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. அவனின் தேவைக்கு மனிதபெண்களைத் தேடாமல் விலங்கைத் தேடிச்சென்றது - அச்சத்தின் காரணமாகவே இருக்கக்கூடும். அமெரிக்கா, சிங்கை போன்ற இடங்களில் சட்டம் சரியாக வேலைசெய்கிறது. அங்கே என்ன கல்வியைக் கொடுத்தாலும் அது முறையாகப் போய்ச்சேரும். இங்கே சூழல் மிக மோசமாக இருக்கிறது, அரசாங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு எதையாவது செய்கிறார்களே தவிர, அவர்களால் அவர்களையும்
கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை; காட்டுமிரண்டிகளையும் கட்டுப்படுத்த 
இயலவில்லை. சட்டமும், காவலும் மக்களால் மக்களுக்காகச் செய்யப்படுபவைதான்.
காவல் நிலையத்திலும் வழக்குமன்றத்திலும் பிழையான நிலைகளை மக்கள் வைத்துக்கொண்டு அதே மக்கள் குமுகத்தில் வேறொரு நிலையை எதிர்பார்ப்பது
என்பது மிக முரணான விதயம். இந்த முரண்பாட்டுக்காரர்களுக்காக அப்பாவி மக்களாகிய நாம் என்னென்னவோ தற்காப்புகளைச் செய்து கொண்டே போவது
அவர்களை மேலும் மேலும் வளர்த்துவிடவே செய்கிறது என்று கருதுகிறேன்.
தில்லிப் பெண்ணழிப்பு பற்றி இந்தியாவே கதறியது. ஆனால், எண்ணிப்பாருங்கள்
அந்தக் காடையர்களில் யாரோ ஒருவன் செல்வாக்குள்ள அரசியல் கட்சியினராகவோ பெரிய அதிகாரியாகவோ  இருந்திருந்தால் இந்தியாவை இந்த அளவுக்குச் சிந்திக்கவிட்டிருக்கமாட்டார்கள்.  ஏடுகளைத் திறந்தால் திடீர் ஞானவானாக
எங்கு பார்த்தாலும் இது போன்ற செய்திகளை எழுதுகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் விழா, அது இது என்று காலத்தை ஓட்டி 
வேறொரு புதுச்சரவலைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அரசு, மக்கள்
எல்லாருமே அதற்குப் பழகிவிட்டார்கள்.

இன்றைக்கு இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்காக வேலை செய்தாலே
போதும். வேறு ஏதும் புதிதாகச் செய்யவேண்டியதில்லை. அதைச்
செய்ய எந்த அரசுக்கும் துப்பு இல்லை. அப்படியே அந்தச் சட்டம்
வேலை செய்தாலும் அது சாதி, மதம் என்றவற்றையும் தாண்டி
பணத்திற்கு வேலை செய்கிறது. கோவையில் கொடுமையான
சிறுமி, சிறுவனைக் கெடுத்துக் கொன்று போட்டார்கள். 
மிகக் கேடான செயல்தான். 5 நாள்களுக்குள் கொலைகாரர்களை
காவல்துறையே சுட்டுக் கொன்று தண்டனை கொடுத்தது.
ஏனென்றால் மார்வாடி குமுகங்களின் அழுத்தம். இதே
சாதாரண மக்களுக்கு ஏற்பட்டிருந்தால் அரசும் காவல்துறையும்
கண்டு கொள்ளாது. இந்த நிலையில், கையாலாகாத இவர்களால்
நாம் எத்தனைதான் நம்மை மாற்றிக் கொள்வது? என்ற கேள்வியே
என்னுள் எழுகிறது.

இந்த மூடர்களுக்காக நாம் நம்மை மாற்றி மாற்றிக் கொள்ள
அவர்கள் முரடர்களாகவே தொடர்கின்றனர். ஆயினும், 
இதில் இருந்து மீள எனக்கு வழிதான் தெரியவில்லை.

பெரிய புராணம் பற்றி பின்னொரு முறை மேலும் பேச ஆசை. சிறுத்தொண்டர் புராணம்
உள்ளிட்ட வேறும் சில புராணங்கள் மிகவும் நெருடலானவை. சேக்கிழார்
எழுதுவதற்கு முன் பல ஆண்டுகள் ஓடி பல குழறுபடிகளின் வடிப்பாக
அவை தெரிகின்றன. சில கதைகள் சொல்லும் செய்திகள் நீங்கள் சொல்வது போல
இறைவன் தன்மைக்குச் சிறிதும் பொருத்தமில்லை. அதுவும் சிவத்திற்குச் சிறிதும்
பொருத்தமானதில்லை.

தங்களுக்கு நேர்ந்த அவலம், மிகவும் கொடுமையானது. தமிழ் நாட்டில் பல
பண்பாட்டு வழக்கங்கள் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை. 
பெண்களிடம் மாமன்-மச்சான் விளையாட்டுகள், பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு இயல்பாக வருகின்ற "ராகிங்" என்ற வன்முயற்சி, சாதிகளில்
இருக்கின்ற பெரிய-சின்ன எண்ணங்கள், எல்லாவுமே ஆயப்படவேண்டியவை.

சாதாரண திரைப்படங்களில் கூட, நகைச்சுவை, தமிழனுக்கு எப்ப வருகிறது என்றால்
கதைநாயகர், இன்னொரு கோமாளியை அடித்து, அவமானப்படுத்தினால்தான்
தமிழனுக்குச் சிரிப்பே வருகிறது என்பது நிச்சயம் மகிழத்தக்க விதயமில்லை.
தரங்கெட்ட செயல் சாதாரண நகைச்சுவையாக எண்ணி மகிழும் குமுகம்
சரியான அறிவைக் கொண்டிருக்க வாய்ப்பில்லையல்லவா?

Puducherry Govt's strange idea




Sunday, December 30, 2012

கற்பில் காணும் பண்பாட்டு அரசியல் - இந்திரா பார்த்தசாரதி


                  



அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டுப் போலிப் பண்பாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, மிகவும் அவதியுறுகிற சொல், ‘ கற்பு’.

‘கற்பு’ என்றால் என்ன?

‘கல்’ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு’, ‘கல்வி’ போன்ற சொற்கள்.
‘கல்’ என்றால், ‘தோண்டுதல்’. ஆங்கிலச் சொல், ‘ cultivate’, ‘culture’ போன்ற சொற்களும் இந்தத்’ தோண்டுதலை’ (‘உழுதல்’- லத்தீன்-cultivatus)  அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம்.

கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு’. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு’தான். ‘பெரிய திருமொழியில்’ (திருமங்கைமன்னன்), ‘கற்பு’ என்ற சொல் ‘பெரிய ஞானம்’ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது.

‘ஆழி ஏந்திய கையனை, அந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே’.

‘அந்தணர் கற்பு’ என்றால் ‘சான்றோர் ஞானம்’ என்ற பொருள்.

அகத்திணை ஒழுக்கத்தில் ‘களவு’க்குப் பிறகு, ‘கற்பு’.

‘களவு’ என்றால் என்ன?

தொல்காப்பியம் கூறுகிறது:

‘ இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே’

இன்பமும், பொருளும், அறனுமென்று கூறப்பட்ட மூவகைப் பொருள்களுள், முதன்முதல் சந்திக்கும், திருமணம் ஆகாத இளம் ஆண், பெண் ஆகிய இருவரிடையே தோன்றும் அன்பின் விளைவாக ஏற்படும் இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகைப்பட்ட ஒழுக்கம். ‘காமக் கூட்டம்’ என்பது, ‘புணர்தலை’க் குறிக்கும்.

வேதத்துள் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுவகை மணங்களுள், ‘களவு’, ‘கந்தர்வத்’ திருமணமாகும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. ‘கந்தருவ குமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது,’ என்கிறார் நச்சினார்க்கினியர். சகுந்தலையும் துஷ்யந்தனும் வனத்தில் சந்தித்துப் புணர்ந்தது கந்தர்வம்.

‘கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும்; ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாதென்றற்குத் ‘துறையமை’ என்றார்’ என்று மேலும் கூறுகிறார் நச்சினார்க்கினியர்.

‘கற்பின்றி’ என்றால் என்ன பொருள்? ‘கற்பு’ என்றால் திருமணம். மக்களைப் பொருத்த வரையில், களவொழுக்கம் பயிலுகின்ற தலைவனும் தலைவனும் திருமணம் செய்துகொண்டாக வேண்டும். கந்தருவர்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது. அதே சமயத்தில், திருமணத்துக்கு முன்பு, களவொழுக்கத்தில் இருக்கும் தலைவனும் தலைவியும் புணர்தல்( உடலுறவு) குறித்துச் சமூகத் தடை ஏதுமில்லை.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே’

தலைவன், தலைவி ஆகிய இருவருடைய பெற்றோர்கள், இருவருக்கும் களவுக்குப் பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கே ‘கற்பு’
எனப்படும். ‘கற்பியல்’ என்று தொல்காப்பியத்தில் வரும் பகுதியில், திருமணத்துக்குப் பிறகு, தலைவன், தலைவி, தோழி, போன்றோர் எந்தெந்தச் சூழ்நிலையில் பேசுவார்கள்
என்ற செய்திகள் அனைத்தையும் நாடகக் காட்சிகள் போல் சித்திரித்துக் கூறப்படுகின்றன.

‘கற்பியலில்’, ஊடல் பற்றியும்( கணவனுடைய பரத்தையர் தொடர்பின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே உண்டாகும் பூசல்கள்) , கணவன் பொருள் தேடவோ அல்லது உயர்கல்வி படிப்பதற்கோ அல்லது அரசு காரியமாகவோ மனைவியிடமிருந்து பிரிந்தால் அப்பிரிவு பற்றியும், பிரிந்திருக்கும் காலத்தில் மனைவியின் பொறுமை காத்து இருத்தல் பற்றியும் பேசப்படும். புணர்ச்சியைப் பற்றிய செய்தி ‘கற்பியலில்’, நினைவு கூர்தலாகக் கூறப்படுமே யன்றி, நிகழும் செயலாகச் சித்திரிக்கப்படவில்லை. . அதாவது, திருமணத்துக்கு(கற்புக்கு) அடிப்படையான, தலைவன் -தலைவிக்கிடையே நிகழும் புணர்ச்சி (உடலுறவு) திருமணத்துக்கு(கற்பு) முந்திய ஒழுக்கமாகிய ‘களவிலேயே’ கூறப்பட்டுவிடுகிறது என்பது பொருள்.
களவொழுக்கத்தின்போது, புணர்ச்சியில் (உடலுறவு) இருந்த romance திருமணத்துக்குப் பிறகு இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

களவொழுக்கத்தின்போது என்ன நிகழ்கிறது?

‘ மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்
இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடுநினைந்திரங்கல் கூடுதலுறுதல்’
எண்று கூறுகிறார் தொல்காப்பியர்.

இதற்குச் சான்றாகக் குறுந்தொகைப் பாடலை எடுத்துக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர்.

‘ஒடுங்கீரோதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே
இனையள் என்றவள் புனையளவு அறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே’

இப்பாடல், புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது

‘தலைவியைத் தழுவும் போது , கூந்தலாலும், நெற்றியாலும், மெய்யெங்கும் பரவியுள்ள இனிமையாலும் கண்ணிற்கும், நல்ல நறுமணத்தால் மூக்கிற்கும், தண்ணிய நீரின் தன்மையால் வாய்க்கும் மெல்லிய சொற்கள் பேசுதலால் செவிக்கும், மெல்லிய இயல்பால் உடம்பிற்கும் கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன் இன்பங்களையும் ஒருங்கே தந்தாள். அவளைத் தழுவதழுவ, மேலும் தழுவ வேண்டுமென்ற வேட்கை உண்டாகின்றது..’

இதைப் பார்க்கும்போது, களவொழுக்கம் வெறும் platonic love தான் என்று சொல்லமுடியுமா?

இதனால், ஒருவரை யொருவர் விரும்புகின்ற ஆணும் பெண்ணும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு உடலுறவு கொள்ளுவதில் தமிழ் மரபில் எந்தவிதமான சமூகத் தடையும் இருந்தததாகத் தெரியவில்லை. கட்டில், கல்யாணத்தில் முடியவேண்டும் என்பதுதான் கட்டளை.

தொடக்கக் காலத்தில், ஓர் ஆணும் பெண்ணும் திருமணமாகி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு, இல்லறம் என்ற நல்லறம் பயிலுதலைச் கூற வந்த ‘கற்பு’ என்ற சொல், பிற்காலத்தில், பெண்ணைச் சார்த்தியே பேசப்பட்டு, அவளுடைய பதிவிரதா தன்மையும், ‘பொறுமையும்’ ( முல்லைத்திணை ஒழுக்கமாகிய ‘இருத்தல்’ என்ற பண்பு)
குறிக்க வந்த சொல்லாக மாறிவிட்டது.

