Thursday, January 19, 2012

தோற்ற தலைமுறை - ரவிக்குமார்

நாங்கள் இருவரும் ஒன்றாய்ப்  படித்தோம் 
என்றாலும் 
அவன் உடைகள் மடிப்பு கலையாதவை 
அவன் கொண்டுவரும் உணவு 
ஊசிப்போகாதது 
அவனுக்கு இருந்தது  
தனி அறை கொண்ட சொந்த வீடு 

அவன் பாடப் புத்தகங்களில்  
வாக்கியங்களை வாசிப்பான் 
நானோ வாக்கியங்களுக்கு இடையில் 
கனவில் பயணிப்பேன் 

அவன் 
படித்துத் தேறி வேலைக்குப் போனான் 
நான் 
இலக்கியம் பேசி எழுத்தாளரானேன்

செல்வத்தைவிடவும் சிறந்தது புகழ்  
என்பதுதானே உலகியல் உண்மை ?
பாராட்டைக் கேட்கும்போதெல்லாம் 
அவனைப் புழுதியில் தள்ளி  
அவன்மீது ஏறி நின்றுதான் 
அதை நான் ரசித்தேன் 

அரசாங்க விருதொன்று எனக்குக் கிடைத்தது 
தகவல் சொல்ல 
தொலைபேசியில் அழைத்தேன் 
அப்போது சொன்னான் : 
" என்னோட மகன் என்னென்னமோ சொல்றான் 
எதைஎதையோ படிக்கிறான் 
பேசிப்பாரேன்"
ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவனிடம்
ஃ போனைத் தந்தான் 
' உனக்குப் பிடித்த கவிஞர் யாருப்பா ?"
' பால் செலான் அங்கிள் '
' உனக்கு எந்த எழுத்தாளரைப் பிடிக்கும் ?'
' காஃப்கா அங்கிள் '   
'அப்பாகிட்ட போனைத் தரேன்....
" ஏய் ! அவன் இங்கிலீஷ்ல கதையெல்லாம் 
எழுதுறான் ...."
 அவன் பேசிக்கொண்டே இருந்தான் 
நான் 
தொடர்பு எல்லைக்கு வெளியே 
போய்க்கொண்டே இருந்தேன் 

No comments:

Post a Comment