( மணற்கேணி - 5 இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம் )
சர்வதேச அளவில் எத்தனையோ தினங்கள் உலக தினங்களாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான சர்வதேச தினங்கள் நம் கவனத்துக்கே வருவதில்லை. உலகத் தாய்மொழி நாளை நம்மில் எவ்வளவுபேர் கடைபிடித்தோம்? அதுபோல பலவற்றை நாம் பட்டியலிடலாம்.ஆங்கிலப் புத்தாண்டைத்தவிர அதிக அளவில் பிரபலமான சர்வதேச தினம் ஒன்று இருக்கிறது என்றால் அது காதலர் தினம் என்றுதான் சொல்ல வேண்டும். அதை எதிர்ப்பவர்களும் சரி, ஆதரிப்பவர்களும் சரி அந்த நாளை ஏதோ ஒருவிதத்தில் கடைபிடிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். காதலர்தினத்தின் அறிவார்ந்த வடிவமாகத் தொடங்கி இன்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நாள்தான் உலகப் புத்தக நாள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக நாளாக கடைபிடிக்க வேண்டுமென்று யுனெஸ்கோ நிறுவனம் 1995ஆம் ஆண்டில் அறிவித்தது. அதுமுதற்கொண்டு ஆண்டுதோறும் அந்த நாளில் உலகின் பல்வேறு நாடுகள் புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் விதமாக ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகின்றன. பள்ளி மாணவர்கள் அதிக அளவில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என பலத்தரப்பினரும் இணைந்து இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதன்மூலம் புத்தகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்தியாவி
உலகப் புத்தக நாளைக் கொண்டாடும் இந்த வழக்கம் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆரம்பித்ததாகும். அந்த நாட்டில் பிறந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மிகேல் தெ செர்வாந்தஸை கௌரவிக்கும் நோக்கோடு அந்த நாளை ஸ்பெயின் அரசாங்கம் கடைபிடிக்கத் தொடங்கியது. அந்த நாளில்தான் செர்வாந்தஸ் மரணம் அடைந்தார். அவரை நமக்கும்கூட நன்றாகத் தெரியும். காற்றாலைகளோடு சண்டை போட்ட டான் கெஹாத்தேவின் வீரதீர சாகசங்களை நாம் பள்ளிப் பருவத்தில் படித்துச் சிரித்திருக்கிறோம். அந்த புகழ் பெற்ற நூலை எழுதியவர்தான் செர்வாந்தஸ். அவரது நினைவு நாள் மட்டுமல்ல ஷேக்ஸ்பியரின் நினைவு நாளும் அதே ஏப்ரல் 23தான். அதுமட்டுமன்றி அது புகழ் பெற்ற பல எழுத்தாளர்களின் பிறந்த நாளும்கூட. உலகம் அறிந்த எழுத்தாளர் விளாதிமிர் நபக்கோவ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் பலர் அந்த தேதியில் பிறந்துள்ளனர். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அந்த நாளை உலகப் புத்தக நாளாக அறிவிப்பதென யுனெஸ்கோ முடிவு செய்தது என்றாலும் அதற்கு வழிகோலியது ஸ்பெயின் நாடுதான்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலூனா என்ற பகுதியில் ஒரு வழக்கம் இருந்தது. ஏப்ரல் 23ஆம் தேதியை அங்கே புனித ஜார்ஜ் நாள் என்று பல நூற்றாண்டுகளாகக் கடைபிடித்து வந்தார்கள். அந்நாளில் காதலர்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களை பரிசளிப்பார்கள். அதற்குப் பதிலாக பெண்கள் தமது காதலர்களுக்குப் புத்தகம் ஒன்றைக் கொடுப்பார்கள். இப்படி வருடத்திற்கு குறைந்த பட்சம் பல லட்சம் புத்தகங்கள் அங்கே விற்பனையாகி வந்தது. இந்த வழக்கத்தை கணக்கில் கொண்டுதான் உலகப் புத்தக நாளை அந்த தினத்தில் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்து அரசாங்கம் உலகப் புத்தக நாளை வேறொரு நாளில் கடைபிடித்து வருகிறது. மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமையை அவர்கள் உலகப் புத்தக நாள் என்று கொண்டாடி வருகிறார்கள். அந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பவுண்டு மதிப்புள்ள டோக்கன் ஒன்று கொடுக்கப்படும். அதைக்கொண்டுபோய் புத்தகக் கடைகளில் கொடுத்து அவர்கள் தமக்கு விருப்பமான புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இந்த வழக்கத்தை இங்கிலாந்து அரசாங்கம் துவங்கியவுடன் அங்கிருந்த பதிப்பாளர்கள் ஒரு பவுண்டு விலையுள்ள புத்தகங்களை இந்த நாளுக்கென்றே தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலில் ஒரு புத்தகம் என்று ஆரம்பித்து இன்று அந்த நாளில் ஒரு பவுண்டு விலையுள்ள ஏராளமான புத்தகங்கள் பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அயர்லாந்தும் பின்பற்றி வருகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.
ஏப்ரல் 23 என்பது உலகப் புத்தக நாளாக மட்டுமின்றி பதிப்புரிமை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர் எழுதி வெளியிடுவதை எவர் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடுவதிலிருந்து தடுக்கவே பதிப்புரிமை குறித்த விதிகள் உருவாக்கப்பட்டன. ஒருவருடைய படைப்பை வேறு ஒருவர் திருடுவதிலிருந்து தடுப்பதும் ஒரு படைப்பாளிக்கு அவரது படைப்பு தொடர்பான அனைத்து விதமான வர்த்தக உரிமைகளையும் வழங்குவதுதான் பதிப்புரிமை என்பதாகும். இது தொடர்பாக பல்வேறு சட்டங்கள் உலகெங்கும் உள்ள நாடுகளால் இயற்றப்பட்டுள்ளன. நமது நாட்டிலும்கூட பதிப்புரிமைக்கென்று சட்டம் இருக்கிறது. ஒரு எழுத்தாளர் இறந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பதிப்புரிமை தானாகவே காலாவதியாகி விடும் என்பது நம்முடைய பதிப்புரிமைச் சட்டத்தின் முக்கியமான அம்சமாகும்.
பதிப்புரிமை, காப்புரிமை என்று பலவாறாக பேசப்பட்ட போதிலும், இன்று எழுத்தாளர்கள் வறுமையில்தான் தொடர்ந்து வாடவேண்டி இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குப் போதுமான 'ராயல்டி' கொடுக்கப்படுவதில்லை. தமிழை எடுத்துக்கொண்டால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையும் செய்யப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் புத்தக விற்பனை கூடிக்கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி பலப் பதிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இத்தனை நடந்தும் புத்தகங்களை உழைத்து உருவாக்குகின்ற படைப்பாளிகள் இந்த வளர்ச்சியினால் பயன்பெற்றிருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்ற பதிலைதான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட முன்னணி பதிப்பகங்கள் சிலவற்றைத் தவிர பெரும்பாலான பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி எதையும் வழங்குவதில்லை. முறைப்படி அதற்கான ஒப்பந்தங்களையும் போட்டுக் கொள்வதில்லை. பதிப்பாளர்களின் இத்தகைய நேர்மையற்ற அணுகுமுறையால் எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். ராயல்டி தராமல் ஏமாற்றும் பதிப்பாளர்களால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் இப்போது தாங்களே பதிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். இது அவர்களது பொருளாதாரப் பிரச்சனையை வேண்டுமானால் தீர்த்துவைக்கலாம். ஆனால் அவர்களின் படைப்புத்திறனை இது கெடுத்துவிடும். அதனால் ஏற்படும் இழப்பு சமூகத்துக்குத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எழுத்தாளர்களை வருத்தமடைய வைக்கும் ராயல்டி பிரச்சனை ஒரு பக்கம் என்றால், பதிப்பாளர்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நம்முடைய சமூகத்தில் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிற பழக்கம் மிக மிகக் குறைவு. அதிலும் இதுவோ தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர் யுகம். அப்புறம் இருக்கவே இருக்கிறது கிரிக்கெட். இந்தக் கவர்ச்சிகளையெல்லாம் தாண்டி ஒருவரைப் புத்தகத்தைநோக்கி ஈர்ப்பதென்பதே பெரிய சவால்தான். தாங்கள் வெளியிடும் நூல்களைத் தமிழ்நாடு முழுக்க வினியோகித்து ஆங்காங்கே இருக்கும் புத்தகக் கடைக்காரர்களிடமிருந்து விற்ற பணத்தை வசூலிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நம்பகமான வினியோக வலைப் பின்னல் இல்லாத காரணத்தால் அழிந்துபோன பதிப்பாளர்கள் ஏராளம். இது ஒருபுறமென்றால் 'கள்ளப்பதிப்பு' என்பது இன்னொரு பக்கம் பூதாகரமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுவது போலவே, கள்ளப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு விற்கப்படுகின்றன. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் சந்தைக்கு வருகின்ற அதே நாளில் அந்த நூல்களின் கள்ளப்பதிப்புகளும் சந்தைக்கு வந்து விடுகின்றன. குறிப்பாக ஆங்கில நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள்தான் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. பிளாட்பார புத்தகக்கடைகளில் இந்த கள்ளப்பதிப்புகள் நிறைந்திருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் ஹாரிபாட்டர் புத்தகங்கள் முதல் அருந்ததி ராயின் நாவல்வரை கள்ளப்பதிப்புகளாக வந்துவிட்டன. ஒருமுறை ஹாரிபாட்டர் புத்தகம் சந்தைக்கு வருவதற்கு முதல் நாளே அதன் கள்ளப்பதிப்பு பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு கள்ளப்பதிப்பாளர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக புத்தகங்களின் கள்ளப்பதிப்புகளை வெளியிடுவது எளிதாகிவிட்டது. இதைத் தடுப்பதற்கு எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும்கூட திருட்டு வீடியோ போல இது மேலும்மேலும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை.
நல்ல புத்தகங்கள் வெளிவருவதற்கான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பொதுநூலக அமைப்பை வலுப்படுத்துவது, நல்லநூல்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் நிதி உதவி செய்வது, இளைய தலைமுறையினரிடம் அதிலும் குறிப்பாக மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது முதலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது நூல்களின் விற்பனைக்கான வலைப் பின்னலை ஏற்படுத்துவதாகும். பொதுநூலகங்களில் விற்பனைப் பிரிவுகளைத் துவக்குவதன்மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகத் தீர்த்துவிடலாம். தற்போது அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. அவற்றைத் தேர்வுசெய்யும் பொறுப்பு பள்ளி மட்டத்திலேயே இருக்கிறது. இதனால் தரமான நூல்கள் அந்த நூலகங்களில் இடம்பெற முடியாத நிலை உள்ளது. பொது நூலகங்களுக்கும், பள்ளி நூலகங்களுக்கும் நூல்களைத் தேர்வுசெய்யும் குழு ஒழுங்காக செயல்பட்டால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
பள்ளிக் கல்வித்துறையில் பலவிதமான சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது . தமிழக அரசு இங்கிலாந்தின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி இனிமேல் ஆண்டுதோறும் உலகப் புத்தக நாளன்று ஐம்பது ரூபாய்க்கோ நூறு ரூபாய்க்கோ டோக்கனை மாணவர்களுக்குத் தரலாம். அந்த டோக்கனுக்கு இருமடங்கு மதிப்புகொண்ட புத்தகங்களைப் பதிப்பாளர்கள் கொடுக்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். தனியார் பள்ளிகள் இந்த ரூபாயைக் கல்விக்கட்டணத்துடன் முதலிலேயே வசூலித்துப் பிறகு மாணவர்களிடம் அளிக்கலாம்.
தற்போது மத்திய அரசு தேசிய புத்தக ஆதரவு வரைவுக் கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதைப்போல தமி ழக அரசு மாநில கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டும் என நான் சட்டப் பேரவையில் வலியு றுத்தினேன். புதிய அரசு அதை நிறைவேற்றவேண்டும் . அதற்கு பதிப்பாளர்களும் படைப்பா ளிகளும் அழுத்தம் தரவேண்டும்.
No comments:
Post a Comment