Saturday, June 28, 2014

ரவிக்குமார் கவிதை

இடி தாக்கவேண்டுமெனில்
மழை இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை

வெண்மணியில் இடி தாக்கியபோது 
மழையா பெய்தது?

காற்று மனிதர்களின் ஈரத்தையும் உறிஞ்ச
பயணிக்கும் பேருந்துக்குள்ளும்
இடி தாக்குமென்று மேலவளவில் கண்டோம்

தாமிரபரணிக் கரையில் பரமக்குடி சாலையில்
இடி தாக்கியபோது மழைக்கான தடயம்
எவர் நினைவிலும் இல்லை

இடி எங்கும் விழும்
எவ்வடிவிலும் தாக்கும்
ஒருத்தனுக்கு ரயில் வடிவில்
ஒருத்திக்கு வெற்றிலைக் கொடிக்காலில்
சிறுமி ஒருத்திக்குப் 
பள்ளி செல்லும் பாதையில்
வீதியில் 
விடுதியில் 
வேலைசெய்யும் இடத்தில்

நேற்றும்கூட விழுந்தது இடி
துக்கித்தோர் அழக் குழுமும் முன்பாக
சோகத்தின் மௌனத்தை உடைத்துச் சிதறடித்து

ஏன் இந்த இடி
எளியோர்மீது மட்டும் விழுகிறது? 

No comments:

Post a Comment