அன்பை இன்னொருவிதமாகப் புரிந்துகொள்ளவைத்தது அந்த ஒரு நாள். கும்பகோணத்திற்கு அருகே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழபுரம் கிராமமும் நானும் அரசன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகளும் காத்திருந்தோம். அந்த சின்ன கிராமத்துக்கு அப்படியொரு பிரபலம் வந்ததில்லை. வருவதற்கு காரணமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய் அங்கு வருகிறார் என்றால் யார்தான் நம்பமுடியும்? அவர் தனது நாவலில் விவரித்திருக்கும் ஆயிமெனம் கிராமத்திலிருந்து நேரடியாக வருவதுபோல மலர்ச்சியோடு இருந்தார். அவரோடு எழுத்தாளர் ரவிக்குமார் வந்திருந்தார். மாணவிகளும் (சட்டமன்ற உறுப்பினர்) ரவிக்குமாரிடம் மனு கொடுப்பதற்காக வந்து காத்திருந்த ராணுவத்தினரும் தங்கள் சந்தோஷத்தைக் கைதட்டி வரவேற்றுப் புதுப்பித்துக்கொண்டார்கள். சிறிய கூட்டம்தான் என்றாலும் கள்ளமில்லாத அன்பால் நிறைந்திருந்தது அந்த இடம். மணற்கேணி பதிப்பகத்தின் முதல் நூலான நெற்குஞ்சம் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா. நூலை அருந்ததிராய் வெளியிட ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். அந்த நூலின் ஆசிரியரான எனக்குள் ஒரு சிலிர்ப்பு அடர்ந்து அடங்கியதை மறுக்க இயலவில்லை. என் வாழ்வின் உன்னதத் தருணங்களில் ஒன்றாகிப்போனது அது. வெளியில் இருந்தபடி மழையும் தன் பங்களிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தது. மழைக்குள் நானும் எனக்குள் மழையும் கரைந்துகொண்டிருந்தோம்.
நாட்டின் எல்லையில் உயிரைப் பணயம் வைத்துப் போர் விளையாட்டை முடித்துத் தாய் செய்த புண்ணியத்தால் உயிர் பிழைத்து இன்று கண்ணுக்கெட்டாத கிராமங்களில் வாழும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரிடம் பகிர்வதற்கு எராளமாய் கண்ணீர் கதைகள் இருந்தன. அதை ரவிக்குமாரோடு அருந்ததியும் கேட்டுக்கொண்டார். மலையாளம், ஹிந்தி. ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளில் உரையாடல்... மழையும் செறுமாய்க் கலந்து கிடந்தது. திரும்பிப் பார்க்க இயலாத எல்லைக் கோடுகளைக் கடந்து வந்த அருந்ததியுடன் மாணவிகள் கலந்துரையாடினர். கிராமத்தை பூக்கச் செய்யும் மாணவிகள் தங்கள் ஈரம் செறிந்த நிறத்தைக் கேள்விகளாக மாற்றிக்கொண்டனர். "மேடம் உங்களுக்கு பிடித்ததை எங்களுக்குச் சொல்லுங்களேன்" ஒரு மாணவி கேட்டாள். "எப்போதும் அப்போது பூத்த பூவைப்போல் சந்தோஷமாய் இரு. அதற்காக படி, அதற்காகப் போராடு, தானே தன்னை சந்தோஷப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு முக்கியம் வாழ்வில் இல்லை." பதிலில் மாணவிகளுக்குள் ஒரு பூ மலர்ந்தது. கிராமத்து கறுப்புக் காப்பியின் வாசனை எங்களிடையே நுழைந்து வந்தது. மாணவிகள் அளித்த ரோஜா மாலையை முத்தமிட்டார் அருந்ததி. பூவாய்ப் பிறந்து பூவாய் மடிவதைப்போல் வேறு வரம் உண்டா. சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்லவா!
எங்களது பயணம் கீழ்வெண்மணி நோக்கித் துவங்கியது. ரவிக்குமாரும் அருந்ததியும் நிமிடங்களை இலக்கியத்தை ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இடைஇடையே நானும் பருகிக்கொண்டேன். கோவர்த்தனி ரோஜாக்களை அவருக்குப் பரிசளித்தாள். அவற்றை தலையில் செருகிக் கொண்டார். ஏற்கனவே பூச்சரம் ஒன்று தலையில் சுற்றப்பட்டிருந்தது. என் மகளை அணைத்தபடி குனிந்து "அம்மு என் தலையைப் பார் பூந்தோட்டம்" என்றார். பூக்களின் காடு சிரிப்பில் ஒளிர்ந்தது. அருந்ததியையும் ஒரு குழந்தையாக்கி இரண்டு குழந்தைகளை என் மனம் சுமந்து பெருமை கொண்டது. நர்மதை அணைக்கட்டு போராட்டத்தில் பெண்களின் இரட்டிப்பு துன்பத்தை ஆன்மாவில் இருந்து எடுத்துப் பகிர்ந்து கொண்டார். ஆண் மைய உலகம் ஆண் சுதந்திரம் போன்ற எனது கேள்விகளுக்கு தனது நிகழ்கால வாழ்க்கையை பதிலாக அளித்தார். "எனக்கு ரவி மாதிரி மிகச் சிறந்த நண்பர்கள் உண்டு. பெண்ணடிமையை அதிகபட்சமாக அமல்படுத்திய பெண்களைக் கொண்ட இச்சமூகமும் பெண் அடிமைக்கு முக்கிய காரணம். பெண்களின் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்ல". பாலினம் கடந்து பறந்து கொண்டிருக்கும் அருந்ததி, கார் சிறிது வேகமெடுத்தாலும் பதறினார். திருவாரூர், கீவளூர் கடந்து தேவூர் வழியாக கீழ்வெண்மணி நோக்கிப் பயணித்தோம். இருமருங்கிலும் வாய்க்கால், வயல், குளம் . மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவுகளை அழித்துக்கொண்டோம்.
வண்ணமேற்றப்படாத உலகம் காலுக்குள் உயிர்ப்பாய் கிடந்தது. நான் வயல் நண்டுகளை கரையேறி வரும்படி அழைத்துக்கொண்டிருந்தேன். அருந்ததி நாற்றங்கால் மேற்பரப்பில் பயிர்கள் மீது பறந்து கொண்டிருந்தது தெரிந்தது. ரவிக்குமார் கோவர்த்தனியின் கனவுகளுக்கு மீன் குஞ்சுகளைப் பரிசளித்துக்கொண்டிருந்தார். அருந்ததியின் கண்களில் ஆய்மெனம் மிதந்துகொண்டேயிருந்ததைப் பார்த்தேன். தான் பார்க்கும் காட்சி ஒவ்வொன்றும் அவருக்கு அந்த கிராமத்தை நினைவுபடுத்தியிருக்கவேண்டும். அவ்வப்போது அவரோடு நாங்களும் அங்கே சென்று திரும்பினோம். அங்கே அவரது அம்மாவையும் அவர் பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடத்திவரும் பள்ளியையும் மனதில் வரைந்துகொண்டோம். எனக்குள் ஒரு கிராமம் உருவானது. அருந்ததி அதில் சிறகுமுளைத்த பெண்ணாய் எல்லோரிலும் வேறுபட்டு நின்றார். நினைத்தவற்றை உடனே வார்த்தைகளாய்க் கொட்டினார். பின் எவற்றை அவர் எழுதினார் என வியந்து பார்த்தேன். சிறிய உயிர்களின் படைப்புக் கடவுளை அவர் மொழியில் உருவாக்கியது புரிந்தது. "God Of Small Things" உருவான விதம், புக்கர் பரிசு, பணம் எல்லாவற்றைக் குறித்தும் பேசினார். அவரது மனம் எதனோடும் சேராமல் ஒதுக்கப்பட்டவற்றிற்கான கடவுளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது.
மழையின் சிதைவுஎச்சங்களாய் சாலைகள் இருந்தன. மூக்கொழுக அழுக்குச் சட்டையில் இறுக்கி வைத்திருந்த பொறி அரிசியை கொடுத்து சிறிய கறுப்பழகி ஒருத்தி கீழ்வெண்மணியில் அருந்ததியை வரவேற்றாள். சிகப்புத் துண்டணிந்த ஒரு பெரியவர் வாழை மொட்டை அவிழ்ப்பதுபோல் வெண்மணியின் கோரத்தை அருந்ததியிடம் உதிர்த்துக்கொண்டிருந்தார். புதிதாய் எழுந்துகொண்டிருந்த நினைவுச் சின்னம் சாட்சியாக நின்றது. "சீக்குப் பிடித்த சமூகம். மனநிலை சரியில்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் இல்லையா ரவி" முகத்தில் வேதனையும் வெறுப்பும் சுருக்கங்களாக மாறியது. மேலவளவு, வெண்மணி போன்ற வக்கிரங்களின் மூலங்கள் என்னவாக இருக்கும் என்பதாக அவரது கேள்வி அலைந்தது. கீழ்வெண்மணி டிசம்பர் 25க்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தது. இருள்சூழ நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். " இருள் கிராமங்களில் மட்டுமே இருக்கிறது. கிராமங்கள் இருளை முழுதாய் தரிசிக்கின்றன நகரங்களல்ல" என்றேன். அவர் அதை ஆமோதித்ததை இருட்டிலும் பார்க்க முடிந்தது. எல்லா நிமிடங்களையும் வார்த்தைகளாலும் சப்தங்களாலும் நிரப்பிக்கொண்டிருந்தோம். இரவுப் பூச்சிகள் விடை கொடுத்தன. வெண்மணியில் இருந்து திரும்பும்போது அருந்ததிக்குள் ஒரு மௌனம் அடைந்துகொண்டது. வளர்பிறையை ரசித்தபடி திருவாரூரில் தேனீர் பருகினோம். கும்பகோணம் நெருங்க நெருங்க மனதைப் பிரிவுக்காய் தயார் படுத்தி வைப்பது மிகவும் வலியானதாய் இருந்தது. சோழபுரம் நெருங்கும்போது கும்பகோணத்தில் இல்லாத அளவு பனி அடர்ந்திருந்தது. ஒற்றை பனிக்கூட்டுக்குள் நாங்கள் வசிப்பதுபோல் இருந்தோம். சோழபுரம் - துவங்கிய இடத்தை தொட்டிருந்தோம். வார்த்தைகள் முன்பே மறந்துபோய் இருந்ததால் மௌனமாக வண்டியை விட்டு இறங்கினோம். அருந்ததி