தமிழ் நாடு தொல்லியல் துறை துவக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன ( 1961 - 2011). அந்தத் துறையாலும் அத் துறையில் ஆர்வம் கொண்ட அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாலும் தமிழகத்தில் பல்வேறு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டு அவற்றில் பல பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணிகளின் விளைவாகத் தமிழின் தொன்மை உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு இவை பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கின் றன.
இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் அறியப்பட்டிருந்தாலும் போதுமான நிறுவன ஆதரவுகளைப் பெறுவதிலும் புதிய ஆய்வாளர்களை ஈர்ப்பதிலும் பல்வேறு சிக்கல்களை இத் துறை சார்ந்த அறிஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
தொல்லியல் துறையில் நிகழ்ந்துவரும் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பிற துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத காரணத்தால் இந்தத் துறைகளுக்கிடையில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழவில்லை. இதனால் ஒருங்கிணைந்த விதத்தில் தமிழ் இலக்கியம், வரலாறு , பண்பாடு முதலானவற்றை ஆராய்வதில் பின்னடைவு காணப்படுகிறது. புதிய ஆய்வாளர்கள தொல்லியல் துறை நோக்கி வராமல் போவதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த நிலையை மாற்றி தமிழகத் தொல்லியல் , கல்வெட்டியல் துறைகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளை மேலும் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மணற்கேணி எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. இத் துறையைச் சேர்ந்த அறிஞர்களான திரு. நடன. காசிநாதன், பேராசிரியர் விஜய வேணுகோபால் , பேராசிரியர் கா.ராஜன், பேராசிரியர் சு.ராஜவேலு உள்ளிட்டப் பலரது கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுகள் குறித்தும் பதிவுகளைச் செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக
' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 ' என்னும் தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை மணற்கேணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது . 24.11.2012 சனிக்கிழமை அன்று பாண்டிச்சே ரியில் இந்த ஆய்வரங்கு நடைபெறும்.
இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது ஒப்புதலை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எனது அலைபேசியில் ( எண் 9443033305 ) தொடர்புகொண்டோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர் , மணற்கேணி
காலை துவங்கி மாலை வரையில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கிச் சிறப்பிக்குமாறு அழைக்கப்பட இருப்பவர்கள் :
திரு.ஐராவதம் மகாதேவன் , திரு.ஒய் .சுப்பராயலு , திரு.இரா.நாகசாமி , திரு.எஸ்.ராசு , திரு.விஜய வேணுகோபால் , திரு.நடன.காசிநாதன் , திரு.கா.ராஜன் , திரு.தயாளன் , திரு.சு.ராஜவேலு ,திரு. எஸ் . சாந்தலிங்கம் , திரு. கலைக்கோவன்
Nandru.
ReplyDelete