நிர்பயாவை மையமாகக்கொண்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தைப் பார்த்தவர்கள் அதை இயன்ற வழிகளில் பரப்பி வருகிறார்கள். நானும் அதைப் பார்த்தேன்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளிப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் கூறியிருந்தபோதிலும் இந்த ஆவணப் படத்தில் நிர்பயாவின் உண்மைப் பெயர் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெயரை ஏன் வைத்தோம் என அந்தப் பெண்ணின் தாயார் சொல்லும்போது கண்கள் கசிந்தன. எனவே அந்தப் பெயரை வெளிப்படுத்தியிருப்பதை நான் தவறென்று கருதவில்லை.
சிறு பிசிறுகூட இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்தப் படம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிறது.நிர்பயாவின் பெற்றோர் மட்டுமின்றி குற்றவாளிகளின் பெற்றோர் எழுப்பும் கேள்விகளும் முக்கியமானவையாக இருக்கின்றன. குற்றவாளி ஒருவரின் மனைவியின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளது. அவர் பேசியதைக் கேட்டபோது மனம் குழம்பியது. ஒரு குற்ற சம்பவத்தை கறுப்பு வெள்ளையாகப் புரிந்துகொள்வது சரியல்ல. சரி தவறு என்பவற்றைத் தாண்டி எத்தனையோ சிக்கலான கேள்விகளும் பிரச்சனைகளும் அதில் பொதிந்துள்ளன. மிகக் குரூரமான குற்றம் இழைத்தவரையும்கூட பழிவாங்கும் உணர்வோடு பார்க்கக்கூடாது என்ற உணர்வுதான் இந்த ஆவணப் படம் பார்த்தபின் ஏற்படுகிறது.
குற்றவாளியும், வழக்கறிஞர்களும் கூறியிருக்கும் கருத்துகள் இந்திய சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனோபாவத்துக்கு சான்றுகளாக உள்ளன.அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத்தான் சங்கப்பரிவார அமைப்பினரும் சொல்லிவருகின்றனர். பாதிக்கப்பட்டவரையே பழிசொல்லும் இந்த மனோபாவம் மிகவும் ஆபத்தானதாகும்.
நிர்பயா வழக்கைக் கடந்து உலகளாவிய அடிப்படைவாத , ஆணாதிக்க மனோபாவத்தை அம்பலப்படுத்திக்காட்டுவதாக இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. நமது இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இந்த ஆவணப் படத்தை ஒவ்வொரு பள்ளியிலும் காட்டவேண்டும்.அதற்கு மாறாக இதை மத்திய அரசு தடை செய்திருப்பதோடு பிபிசி மீது வழக்கு தொடுக்கப்போவதாக சொல்லியிருப்பது மிகப்பெரிய கருத்துரிமை பறிப்பு நடவடிக்கையாகும்.
அந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்த சில கேள்விகள் :
1. நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் தன்னெழுச்சியாய்க் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், அவற்றை மிருகத்தனமாகக் கையாண்ட காவல்துறையின் அடக்குமுறைகள்- கையாலாகாமல் வேடிக்கை பார்த்த காங்கிரஸ் அரசு தூக்கியெறியப்பட்டதில் அவற்றுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஆனால் அதன் பின்னர் அத்தகைய சம்பவங்கள் நடந்தபோது ஏன் அத்தகைய தன்னெழுச்சி உருவாகவில்லை? அது காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தியின் உச்சமாக வெடித்ததா? அல்லது சமூகம் அத்தகைய சம்பவங்களுக்குத் தகவமைந்துவிட்டதா?
2. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து அக்கறை காட்டுகிறவர்கள்கூட வர்மா கமிஷன் அறிக்கையை சீரியஸாக விவாதிக்கவோ அதன் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப் படுத்தவோ வலியுறுத்தவில்லையே அது ஏன்?
3. இந்த ஆவணப் படத்தில் கருத்து தெரிவித்த வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்போது வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதே கருத்துகளைப் பல்வேறு சங்கப் பரிவார அமைப்பினர் சொல்லிவருகிறார்களே அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது?
4. இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லீ உட்வின் என்ற ஆவணப் பட இயக்குனருக்கு இருந்த பொறுப்பும் அக்கறையும் ஏன் நமக்கு இல்லாமல் போய்விட்டது? பிபிசி நிறுவனத்தின் துணிச்சலும் கடப்பாடும் ஏன் நம் நாட்டு ஊடகங்களுக்கு இல்லை?
5. இந்த ஆவணப் படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு நாம் நம்மிலிருக்கும் ஆணாதிக்க சிந்தனையைப் புரிந்துகொண்டோம்?
No comments:
Post a Comment