உடலால் என்னைத் தழுவினார். உணர்வுகள் பரிமாறிக்கொண்டன. கண்களை அசைத்து விடைகொடுத்து வீட்டிற்குத் திரும்பினேன். பூந்தோட்டம் கண்களில் இருந்து மறைந்தது. வீடெங்கும் இருள், கோவர்த்தனி கதறி அழ ஆரம்பித்தாள். அவள் அடிவயிற்றிலிருந்து பீறிட்ட அந்தக் குரல் என்னுடையது. எங்களது பயணம் கீழ்வெண்மணி நோக்கித் துவங்கியது. ரவிக்குமாரும் அருந்ததியும் நிமிடங்களை இலக்கியத்தை ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இடைஇடையே நானும் பருகிக்கொண்டேன். கோவர்த்தனி ரோஜாக்களை அவருக்குப் பரிசளித்தாள். அவற்றை தலையில் செருகிக் கொண்டார். ஏற்கனவே பூச்சரம் ஒன்று தலையில் சுற்றப்பட்டிருந்தது. என் மகளை அணைத்தபடி குனிந்து "அம்மு என் தலையைப் பார் பூந்தோட்டம்" என்றார். பூக்களின் காடு சிரிப்பில் ஒளிர்ந்தது. அருந்ததியையும் ஒரு குழந்தையாக்கி இரண்டு குழந்தைகளை என் மனம் சுமந்து பெருமை கொண்டது. நர்மதை அணைக்கட்டு போராட்டத்தில் பெண்களின் இரட்டிப்பு துன்பத்தை ஆன்மாவில் இருந்து எடுத்துப் பகிர்ந்து கொண்டார். ஆண் மைய உலகம் ஆண் சுதந்திரம் போன்ற எனது கேள்விகளுக்கு தனது நிகழ்கால வாழ்க்கையை பதிலாக அளித்தார். "எனக்கு ரவி மாதிரி மிகச் சிறந்த நண்பர்கள் உண்டு. பெண்ணடிமையை அதிகபட்சமாக அமல்படுத்திய பெண்களைக் கொண்ட இச்சமூகமும் பெண் அடிமைக்கு முக்கிய காரணம். பெண்களின் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்ல". பாலினம் கடந்து பறந்து கொண்டிருக்கும் அருந்ததி, கார் சிறிது வேகமெடுத்தாலும் பதறினார். திருவாரூர், கீவளூர் கடந்து தேவூர் வழியாக கீழ்வெண்மணி நோக்கிப் பயணித்தோம். இருமருங்கிலும் வாய்க்கால், வயல், குளம் . மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவுகளை அழித்துக்கொண்டோம்.
வண்ணமேற்றப்படாத உலகம் காலுக்குள் உயிர்ப்பாய் கிடந்தது. நான் வயல் நண்டுகளை கரையேறி வரும்படி அழைத்துக்கொண்டிருந்தேன். அருந்ததி நாற்றங்கால் மேற்பரப்பில் பயிர்கள் மீது பறந்து கொண்டிருந்தது தெரிந்தது. ரவிக்குமார் கோவர்த்தனியின் கனவுகளுக்கு மீன் குஞ்சுகளைப் பரிசளித்துக்கொண்டிருந்தார். அருந்ததியின் கண்களில் ஆய்மெனம் மிதந்துகொண்டேயிருந்ததைப் பார்த்தேன். தான் பார்க்கும் காட்சி ஒவ்வொன்றும் அவருக்கு அந்த கிராமத்தை நினைவுபடுத்தியிருக்கவேண்டும். அவ்வப்போது அவரோடு நாங்களும் அங்கே சென்று திரும்பினோம். அங்கே அவரது அம்மாவையும் அவர் பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடத்திவரும் பள்ளியையும் மனதில் வரைந்துகொண்டோம். எனக்குள் ஒரு கிராமம் உருவானது. அருந்ததி அதில் சிறகுமுளைத்த பெண்ணாய் எல்லோரிலும் வேறுபட்டு நின்றார். நினைத்தவற்றை உடனே வார்த்தைகளாய்க் கொட்டினார். பின் எவற்றை அவர் எழுதினார் என வியந்து பார்த்தேன். சிறிய உயிர்களின் படைப்புக் கடவுளை அவர் மொழியில் உருவாக்கியது புரிந்தது. "God Of Small Things" உருவான விதம், புக்கர் பரிசு, பணம் எல்லாவற்றைக் குறித்தும் பேசினார். அவரது மனம் எதனோடும் சேராமல் ஒதுக்கப்பட்டவற்றிற்கான கடவுளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது.
24.12.2009
No comments:
Post a Comment