Friday, April 15, 2011

விஜயகாந்த் தொகுதியின் வினோத நிலை




விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் ஒரு வினோதமான நிலையைப் பார்க்க முடிகிறது . அங்கு பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். அங்கு பதிவான மொத்த வாக்குகள் 171067. அதில் ஆண்கள் 79296 வாக்குகளையும், பெண்கள் 91771 வாக்குகளையும் அளித்துள்ளனர். வாக்களித்த பெண்களின் சதவீதம் 91.76 ஆகும்.இது மாநில சராசரியைவிட சுமார் 13 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ரிஷிவந்தியம் இடம்பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வாக்களித்த பெண்களின் சதவீதம் 83.18 ஆக இருக்கும்போது மாவட்டத்தின் சராசரியைவிட சுமார் 8 சதவீதம் கூடுதலாகப் பெண்கள் அங்கு வாக்களிக்கக் காரணம் என்ன?

விஜயகாந்த்தின் சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பார்கள் என சிலர் கூறக்கூடும். ஆனால் விஜயகாந்த்துக்குப் பெண்களின் மத்தியில் அப்படி ஆதரவு பெரிதாக இல்லை. அதிலும் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் தள்ளாட்டத்தைப் பார்த்தபிறகு பெண்கள் அவருக்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று நம்பமுடியவில்லை.மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதைப் பல இடங்களிலும் அறிய முடிகிறது. அப்படியான ஒரு நிலையைத்தான்   ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் மேற்கொண்டார்களா?

தி,மு,க கூட்டணியைச் சேர்ந்தவர்களிடையே உற்சாகமாக உலவிவரும் செய்திகளில் ஒன்று ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றிபெறப் போவது கடினம் என்ற செய்தியாகும். ரிஷிவந்தியம் தொகுதிப் பெண் வாக்காளர்கள் சினிமா கவர்ச்சிக்கு ஆட்பட்டவர்களா? அல்லது தள்ளாட்ட அரசியலுக்கு எதிரானவர்களா? அவர்கள் எந்த செய்தியை இந்த நாட்டுக்குச் சொல்லப்போகிறார்கள் என்பது மே 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.

2 comments:

  1. எல்லா இடுகைகளையும் படித்தேன். உற்சாகத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்போதே வாழ்த்துக்கள்.

    செந்தில், ஆழி

    ReplyDelete