சிறுபான்மை என்பதையே பலமாக மாற்றுவோம்
-ரவிக்குமார்
நண்பர்களே!
பழங்குடி இருளர் மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்பு உருவாக உதவியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்வதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். என்னதான் பந்தல் போட்டிருந்தாலும் வெயிலின் உக்கிரம் நம்மை வருத்துகிறது. இன்னும் ஆறு மாதங்களில் இதை ஒரு பசுமைக் குடியிருப்பாக நாம் மாற்றவேண்டும். யாராவது இங்கே வர வழிகேட்டால் பச்சை பசேல் என இருக்கும் அந்த இடத்துக்குப் போங்கள் என வழிசொல்லவேண்டும்.
இருளர் மக்கள் நீர் நிலைகளின் அருகில் வசிப்பவர்கள். ஆறுகள்,குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள் இவற்றின் கரையில்தான் அவர்கள் வீடுகள் இருக்கும்.மரங்களை வளர்ப்பது அவர்களுக்குப் புதிய விஷயமல்ல. அதை யாரும் அவர்களுக்கு சொல்லித்தரத் தேவையிலை. அண்மையில் மழைவெள்ளத்தின்போது கீழ் சிவரியில் இருக்கும் இருளர் குடியிருப்புக்குச் சென்று நிவாரணப் பொருட்களைக் கொடுத்தோம்.அதுவும் இப்படி ஒரு நடுப்பகல் நேரம்தான். கொஞ்சம் வீடுகளே உள்ள அந்தத் தெரு அந்த உச்சிவெயில் நேரத்திலும் குளுமையாக இருந்தது. மரத்தடியில் வைத்துதான் நிவாரணப் பொருட்களை வழங்கினோம். அதுபோல குளுமையான இடமாக இதை மாற்றவேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் பெண்கள் ஆளுக்கொரு மரக் கன்றை நடுங்கள், உங்கள் பிள்ளைகளோடு பிள்ளையாக அவற்றையும் வளருங்கள்.
இந்த அழைப்பில் இதை இருளர் நகர் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குடியிருப்புக்கு சாதியை அடையாளமாக்கவேண்டாம். நகர் எனபதால் இது நகரமாகிவிடப் போவதில்லை. இப்போது புதிதாக உருவாகும் குடியிருப்புகள் எல்லாவற்றுக்கும் நகர் என்று பெயர்வைப்பது ஒரு ஃபாஷன். அது ’ரியல் எஸ்டேட்’காரர்கள் கண்டுபிடித்த தந்திரம். அதை நாம் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. இதற்கு நகர் என்று பெயர் வைப்பதைவிட நகரத்தில் இருக்கும் வசதிகளை இங்கே கொண்டுவருவோம். அதைத்தான் அப்துல் கலாம் கூட வலியுறுத்தினார். அதற்காக ’புரா’ என்ற திட்டத்தை வகுத்தார். இதை ஒரு முன்மாதிரிக் குடியிருப்பாக மாற்றுவோம். இங்கே 82 வீடுகள் உள்ளன. எப்படியும் நானூறு மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை இங்கேயே ஏற்படுத்தவேண்டும். இந்தக் குடியிருப்புக்கு இங்கே வருகை தந்திருக்கும் நீதியரசர் சந்துருவின் பெயரைச் சூட்டலாம் என்பது எனது ஆலோசனை. நீதியின் குறியீடாகத் திகழ்பவர் அவர். நீதிபதியாக இருந்ததால் மட்டுமல்ல வழக்கறிஞராக இருந்தபோதே நீதிக்காகப் போராடியவர். அவரது பெயரால் ‘ நீதியரசர் கே.சந்துரு முன்மாதிரிக் குடியிருப்பு ‘ என இதை அழைக்கலாம். நீங்கள் பொறுமையாக ஆலோசித்து ஒரு முடிவெடுங்கள்.
