Monday, June 23, 2014

அம்பேத்கர் ஒரு ப்ராக்டிகல் ஜீனியஸ் ! - 'இந்து' என்.ராம்



( நீதியரசர் கே.சந்துரு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. முழுமையான உரைக்கு மணற்கேணி 23 ஆவது இதழை வாசிக்கவும்) 


கொலம்பியா யுனிவர்சிடியில்தான் நான் ஒரு வருஷம் ஜர்னலிசம் படித்தேன். அங்கிருக்கும்போதுதான் முதன்முறையாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருடைய பெருமை ஓரளவுக்குப் புரிந்தது. முழுமையாகப் புரிந்தது என்று சொல்லமுடியாது, கொலம்பியாவில் இருந்தபோது அவர் மிகப்பெரிய அறிவுஜீவி, பல கஷ்டங்களை சமாளித்து, தடைகளைமீறி அவர் ஒரு அரசியலமைப்பு சட்ட ’எக்ஸ்பர்ட்டாக’ ஆனார் அவர் அங்கு ஆசிரியர் கல்லூரியில் படித்தார் என்ற விவரம் நான் நேரில் போனபோதுதான் எனக்குத் தெரிந்தது. அங்கு இன்னமும் அவரை மிகுந்த மரியாதையோடு குறிப்பிடுகிறார்கள். ஆனால், சமுதாயம் பற்றிய அவருடைய புரட்சிகரமான கருத்துகளை நான் அப்போது அறியவில்லை. எந்தத் தலைவரையும் விட அவரது காலத்தில் டாக்டர் அம்பேத்கர் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்தார் என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது.


அம்பேத்கர் ஒரு ’ப்ராக்டிகல் ஜீனியஸ்’. நமக்கு ’ஐடியாஸ்’ இருக்கலாம் ’ஐடியலிஸம்’ இருக்கலாம் ஆனால் அதை எந்த அளவுக்கு முன்னால் கொண்டுபோகவேண்டும், நடைமுறைப்படுத்தவேண்டும் ’ஈரடி பின்னால்’ என்று சொல்வார்களே அப்படி எப்போது பின்வாங்கவேண்டும் என்ற அரசியல் தந்திரம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்தான்  இன்றைக்கும் அவர் மதிக்கப்படுகிறார். அவர் 1956 இல் காலமானார், நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை- அவர் வாழ்ந்த காலத்தைவிட இன்றைக்கு அவர் மிகவும் மதிக்கப்படுகிறார், ’ஹி ஸ்டேண்ட்ஸ் டாலர் தென் ஹிஸ் லைஃப் டைம்’. எவ்வளவு தலைவர்களைப்பற்றி இப்படிச் சொல்ல முடியும்? எதனால் இப்படிச் சொல்கிறோம்? சமுதாயப் பிரச்சனைகளை ஆழமாகப் பரிசீலிக்கக்கூடிய அவரது ஆற்றல். சமூகப் பிரச்சனைகளை அணுகிய விதத்தில் வெளிப்பட்ட அவரது முற்போக்கான புரட்சிகரமான அணுகுமுறை. அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி உருவாக்கவேண்டும் என்பதில் அவரது பங்களிப்பு.


வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் நூற்றாண்டு கமிட்டியில் நான் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அப்போதுதான் அம்பேத்கரின் எழுத்துகளைப் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவரது நூல்கள் கிடைப்பதுகூட கஷ்டம்.


இன்றைக்கு, ’சாதியை ஒழிப்பது எப்படி’ என்கிற அம்பேத்கரின் மிகமுக்கியமான கட்டுரையை - சாதியை சீர்திருத்துவதல்ல அதை வேரோடு பிடுங்கியெறிவது, ஒழிப்பது எப்படி என்கிற கட்டுரை-  அதை நவயானா பபளிகேஷன் ஒரு அனட்டேட்டட் எடிஷனாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதில் ஒரு அற்புதமான முன்னுரையை அருந்ததி ராய் எழுதியிருக்கிறார். அதை இப்போது படித்தேன். சாதி என்ற விஷயத்தில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இருந்த வேறுபட்ட நிலைபாடுகளை அருந்ததி ராய் தனது முன்னுரையில் எடுத்துக்காட்டியிருக்கிறார். 


அது அம்பேத்கர் 1936 இல் பேசுவதற்காகத் தயாரித்த உரை. அதை அவர் வழங்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு எதிர்ப்பு. அதில் அவர் சொல்கிறார், ’இந்த சாதி ஒழிப்பு என்கிற விஷயத்தில் இந்துக்களுக்கும் தீண்டாதாருக்குமிடையில் சமரசம் என்பதே சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். இந்து மதம் என்பது வர்ணாஸிரம தர்மத்தை, சாதியை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சொல்கிறார். அதுவொரு முக்கியமான ஆவணம், அதை இப்போது பலபேர் மறந்துவிட்டார்கள். சுதந்திர இயக்கத்தில் சமூக முன்னேற்றத்தைப் பற்றி கவனப்படுத்திய மிக முக்கியமான பங்களிப்பு அந்த உரை. அது இன்றைக்குத்தான் விளங்குகின்றது.

No comments:

Post a Comment