இதற்கு என்ன காரணம்?

பெண்ணைக் கண்டு ஆண் அஞ்சுகிறான். அவளுடைய சக்திக்கு எல்லையில்லை என்ற பயம். அவளை அடக்கி ஆளுதல்தான் தனக்குத் தற்காப்பு என்று நினைக்கின்றான். ‘இயற்கையைப் பெண்ணாக பாவிக்கும் மனிதன், அவளைக்கண்டு அஞ்சிய நிலையில்,
சுற்றுப்புறச் சூழலை அழிப்பதின் மூலம், அவளைக் கற்பழிப்பதாக நினைத்துத் தன்
ஆளுமையையும் ஆக்ரமிப்பையும் உணர்த்துகிறான்’ என்கிறார் காப்ரா.

இந்திய ஆணின் பெண்ணைப் பற்றிய அடிமன அச்சந்தான் துர்க்கையின் உருவகம்.
அவளுடைய சீற்றம் அடங்கிய நிலையில், ஆணின் ஆளுமைக்குட்பட்ட நிலையில்,
உமாவாகி, சாந்தத்தின் உறைவிடமாகத் திகழ்கிறாள். இந்தியாவில் பெண்களுடைய ‘தீட்டு’ பற்றிய சிந்தனையும் அச்ச உணர்வின் அடிபடையில் உருவானதுதான் என்று சில மேல்நாட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தமிழில், ‘அணங்கு’ என்ற சொல், ‘ பேயை’ யும், ‘பெண்’ ணையும் குறிக்கின்றது என்பது சிந்தித்தற்குரியது.

ஆகவே, பெண்ணைக் கண்டு அஞ்சும் ஆண், அவளுக்குக் ‘கற்பு’ என்ற பொன் விலங்கைப் பூட்டியிருக்கிறான் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அவளை’ ‘பத்தினி’ யாக்கி அடக்குவதாகும். அநியாயத்தைப் பொறுக்கமுடியாத சீற்றத்தில், மதுரையை எரித்த கண்ணகி, தன் நாட்டு எல்லைப்புறத்துக்கு வந்து சொர்க்கம் எய்தினாள் என்று கேட்டு, அவள் சீற்றம் இன்னும் எஞ்சியிருக்கமோ என்று அஞ்சி, அவளை’ ‘பத்தினிக் கடவுளாக்கி’ அவள் சினத்தைத் தணிக்க முயல்கிறான் சேரன் செங்குட்டுவன்

பெண்களுடைய ‘கற்பு’ப் பற்றிய விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவன்,
சேரன் செங்குட்டுவன். சாத்தனாரிடமிருந்து கண்ணகி வரலாற்றைக் கேட்டபின்,
தன் கணவன் உயிர் நீத்தவுடன் அவனைத் தொடர்ந்து உயிர்நீத்த பாண்டிய மாதேவி,
கோவலன் கொல்லப்பட்டவுடன் அவனைத் தொடராமல், வழக்காடி வென்ற பிறகு அவனோடு சொர்க்கம் புகுந்த கண்ணகி ஆகிய இருவர்களில் யார் சிறந்தவர் என்று தன் மனைவியை வினவி, இக்காலப் பட்டிமன்ற வீரர்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறான்! இக்காலப் பட்டிமன்ற வீரர்களும் அவனை ஏமாற்றிவிடவில்லை.
‘அறக்கற்பு’, ‘ மறக்கற்பு’ போன்ற சொற்களை வீசிச் சொற்சிலம்பம் ஆடி
வருகின்றனர்.

திருமணத்துக்கு முன் தலைவனும் தலைவியும் உள்ளப் புணர்ச்சியாகிய இயற்கைப் புணர்ச்சிப் பழகினார்களே தவிர( platonic love) உடல் உறவு கொண்டிருக்க இயலாது என்று தமிழ்ப் பெண்களுடைய இன்றையக் கற்புக் காவலர்கள் இப்பொழுது கூறுகிறார்கள். அப்படி உடல் உறவு கொண்டிருந்தால், திருமணம் ஆவதற்கு முன் கருவுற்றார்கள் என்பதற்குச் சான்றுகள் சங்கப் பாடல்களில் இருந்திருக்கும் என்பது சில தமிழ்ப் பேராசிரியர்களுடைய வாதம்!

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’
என்கிறார் தொல்காப்பியர்.

களவொழுக்கத்தில், பொய்யும், குற்றமும் ஏற்படத்தொடங்கிய பிறகு, குடும்ப மூத்தவர்கள் திருமணச் சடங்குக்குத் தான் முன்னுரிமை தந்தார்கள் என்பது இதன் கருத்து. ‘பொய்’, ‘வழு’ என்று குறிப்பிடப்படுபவை யாவை? ‘பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலேன் என்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல்’ என்று உரை எழுதுகிறார் நச்சினார்க்கினியர். திருமணச் சடங்குக்குச் சான்றாக, அகநானூற்றுப் பாடலொன்றை எடுத்துக் காட்டுகிறாரேயன்றி, ‘பொய்’ ‘வழு’ ஆகியவற்றுக்கு அவர் எடுத்துக் காட்டு ஏதும் தரவில்லை. காரணம், அத்தகையப் பாடல்கள் இருந்திருந்தாலும், தொகை நூல்களில் இடம் பெறாமல் தணிக்கைச் செய்யப் பட்டிருக்கக் கூடும். அல்லது, தொல்காப்பியம் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு பின்பு வந்த உரையாசிரியர்கள் இதற்கு உதாரணம் காட்ட விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

திருமணச் சடங்குக்கு நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் அகச்செய்யுள், வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் கூறுவதாக மருதத் திணையில் வருகின்றது. பரத்தையரிடமிருந்துவருகின்ற தலைவனை வீட்டுக்குள் அணுமதிக்கத் தோழி மறுப்பதுதுதான் ‘வாயில் மறுத்தலா’கும். தலைவி ஊடலைச் சொல்வதுதான் மருதத்திணை. வாயில் மறுக்கப்பட்ட தலைவன், தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணச் சடங்கை நினைவு கூர்ந்து தோழியிடம் சொல்லுகிறான். ஆகவே இதுவும் திருமணச் சடங்கை விளக்குவதற்காகஅமைந்த பாடல் என்றும்  கூறமுடியாது. ‘களவொ’ழுக்கத்துக்குப் பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஒன்று கூடி வாழும் தோழமையைத்தான் ‘கற்பு’ என்று கருதினார்களோ என்று நினைக்க இடமிருக்கிறது.

