Friday, December 28, 2012

கற்பழிப்பு என்று சொன்னால் தவறா?




பெண்கள் மீதான வன்முறை குறித்த விவாதங்களின்போது ’ கற்பழிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றியும் சிலர் முற்போக்காகக் கருத்துகளைக் கூறிவருகின்றனர். கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது கற்பு என்ற கருத்தாக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வதாகிறது, எனவே வன்புணர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். கற்பு என்ற கருத்தாக்கம் பற்றிய விவாதங்கள் பலகாலமாக நடந்துவருகின்றன. கற்பு என்பதை  ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது பற்றியும் அலுப்பூட்டும் அளவுக்குப் பேசிவிட்டோம்.

கற்பு என்பதற்கு வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு நான் மொழியியல் வல்லுனன் அல்ல. தமிழ்ப் பேரகராதியைத் தேடினால் சிலப்பதிகாரத்துக்குப் பிறகுதான் அந்த சொல் நம் இலக்கியங்களில் புழக்கத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.அறக்கற்பு மறக்கற்பு என்பவை குறித்தும்கூட நம் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் தற்காலத்தில் அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை.கல்வியில் தேர்ச்சிகொண்டவனை ‘கற்பன்’ என்று பதிற்றுப் பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் பொருளிலும் நாம் இப்போது கற்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

மனித உரிமை அமைப்பில் பல ஆண்டுகளாக செயல்பட்டவன் என்ற முறையிலும் இதுகுறித்த சட்டங்களை ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் இந்த சொல்லைப் பயன்படுத்துவது குறித்து நான் ஒரு நடைமுறையைப் பின்பற்றிவருகிறேன். ஒரு கொடுமை நடந்திருப்பது குறித்து எழுதும்போது நான் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். ஏனெனில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு குற்றத்தைக் குறிப்பிடும்போது அதைக் கேட்பவர்களிடம் ஏற்படும் தாக்கம் வன்புணர்ச்சி/ பாலியல் வல்லுறவு போன்ற சொற்களைப் பயன்படுத்தி அதை விவரிக்கும்போது ஏற்படுவதில்லை.வன்புணர்ச்சி /பாலியல் வல்லுறவு என்ற சொற்கள் நேரடியாக பெண் குறிக்குள் ஆண் குறியை நுழைக்கும் செயல்பாட்டை மட்டுமே குறிப்பிடுகின்றன. அப்படிச் செய்தால் மட்டும்தான் ரேப் என்று சட்டமும் சொல்கிறது. ஒற்றைப் பரிமாணம் கொண்ட அந்த விளக்கம் பெண்ணின்  உறுப்புக்குள்  ஒரு போலிஸ்காரன் தனது லட்டியைச் செருகுவதை ரேப் என்று ஒப்புக்கொள்வதில்லை. வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் பெண் உறுப்பில் பாட்டிலைச் செருகுகிறார்கள், கம்பியைச் செருகுகிறார்கள். கையை நுழைக்கிறார்கள். அதுவெல்லாம் இப்போதிருக்கும் சட்டத்தின்படி ரேப் என்பதில் அடங்காது. வன்புணர்ச்சி/பாலியல் வல்லுறவு என்ற சொற்களும் இந்தச் செயல்களை விளக்காது. இதனால்தான் இப்போது ரேப் என்ற சொல்லுக்கான விளக்கத்தை இந்தக் கொடூரச் செயல்களையெல்லாம் உள்ளடக்கும்விதமாக விரிவுபடுத்தவேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றனர்.

