Friday, August 29, 2014

கால நிர்வாகம் லேனா கலாஃப் டுஃபாஹா தமிழில்: ரவிக்குமார்



என்ன ஆகியிருக்கும்? 
பாங்கொலி அழைக்கும் அதிகாலைக்கும் விடிந்த நாளுக்கும் இடையிலான சிறு வெளிச்சத்தில் எல்லாமே பறிபோய்விடும் என உங்களுக்குத்  தெரிந்திருந்தால் 
நீண்ட காலமாக உருப்பெற்றுவந்த    சுனாமி உங்கள் வாழ்க்கையின் கரைக்கு வந்து 
உங்கள் உலகின் கல்லையும் இரும்பையும் விழுங்கிவிடும் எனத் தெரிந்திருந்தால் 

என்ன ஆகியிருக்கும்? 
குளியலறைக்குப் போவதற்காக செருப்பில் கால்களை நுழைக்கும்போது 
மீண்டும் கண்ணாடியின் முன்னால் நின்று சவரம் செய்துகொள்ளப்போவதில்லை என்பது உங்களுக்குத் 
தெரிந்திருந்தால் 
முகவாயை அந்த நீலத் துண்டால் மீண்டும் துடைத்துக்கொள்ளப்போவதில்லைஎன்பது தெரிந்திருந்தால்
ஜன்னலுக்கு அப்புறமாக இருக்கும் எலுமிச்சை மரங்களில் பாடும் பறவைகளின் சங்கீதத்தை அலட்சியப்படுத்தும் சந்தர்ப்பம் இனிமேல் வராது எனத் தெரிந்திருந்தால் 


உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கடைசியாக ஒருமுறை சுவர்களைத் தொட்டு விடைபெற்றிருப்பீர்களா? 
உங்கள் தேநீர்க் கோப்பையில் மிதக்கும் புதினா இலைகளின் நறுமணத்தை உள்ளிழுத்து நெஞ்சில் நிரைத்திருப்பீர்களா? 
சுமந்துசெல்ல முடியாத பொருட்களை இனி வாழ்நாள் முழுதும் தேவைப்படும் என்பதால் எடுத்துச் சென்றிருப்பீர்களா? 
இந்த நூற்றாண்டின் மறுபகுதியில் உங்களது பேரப்பிள்ளைகள் 
உங்கள் வீட்டைப் பார்த்தபடி நடக்கத்தான் முடியும்
பெயர் மாற்றப்பட்ட அந்தத் தெருவழியாக போகும்போது 
ஜன்னல் கதவுகளில் பிய்ந்து தொங்கும் வண்ணம்பூச்சுகளைப் பார்க்கத்தான் முடியும் 
என்பது முன்னதாகவே உங்களுக்குத் தெரிந்திருந்தால் 
ஓடுவீர்களா? 
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பீர்களா? 
காத்துக்கொண்டிருந்தே செத்துப்போவீர்கள் எனத் தெரிந்திருந்தால் 
மறதியின் புதைகுழியை நோக்கி நீண்டபயணம் மேற்கொள்வீர்களா? அல்லது
அதில் தலைகுப்புறப் பாய்வீர்களா? 


 Lena Khalaf Tuffaha writes poetry and literary translation. She has lived in and travelled across the Arab world, and many of her poems are inspired by the experience of crossing borders: cultural, geographic, political, borders between peace and war, the present and the living past. Her work has appeared in the journal Magnolia, Exit 13 magazine, Al-Ahram weekly, and the Seattle Times. Several of her poems are forthcoming in the online journal Human, based in Turkey, and in the print anthology Being Palestinian, to be published by Oxford Press in 2015. She lives with her family in Redmond, Washington, in the United States.


No comments:

Post a Comment