திருமணச் சடங்கை வேதநெறிக்குள் அடக்கப் பார்க்கிறார் நச்சினார்க்கினியர். கரணம்
‘நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவனுக்கு நீ குற்றேவல் செய்து ஒழுகுவாயாக எனவும், அங்கியங்கடவுள் அறிகரியாக( அக்னிச் சாட்சியாக)
மந்திரவகையாள் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் ‘கற்பு’ என்றார்’ என்பது நச்சினார்க்கினியர் வாக்கு. வேத நெறியைப் பற்றியோ அல்லது அக்னிக் கடவுள் சாட்சியாக இருப்பது பற்றியோ தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை.

தலைவன் நினைவுகூர்வதாகக் கூறப்படும் திருமணச் சடங்கு என்ன?

‘ அந்நாள், தீய கோள்கள் நீங்கப்பெற்ற, வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற, புகழையுடைய உரோகிணி நட்சத்திரம் வந்து கூடும் நன்னாள்.அதுவே எங்கள் திருமண நாள்.உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்த பொங்கலோடு பெரும் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. வரிசையாகக் கால்களை நட்டுக் குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்தனர். அப்பந்தலில், கொண்டு வந்த மணலைப் பரப்பினர். மனையின்கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர். பொழுது புலர்ந்ததும், முதிய
மகளிர், தலையில் நீர்க்குடத்தினைச் சுமந்தவராய்க் கைகளில் புதிய மண்டை எனும்
கலத்தினை ஏந்தியவராய் ஒருங்கு கூடினர்..முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறை முறையாக் எடுத்துத் தந்த வண்ணமிருந்தனர். தேமல் படர்ந்த அழகிய வயிற்றினையுடைய தூய அணிகலன்களை அணிந்த மகனைப் பெற்றெடுத்த
மகளிர் நால்வர்,’ தோழமையினின்றும் வழுவாது நீங்கள் இருவரும் ஒருவரையொருவர்
பேணுவதில் பெரும் விருப்பத்துடன் இருப்பீர்களாக’ என்று வாழ்த்தி, மலருடன் கூடிய
நெல்லை அவள் கரிய கூந்தலின்மீது தூவினர். சுற்றத்தினர் கல்லென்ற ஒலியினராய் விரைந்து வந்து, ‘பெருமனைக் கிழத்தி ஆவாய்’ என்று கூறி, ஓர் அறையினில் என்னுடன் அவளைக் கூட்ட, அன்றிரவு நாங்கள் புணர்ந்தோம். பிறகு, முதுகினை
வளைத்துக் கொண்டு அவள் புடவைக்குள்ளே ஒடுங்கிக் கிடந்தாள். அவளை அணுகி அவள் முதுகை அணைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் முகத்தை மூடியிருந்த ஆடையை விலக்கினேன். அவளோ அச்சத்துடன் பெருமூச்சு விட்டாள். அவளை மகிச்சியுடன், இருக்கையில் அமர்த்தி, ‘ உன் நெஞ்சத்து நினைத்ததை மறையாது உரைப்பாயாக’ என்றேன். மானின் மடப்பத்தினையும், செருக்கிய பார்வையையும் கொண்ட கண்களையும், குளிர்ந்த கூந்தலையும் உடைய மாமை நிறமுடைய என் தலைவி, உள்ளம் நிறைந்த உவகையளாகி, முகம் தாழ்த்தி என்னை வணங்கினாள்’


 தோழி வாயில் மறுத்தபோது, தலைவன் அவளிடத்து இவ்வாறு கூறியதாகப் பாட்டில் ஒரு குறிப்பும் இல்லை. அவன் இதை தலைவியிடத்தும் கூறியிருக்கக்கூடும். இல்லறக் காட்சி என்பதாலும், நெல், உழுத்தம் பருப்பு முதலியவற்றால் மருதத் திணையாகி, அந்நிலத்து ஒழுக்கமாகிய ஊடலுக்கேற்ப, வாயில் மறுக்கப்பட்ட நிலையில் தலைவன்
கூறுகின்றான் என்ற நாடகக் காட்சி, தொகுத்தவர்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம். இப்பாட்டில், திருமணச் சடங்கு சமயச் சார்பு ஏதுமில்லாமல், ஒரு secular
நிகழ்வைக் கூறுவதைப் போலத்தான் அமைந்திருக்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். சடங்கு கூட இங்கு அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. கற்பு நிலையாக, தலைவந்தலைவிக்குமிடையே தோழமைதான்( companionship ) வற்புறுத்திப் பேசப்படுகிறது. இங்குத் திருமணத்துக்குப் பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்
ஒப்புதலுடன் ஓர் அறையில் இணைவதும், ‘ புணர்ச்சி’ என்றுதான் கூறப்படுகிறது.
‘ஓர் இற் கூடிய புணர் கங்குல்’ , (அதாவது, இல்லத்தில், ஓர் அறையில், இரவில் அதிகாரப் பூர்வமாகக் கூடுதல்) என்பது அகநானூற்று வரி.

ஆகவே, களவொழுக்கத்தின்போது கூறப்படும் ‘புணர்ச்சி ‘, உடலுறவைக் குறிக்காது என்று சொல்வது தவறு. புணர்ச்சிப் பழகுகிறவர்கள் திருமணம் செய்துகொண்டாக
வேண்டும் ஒரு கட்டாய நியதி இருந்தது. இக்கால ஆணினத் தமிழ்ப் பண்பாளர்களுக்கு, உடலுறவைப் பற்றிப் பொதுவாகவே இருக்கிற ஒரு.விசுவரூப மனச்
சிக்கல்( magnificent obsession) அக்காலத் தமிழர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
பக்தி இயக்கத்தின்போது பேசப்பட்ட, பக்தனுக்கும் இறைவனுக்குமிடையே ஏற்படுகின்ற தலைவி- தலைவன் உறவு( உடலுறவு உட்பட- bridal mysticism) தொன்மைத் தமிழிலக்கியங்களில் கூறப்படும் களவொழுக்கத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பக்திப் புலவர்களிடத்தும் இந்த தெய்வீகக் களவொழுக்கம் பொருத்த வரையில், மனத்தடைகள்(inhibitions) இருந்தனவாகத் தெரியவில்லை.