கற்பழிப்பு என்று சொல்லும்போது அதைக் கேட்கும் ஒருவருக்கு கற்பு என்ற கலாச்சார சுமைகொண்ட கருத்தாக்கம் நினைவுக்கு வருவதில்லை, மாறாக சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிம்பம்தான் நினைவில் வரும். ஆனால் வன்புணர்ச்சி / பாலியல் வல்லுறவு என்னும்போதோ அந்தச் செயல்தான் நமக்கு நினைவில்வரும். அது அவ்வளவாக நம்மில் கோபத்தைத் தூண்டுவதில்லை. கற்பு என்ற சொல் நம்மிடம் இருந்தாலும் ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளைப் பலவந்தமாகப் புணர்வதைக் குறிக்க நேரடியான தமிழ்ச் சொல் எதுவும் இப்போதைக்குப் புழக்கத்தில் இல்லை. ரேப் என்பதன் மொழிபெயர்ப்பாகத்தான் நாம் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமே தவிர கற்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அல்ல.

இவை என் கருத்துகள். இதுகுறித்துச் சிறந்த விளக்கத்தை யாரேனும் முன்வைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

14 comments:


  1. அன்புள்ள ரவிக்குமார்
    வணக்கம்.கற்பழிப்பு என்ற சொல்லாட்சி பற்றிய உங்கள் விளக்குமும் கருத்தும் எனக்கும் உடன்பாடே.கற்பு என்பது கல்வி என்றும் கற்கை என்றும் தொழிற்பெயராகவும் வழங்கும்.எழுதாக் கற்பு என்ற சங்கச் சொல்லாட்சி வாய்மொழியாகக் கற்கும் வேதத்தைக் குறிக்கும்.சம்பந்தர் போன்றவர்கள் சமணர் கற்பு என்று பேசும்போது அவரக்ளுடைய கல்வி என்ற பொருளில் ஆள்வார்கள். கற்பு என்பது ஒழுக்கம் என்ற பொருளில் வழங்கி வருகிற அருமையான சொல்.அச் சொல்லைப் பெண்ணை அடிமைப்படுத்தும் வழக்கமாக நாம் விரித்துக் கொண்டிருக்கிறோம்.அதனால்தான் அச்சொல்லுக்கு மாற்றுச் சொல் தேடுகிறார்கள்.ஆனால் அப்படிக் குறுகலான விளக்கம் தேவையற்றது.கற்பழிப்பு என்பது ஒழுக்க அழிப்பு என்ற பொருளில் வரும்போது ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
    அன்புடன்
    கி.நாச்சிமுத்து

    அன்புள்ள இரவிக்குமார், பேராசிரியர் நாச்சிமுத்து,

    உங்கள் கருத்துகள் முற்றிலும் சரியாகவே எனக்கும் படுகின்றது.
    கற்பு என்பது ஒழுக்கவுறுதி, ஒழுக்க நல்லுறுதி என்றும் பொருள்படும்.
    ஒழுக்கக்கோள் (நல் ஒழுக்கம் கொள்ளுமை) என்றும் பொருள்படும்.
    கல்வி கற்கவும் ஒழுக்கமும் உள உறுதியும் தேவை.

    அன்புடன்
    செல்வா



    --
    Regards
    Selva
    ___________________
    C.R.(Selva) Selvakumar
    --

    ReplyDelete
  2. ஏற்றுக்கொள்ள முடியவில்லை ரவி.

    கற்பழித்தல் என்ற சொல் வழக்கொழிந்து போக வேண்டும் என்று பெண்ணியவாதிகள் சொல்வதற்கு அக்கருத்தாக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வது என்பதாகிறது என்பது மட்டும் காரணமில்லை. அது கற்பை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது என்பது ஒரு பெரிய காரணம். அந்தச் செயலிலுள்ள குரூரம், வன்முறை இவற்றை விட அது அதற்கு உள்ளான பெண் கற்புள்ளவள் என்பதையே பிரதானப் படுத்துகிறது. இதனால்தான் பல இடங்களில் வன்புணர்ச்சி செய்தவனையே அவளை மணக்கச் சொல்கிறது. பெண்ணின் யோனியிலோ, இப்போது பலர் வாதாடுவதுபோல் அவள் ஆசன வாயிலிலோ ஒருத்தன் தன் உறுப்பைப் புகுத்துவதுதான் வன்புணர்ச்சி. யோனி பல கொடுமைகளுக்கு ஆளாவது வன்முறையின் வேறு பல பரிமாணங்கள்தான். அவை பாலியல் வன்முறை ஆனால் வன்புணர்ச்சி என்று கொள்ள முடியாது. இது விளக்கத்துக்காக. கற்பழிப்பு என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தினால், வெகு சுலபமாக ஒரு குறிப்பிட்ட பெண் கற்பில்லாதவள் அதனால் அவளை வன்புணர்வுக்கு உட்படுத்தியது கற்பழித்தலே இல்லை என்று வாதிடலாம் அந்தச் செயலைச் செய்தவர்கள். ஒரு பாலியல் தொழிலாளிக்கோ அல்லது சில வகையில் உடை அணிவதால், அல்லது சில வகைகளில் நடந்துகொள்வதால் சில பெண்களுக்கோ கற்பு இல்லை என்று சொல்லலாம். அதனால் கற்பழிப்பு என்ற பல பண்பாட்டுப் பின்னடைவுகளுக்கான குறியீடுகளையுடைய சொல்லை உபயோகிக்காமல் இருப்பதே நலம்.
    C.S. Lakshmi( Ambai)

    ReplyDelete
  3. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
    திண்மை உண்டாகப் பெறின்.

    தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

    2000 ஆண்டுக்கு முன்பே வள்ளுவர் எழுதியுள்ளார், கற்பு பற்றி.

    சி. ஜெயபாரதன்.

    ReplyDelete
  4. I do not believe that the குறள் is 2000 years old.

    -- Jean-Luc Chevillard (Paris)

    ReplyDelete

  5. திருக்குறளின் காலம் என்னவென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
    ஐந்தாம் நூற்றாண்டா? பத்தாம் நூற்றாண்டா? என்ன காரணங்கள்?
    சிலப்பதிகாரம் மணிமேகலையின் காலம் என்ன?
    தேவாரத்தின் காலம் என்ன?
    ஏன் இவற்றைக் கேட்கின்றேன் எனில் இவற்றில் எல்லாம்
    திருக்குறளின் மேற்கோள் இருபப்தாகக் கூற இடம் இருக்கின்றது.
    10 ஆம் நூற்றான்டு எனிலும் இழிவேதும் இல்லை. 19 ஆம் நூற்றாண்டில்
    தான் தோன்றியது திருக்குறள் என்று யாரேனும் கூறினும் அதன் சிறப்பு
    ஒரு சிறிதும் குறையாது!

    திருக்குறளின் காலம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு என்பது
    நேர்மையான கருத்து என்பது என் நினைப்பு. தக்கக் காரணம்
    கூறினால் திருத்திக்கொள்வேன்.

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete
  6. Dear Selva,

    I intentionally used the word "believe" because it was my impression that the opinion voiced by சி. ஜெயபாரதன் was somehow linked to the "legal" point of view which is the legal basis for the fact that a book can simultaneously be described as being printed in 2003 and in தி.ஆ.2034 (on the basis of a Government Order passed in 1989).

    If a government passes a G.O., it somehow becomes a "legal obligation" for the citizens to believe that the G.O. tells the truth.

    When I say that "I do not believe that the குறள் is 2000 years old", it means that, IMO, it is *NOT LEGITIMATE* for a government to legislate on things which could only be decided (if one is lucky) after a lot of academic research is done (and which may remain undecidable forever).

    -- Jean-Luc (Paris)

    ReplyDelete
  7. கூட்டாகச் சேர்ந்து, களவாகச் சென்று விலங்கொன்றைப் பற்றி, அதனோடு
    அத்துமீறிப் புணர்கிறவனை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ”அவன்கள்” சார்ந்த
    சமூகத்திற்கு உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பெடுக்க மாட்டோம். ஆனால்
    ”அவன்கள்” எங்களைத் தீண்டாதிருத்தல் வேண்டும் எனக் கேட்பது, தும்பை
    விடுத்து வாலைப் பிடிப்பதுவேயாகும். ஆயிரமாயிரம் தூக்குதண்டனை,
    மரணதண்டனைகள் வந்தாலும் அது நீங்கப் போவதுமில்லை; குறையப் போவதுமில்லை;
    அவன்கள் அவர்களா(மனிதரா)கும் வரையிலும்!!

