Friday, December 28, 2012

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தேவை விரைவு நீதிமன்றங்கள்


பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து இந்தியப் பிரதமரும் தமிழக முதல்வரும் ஒரேவிதமான கருத்தைத் தெரிவித்துள்ளனர். அத்தகைய குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளைப் பார்க்கும்போது கற்பழிப்புக் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கும் விதத்தில் சட்டத்திருத்தம் செய்யப்படலாமெனத் தோன்றுகிறது.அத்துடன் விரைவு நீதிமன்றங்களையும் மத்திய அரசு அமைக்கக்கூடும்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுவது அதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென அறிவிப்புச் செய்வது ஏற்கனவே இருக்கின்ற நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்துவிட்டு அத்துடன் அதை மறந்துவிடுவது என்பதே மத்திய மாநில அரசுகளின் வழக்கம். அப்படிச் செய்வதால் எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை. விரைவு நீதிமன்றங்களை அமைத்து இந்த வழக்குகள் விசாரிக்கப்படவேண்டும்.

இந்தியாவெங்கும் தேங்கிக் கிடக்கும் கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என்பதற்காக 2001 ஆம் ஆண்டில் மத்திய அரசு 1562 விரைவு நீதிமன்றங்களை அமைத்தது. அந்த நீதிமன்றங்களில் தற்காலிகமாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அந்த நீதிமன்றங்களுக்கான நிதியை மத்திய அரசே மாநில அரசுகளுக்கு வழங்கியது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் இந்த நீதிமன்றங்கள் செயல்படும் என துவக்கத்தில் அறிவிக்கப்பட்டாலும் அவற்றின் செயல்பாட்டைப் பார்த்து அவற்றை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்புச் செய்தது. ஏறத்தாழ 60 லட்சம் வழக்குகள் இந்த நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து முடிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில்  இருக்கும் விரைவு நீதிமன்றங்கள்தான் அதிக வழக்குகளை முடித்து நாட்டிலேயே முதலிடம் வகித்தன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திடீரென மத்திய அரசு இந்த விரைவு நீதிமன்றங்களுக்கு இனிமேலும் தம்மால் நிதி ஒதுக்க முடியாது எனக் கூறிவிட்டது. அதன்காரணமாகத் தற்போது  தமிழ்நாட்டில் இருந்த 49 விரைவு நீதிமன்றங்களையும் ரெகுலர் நீதிமன்றங்களாக மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.( http://articles.timesofindia.indiatimes.com/2011-09-03/chennai/30110074_1_courts-entire-subordinate-judiciary-nadu-judicial-officers-association)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் காவல் நிலையங்களில் கிடப்பில் போடப்படுவது மட்டுமின்றி நீதிமன்றங்களிலும் கூட தேங்கியே கிடக்கின்றன. தமிழ்நாட்டில் 2012 செப்டம்பர் வரையிலான புள்ளிவிவரங்கள் அதை வெளிப்படுத்துகின்றன. கற்பழிப்பு வழக்குகள் 1 ஆண்டுக்கும் கீழே நீதிமன்றங்களில் கிடப்பில் இருக்கும் வழக்குகள் 654; 1 முதல் 5 ஆண்டுகள் கிடப்பில் இருப்பவை 942; 6 முதல் 10 ஆண்டுகள் வரை கிடப்பில் இருப்பவை 150; பத்து  ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கிடப்பில் இருக்கும் வழக்குகள் 30. ஆக மொத்தம் 1776 கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்க விரைவு நீதிமன்றம்தான் சிறந்த வழி.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை மத்திய அரசு உருவாக்கினால் அதற்கான நிதியை யார் ஏற்பது என்ற கேள்வி எழும். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வருவதால் அதை மாநில அரசுகள் ஏற்பதே சரியாக இருக்கும் என மத்திய அரசு வாதிடக்கூடும்.
மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையங்களை அமைப்பதற்கு  மத்திய அரசு முயற்சித்துவரும் நேரத்தில் இத்தகைய விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டக்கூடாது.  தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு விரைவு நீதிமன்றம் உருவாக்கப்படுதல் இன்றியமையாதது. இதற்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.

No comments:

Post a Comment