Monday, January 30, 2012

‘கூகுளைசேஷன்’’ என்ற அபாயம்







மணற்கேணி ( இதழ் எண் 10 , பிப்ரவரி 2012 ) இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம் 



டெல்லி உயர்நீதிமன்றம் இப்போது ஃபேஸ்புக், கூகுள், ஆர்குட்,யு ட்யூப் உள்ளிட்ட இருபத்தொரு சமூக வலைத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவற்றில் ஆட்சேபகரமான விஷயங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக வினய் ராய் என்பவர் செய்த  புகாரை அடுத்தே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்திருக்கிறது.  மத உணர்வுகளைப் புண்படுத்தும் விஷயங்களை இவை பரப்புகின்றன என்று சொல்கிறார்கள் சிலர், பாலியல் உணர்வுகளைத் தூண்டி இளைய தலைமுறையைக் கெடுக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் சிலர். சீனாவில் இருப்பதைப்போல இவற்றைத் தடை செய்யலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.ஆனால் இன்று நாம் கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே அஞ்சுகிற ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம்.

குளோபலைசேஷன் - உலகமயமாதல் -  குறித்த கவலைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது ‘கூகுளைசேஷன்’ குறித்த அச்சுறுத்தல். இணையத்தோடு இணைக்கப்பட்ட எவராலும் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக  மாறிவிட்டது, கூகுள். ’உலகளாவிய தகவல்களைச் சேகரித்து அதை எவரும் அணுகவும் பயன்படுத்தவும் ஏதுவாக ஆக்குவது’ என்பதுதான் கூகுளின் லட்சியம் என்று சொல்லப்பட்டது. இன்று நாம் எதைத் தேடவேண்டுமானாலும் செல்வது கூகுளிடம்தான். இன்னும் சில காலத்தில் உலகத்திலிருக்கும் அத்தனை மொழிகளிலும் வெளியிடப்படுகிற அத்தனை நூல்களும் கூகுளில் இருக்கும். இப்போதே அதில் ஏற்றப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நொடியும் அதில் சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ கிளிப்புகள் ஏற்றப்படுகின்றன என்கிறார்கள். கூகுளுக்கு வணிக நிறுவனங்களின் விவரங்கள் தெரியும், சமய நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் , உணவகங்கள் என எல்லா விவரங்களும் அதன்வசம் இருக்கின்றன. இன்னும் சில காலத்தில் உலகின் அத்தனை தெருக்களின் புகைப்படமும் கூகுளிடம் இருக்கும். அதாவது உலகையே கண்காணிக்ககூடிய சக்தியை அது பெற்றுவிடும். பூமியைமட்டுமல்ல பிரபஞ்சத்தையே கண்காணிக்கும் சக்தியாக அது உருவெடுத்தாலும் வியப்பதற்கில்லை.

நம் கையில் ஒரு உயர்ரக மொபைல் போன் இருந்தால், அதில் நாம் கூகுள் லொகேஷன் சர்வீஸை ஆன் செய்திருந்தால் போதும் நாம் எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்பது அதற்குத் தெரிந்துவிடும். நீங்கள் கூகுள் மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்துகிறவரா உங்களது மின்னஞ்சல் முழுவதையும் அது படித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதை விளம்பர நோக்கத்துக்காகத்தான் செய்கிறோமென அது சொன்னாலும் அதை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை.   நீங்கள் யாரோடு அதிகம் தொடர்புகொள்கிறீர்கள் என்பதையும் அது வரிசைப்படுத்தி வைத்திருக்கிறது. இப்படியே போனால் நாம் சொல்லாமலேயே நமது சமையலறையில் இருப்பதையும் , நாம் உடற்பயிற்சி செய்யும்போது நமது இதயத் துடிப்பு எவ்வளவு என்பதையும், நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் சீதோஷ்ண நிலை என்னவென்பதையும் அது சொல்லிவிடும். 

கூகுளைப் பற்றி ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. அது நமது அந்தரங்கத்தில் தலையிட்டு வேவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்துவிட்டது. நாம் கூகுளைப் பயன்படுத்தும்போது நாம் எதைத் தேடினோம், எதைப் படித்தோம் என்ற விவரங்கள் யாவும் ‘குக்கீஸ்’எனப்படும் பகுதியில் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை கூகுள் மட்டுமல்ல யாஹூ போன்ற பிற நிறுவனங்களும்கூடப் பல மாதங்களுக்குப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே அவை திரட்டுகிற அத்தனை தகவல்களும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் ஆபத்து எப்போதும் இருக்கிறது என்று சிலர் ஏற்கனவே பீதி கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். புத்தகங்களை இணையத்தில் ஏற்றுவதன்மூலம் எழுத்தாளர்களின் காப்புரிமையை கூகுள் பறிக்கிறது என்ற பிரச்சனை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அது இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. 

கூகுள் நிறுவனம் துவக்க நிலையிலேயே வெற்றிகரமாக ஒரு காரியத்தைச் செய்தது. தான் சேகரித்த விவரங்களை அது தர வரிசைப்படுத்தியது. ‘பேஜ் ரேங்க்கிங்’ என்று குறிக்கப்படும் அந்த நடவடிக்கையால்தான் நாம் ஒரு விஷயத்தைத் தேடும்போது ஒருசில பக்கங்கள் முதலில் வருகின்றன. இந்தத் தரவரிசை செயல்பாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற புகார் கூகுள் மீது சொல்லப்படுகிறது. இதனால் முதலில் வரும் சில பக்கங்களை மட்டும்தான் நாம் முக்கியமாகக் கருதுகிறோம், அந்தப் பக்கங்களில் உள்ள தகவல்களையே சார்ந்திருக்கிறோம். காலப்போக்கில் பல இணைய தளங்கள் இதனால் பார்ப்போர் எவருமின்றி அழிந்துபோக நேரிடும் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்கும்போது, ’இணையம்’ என்ற  மாயவலையிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாதா என்ற கேள்வி எழலாம். இந்தியக் குடிமக்கள் எல்லோரும் இணைய வசதி பெற்றவர்களாகவா இருக்கிறார்கள் என்றும் சிலர் கேட்கக்கூடும். இன்று இந்தியாவில் இருக்கும் மொபைல் போன்களின் எண்ணிக்கையைப் பற்றி நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டோம். அதுபோலத்தான் இணையமும் நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறது. அது முழுதாக நம்மை விழுங்குவதற்கு முன்னால் அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம். அப்போதுதான் ’கூகுளைசேஷன்’ என்பதன் ஆபத்து நமக்குப் புரியும். 
 
                                                                                                                                               ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 

No comments:

Post a Comment