    அப்படியாக, நாகரிகமற்றுச் செயல்படுகிற மனநிலை எழ வாய்ப்பிருக்கும்
    வரையிலும், எம்மை அண்டியிருக்கும் ஆண், பெண் இருபாலாரையும், பேதமின்றி
    அறிவுறுத்துவது எம் தனிமனித உரிமை. எடுத்துக்காட்டாக, ஓரினச்
    சேர்க்கையாளர்களோ அல்லது புலவிப் பெண்களோ மிகுந்து காணப்படுகிற இடத்திலே
    எம் உடன்பிறந்தவனை எச்சரிக்கையோடு இருக்கச் சொல்வேன். ஆண்கள் மிகுந்து
    காணப்படுகிற இடத்திலே எம் உடன்பிறந்தவளை எச்சரிக்கையோடு இருக்கச்
    சொல்வேன். அதுவொரு தனிப்பட்ட செயல். அதையே தீர்வாகச் சொல்வதுதான்
    தவறாகும்.

    அதை விடுத்து, நம் தமிழுக்கு இப்போது வருவோம். பொருள் கொண்டு பார்க்கின்,
    வினவுதலுக்கு உள்ளாகின்றன இச்சொற்கள். மனமொத்துப் புணரும் போது கூட வலிமை
    மிக வாய்ப்புண்டு. என்றுமில்லாதபடிக்கு நேற்றைய இரவிலான புணர்வு
    வலிமையாய் இருந்தது எனச் சொல்கிற போது, அதுவும் வன்புணர்வே.

    ஆனால் நாமிங்கு, அடுத்தவரின் மனமொப்பாமல் மனத்தாலும் மெய்யாலும் பற்றிச்
    சூறையாடிப் புணர்வதையே குறிப்பிட விழைகிறோம். ஆக, சூறைப்புணர்வு என்பதுவே
    இலத்தீனத்திலிருந்து ஆங்கிலத்தில் கடன் வாங்கப் பெற்றிருக்கும் ’ரேப்’
    எனும் சொல்லுக்கு ஈடாக இருக்கும். ‘பலாத்காரம்’ எனும் திசைச்சொல்லுக்கு
    நிகராக ‘சூறைப்பற்று’ என்பதும் ஈடாக இருக்கும்.
    - பழமைபேசி

    ReplyDelete
  8. அன்புள்ள எல்லாருக்கும்,

    வணக்கம். "கற்பு" என்ற சொல்லுக்கு விளக்கம் வேண்டுமா? வேர்ச்சொல் ஆய்வுக்குப் போகவேண்டியதில்லை, ரவிக்குமார்.


    இதோ ...

    "கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
    கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
    கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"

    என்று தொல்காப்பியம் உரைக்கிறது.
    "கரணம்" என்பது சடங்கு என்று பொதுவாகப் பொருள் கொள்ளலாம். இந்தக் கரணம் எப்போது ஏன் தோன்றியது?

    "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப"

