Saturday, November 2, 2013

எதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்?

அமெரிக்காவின் உளவு நடவடிக்கை பற்றி நமது எதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்? 


அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் உலகளாவிய உளவு நடவடிக்கையை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க அரசு தன்மீது இரக்கம் காட்டி தன்னை மன்னிக்கவேண்டும். என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்த ஜெர்மன் நாட்டின் பசுமை கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ரோபெல் என்பவரிடம் அவர் கையளித்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

ஸ்னோடென் ஏன் மன்னிப்புக் கோருகிறார்?


ஜெர்மன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்களை 2002 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா ஒட்டுக் கேட்டுவருகிறது என அண்மையில் வெளியான செய்தியையொட்டி இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அதுகுறித்து ஜெர்மன் நாட்டில் நடைபெறும் விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக எட்வர்ட் ஸ்னோடெனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஒராண்டுக்கு ரஷ்யாவில் தஞ்சம் அளிக்கப்பட்டிருக்கும் ஸ்னோடென் அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது. அப்படிச் சென்றால் அவர் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்படக்கூடும். எனவே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டால் மட்டுமே அவர் ஜெர்மனிக்குச் செல்ல முடியும். அதற்காகத்தான் இந்தக் கடிதம் அவரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. 


ஸ்னோடென் செய்ததில் சட்டரீதியாகத் தவறொன்றுமில்லை. தனது அரசாங்கம் சட்டத்துக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட அவர், ஒரு குடிமகன் என்ன கடமையைச் செய்யவேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறார். அரசாங்கம் செய்யும் தவறுகளை உரிய ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதும் பேச்சுரிமை என்பதில்தான் அடங்கும். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மட்டுமின்றி அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது திருத்தத்தின்படியும் தற்போது அமெரிக்க அரசு மேற்கொண்டிருக்கும் உளவு நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். எனவே அந்த சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி உலக அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஸ்னோடென் எந்தவிதத்திலும் குற்றவாளியல்ல. எனவே அவர் இப்படிக் கருணை காட்டும்படி அமெரிக்காவிடம் கெஞ்ச வேண்டியதுமில்லை. ஆனல் அவர் இப்படிக் கேட்கவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அதற்கு உலக நாடுகளும் ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளும்தாம் பொறுப்பேற்கவேண்டும். 


ரஷ்யாவின் கண்டிக்கத்தக்க செயல்: 


தற்போது ரஷ்யா அவருக்கு வழங்கியிருக்கும் தஞ்சம் தற்காலிகமானது, நிபந்தனைக்குட்பட்டது. எந்தவொரு நாட்டிடமும் எவரொருவரும் தஞ்சம் கோர உரிமை உள்ளது. தஞ்சம் அளிக்கும் நாடு அவரது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது. அமெரிக்க அரசுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தகவலையும் வெளியிடமாட்டேன் என உறுதிமொழி வாங்கிக்கொண்டுதான் ரஷ்யா எட்வர்ட் ஸ்னோடென்னுக்குத் தஞ்சம் அளித்திருக்கிறது. இதுவேகூட முறையற்ற கண்டிக்கப்படவேண்டிய செயல்தான். 


உலக நாடுகளின் மௌனம் : 


ஸ்னோடென் அம்பலப்படுத்தியதற்குப் பிறகும்கூட அமெரிக்கா தனது உளவு நடவடிக்கையை நிறுத்தவில்லை. அதற்குக் காரணம் அதுகுறித்து சர்வதேச அழுத்தம் உருவாகாததுதான். தமது அந்தரங்கமும் இறையாண்மையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைதான் என்பதை உலக நாடுகள் அறியாதவை அல்ல. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்பு என்ற ஒரேயொரு காரணத்தைச் சொல்லி அவையெல்லாம் தமது அடிமைத்தனத்தை மறைத்துக்கொண்டுவிட்டன. ஃப்ரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி முதலான நாடுகளின் சிறு முணுமுணுப்புகள் தவிர அமெரிக்காவை எதிர்த்து வலுவான கண்டனக் குரல் எதுவும் எழாத நிலையில் தனது குற்றச் செயலைக் கைவிடவேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இல்லாமல்போய்விட்டது. 


இந்து நாளேட்டின் பங்களிப்பு: 


ஸ்னோடென் வெளிப்படுத்திய அமெரிக்காவின் உளவு நடவடிக்கை குறித்த செய்திகளை இந்திய ஊடகங்களிலேயே இந்து நாளேடுதான் உரிய முக்கியத்துவம் தந்து வெளியிட்டது. அந்தப் பெருமை அதன் ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜன் அவர்களையே சாரும். அந்த மரபு அறுந்துவிடவில்லை என்பதுபோல் இன்றும் ஸ்னோடென் கடிதம் குறித்து இந்து நாளேட்டில் இரண்டு விரிவான செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்திகளையும் அது வெளியிட்டிருக்கும் நடுப்பக்கக் கட்டுரையையும் சேர்த்துவைத்து வாசிக்க வேண்டும். 

இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கும் ஸ்னோடென் குறித்த செய்திகள் அமெரிக்க உளவு நடவடிக்கையின் ஆபத்தைச் சொல்கின்றன. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்  ஜான் கெர்ரி “ தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ) நடவடிக்கைகள் பலவற்றுக்கு அமெரிக்க அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார். இந்து நாளேட்டின் செய்தியாளரிடம் பேசிய ’எபிக்’ என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அமீ ஸ்டெபனோவிச் “ பொதுமக்கள் இததகைய வரம்பற்ற கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை அமெரிக்க அதிகாரிகள் பலரும் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்” என்றுகூறியுள்ளார். 


தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதற்கும், அதில் தலையிடுவதற்கும் அரசாங்கங்கள் இப்போது பயன்படுத்தும் வசதியான காரணம் ‘ பயங்கரவாதம்’.அதற்கு ஒத்திசைவான மனநிலையை உருவாக்கும் பணியில் அரசுக்குத் துணையாக பல நிபுணர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அப்படியானவர்கள் ஒன்றிணைந்து எழுதியிருப்பதுதான் இன்று இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கும் நடுப்பக்கக் கட்டுரை ( Penetrating the web of terror networks) . பாட்னா குண்டுவெடிப்பு பற்றியும் , இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு குறித்தும் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரை மின்னணுக் கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துவது மட்டுமின்றி , இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் எஃப்.பி.ஐ முதலான அமைப்புகளோடு இந்திய உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.


பயங்கரவாதம் என்பது முக்கியமான பிரச்சனைதான் என்பதில் நமக்கு மறுப்பெதுவுமில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதும், உலகளாவிய ஒருங்கிணைப்பு என்ற பெயரால் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இந்தியாவை மண்டியிட வைப்பதும் ஒப்புக்கொள்ளத் தக்கவையல்ல.   

  

எதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்? 


நாள்தோறும் ராகுல் காதிக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான வார்த்தை யுத்தத்தை ஒளிபரப்பி / அச்சிட்டு மக்களை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள், அமெரிக்க உளவுப் பிரச்சனையில் அந்த இரண்டு ‘மாமனிதர்கள்’ சொல்வது என்ன, நாங்கள்தான் பிரதமர் எனக் கனவுகண்டுகொண்டிருக்கும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் சொல்வது என்ன என்று கேட்டு அவற்றை வெளியிடக்கூடாதா?

No comments:

Post a Comment