Saturday, April 16, 2011

தேர்தல் காலத்தில் முதல்வர் பதவி தேவையில்லையா? ரவிக்குமார்




(இக்கட்டுரை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது எழுதப்பட்டு( 18.04.2009)  ஜுனியர் விகடன் இதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பொருத்தப்பாடு கருதி இங்கு வெளியிடப்படுகிறது.)

நடக்கவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு பணியாற்றி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு சில பகுதிகளில் வாக்குப்பதிவும் துவங்கி விட்ட நிலையில் தற்போதுள்ள அரசாங்கம் முழுமையான அதிகாரத்துடன் செயல்பட முடியாது. இந்நிலையில் இப்போது அரசாங்கம் என்றாலே தேர்தல் ஆணையம்தான் என்ற அளவுக்கு மக்களிடம் தேர்தல் ஆணையம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளோ தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடிகளைப் பார்த்து விழி பிதுங்கி நிற்கின்றன. தேர்தலில் எவ்விதமான முறைகேடுகளும் நடந்து விடக்கூடாது, வன்முறை எதுவுமின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகளை அது வெளியிட்டிருக்கிறது. பல்வேறு விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவுவதில் கில்லாடிகள் என்பது தேர்தல் ஆணையத்திற்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்தமுறை கடுமையான கண்காணிப்பை அது மேற்கொண்டிருக்கிறது.
நமது பாராளுமன்ற ஜனநாயகத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் இருப்பதென்பது ஒருவிதத்தில் பலம் என்ற போதிலும், அதனால்வரும் இடையூறுகளும் ஏராளம். சுயேச்சை வேட்பாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு தடையாக மாறி விடாமல் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதுபோலவே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அது எடுத்திருக்கிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை பரவாமல் தடுக்கவும் தேர்தல் ஆணையம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த அக்கறை சில நேரங்களில் பாராளுமன்ற ஜனநாயகத்தை மூச்சுத் திணற வைப்பதுபோல் அமைந்து விடுகிற நிலையையும் நாம் பார்த்து வருகின்றோம். இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதும், தலைமை தேர்தல் அதிகாரிகள் மீதும் கடுமையான புகார்கள் எழும்பி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். கோடிக்கணக்கான மக்கள் தமது வாக்குரிமையைச் செலுத்தி ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நடைமுறை எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என தேர்தல் ஆணையம் விழிப்போடு இருப்பது நல்லதுதான். இங்கே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டபோது தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்க முடியாது என்ற காரணத்தினால்தான் அந்தப் போட்டிகள் வேறு நாட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன. இந்த அளவுக்கு பாதுகாப்பு குறித்து நமது அரசாங்கமும் விழிப்போடு இருந்ததை நாம் பார்த்தோம். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்ற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவின் பாதுகாப்புக்கு பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் இருக்கின்ற சூழலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இலங்கையிலும் உள்நாட்டு போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நமது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு உள்ளது. சொல்லப்போனால் தேர்தலைவிடவும் முன்னுரிமை அளித்து செய்யப்பட வேண்டிய பணி அதுதான். இப்படியான சூழலில் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு நமக்கெல்லாம் வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி தேர்தல் ஆணையம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள செய்திதான் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மாநில முதலமைச்சர்களுக்கு ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்திலுள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கமளிப்பது வழக்கம். காவல்துறையின் தலைமை அதிகாரியோ அல்லது உளவுத்துறையின் தலைமை அதிகாரியோ இந்த விளக்கத்தை முதல்வருக்கு அளிப்பார்கள். அதன்மூலம் மாநிலத்திலுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முதல்வர் தெரிந்து கொள்ள முடியும். பல மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். தமிழ்நாட்டிலும்கூட அப்படித்தான். இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை போட்டிருக்கிறது. இனிமேல் காவல்துறை அதிகாரிகள் மாநில முதல்வர்களுக்கு பாதுகாப்பு நிலவரம் பற்றி விளக்கமளிக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தலைமைச் செயலாளரோ அல்லது உள்துறைச் செயலாளரோ விளக்கமளித்தால் போதும். தவிர்க்க முடியாத சூழல் எழுந்தால் மட்டுமே காவல் அதிகாரியை உடன் அழைத்துச் செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நடவடிக்கை சரிதானா? என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை கவனித்து அதற்கேற்ப உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது. எந்தக் காரணம் கொண்டும் அந்த கடமையை நாம் தடுத்துவிட முடியாது. அப்படி செய்வது மாநிலத்தின் பாதுகாப்புக்கே குந்தகமாக அமைந்துவிடும். காவல்துறை அதிகாரிகளுக்குப் பதிலாக தலைமைச் செயலாளரோ, உள்துறைச் செயலாளரோ அதை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருப்பது அவசியம்தானா? என்பதே நமக்குள் எழுந்துள்ள கேள்வியாகும். காவல்துறை அதிகாரிக்கும், தலைமைச் செயலாளருக்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடு அவர் ஐ.பி.எஸ். அதிகாரி, இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதுதான். போலீஸ் பணியில் இருப்பவர்களை இரண்டாம் தரமாக தேர்தல் ஆணையம் கருதுகிறதோ என்ற ஐயப்பாட்டையும் இது எழுப்பியிருக்கிறது. நேரடியாக முதல்வரிடம் விளக்கமளித்த காவல்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின்படி தலைமைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க, அதன்பிறகு அவர் சென்று முதலமைச்சரிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நிலை. இதனால் காவல்துறை அதிகாரி சொல்ல நினைப்பது முழுமையாக முதலமைச்சரிடம் சென்று சேரமுடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதனால் காலதாமதமும் ஏற்படும். முதலமைச்சருக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையில் இன்னொரு நிலை குறுக்கிடுவதால் தேவையற்ற தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே இது அவசியம்தானா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தேர்தல் வழக்கில் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன்படி மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தினந்தோறும் தலைமை தேர்தல் அலுவலரிடம் சட்டம் ஒழுங்கு நிலையை எடுத்துச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழிகாட்டுதலை தந்திருக்கிறது. இதன்படி பார்த்தால் முதல்வரிடம் காவல்துறை அதிகாரிகள் விளக்கமளிக்கக்கூடாது. மாறாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்தான் விளக்கமளிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. இது முதல்வரின் அதிகாரத்தையே பறிப்பதாக அமைந்துவிடாதா? தேர்தல் ஆணையம் இந்த முடிவை எதனடிப்படையில் எடுத்தது, இதற்கான காரணக்காரியங்கள் எவை என்பதை அது தனது உத்தரவில் தெளிவாக விளக்கவில்லை. எனவே இது குழப்பத்திற்கே இட்டுச்செல்லும் என்ற ஐயம் இப்போது பரவலாக இருந்துள்ளது.
தேர்தல் நடைபெறும்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கூடுதலாகக் கண்காணித்து அதுபற்றி உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பொறுப்பானவராக முதலமைச்சர்தான் இருக்க முடியும். ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்து விட்டால் அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார் என்றுதான் பொருள். தேர்தல் நேரத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அதனால் அவரது நடுநிலைமை பாதிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமல்ல. இப்போது தேர்தல் ஆணையம் எடுத்துவருகிற நடவடிக்கைகள் முதலமைச்சர் என்பவரை ஒரு கட்சிக்காரராகவே பார்த்து அணுகுவதாக அமைந்துள்ளது. அரசு அலுவலகங்களிலிருந்து முதலமைச்சரின் படங்களை அகற்றிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. இது முதலமைச்சர் என்ற பொறுப்பின்மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக் கூடிய அபாயம் இருப்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தவேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. அதுபோலவே தேர்தலில் ஒரு தரப்புக்கு கூடுதல் அனுகூலம் இருந்துவிடக்கூடாது என்பதிலும் நமக்கு உடன்பாடுதான். ஆனால், இதை நடைமுறைப்படுத்தும்போது ஏற்கனவே இருக்கின்ற பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை நாம் பலவீனப்படுத்தி விடக்கூடாது. தேர்தல் என்பதே அதிகாரத்தை பரவலாக்குகிற ஒரு வழிமுறைதான். ஆனால் அந்த தேர்தலை ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களைப் பறிப்பதற்கான கருவியாக மாற்ற முனைந்தால் அது நமது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக ஆக்கிவிடும்.

No comments:

Post a Comment