    என்று தொல்காப்பியம் சொல்கிறது.
    தொல்காப்பியம், இறையனார் களவியலுரை இவற்றைப் படித்தால் ... களவு, கற்பு என்ற சொற்கள் பழைய காலத்தில் எப்படி எந்த நோக்கில் பயன்பட்டன என்று புரியும். இதை மேற்கொண்டு விளக்க எனக்கு இப்போது நேரமில்லை. விரும்பினால், தம்பிமார் மறைமலை, திருவள்ளுவன் போன்றோர் உதவலாம். நாங்கள் அனைவரும் பேராசிரியர் இலக்குவனாரின் மாணவர்கள் அல்லரோ!!
    பேராசிரியர் நாச்சிமுத்து சொன்னது போல, "கற்பு" என்ற சொல் இக்காலத்தில் சொல்வதுபோல "கற்றல்" "கற்கை" என்ற பொருள் தரும் ஒரு தொழிற்பெயர், அவ்வளவே. அதைப் போட்டுப் பெண்களுக்கே உரிய ஒரு பண்பாக்கியது பாழாய்ப்போன (இன்னும் கீழான வசைபாட ஆவல்!) தமிழனின் கொடூர/வக்கிர புத்தி.
    மறைமொழியாகிய வேதத்தைக் குறிக்கும் "எழுதாக் கற்பின் நின் சொல்" என்ற குறுந்தொகை வரியோடு பதிற்றுப்பத்து சொல்வதையும் பார்க்கவும்.

    பதிற்றுப்பத்துப் பாடல்களில் (59, 80) "கற்பு" என்பதை ஆடவனுக்கும் (அரசனுக்கும்) சொன்ன புலவர்கள் பைத்தியக்காரர்களா?
    பதிற்றுப்பத்து 59
    --------------------
    இரவல் மாக்கள் சிறு குடி பெருக
    உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
    வில்லோர் மெய்ம்மறை! வீற்றிருங்கொற்றத்துச்
    செல்வர் செல்வ!


    பதிற்றுப்பத்து 59
    --------------------
    தொலையாக் கற்ப!
    பிற்கால, இக்காலத் தமிழனுக்குத்தான் வக்கிரம். எதையெடுத்தாலும் பெண்களின்மேல் சுமையாக்கி, தான் தறுதலையாய்த் திரியும் பழக்கம் தொடங்கிப் பல காலம் ஆகிவிட்டது. இப்போது சுகமாக வாழும் இந்தச் சமூகம் இனித் திருந்தும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
    "கற்பழிப்பு" என்ற சொல் ஆங்கிலத்தில் சொல்லும் rape என்பதற்கு ஈடாகுமா என்று தெரியவில்லை. மேலும் நினைத்துப் பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ராஜம்

    ReplyDelete
  9. அன்புள்ள (இ)ழான்,

    அரசு ஆணை என்பதால் அப்படிச் சொல்ல வேண்டுவது கடமைதான்.

    மறைமலை அடிகளும் மிகப்பல புலவர்களும் தங்கள் ஆராய்ச்சியால்
    அவர்கள் கண்டேற்ற கருத்துகளின்படி நிறுவியதாகவோ ஏற்பு தந்ததாகவோ
    கொள்ளத்தக்க காலம் என்பதை அடிப்படையாகக் கொண்டு
    அறிவித்த் ஆணை, அரசு ஆணை. அது தவறு, இன்னொரு நாள்தான்
    திருவள்ளுவர் பிறந்தநாள் என்று நிறுவினால், மீண்டும் ஓர் அரசாணை
    பிறப்பிக்கலாம். ஆய்வு என்பதில் எப்பொழுதும் சிறிதளவு
    உறுதியில்லாமை இருக்கத்தான் செய்யும். அதனால் ஏறத்தாழ
    ஈராயிரம் ஆண்டு என்ப்து ஒருவாறு தெளிவாகத் தெரியும் பொழுது அப்படிக்
    கூறுவதில் பெரும் பிழை இல்லை.

    இயேசுநாதர் என்ன திசம்பர் 25, ஆண்டு 0000 இல் பிறந்தாரா?
    சான்றிதழ் போன்று கற்பொறிப்பாகவே இருந்தாலும் அது உண்மையாக
    இருக்கவேண்டும் என்பதற்கு என்ன உறுதிப்பாடு?
    (பொய்யாக வெற்றியையும் தோல்வியையும் கல்வெட்டுகள் சுட்டுவதில்லையா?)
    (இயேசுநாதர் என்று ஒருவர் இருந்திருக்கவே இல்லை என்றும் கூறுவோர் உள்ளனரே!)

