Monday, March 2, 2015

அடிக்குறிப்புகள் கே.சச்சிதானந்தன்


தமிழில்:ரவிக்குமார்

 நாடகம்

முடிந்தது நாடகம், நடிகர்கள் தோன்றினார்கள்
மேடையில்
அரங்கத்திலிருந்த பார்வையாளர்களுக்கு
வாழ்த்து சொன்னார்கள்
தீர்ந்துபோயின
மனப்பாடம் செய்த சொற்கள்
பார்வையாளர்கள் மௌனமாக எடுத்துவைத்தார்கள்
நடிகர்களின் கைகளில் 
ரத்தம் ஒழுகும் வாழ்வின் ஒரு துண்டை

ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு

நான்கு குழந்தைகள் ஒளிந்து பிடித்துவிளையாடினார்கள்
ஒரு குழந்தை குதிருக்குள்
இன்னொன்று கட்டிலுக்குக் கீழே
மூன்றாவது குழந்தை மாடத்தில்
நான்காவது குழந்தை மரணத்துக்குப் பின்னால்

நிக்கோனர் பர்ராவுக்கு ஒரு பின்னிணைப்பு

சிலி நாட்டுக் கவிஞன் நிக்கோனர் பர்ரா 
அமெரிக்காவைப் பற்றி சொன்னான்: அமெரிக்காவில் சுதந்திரம் என்பது ஒரு சிலை
அதற்கு ஒரு பின்னிணைப்பு: சீனாவில்
ஜனநாயகம் என்பது ஒரு சுவர்

நாற்பது

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதினேன்: நாற்பதைக் கடந்த மனிதர்களையும் சிந்தனைகளையும் சுட்டுத் தள்ளவேண்டும்
எனக்கு இப்போது நாற்பது வயது
தயவுசெய்து என்னை சுட்டுவிடாதீர்கள்
எப்படி வாழக்கூடாது என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக 
என்னை வாழ விடுங்கள்

No comments:

Post a Comment