Thursday, March 12, 2015

காணாமல் போனவர்கள் எங்கே?



போர்க் குற்றங்கள் குறித்த புகார்கள் தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் நாங்களே விசாரணை நடத்தப்போகிறோம் என இலங்கை அதிபர் மைத்ரிபாலா பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இன்னும் அவர்  ராஜபக்ச அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவே தன்னைக் கருதிக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. அதிபரானதற்கான எந்த அறிகுறியையும் அவரிடம் பார்க்க முடியவில்லை. 

இந்தியப் பிரதமர் இலங்கைக்குப் போவதற்கு முன்பே இலங்கை அதிபரும் பிரதமரும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டார்கள். இந்தியப் பிரதமரிடமும் இதையேதான் சொல்லப்போகிறார்கள். எனவே பிரதமர் மோடியின் பயணத்தால் ஈழத் தமிழர்களுக்கு நன்மை எதுவும் விளையுமென நம்புவதில் அர்த்தமில்லை. ஆனால் தீமை விளைய வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. அதை பிரதமர் மோடி தொடரக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்து அகதிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டால் பிற ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

இந்தியப் பிரதமரின் பயணம் குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஐநா மனித உரிமைக் கவுன்சில்கூட்டம் நடந்துவருவதைப் பற்றியும்கூட இங்கே எவரும் கவலைபட்டதாகத் தெரியவில்லை. ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தம் கடமையைச் செய்துவருகின்றன. 

 1980 முதல் இலங்கையில் காணாமலடிக்கப்பட்ட சுமார் எண்பதாயிரம் பேரின் கதி என்ன? எனக் கேட்டு இலங்கையைச் சேர்ந்த சந்தியாவும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எஸ்டெலும் ஐநா பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஏற்பாட்டில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அவர்கள் எழுப்பிய முழக்கத்தை நாமும் எதிரொலிப்போம்: " இலங்கையில் காணாமல் போன எண்பதாயிரம் பேர் எங்கே?"

No comments:

Post a Comment