    இவற்றை எல்லாம் ஓரளவுக்கு உண்மை என அறிந்ததற்கு ஏற்ப மரபாகக் கொள்வதுதான்
    இங்கு நிகழ்வது.

    கிருட்டிணர் பிறந்த அட்டமி, இராமர் நவமி என்பதெல்லாமும் அப்படியே.
    திருவாதிரை, ஓணம் என்பனவும் அப்படியே. திருவள்ளுவர் பிறந்தநாளும்
    அப்படியே. திருவள்ளுவர் பிறந்த ஆண்டை வலுவாக, மறுக்கொணாதவாறு
    நிறுவினால், மாற்றிக் கொள்ளலாம்.

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete
  10. Dear Selva,

    I am about to leave for 3 days in order to visit my mother
    in the country side and I shall be without internet connection there.

    As a short comment:

    -- your comparison with the supposed birth date of Jesus is apt, because fixing that birth date also seems to have been a political decision

    -- I personally have no opinion concerning the question whether someone really existed who was called "Jesus" and was the basis for the corpus of texts which the various branches of christianity share (the four gospels, etc.)

    -- when I apply for my visas in order to come to India, the online application asks me for my "religion", and there is a long list of possibilities, including "OTHER", which is what I select, after which I manually enter the specification "AGNOSTIC", which means (IMO) that I refuse to be listed under one religion but that I am NOT a militant against religions (which is what ATHEISM would entail).

    Coming back to the குறள், it seems to me that it is preferable if a (politically supported) religious belief in the திருவள்ளுவர் ஆண்டு setup is not part of a reasoning on the chronology of the successive meanings of the word கற்பு ....

    Yours with every good wish

    -- Jean-Luc

    ReplyDelete
  11. கற்பு என்ற சொல், சிலம்பில், பெண்களுக்கு உரிய தன்மையாகச் சித்திரிக்கப்பட்டாலும், கம்பன் காலத்தில்கூட, அது கல்வி என்ற பொருளிலும் (கவனிக்கவும், பொருளில்தான் என்று சொல்லவில்லை; பொருளிலும்) ஆளப்பட்டுள்ளது.

    தெய்வம் தொழாஅள் குறளை மணிமேகலைதான் முதலில் மேற்கோள் காட்டியிருப்பதாகச் சொல்வார் உண்டு. ஆனால், இதே குறள் சிலம்பிலும் மேற்கோளாகப் பயில்கிறது.

    தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
    தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய்
    மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
    விண்ணக மாதர்க்கு விருந்து.

    --சிலம்பு, கட்டுரை காதை.

    எனவே, திருக்குறளை முதன்முதலில் மேற்கோள் காட்டிய நூல் எது என்ற கேள்விக்கு விடை, மறுபரிசீலனைக்கு உரியது.

    கிட்கிந்தா காண்டம், அனுமப் படலத்தில், இராம இலக்குவரை முதன்முறையாகக் காணும் அனுமன், அவர்களைச் சற்றுத் தொலைவில் நின்று, அவர்களைப் பற்றிச் சிந்திப்பதைப் பற்றிப் பேசும்போது கம்பன் சொல்கிறான்:

    அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
    மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
    'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என,
    நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்

    அனுமன், கற்பின் நினையும் என்றால், அவனுடைய கல்வித் திறத்தால் எதிரில் வரும் இருவரையும் எடைபோட, அனுமானிக்க முயன்றன் என்பதுதானே பொருள்.

    ஆக, நிச்சயமாக கல்வியுடைய தன்மை என்ற பொருள் கம்பன் காலத்தில் வழக்கில் இருந்திருக்கிறது. பிற்காலங்களிலும் இருந்திருக்கலாம். ஆனால் சர்வ நிச்சயமாக பதினெட்டு-பத்தொன்பதாம் ஆண்டுகளிலிருந்தாவது இந்த இன்னொரு பொருள், மறைந்திருக்கிறது என்று சொல்ல முடியும். தோராயமாகத்தான் சொல்கிறேன். இதற்கு முற்பட்டும் இருந்திருக்கலாம்.
    - ஹரிகி

    ReplyDelete
  12. அன்பிற்குரிய ஹரிகி,

    உங்களுடைய கருத்திலிருந்து நான் முற்றிலும் மாறிவிடவில்லை. ஓரளவு மாறுகிறேன். [கற்பு என்ற சொற்பொருள் கல்வியையொட்டி கம்பனிலும் வந்திருக்கிறது என்று நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பதை அப்படியே ஏற்பேன். கம்பனை ஆழக் கற்றவர் நீங்கள்.]

    ”சிலம்பின் காலம்” இங்கு தொடர் இடுகைகளாக வந்தது. பின் நூலாகவும் சென்ற ஆண்டு திசம்பரில் வெளிவந்தது.

    சிலப்பதிகாரத்தில் பல்வேறு காதைகளின் முடிவில் வரும் வெண்பாக்களை இளங்கோ எழுதியிருக்கத் தேவையில்லை என்றே நான் இப்பொழுதெல்லாம் கொள்ளுகிறேன். I strongly suspect that they might not have been authored by Ilango. எப்படி நாலாயிரப்பனுவல் அச்சுப் பதிப்புகளில் (அவற்றிற்கு மூலமான ஓலைச்சுவடிகளில்) ஆழ்வார்கள் பாடலுக்கு முடிவிலோ, தொடக்கத்திலோ, அவர்கள் ஆக்கத்தை விதந்தோதுவது போல வரும் வெண்பாக்களை ஆழ்வார்களுக்குப் பின்னால் வந்த மற்றோர் எழுதியிருக்கின்றாரோ, அதுபோலவே சிலம்பின் காதைகளின் முடிவில் வேறு யாரோ ஒருவர் விதந்து ஓதுவதாகவே நான் கொள்ளுகிறேன். (என்னைக் கேள்விக்கு உள்ளாக்கலாம் தான்.)

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நம்முடைய பண்பாட்டிலே சில சொற்களை பொருள் தெரிந்துதான் சொல்லுகிறோமா என்று தெரியவில்லை. கற்பழிப்பு என்பது அன்றாடம் ஊடகங்களிலும், மக்களிடையேயும் புழங்கும் சொல். கற்பழிப்பது என்று எதைச் சொல்லுகிறார்கள்? ஒருவர் மற்றவர்பால், அவருடைய மறுப்பையும் மீறிச் செய்யும் வன்புணர்ச்சியைத்தானே? அல்லது பழமைபேசி கூறியது போல சூறைப்புணர்ச்சியத்தானே?

    கற்பை உடல் என்ற அளவில் கொள்ளும் அறிவிலிகளுக்குத்தான், அது கற்பழிப்பாகத்தான் தோன்றும். கற்பு என்பது ஒழுக்க நெறி; ஒருவரை ஒருவர் மனதால் விரும்பி, அவர்களை முழுதாக ஒருவருக்கொருவர் ஒப்புக் கொடுப்பது. அது உடல் என்கிற புறத்தைக் கடந்து, ஆத்மா என்கிற அகத்தைச் சார்ந்தது.

    மற்றொரு கருத்தான, கற்பு என்பது கற்றல் என்றே கொண்டாலும், உண்மையான கற்றலின் விளைவு ஒழுக்கமே! ஒழுக்கத்தின் உறுதியை யாரும் யாரிடத்திலும் வன்முறையினாலன்றி, சூறையாடமுடியாது. உதாரணத்துக்கு ஒருவர் மதுவகைகளை அருந்தாதவராக இருந்தால், சிலர் அவரை வற்புறுத்தி, அவர் மறுக்க மறுக்க, குடிக்க வைப்பதும் கற்பழிப்புதான்.

    விதிவயமாக ஒரு பெண்ணோ, ஏன் ஆணோகூட வன்புணர்வுக்கு அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஆளாக நேரிட்டால் அவர்கள் கற்பு எவ்விதத்திலும் கெட்டுவிட்டதாக ஆகாது; அதாவது ஒருவரிடமிருந்து அவருடைய ஒழுக்கத்தை யாரும் அழிக்கமுடியாது. தற்காலிகமாகப் பிறழச் செய்யமுடியும் வன்முறையினால். கற்பிழத்தல் என்பது ஒருவருடைய சுயக்கட்டுப்பாட்டில், மனவுறுதியில் உள்ளது.

    ஒரு பெண்ணோ, ஆணோ தங்கள் மனத்தில் சோரம் போவதால் மட்டுமே கற்பை இழக்கிறார்கள். வன்புணர்ச்சி என்பது திணித்தவர்கள் குற்றமேயன்றி, அது திணிக்கப்பட்டவர்களின் குற்றம் அல்லவே!

    அவ்வையார் கூற்றின்படி, கற்பெனப்படுவது சொற் திறம்பாமை அல்லவா? நம்மில் எத்தனைபேர் சினிமாவிலும் பிற ஆடவரைப் பார்த்தோ, பெண்களைப் பார்த்தோ மனதில் தவறாக எண்ணாமல் இருக்கிறோம்? சினிமாவில் காட்டப்படும் வக்கிரங்களையெல்லாம் இரசித்துவிட்டு, கற்பின் உயர்வைப் பற்றி எப்படி சற்றும் நாக்கூசாமல், மனத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் பேசுகிறோம்? அழகை இரசிக்கிறோம், கலைதானே என்று விதம்விதமாக நொண்டிச்சாக்குகளையும் சமாதானங்களையும், நமக்கு நாமே சொல்லிக்கொண்டு, அத்தனை ஆபாசங்களையும் குடும்பங்களோடு பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

    தொல்காப்பியரே இதற்கு நியதி வகுத்திருந்தாலும், வள்ளுவரே வாய்கிழிய கற்பை பெண்களுக்குரியதாகச் சொல்லியிருந்தாலும், இளங்கோ கற்புக்காக காவியத்தை எழுதியிருந்தாலும், இராமாயணம் காட்டும் கற்பு நெறி உயர்வானது, இருபாலருக்கும் பொதுவானது. இராமனும், சீதையும் ஒழுக்க சீலர்களாகவே இருந்திருக்கின்றனர். மகாபாரத காலத்திலேயே பிறழ்வது என்பது பரவலாகவும், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆனதையும், குந்தி மற்றும் திரௌபதியின் வாழ்க்கைக் காட்டுகிறது. அவர்கள்கூட மனதளவில் அவர்கள் ஏற்றுக்கொண்ட தருமத்துக்கு, ஒழுக்கக் குறியீட்டுக்கு ஏற்பத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் பின்னோக்கிப்போனால், சத்தியவதி உள்ளிட்டவர்களும் உடலைப் பகிர்ந்திருக்கிறார்களே தவிர உள்ளத்தால் தங்களுடைய கணவர்களோடு மட்டுமே இயைந்திருந்தார்கள் என்பதே மகாபாரதமும் காட்டும் ஒழுக்கம்.

    ஆக, கற்பிழத்தல் (சுய உணர்வோடு) ஒழுக்கக்கேடு, குற்றம்; கற்பழித்தல் என்பது அவ்வொழுக்கக்கேட்டினைச் செய்தவர்களது குற்றமேதவிர ஆளாக்கப்பட்டவரின் குற்றமே இல்லை.. எனக்கு ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள்தான் நினைவுக்கு வருகிறது.அது காக்கையிடும் எச்சம்போல, கழுவிவிடப்படவேண்டிய ஒன்று, கைவெட்டும் குற்றமல்ல.

    தமிழ் சினிமா, கலாச்சார வக்கிர பொருளாக்கம் வெட்கத்துகுரியது, அழிக்கப்படவேண்டிய ஒன்று. கற்பிழந்தது இத்தகைய வக்கிரவாதிகள் மட்டும்தான்.

    ReplyDelete