Sunday, May 19, 2019

மீளும் வரலாறு

நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை.  நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களிலும் கோடை காலத்தில் நாடகங்கள் நடைபெறும்.  தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பிரபலமான நாடக குழுக்களை அழைத்து வந்து நாடகங்களை போடுவார்கள்.  டி.ஆர். மகாலிங்கம், உடையப்பா, கண்ணப்பா என்று புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள்.  அப்படி நாடகம் நடந்துகொண்டிருந்த நாளில்தான் நான் நந்தன் கதையைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன்.  உடையப்பாவின் நாடகங்களில் அரிச்சந்திராவுக்கு ஒரு தனி இடம் உண்டு.  அந்த நாடகத்தில் சுடலையில் நின்று பாடுவதுபோல் வரும் காட்சியில் 'பறையன்' என்ற சொல் இடம்பெற்ற பாடல் ஒன்று வரும்.  அவருடைய கம்பீரமான குரல் உருகி குழைந்து கேட்பவரை கண்ணீர்விட வைக்கும்.  அந்த பாடல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என சொல்லி பல்வேறு ஊர்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதனால் இனிமேல் அந்த பாடல் அரிச்சந்திராவில் இடம்பெறாது என்றும் அப்பா யாரோடோ பேசிக்கொண்டிருந்ததை நான் அப்போது கேட்டேன்.  "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சரிதான், ஆனால் நந்தனார் நாடகத்தில் வரிக்குவரி இப்படி கேவலம் வருகிறதே அதை எவனும் கேட்கவில்லையே" என்று அப்பா அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் நந்தன் கதை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அந்த உரையாடல்தான் காரணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை.

ஐந்தாம் வகுப்புவரை என் சொந்த கிராமத்தில் படித்த நான் ஆறாம் வகுப்புக்காக சிதம்பரம் சென்றேன்.  தினமும் ரயிலில் சென்று படித்து வரவேண்டும்.  அப்படி போகும்போது என் வயதையத்தவர்களோடு நான் போவதில்லை.  எப்போதும் பெரிய ஆட்களோடுதான் சினேகம்.  என்னுடைய உறவினர் கலியபெருமாள் என்பவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஓவியக் கல்லூரியில் பயின்று வந்தார்.  வகுப்பை கட் அடித்துவிட்டு அவரோடும், அவரது நண்பர்களோடும் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சென்று ஸ்கெட்ச் பண்ணுவார்கள்.  அப்போது அவர்களோடு பல சமயம் நானும் சென்றிருக்கிறேன்.  சனி ஞாயிறுகளில் சிதம்பரம் நடராஜா தியேட்டரில் காலை காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு நடராசர் கோயில் புளியோதரையை வாங்கி சாப்பிடுவோம்.  அந்த கோயில் எனக்கு மிகவும் நெருக்கமானது அப்படித்தான்.  அந்த கோயிலுக்குள் நுழையும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு வினோதமான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு.  சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற கதையையும் தாண்டி அந்த கோயிலுக்குள் மேலும் பல ரகசியங்கள் இருக்கின்றன.  அவை இன்னும் யாராலும் அறியப்படாமல் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றும்.  சிதம்பரம் குறித்து வெளிவந்துள்ள நூல்களையெல்லாம் அப்படித்தான் நான் சேகரித்து படிக்க ஆரம்பித்தேன்.  தமிழ் பௌத்தம் குறித்த அயோத்திதாசரின் எ-ழுத்துகளை படித்ததற்கு பிறகு சிதம்பரத்தின் மீதான எனது இச்சை தீவிரம் அடைந்துவிட்டது. 

தமிழக தலித்துகளின் வரலாற்றை தொகுப்பதிலும் மறுவாசிப்பு செய்வதிலும் ஈடுபட்டபோது சிதம்பரம் புதிய பரிமாணம்பெற்று என்முன் நின்றது.  தமிழகத்தில் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதற்கு சிதம்பரம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.  அதிலும் குறிப்பாக நந்தன் கதை அதில் பிரதானபங்காற்றியிருக்கிறது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது.  அதைத் தொடர்ந்து பெரியபுராண நந்தன் கதையை மறுத்து நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை முன்வைக்கவேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது.  அப்போது ஒருநாள் இதுபற்றி திரு. தொல். திருமாவளவன் அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் வியப்போடு இதை ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்டார்.  விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழான தாய் மண்ணில் அதை தொடராக எழுதுமாறு வலியுறுத்தினார்.  2003 மார்ச்&ஏப்ரல் இதழில் இந்த தொடரை நான் ஆரம்பித்தேன்.  பன்னிரெண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.  அக்டோபர் 2004 வரை அது வெளிவந்தது.  அதன்பிறகு நான் அதை தொடர்ந்து எழுத முடியவில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம் புதுவையில் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.  நானும் நண்பர்களுமாக சேர்ந்து நடத்தி வந்த தலித் கலைவிழாவில் கூட அதை போட்டிருக்கிறோம்.  ஆனால் நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை பரவலாக அறியச் செய்யவேண்டும் என்ற எனது ஆசைக்கு அது உகந்ததாயில்லை.  அப்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை தலைவராக இருந்த கே.ஏ. குணசேகரன் அவர்களிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் நந்தன் கதையைப் பற்றி பேசி அதை நாடகமாக போடலாம் என்று கேட்டேன்.  அவரும் அப்போது ஆர்வமாக சம்மதித்தார்.  ஆனால் அந்த நாடகத்தை நான் எழுதமுடியாமல் போய்விட்டது.  நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் அவ்வப்போது அதைப்பற்றி பேசுவதுண்டு.  அதன் தொடர்ச்சிதானோ என்னவோ இன்று

அதே நந்தன் கதையைப் பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார்.   உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளிப்பார் என நான் கற்பனையும் செய்ததில்லை.  உலகத் தமிழ் மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நிச்சயமாக அந்த மாநாட்டில் இந்த புதிய நந்தன் கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இந்த சொற்பொழிவுக்கான வாய்ப்பை அளித்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்த பொழிவுக்கு தலைமை ஏற்கவிருக்கும் டாக்டர் அ. ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றி.
( மீளும் வரலாறு நூலுக்கு நான் எழுதிய குறிப்பு )

2 comments:

  1. அருமை. சிவனடியார் நந்தனை மன்னன் நந்தனாகக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete