Thursday, February 17, 2011

இலங்கைத் தமிழர்களால் சிறைப் பிடிக்கப்பட்டத் தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் இலங்கைத்தமிழ் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு அந்த நாட்டுக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள செய்தி தமிழ்நாட்டில் கடுமையான கோபத்தைத் தூண்டியிருக்கிறது.
தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததுமட்டுமின்றி தமது இழுவைப் படகுகளால் ஈழ மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.அதில் உண்மை இருக்கலாம் அல்லது வீண்பழியாகவும் இருக்கலாம். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என இந்திய வெளி உறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 
இந்தப் பிரச்ச னை தொடர்பாக சிலவற்றை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது:

1. கடந்த 1983 முதல் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். அதை ஈழத் தமிழ் இயக்கங்களோ தலைவர்களோ கண்டித்து ஏதாவது செய்ததுண்டா?

2. கடற்கரைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து சிங்களமயப் படுத்திட இலங்கை அரசு முயன்றுவருகிறது என சொல்லப்படுகிறது. அப்படியானால் இது அந்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமா ?

3. இலங்கை அரசு ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அதை ஈழம் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கிடையேயான மோதலாக மாற்றுவதற்கு திட்டமிடுகிறதா? அதற்கு இந்திய அரசும் துணைபோகிறதா?

4. ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பது குறித்து தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் அக்கறையின்றி இருப்பது ஏன்?

5. தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக அங்கிருந்து ஜனநாயகக் குரல் எதுவும் எழ முடியாது என்பது உண்மைதான். ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதுகுறித்து எந்தவிதப் புரிதலும் இல்லாமல் இருப்பது ஏன்?

6. ஈழத்தில் போராளிக் குழுக்களை இந்திய அரசு உருவாக்கியபோது அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, தளவாடங்களை அனுப்புவது ஆகியவற்றுக்கான ‘ பின் தளமாக’ தமிழ்நாடு பயன்படுத்தப்பட்டது. அந்தப் ‘பின் தளம்’ என்ற மனோபாவத்திலிருந்து இன்னும் ஈழத் தமிழர்கள் விடுபட்டதுபோலத் தெரியவில்லை. அதற்கான முன்முயற்சியைத் துவக்குவதற்கு இதுவே சரியான தருணம் ஆகும். 

7. தமிழக மீனவர்கள் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு எந்தவொரு நட்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடாது. அதுபோலவே ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களைச் சகோதரர்களாகக் கருதவேண்டும். அவர்கள் இலங்கை அரசைப் போல நடந்துகொள்ளக் கூடாது. 

ஈழத் தமிழர்கள்மீதும், தமிழக மீனவர்கள் மீதும் அக்கறை உள்ளவர்கள் இதை விவாதிக்க முன்வரவேண்டும்.  

1 comment:

  1. தமிழக மீனவர்களை , ஈழ மீனவர்கள் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டே அடிப்படை ஆதாரமற்றது . 'இந்தி'ய அரசும் , சிங்கள அரசும் கூட்டாக சேர்ந்து , மீனவர் பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியே இது !

    ReplyDelete