பழங்குடி இருளர் மக்களைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாக இருக்கிறார்கள் அதனால் அவர்களை எவரும் பொருட்படுத்துவதில்லை என கல்யாணி வேதனைப்படுவார். பழங்குடி மக்கள் இந்த மாநில மக்கள் தொகையில் ஒரு விழுக்காடுதான். விழுப்புரம் மாவட்டத்தில்தான் இருளர்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறார்கள். நம்முடைய அரசியல் என்பது எண்ணிக்கையை மையமாகக் கொண்டது. கும்பல் அதிகம் இருந்தால் அதற்கு ஒரு பலம் வந்துவிடும். கூட்டமாக சேர்ந்துகொண்டு எதையும் செய்துவிடலாம் என்ற ஒரு நிலை இங்கே உருவாகியிருக்கிறது. அரசியலுக்குத்தான் என்ணிக்கை என்பது பலம். அனால் ஒரு நலத் திட்டத்தை செயல்படுத்த குறைந்த என்ணிக்கையே ஒரு சாதகமான அம்சம். இந்த மாவட்டத்தில் எந்தவொரு ஆதிதிராவிடக் குடியிருப்பிலும் இருநூறு வீடுகளுக்கு மேல் இருக்கும். ஆதி திராவிட மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மற்ற சமூகத்தினர் அவர்களைப் போட்டியாகப் பார்க்கும் மனநிலை உள்ளது. ஆனால் இருளர் மக்களை அப்படிப் பார்ப்பதில்லை. எனவே குறைவான என்ணிக்கை என்ற பலவீனத்தையே நாம் பலமாக மாற்றமுடியும்.
இந்த குடியிருப்பில் உள்ள தாய்மார்கள் வேலைக்குப் போகிறவர்கள். அவர்களது கைக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள உடனடியாக இங்கே ஒரு அங்கன்வாடி வேண்டும். அதுபோலவே இங்கே இருக்கும் படிக்கும் பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஒரு இரவுப் பள்ளிவேண்டும். இந்தக் குடியிருப்பில் மரங்களை நடுவதற்கும் இரவுப் பள்ளியை நடத்துவதற்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இரவுப் பள்ளிக்கான ஆசிரியரை நியமிப்பதற்கு இங்கே வந்திருக்கும் சகோதரி லூஸினா அவர்களின் புனித அன்னாள் சபை பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். கல்விப் பணியில் அனுபவம் உள்ள அவர்கள் பொறுப்பேற்றால் அந்தப் பள்ளி சிறப்புற தொடர்ந்து நடக்கும்.
இங்கே இருக்கும் மக்கள் பெரும்பாலும் செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள். ஒரு இடத்தில் தங்காமல் இடம்பெயர்ந்துகொண்டே இருப்பவர்கள். அதனால்தான் அவர்களது வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகள். இவர்கள் நாடற்றவர்களாக வீடற்றவர்களாக இருக்கும்வரை முன்னேற்றம் காணமுடியாது. அவர்கள் தற்சார்போடு இருந்தால்தான் தன்மதிப்போடு வாழமுடியும். எனவே இங்கே இருப்பவர்கள் இங்கேயே தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள முடியும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யவேண்டும். இங்கிருப்பவர்களுக்கு சுயதொழில் செய்ய பயிற்சியளிக்கவேண்டும். உற்பத்தி தொடர்பான தொழில்களைவிட ப்ராசஸிங் தொடர்பான தொழில்களில் ஈடுபடுத்தலாம். இங்கே என்ன வாய்ப்பிருக்கிறது எனப் பார்த்து அதற்கான பயிற்சியை அளித்து தொழில்செய்ய வைக்கலாம். இந்த மக்கள் உழைக்கத் தயங்காதவர்கள். அவர்கள் நிச்சயம் அதை வெற்றிகரமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இங்கே அகரம் பவுண்டேஷனைச் சேர்ந்த நண்பர் ஞானவேல் வந்திருக்கிறார். அந்த சுய தொழிலுக்கான சிறு முதலீட்டை ஸீட் மணியை அவர் அகரத்தின்மூலம் ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
இதையெல்லாம் செய்வதற்கு ஒரு ஆண்டு போதும். இரவுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் உற்சாகப் பேச்சுகளுக்கிடையே, இங்கிருக்கும் தாய்மார்கள் வளர்த்த மரங்களின் நிழலில், சுயச்சார்புகொண்ட சுயமரியாதைகொண்ட மக்களுக்கிடையே அடுத்த ஆண்டு இதே நாளில் நாமெல்லோரும் இங்கே கூடுவோம். நன்றி.
( 28.02.2016 அன்று விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கம் மடம் கிராமத்தில் அரசு சார்பில் பழங்குடி இருளர் மக்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்பில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை )