டார்வின் லியோன் என்பவர் வரைந்த கற்பழிப்பு என்ற தலைப்பிலான ஓவியம் |
இந்தியாவெங்கும் பெண்கள்மீதான வன்முறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் தூத்துக்குடி, சேலம், திருநாவலூர், விருத்தாசலம், சிதம்பரம் எனப் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வன்முறைக்கு இலக்காகியிருக்கிறார்கள். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டுமெனவும், இத்தகைய வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்கள்மீதான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகின்றன. தமிழக காவல்துறையின் குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் செப்டம்பர் 2012 வரை 528 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 484 கற்பழிப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தோடு ஒப்பிடும்போது இது 9 % அதிகமாகும்.
போலிஸ் விசாரணையில் கிடப்பில் இருக்கும் ஒரு ஆண்டு வரையிலான கற்பழிப்பு வழக்குகள் 531; 1 முதல் 3 ஆண்டுகள் வரை கிடப்பில் இருக்கும் கற்பழிப்பு வழக்குகள் 227; 4 முதல் 10 ஆண்டுகள் வரை கிடப்பில் இருக்கும் கற்பழிப்பு வழக்குகள் 14 ஆக மொத்தம் 772. இந்த கற்பழிப்பு வழக்குகள் யாவும் இன்னும் காவல்துறை விசாரணை என்ற மட்டத்திலேயே கிடப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. ( http://www.tnpolice.gov.in/pdfs/sbsep12.pdf ).
தமிழக முதல்வர் இந்த வழக்குகளையெல்லாம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும். பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகளுக்கு தற்போது ஊடகங்களில் தரப்படும் இடமென்பது தற்காலிகமான ஒன்றுதான். பரபரப்பான வேறொரு செய்தி கிடைத்துவிட்டால் இதை ஊடகங்கள் கை கழுவிவிட்டுப் போய்விடும். தற்போது கிடைத்திருக்கும் இந்தத் தற்காலிக வாய்ப்பைப் பயன்படுத்தி அரசாங்கங்கள் நிரந்தரமான சில நடவடிக்கைகளை எடுக்கும்படிச் செய்யவேண்டியதே அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் கவனம் செலுத்தவேண்டிய காரியமாகும்.
நமது சமூகத்தில் இருக்கும் நிறுவனங்கள் யாவும் பெண்களுக்கு உரிய இடங்களை வழங்காத அமைப்புகள்தாம். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் போன்ற நமது நீதித்துறையின் உயர் அமைப்புகளில் மகளிருக்கு உரிய இடம் அளிக்கப்பட்டதேயில்லை. காவல்துறையும் இதில் விதிவிலக்கல்ல. தற்போது பெண்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் ஊடகத் துறையில் மகளிருக்கு அதிகாரம் மிக்கப் பொறுப்புகளில் வழங்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவம் என்ன என்று கேட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாத,வார,நாளிதழ்கள் வெளியாகின்றன. அவற்றில் எத்தனைப் பத்திரிகைகளில் பெண்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்? இத்தகைய நிலை மாற்றப்பட வேண்டாமா?
காட்சி ஊடகங்களில் தற்போது நடத்தப்படும் விவாதங்கள் இத்தகைய விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாதது மட்டுமின்றி பெரும்பாலும் ஆரவாரக் கூச்சல்களாகவே முடிந்துபோவது வருத்தமளிக்கிறது.
No comments:
Post a Comment