பிரபலமான பதிப்பகங்கள் ,அவற்றால் தூக்கிநிறுத்தப்படும் சுய முன்னேற்ற சூத்திரம் கற்ற எழுத்தாளர்கள் ஆகியோரைத்தவிர வேறு எவரும் தமிழ் இலக்கிய உலகில் கண்டுகொள்ளப்படமாட்டார்கள் என்ற துர்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த மூச்சுமுட்டவைக்கும் புகைமண்டிய சூழலில் பொறுப்போடு, கடப்பாட்டோடு சில வெளியீடுகள் எவ்வித பொருளியல் லாபத்தையும் எதிர்பார்க்காமல் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாகக் கருதக்கூடியதுதான் ‘ அந்தகனின் சொல்”.
தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில்மயமான கோயமுத்தூரில் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் நிலவிய அரசியல் பொருளாதார சூழலானது பண்பாட்டுத் தளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட தொழிற்சங்கங்களின் சமரசப் போக்குகளால் ஏமாற்றமடைந்தவர்களின் உரையாடல், வீடுகளையும் தெருக்களையும் நிறைத்திருந்த நேரம் அது. அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் சிலர் மார்க்சியம் கடந்த இடதுசாரிக் கருத்தியலை நோக்கிப் போனார்கள். சிலர் தமிழ் அடையாளத்தினால் ஈர்க்கப்பட்டார்கள். இன்னும் சிலர் இடதுசாரி எதிர்ப்பு மனநிலையோடு தத்துவ விசாரத்துள் ஆழ்ந்தார்கள். அந்தச் சூழலின் விளைவாக சிறு பத்திரிகை , மொழிபெயர்ப்பு, கவிதை எனத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் என அடையாளப்படுத்தக்கூடிய ஒருவர்தான் அஷ்டவக்கிரன் என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்ட அ.ந.ராஜன். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, 2004 ஆம் ஆண்டு பத்ரிநாத் செல்லும் வழியில் சாலை விபத்துக்கு ஆளாகி இறந்துபோன அவர் எழுதியிருப்பவை மிகவும் குறைவு.
இருபது கவிதைகளையும் ஒரு சிறுகதையையும் எழுதியிருக்கும் அவர் இருபத்தெட்டு கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவை ஞானரதம், கணையாழி மற்றும் அவரே முன்னின்று நடத்திய பார்வை ஆகிய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
“ அடுத்தவன் சொல்வதைக்
கேட்கும் பொறுமையும்
விருப்பமும்
இல்லாதுபோய்விட்ட” , அறைக்குள் டீ மற்றும் பிஸ்கட்டுகளோடு முற்றுப்பெறாத விவாதத்தில் ஈடுபடுகிற நண்பர்களைக் கொண்டிருந்த அஷ்டவக்கிரனின் கவிதைகள் , உலகமயத்தின் காரணமாக உள்ளீடற்றுத் தவித்து நிற்கும் இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடியவைதாம்.
” கட்டை விரலளவு
இடமிருந்தால் போதும்
ஊன்றிக்கொள்ள
உட்பொறிவீச்சில் வியாபகம் கொள்வாய்
அதற்கு ஏன்
இடமில்லாமற்
போய்விட்டது
இவ்வளவு பெரிய உலகில் ?”
என்று கேட்கிறது அவரது கவிதையொன்று. Respond, Variety, Lavatory, Room, Hostel,Professor முதலான (தமிழில் மொழிபெயர்க்கவே முடியாத ? ) ஆங்கிலச் சொற்களைக் கலந்து அவர் எழுதிய சிறுகதை 1974 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கதை அப்போதைய சிற்றிதழ் எழுத்தாளர்களின் மனோபாவத்துக்கு மட்டுமின்றி அன்று நடத்தப்பட்டுவந்த சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாய் இருந்தார்கள் என்பதற்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
” விஷய ஞானத்தைத் தவிர்த்த
வெறுந் தகவல் சேகரிப்பின்
கனம் தாளாமல் தொங்கியது தலை”
என்கிறது அஷ்டவக்கிரனின் கவிதையொன்று.இத்தகைய வரிகளை எழுதுகிற பலருக்கும் பொருந்தக்கூடிய சுயவிமர்சனம் இது.
பால் ஸெலான், ஆக்டோவியா பாஸ் , பாப்லோ நெரூடா என்று அவர் மொழிபெயர்த்திருக்கும் படைப்பாளிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளில் அஷ்டவக்கிரனின் ரசனை மற்றும் கருத்தியல் ஊசலாட்டத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய குடும்பத்தினர் ,அவரோடு பழகிய நண்பர்கள் சிலராவது அவரைப்பற்றிய சில குறிப்புகளை இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கலாம். அது ஒரு படைப்பாளியாக, மனிதராக அவர் எவ்வாறு இயங்கினார் என்பதை வாசகர்களுக்கு இன்னும் துலக்கமாக எடுத்துச் சொல்வதாக இருந்திருக்கும்.
அஷ்டவக்கிரனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சியால் மிகவும் நேர்த்தியோடு வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பை முன்மாதிரியாகக்கொண்டு, தமிழ் இலக்கிய உலகம் கண்டுகொள்ளாத இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகளும் வெளிவந்தால் இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் தம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். அது தமிழ் இலக்கியத்துக்கும் உதவக்கூடியதுதான்.
========
நூல் : அந்தகனின் சொல்
ஆசிரியர் : அஷ்டவக்கிரன்
வெளியீடு : பார்வை: பதிவுகள், கோயமுத்தூர்,முதல் பதிப்பு 2011
விலை : குறிப்பிடப்படவில்லை
No comments:
Post a Comment