Friday, December 28, 2012

கற்பழிப்பு என்று சொன்னால் தவறா?




பெண்கள் மீதான வன்முறை குறித்த விவாதங்களின்போது ’ கற்பழிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றியும் சிலர் முற்போக்காகக் கருத்துகளைக் கூறிவருகின்றனர். கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது கற்பு என்ற கருத்தாக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வதாகிறது, எனவே வன்புணர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். கற்பு என்ற கருத்தாக்கம் பற்றிய விவாதங்கள் பலகாலமாக நடந்துவருகின்றன. கற்பு என்பதை  ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது பற்றியும் அலுப்பூட்டும் அளவுக்குப் பேசிவிட்டோம்.

கற்பு என்பதற்கு வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு நான் மொழியியல் வல்லுனன் அல்ல. தமிழ்ப் பேரகராதியைத் தேடினால் சிலப்பதிகாரத்துக்குப் பிறகுதான் அந்த சொல் நம் இலக்கியங்களில் புழக்கத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.அறக்கற்பு மறக்கற்பு என்பவை குறித்தும்கூட நம் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் தற்காலத்தில் அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை.கல்வியில் தேர்ச்சிகொண்டவனை ‘கற்பன்’ என்று பதிற்றுப் பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் பொருளிலும் நாம் இப்போது கற்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

மனித உரிமை அமைப்பில் பல ஆண்டுகளாக செயல்பட்டவன் என்ற முறையிலும் இதுகுறித்த சட்டங்களை ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் இந்த சொல்லைப் பயன்படுத்துவது குறித்து நான் ஒரு நடைமுறையைப் பின்பற்றிவருகிறேன். ஒரு கொடுமை நடந்திருப்பது குறித்து எழுதும்போது நான் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். ஏனெனில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு குற்றத்தைக் குறிப்பிடும்போது அதைக் கேட்பவர்களிடம் ஏற்படும் தாக்கம் வன்புணர்ச்சி/ பாலியல் வல்லுறவு போன்ற சொற்களைப் பயன்படுத்தி அதை விவரிக்கும்போது ஏற்படுவதில்லை.வன்புணர்ச்சி /பாலியல் வல்லுறவு என்ற சொற்கள் நேரடியாக பெண் குறிக்குள் ஆண் குறியை நுழைக்கும் செயல்பாட்டை மட்டுமே குறிப்பிடுகின்றன. அப்படிச் செய்தால் மட்டும்தான் ரேப் என்று சட்டமும் சொல்கிறது. ஒற்றைப் பரிமாணம் கொண்ட அந்த விளக்கம் பெண்ணின்  உறுப்புக்குள்  ஒரு போலிஸ்காரன் தனது லட்டியைச் செருகுவதை ரேப் என்று ஒப்புக்கொள்வதில்லை. வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் பெண் உறுப்பில் பாட்டிலைச் செருகுகிறார்கள், கம்பியைச் செருகுகிறார்கள். கையை நுழைக்கிறார்கள். அதுவெல்லாம் இப்போதிருக்கும் சட்டத்தின்படி ரேப் என்பதில் அடங்காது. வன்புணர்ச்சி/பாலியல் வல்லுறவு என்ற சொற்களும் இந்தச் செயல்களை விளக்காது. இதனால்தான் இப்போது ரேப் என்ற சொல்லுக்கான விளக்கத்தை இந்தக் கொடூரச் செயல்களையெல்லாம் உள்ளடக்கும்விதமாக விரிவுபடுத்தவேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றனர்.

கற்பழிப்பு என்று சொல்லும்போது அதைக் கேட்கும் ஒருவருக்கு கற்பு என்ற கலாச்சார சுமைகொண்ட கருத்தாக்கம் நினைவுக்கு வருவதில்லை, மாறாக சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிம்பம்தான் நினைவில் வரும். ஆனால் வன்புணர்ச்சி / பாலியல் வல்லுறவு என்னும்போதோ அந்தச் செயல்தான் நமக்கு நினைவில்வரும். அது அவ்வளவாக நம்மில் கோபத்தைத் தூண்டுவதில்லை. கற்பு என்ற சொல் நம்மிடம் இருந்தாலும் ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளைப் பலவந்தமாகப் புணர்வதைக் குறிக்க நேரடியான தமிழ்ச் சொல் எதுவும் இப்போதைக்குப் புழக்கத்தில் இல்லை. ரேப் என்பதன் மொழிபெயர்ப்பாகத்தான் நாம் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமே தவிர கற்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அல்ல.

இவை என் கருத்துகள். இதுகுறித்துச் சிறந்த விளக்கத்தை யாரேனும் முன்வைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தேவை விரைவு நீதிமன்றங்கள்


பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து இந்தியப் பிரதமரும் தமிழக முதல்வரும் ஒரேவிதமான கருத்தைத் தெரிவித்துள்ளனர். அத்தகைய குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளைப் பார்க்கும்போது கற்பழிப்புக் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கும் விதத்தில் சட்டத்திருத்தம் செய்யப்படலாமெனத் தோன்றுகிறது.அத்துடன் விரைவு நீதிமன்றங்களையும் மத்திய அரசு அமைக்கக்கூடும்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுவது அதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென அறிவிப்புச் செய்வது ஏற்கனவே இருக்கின்ற நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்துவிட்டு அத்துடன் அதை மறந்துவிடுவது என்பதே மத்திய மாநில அரசுகளின் வழக்கம். அப்படிச் செய்வதால் எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை. விரைவு நீதிமன்றங்களை அமைத்து இந்த வழக்குகள் விசாரிக்கப்படவேண்டும்.

இந்தியாவெங்கும் தேங்கிக் கிடக்கும் கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என்பதற்காக 2001 ஆம் ஆண்டில் மத்திய அரசு 1562 விரைவு நீதிமன்றங்களை அமைத்தது. அந்த நீதிமன்றங்களில் தற்காலிகமாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அந்த நீதிமன்றங்களுக்கான நிதியை மத்திய அரசே மாநில அரசுகளுக்கு வழங்கியது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் இந்த நீதிமன்றங்கள் செயல்படும் என துவக்கத்தில் அறிவிக்கப்பட்டாலும் அவற்றின் செயல்பாட்டைப் பார்த்து அவற்றை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்புச் செய்தது. ஏறத்தாழ 60 லட்சம் வழக்குகள் இந்த நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து முடிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில்  இருக்கும் விரைவு நீதிமன்றங்கள்தான் அதிக வழக்குகளை முடித்து நாட்டிலேயே முதலிடம் வகித்தன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திடீரென மத்திய அரசு இந்த விரைவு நீதிமன்றங்களுக்கு இனிமேலும் தம்மால் நிதி ஒதுக்க முடியாது எனக் கூறிவிட்டது. அதன்காரணமாகத் தற்போது  தமிழ்நாட்டில் இருந்த 49 விரைவு நீதிமன்றங்களையும் ரெகுலர் நீதிமன்றங்களாக மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.( http://articles.timesofindia.indiatimes.com/2011-09-03/chennai/30110074_1_courts-entire-subordinate-judiciary-nadu-judicial-officers-association)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் காவல் நிலையங்களில் கிடப்பில் போடப்படுவது மட்டுமின்றி நீதிமன்றங்களிலும் கூட தேங்கியே கிடக்கின்றன. தமிழ்நாட்டில் 2012 செப்டம்பர் வரையிலான புள்ளிவிவரங்கள் அதை வெளிப்படுத்துகின்றன. கற்பழிப்பு வழக்குகள் 1 ஆண்டுக்கும் கீழே நீதிமன்றங்களில் கிடப்பில் இருக்கும் வழக்குகள் 654; 1 முதல் 5 ஆண்டுகள் கிடப்பில் இருப்பவை 942; 6 முதல் 10 ஆண்டுகள் வரை கிடப்பில் இருப்பவை 150; பத்து  ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கிடப்பில் இருக்கும் வழக்குகள் 30. ஆக மொத்தம் 1776 கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்க விரைவு நீதிமன்றம்தான் சிறந்த வழி.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை மத்திய அரசு உருவாக்கினால் அதற்கான நிதியை யார் ஏற்பது என்ற கேள்வி எழும். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வருவதால் அதை மாநில அரசுகள் ஏற்பதே சரியாக இருக்கும் என மத்திய அரசு வாதிடக்கூடும்.
மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையங்களை அமைப்பதற்கு  மத்திய அரசு முயற்சித்துவரும் நேரத்தில் இத்தகைய விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டக்கூடாது.  தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு விரைவு நீதிமன்றம் உருவாக்கப்படுதல் இன்றியமையாதது. இதற்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.

Wednesday, December 26, 2012

கவனிப்பின்றிக் கிடக்கும் கற்பழிப்பு வழக்குகள்



டார்வின் லியோன் என்பவர்  வரைந்த கற்பழிப்பு என்ற தலைப்பிலான ஓவியம் 

இந்தியாவெங்கும் பெண்கள்மீதான வன்முறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் தூத்துக்குடி, சேலம், திருநாவலூர், விருத்தாசலம், சிதம்பரம் எனப் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வன்முறைக்கு இலக்காகியிருக்கிறார்கள். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டுமெனவும், இத்தகைய வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெண்கள்மீதான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகின்றன. தமிழக காவல்துறையின் குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் செப்டம்பர் 2012 வரை 528 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 484 கற்பழிப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தோடு ஒப்பிடும்போது இது 9 % அதிகமாகும்.

போலிஸ் விசாரணையில் கிடப்பில் இருக்கும் ஒரு ஆண்டு வரையிலான கற்பழிப்பு வழக்குகள்  531; 1 முதல் 3 ஆண்டுகள் வரை கிடப்பில் இருக்கும் கற்பழிப்பு வழக்குகள் 227; 4 முதல் 10 ஆண்டுகள் வரை கிடப்பில் இருக்கும் கற்பழிப்பு வழக்குகள் 14 ஆக மொத்தம் 772. இந்த கற்பழிப்பு வழக்குகள் யாவும் இன்னும் காவல்துறை விசாரணை என்ற மட்டத்திலேயே கிடப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. ( http://www.tnpolice.gov.in/pdfs/sbsep12.pdf ).

தமிழக முதல்வர் இந்த வழக்குகளையெல்லாம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும். பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகளுக்கு தற்போது ஊடகங்களில் தரப்படும் இடமென்பது தற்காலிகமான ஒன்றுதான். பரபரப்பான வேறொரு செய்தி கிடைத்துவிட்டால் இதை ஊடகங்கள் கை கழுவிவிட்டுப் போய்விடும். தற்போது கிடைத்திருக்கும் இந்தத் தற்காலிக வாய்ப்பைப் பயன்படுத்தி அரசாங்கங்கள் நிரந்தரமான  சில நடவடிக்கைகளை எடுக்கும்படிச் செய்யவேண்டியதே அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் கவனம் செலுத்தவேண்டிய காரியமாகும்.

நமது சமூகத்தில் இருக்கும் நிறுவனங்கள் யாவும் பெண்களுக்கு உரிய இடங்களை வழங்காத அமைப்புகள்தாம். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் போன்ற நமது நீதித்துறையின் உயர் அமைப்புகளில் மகளிருக்கு உரிய இடம் அளிக்கப்பட்டதேயில்லை. காவல்துறையும் இதில் விதிவிலக்கல்ல. தற்போது பெண்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் ஊடகத் துறையில் மகளிருக்கு அதிகாரம் மிக்கப் பொறுப்புகளில் வழங்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவம் என்ன என்று கேட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாத,வார,நாளிதழ்கள் வெளியாகின்றன. அவற்றில் எத்தனைப் பத்திரிகைகளில் பெண்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்? இத்தகைய நிலை மாற்றப்பட வேண்டாமா?

காட்சி ஊடகங்களில் தற்போது நடத்தப்படும் விவாதங்கள் இத்தகைய விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாதது மட்டுமின்றி பெரும்பாலும் ஆரவாரக் கூச்சல்களாகவே முடிந்துபோவது வருத்தமளிக்கிறது.

சந்தியா படுகொலை - தற்போதைய நிலவரம்


சிதம்பரத்துக்கு அருகில் உள்ள சம்மந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சந்தியாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி இன்று கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியள் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நான் கடலூருக்குச் சென்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். மருத்துவர்கள் அடங்கிய குழுவின் மூல பிரேத பரிசோதனை நடத்தப்படுமெனவும், அது வீடியோகிராப் செய்யப்படுமெனவும் பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட உத்தரவிடுவதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். 

சந்தியாவின் பெற்றோரையும் சந்தித்துப் பேசினேன். அவர் வேலை பார்த்த இடத்தில் இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என அவர்கள் சொன்னார்கள். தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அப்படியான மனநிலை உள்ளவரல்ல அவர். அவரை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதற்கு உடன்படாததால் அவரைக் கொன்றுவிட்டார்கள். அவரைப் பிணமாகத்தான் மாடியிலிருந்து கீழே வீசியெறிந்திருக்கிறார்கள் என அவர்கள் சொன்னார்கள். 




சந்தியாவின் பெற்றோர் 
சிதம்பரம் இன்ஸ்பெக்டரையும் சந்தித்து அவரிடமும் பேசினேன். ஸ்டுடியோ இருக்கும் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா எனக் கேட்டபோது அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்ன அவர், ஸ்டுடியோ உரிமையாளர் திட்டியதால் சந்தியா மாடியிலிருந்து குதித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகக் கூறினார்.

இறந்த சந்தியா குதித்ததாகச் சொல்லப்படும்  இடத்தில் ரத்தம் சிந்திய அடையாளம் எதுவும் இல்லை. அந்தப் பெண்ணின் ஆடையிலும் ரத்தக்கறை இல்லை. அவரது தலையிலோ வேறு பகுதிகளிலோ ரத்தக் காயங்கள் எதுவுமில்லை என இன்ஸ்பெக்டர் சொன்னார். பாத எலும்பு மட்டும் முறிந்திருப்பதாக அவர் கூறினார். மருத்துவமனையில் நினைவின்றி இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். ஆனால் சந்தியாவின் பெற்றோரோ தமது மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண் ஆட்டோவில் ஏற்றப்படும்போதே சடலமாகத்தான் இருந்தாரெனச் சொன்னதாகத் தெரிவித்தனர். 

பொதுவாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் போலிஸ் சொல்வதுபோலவேதான் அமையும். அறிக்கையின் அடிப்படையில் வழக்கை மாற்றுகிறோம் எனக் காவல்துறையினரும் , மாவட்ட ஆட்சியரும் சொல்வதை நாம் நம்பமுடியவில்லை. ஆனாலும் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதால் நியாயம் வழங்குங்கள் என அவர்களிடம் கேட்பதுதவிர வேறு வழியில்லை. குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்வரை சந்தியாவின் உடலை வாங்கமாட்டோம் என காவல்துறை அதிகாரிகளிடம் சந்தியாவின் பெற்றோரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தெரிவித்துள்ளனர். 

16.11.2012 அன்று கடலூர் அருகில் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரியாவின் வழக்கில் இதுவரை கடலூர் மாவட்ட காவல்துறை எவரையும் கைதுசெய்யவில்லை. அவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கடலூர் மாவட்டத்தில் அணமைக்காலமாக தலித் பெண்கள்மீது தாக்குதல்கள் அதிகரித்திருப்பது தற்செயலானதாகத் தெரியவில்லை. இதைத் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்தக் கொடுமையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 



Tuesday, December 25, 2012

கடலூர் மாவட்டத்தில் இன்னுமொரு தலித் பெண் மரணம்




பெண்கள்மீதான தாக்குதல் குறித்து நாடெங்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலமாக கடலூர் மாவட்டத்தில் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவருகிறது. கல்லூரி மாணவி பிரியா கடலூருக்கு அருகில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். குணமக்கலத்தைச் சேர்ந்த தலித் பெண் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். நேற்று ( 25.12.2012 ) சிதம்பரம் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மேலவீதியில் சந்தியா என்ற தலித் பெண் சந்தேகமான முறையில் இறந்திருக்கிறார்.

சிதம்பரம் மேலவீதியில் உள்ள அபிநயா என்ற போட்டோ ஸ்டுடியோவில் வேலைசெய்துவந்த சந்தியா நேற்று காலை 11 மணியளவில் அந்த ஸ்டுடியோ இருக்கும் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. கீழே ஆட்டோ ஸ்டேண்ட் இருக்கிறது, அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தியாவின் மரணம் எப்படி நேரிட்டது என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் ஏன் மொட்டை மாடிக்குப் போனார்? அங்கிருந்து தானாகவே குதித்தாரா அல்லது அங்கிருந்து கீழே வீசப்பட்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சந்தியாவை ஸ்டுடியோவின் சொந்தக்காரர் விஜயகுமார் சிம் கார்டு வாங்கிவரச் சொன்னதாகவும் அவர் வாங்கிவந்ததை மாற்றி வாங்கிவரச் சொன்னதாகவும் அவர் மறுத்ததால் திட்டியதாகவும் அதனால் மனமுடைந்த சந்தியா மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஸ்டுடியோ உரிமையாளர் சொல்வதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தியாவின் பெற்றோரோ தமது மகள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டுடியோவுக்கு எதிரில் மின்சார கம்பிகள் செல்கின்றன. அந்தப் பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்திருந்தால் அந்தக் கம்பிகள் மீதுதான் விழுந்திருக்கவேண்டும். ஆனால் அவர் நேரடியாக தரையில் விழுந்தது எப்படியென்று தெரியவில்லை என ஊடகவியலாளர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

காவல்துறை இதை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் இது கொலையா இல்லையா என உறுதிப்படுத்த முடியும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சந்தியாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் 25.12.2012 அன்று மாலை நடத்தப்பட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் தலித் பெண் கற்பழிப்பு

கடலூர் மாவட்டத்தில் குணமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது தலித் பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் உறவுக்கார இளைஞரோடு இரவு ஏழரை மணி அளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்கு அருகில் மணிமுத்தாறில் பேசிக்கொண்டிருந்தபோது  அங்கு வந்த கும்பல் அந்தப் பெண்ணின் துப்பட்டாவால் அந்த இளைஞரைக் கட்டிப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறது . 

அவர்களிடமிருந்து மீண்டு வந்த அப் பெண் சப்தம் போட்டதைக் கேட்டு காவல் துறையினர் வந்து விசாரித்து அழைத்துச் சென்றுள்ளனர். இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடலூரில் சிகிச்சை அளிக்காமல் ஏன் விழுப்புரம் அனுப்பினார்கள் என்ற கேள்வியை எழுப்பும் பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தை மூடிமறைக்க  முயற்சி நடக்கிறதா என்று ஐயம் எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன.86 கற்பழிப்புகள் நடந்திருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. கடலூர் மாவட்டம் என்பது பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  அவ்வளவு அதிகம் இல்லாத மாவட்டம் என்றாலும் அண்மைக்காலமாக தலித் பெண்கள்மீதான பாலியல் கொடுமைகள் இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் , கல்லூரி மாணவி பிரியா கடலூருக்கு அருகில் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டிருந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

Sunday, December 23, 2012

வேண்டாம் கற்பழிப்பு : வேண்டாம் மரணதண்டனை






உலகமே அதிர்ச்சியடையும்விதமாக டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஆறு ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.அந்தப் பெண் இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளியானதிலிருந்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. கற்பழிப்புக்கான தண்டனையை அதிகரிக்கவேண்டும், சட்டங்களைக் கடுமையாக்கவேண்டும் என்ற குரல்கள் தீவிரமாக எழுந்துள்ளன. அதன் விளைவாக பெண்கள் தொடர்பான சட்டங்களை சீராய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் மூவர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பெண்கள் மீதான வன்முறைகள் ஊடக கவனத்தைப் பெற்றுள்ளன.அண்மையில் தூத்துக்குடியில் புனிதா என்ற 12 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.அதன் பின்னர் நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு வட்டத்துக்குட்பட்ட புத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருத்தியும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள்.இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா கடலூரில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தகைய மிருகத்தனமான கொடுமைகளுக்கெதிராக டெல்லியில் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவருவதைப் போல தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடக்கவில்லை.இது தமிழ்ச் சமூகத்தில் புரையோடியிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையே காட்டுகிறது.அந்த மனோபாவம் பெண்களுக்கு மட்டும் எதிரானதல்ல, குழந்தைகள், தலித் மக்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினர் எல்லோருக்கும் எதிரானதாகும்.
.
இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவை மட்டுமின்றி பெண்களின் உரிமைகளுக்கென பல்வேறு சிறப்புச் சட்டங்களை அரசு இயற்றியுள்ளது.குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், 1929;விபச்சாரத் தடுப்புச் சட்டம் 1956 ;வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961;பெண்களை இழிவாக சித்திரிப்பதைத் தடுக்கும் சட்டம், 1986 ;பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம், 2000 ;குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், 2005 என்பவை அவற்றுள் சில. கடந்த மாதம் மத்திய அரசு இன்னொரு சிறப்புச் சட்டத்தையும் இயற்றியிருக்கிறது. பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பதே அது.

பெண்களைப் பாதுகாப்பதற்காக இத்தனை சிறப்புச் சட்டங்கள் இருந்தாலும் பெண்கள் மீதான வன்முறையின் அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போவதற்கு முதன்மையான  காரணம் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நாட்டில் இல்லாததே ஆகும். தமிழக அரசின் குற்ற ஆவண அமைப்பின் (எஸ்.சி.ஆர்.பி) புள்ளிவிவரத்தின் படி 2011 ஆம் ஆண்டில் 152 வரதட்சணை வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பாக 1467 வழக்குகளும், பாலியல் தொந்தரவு தொடர்பாக 464 வழக்குகளும், கணவன் மற்றும் உறவினர்களால் பெண்கள் சித்திரவதைக்கு ஆளானது தொடர்பில் 1812 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 677 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம்தான் இதில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 86 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்முறையிலும் கூட விழுப்புரம் மாவட்டம்தான் முதலிடம் வகிக்கிறது.


நாட்டின் மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காட்டினராக இருந்தாலும் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அவர்கள் சமூகத்தின் மேல்தட்டில் இருந்தாலும் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களோ ஆணாதிக்க வன்முறைகளை மட்டுமின்றி சாதிய வன்கொடுமைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. பெண் என்றால் பேயும் இரங்கும் எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், தலித் பெண்களுக்கு எவரும் இரக்கம் காட்டுவதில்லை.அவர்கள் பாதிக்கப்படும்போது நீதி தேவதையும்கூட பாராமுகமாக இருந்துவிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கடலூர் மாவட்டத்தில் சாதி வெறியர்களால் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கீழ் குமாரமங்கலம் விக்டோரியா( 1998), கோ.ஆதனூர் பொன்னருவி(1999), மேலப்பாலையூர் சகுந்தலா(1999), செல்லஞ்சேரி சிவகாமி (1999) ஆகிய வழக்குகளில் உரிய நீதி கிடைக்கவில்லை. சில நாட்களின் முன் நிகழ்ந்த பிரியாவின் படுகொலை இப்போதும் அதே நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சாட்சியாக இருக்கிறது.தூத்துக்குடி, தலைஞாயிறு, காந்தலவாடி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ , மாநில மகளிர் ஆணையத்தின்தலைவியோ நேரில் சந்தித்து ஆறுதல்கூட சொல்லவில்லை.      

அண்மைக்காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும்கௌரவக் கொலைகள்பெண்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல தற்போது சில பிற்போக்குச் சக்திகள் காதல் திருமணங்களைத் தடை செய்யவேண்டும் என்று கூக்குரல் எழுப்பி வருகின்றன. பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை மறுக்கும் இந்தப் பிரச்சாரம் பெண்களின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. பெண் ஒருவர் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராகப் பிற்போக்கு சக்திகள் அணிவகுப்பதும் கவலைதருவதாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசு மெத்தனமாக இருப்பது அனைவரையும் அதிச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்திய அளவில் 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கையைவைத்துப் பார்க்கும்போது உத்தரப் பிரதேச மாநிலம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. நாடு முழுதும் நடைபெற்ற குற்றங்களில் 33.4% குற்றங்கள் அங்கு நடந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா முழுதும் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கையில் 11.5% குற்றங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
 

டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என சிலர் கோரி வருகின்றனர். பெண்கள்மீதான குற்றங்களின் குரூரத் தனமையைப் பார்க்கும்போது அவர்களது கோரிக்கை நியாயமானதாகவே தோன்றும்.எனினும், தண்டனையை அதிகரிப்பதால் மட்டும் குற்றத்தைக் குறைத்துவிட முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மரண தண்டனை எந்தவொரு குற்றத்தையும் குறைத்துவிடவில்லை. எனவே, கற்பழிப்புக்கும் மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த உதவாது.இவ்வாறு கோருவதைவிடவும், தற்போது இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை  சரியாக நடைமுறைப் படுத்துவதும் அவைகுறித்த விழிப்புணர்வை காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்களிடையே உருவாக்குவதும்தான் உடனடித் தேவை.