தேர்தல் - எத்தனையோ வினோதக் காட்சிகளை நம் முன் நடத்திக் காட்டுகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற ’நியாயத்தை’ எல்லோருமே ஏற்றுக்கொண்டிருப்பதாக நாம் நம்புகிறோம். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் தோழர்கள் சாதி அடையாளத்தைத் தேர்தலில் பயன்படுத்தினார்கள் என்பதை எப்படி நாம் புரிந்துகொள்வது? அதிலும் நான் பெரிதும் மதிக்கக்கூடிய தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு சாதிப் பின்னொட்டு சேர்க்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.
கே.பி என்று தோழர்களால் அழைக்கப்படும் தோழர். கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க அணியின் சார்பில் நிறுத்தப்பட்டிருப்பவர் மூ.மு.க வைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார். 1998 ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் கத்தரிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ம.தி.மு.க பிரமுகர் பழனிவேலு என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் பின்னணியில் ஸ்ரீதர் வாண்டையார் இருந்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. அதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளும் களம் இறங்கின. அதில் முனைப்பாக பங்காற்றியவர்களில் தோழர் கே.பியும் ஒருவர். அந்த நேரத்தில் சிதம்பரத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த தோழர் சங்கரய்யாவின் கார் தாக்கப்பட்டது. அது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தேர்தல் களத்தில் கே.பியும் ஸ்ரீதர் வாண்டையாரும் மோதுகிற நிலையில் ம.தி.மு.கவினரே மறந்துபோய்விட்ட அந்தப் படுகொலை சம்பவத்தை அ.தி.மு.க அணி தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது. வார இதழ் ஒன்றில் அதுகுறித்த கட்டுரை வெளியிடப்பட்டு அதன் விளம்பரம் கிராமங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.
கத்தரிமேடு பழனிவேலு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்து மக்களை ஸ்ரீதர் வாண்டையாருக்கு எதிராகத் திருப்பிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு அங்கமாகவே தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கும் சாதி முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.எனது தொகுதியில் வாக்கு சேகரிக்கப் போய்க்கொண்டிருந்தபோது பழனிவேலுவின் சொந்த ஊர் அமைந்திருக்கும் பகுதியான வல்லம்படுகையில் நான் ஒரு சுவர் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ’ பாலகிருஷ்ணன் படையாட்சி’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தோழர் கே.பியும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் அதிர்ந்துதான் போயிருப்பார். அவருடைய இயல்பு எனக்குத் தெரியும். நிச்சயம் அவர் அந்த விளம்பரத்தைப் பார்த்திருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அனுமதிபெற்று செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை அவரது கூட்டணிக் கட்சிக்காரர்கள் எவரேனும் செய்திருக்ககூடும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
No comments:
Post a Comment