Tuesday, October 16, 2012

தமிழ்ப் பல்கலைக்கழகத்தைக் காப்போம்




தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில் அறுபது ஏக்கரை மாவட்ட ஆட்சியர்அலுவலகம்   கட்டவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டவும் தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. அதை எதிர்த்து சென்னையில்15.10.2012 அன்று  உண்ணாநிலை அறப்போராட்டம் ஒன்றை தமிழ் அமைப்புகள் நடத்தின அதில் ரவிக்குமார்  ஆற்றிய உரை  : 

அனைவருக்கும் வணக்கம் 

தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஒதுக்கித் தந்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும் இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தைக் காப்போம் என நாம் சொல்லும்போது அங்கிருக்கும் நிலத்தைக் காப்பது மட்டுமல்ல அந்தப் பல்கலைக் கழகத்தைப் பாதுகாப்பது என்றுதான் நான் பொருள் கொள்கிறேன். தமிழ் நாட்டிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் எல்லாம் உயர்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆனால் தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டும் தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் இயங்குகிறது. பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பொதுவாக அமைச்சகத்தின் செயலாளரோடுதான் தொடர்புகொள்வார்கள். ஆனால் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மட்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரைத்தான் தொடர்புகொள்ளவேண்டும் என்று உள்ளது. இது அவரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த நிலையை நாம் மாற்றுவதற்குக் குரல் தரவேண்டும். உயர்கல்வித் துறையின்கீழ் இல்லாத காரணத்தால் பல்கலைக்கழக மானியக்குழு அனுப்புகிற சுற்றறிக்கைகளைக்கூட அவர்கள் பெற முடியாத நிலை. 

உயர்கல்வித் துறை யின் கீழ் இல்லாததால் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் உயர்கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி இந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிதிக்காகக் காவடி தூக்கும் நிலை. இப்போதுகூட அங்கிருக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப் பணம் இல்லை. ஒய்வு பெற்றவர்களுக்கு அவர்களது பணி ஓய்வுப் பலன்களைக்கூடத் தரமுடியாத மோசமான  நிலை உள்ளது . 

நான் கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்தேன். அப்போது இருபது ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்யப்படாதிருந்த ஐம்பத்தைந்து விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென நேரடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி அவர் கையில் அதற்கான கோப்பைக் கொண்டுபோய்க் கொடுத்து அவர்களை  நிரந்தரம் செய்யவைத்தேன். அவர்களது ஊதிய பாக்கி சுமார் இரண்டுகோடி இருந்தது அதையும் பல்கலைக்கழகத்துக்கு வழங்கச் செய்தேன்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தை சீர்செய்வதற்காக திரு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் சீராய்வுக்குழு ஓன்று அமைக்கப்பட்டு அதுவும் தனது அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் தமிழ்ப் பல்கலைகழகத்துக்கு ஆண்டுக்குக் குறைந்தது பத்து கோடி ரூபாயாவது நிதி வழங்கவேண்டும் என்று சட்டப் பேரவை யில் பேசி 2010 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒன்பதரை கோடி ரூபாய் ஒதுக்கச் செய்தேன். கடந்த ஆட்சிக்காலத்தில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி அதுதான். 

தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவையும் சரிசெய்யப்படவேண்டும். அவற்றுக்கு நிரந்தரமான இயக்குனர்கள்கூட  இல்லை.செம்மொழி நிறுவனத்துக்கு இயக்குனராக நியமிக்கத் தகுதியுள்ள  ஒருவர் கிடைக்கவில்லை என்பது நாமெல்லோரும் வெட்கப்படவேண்டிய செய்தி .  ஆட்சியாளர்கள் தமிழுக்காக இப்படி நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அப்படி உருவாக்கும்போதே அதை கொல்வதற்கான நஞ்சையும் அதற்குள் வைத்து விடுகிறார்கள் இவற்றையெல்லாம் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது. இங்கு வந்திருக்கும் தமிழறிஞர் இளங்குமரனார் முனைவர் பொற்கோ உள்ளிட்டவர்கள் முன்முயற்சி எடுத்து இந்த நிறுவனங்களை சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தும் பணியைச் செய்வதற்கு தமிழ் அறிஞர்களைக் கொண்ட  ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனித்து அவற்றைத் திறம்பட இயங்க வைக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

தமிழைப் போல செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சமஸ்கிருதத்துக்கு இந்தியாவில் பதினாறு பல்கலைக்கழகங்களை அரசு நடத்துகிறது  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நடத்துகிறது.ஆனால் தமிழுக்கு இருப்பது இந்த ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டும்தான் இதைக் காப்பாற்ற எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும்  நான் சார்ந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உங்களோடு உடன் நிற்கும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment