===================
* ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளில் NCERT பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயிற்றுவிக்கவேண்டும்.
* ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
=====================
தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் 1095 பள்ளிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்குத் தமிழ்வழியிலேயே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்வழியில் பயின்றால்தான் பாடங்களை நன்றாகப் புரிந்து படிக்கமுடியும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்திவருவதை நாம் அறிவோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை ஆதிதிராவிடநலத்துறைப் பள்ளி மாணவர்களிடம் ஏனோ பலிக்கவில்லை. அவர்கள் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களோடுகூட போட்டிபோட முடியாத நிலையில் தனியார்பள்ளி மாணவர்களோடு போட்டிபோடுவதுகுறித்து நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.
இதன்விளைவாக அந்தப் பள்ளிகளில் பயிலும் தலித் மாணவர்கள் உயர்கல்வி பெறுவது வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புறக்கணிப்பு ( Exclusion ) சமூகரீதியில் மோசமான விளைவுகளையும் உண்டாக்குகிறது.
கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை போன்றவை மட்டுமே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் எனக் கூற முடியாது. இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று : ஆங்கிலம்.
இந்தியாவில் ஆங்கிலம் என்பது மொழியாக மட்டுமின்றி வாய்ப்புகளை அடைவதற்கான வாசலாகவும் உள்ளது. ஆங்கிலம் படிக்காதவர்களுக்கு வாய்ப்புகளின் வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது. ( வாய்ப்பு என்பது வேலை வாய்ப்பு மட்டுமல்ல) தமிழ்வழிக் கல்விக்கான போராட்டங்கள் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துவதோடு நிற்பதில்லை, ஆங்கிலத்துக்கு எதிரான மனநிலையையும் உருவாக்குகின்றன. அத்தகைய போராட்டங்கள் நமது மாநிலத்தில் அரசுப்பள்ளிகளையே பெரிதும் பாதிக்கின்றன.
தமது ஏழ்மை நிலையின் காரணமாக அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கும் தலித் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றாலும் அங்கே பெரும்பாலும் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பதால் திக்குமுக்காடிப் போகின்றனர். சில கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிலலாம் என்றாலும் ஆய்விதழ்கள், நூல்கள் முதலானவை ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் இருக்கின்றன. இன்றைய சூழலில் செவ்வியல் தமிழ் இலக்கியத்தைப் பயிலும் மாணவர்கள்கூட ஆங்கிலத்தில் போதிய திறன் இல்லாமல் அந்தப் பாடங்கள் தொடர்பான ஆய்வுகளை அறிந்துகொள்ள முடியாது. எனவே ஆங்கிலத்தை மறுப்பது எவ்விதத்திலும் சரியானதல்ல.
ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை நடத்துவதற்குத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை. இந்தக் குறையைக் களைவதற்கு அரசு உடனடி கவனம் செலுத்தவேண்டும். அந்தப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவதற்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவற்றைக் கொடுப்பது மட்டும் போதாது. முதலில் அந்தப் பள்ளிகள் தரமானவையாக இருக்கவேண்டும். சிறப்புப் பள்ளிகள் என்ற நிலையில்தான் அந்தப் பள்ளிகளை ஆதி திராவிடர் நலத்துறை நடத்துகிறது. மற்ற அரசுப் பள்ளிகள் அளவுக்குக்கூட அவற்றின் கல்வித் தரம் இல்லாவிட்டால் அவற்றை அந்தத் துறை நடத்தவேண்டிய தேவையே இல்லை.
ஆங்கில மொழியைக் கற்பித்தல் தொடர்பாக ஆராய்ந்த தேசிய அறிவுசார் ஆணையம் ( National Knowledge Commission ) ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. +2 முடிக்கும் ஒரு மாணவர் தாய் மொழி, ஆங்கிலம் இரண்டிலும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு அதற்காகப்பல்வேறு வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது. ஆனால் அவற்றை இங்கே விவாதிக்கக்கூட எவருக்கும் அக்கறை இல்லையென்பது கசப்பான உண்மை.
1. ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகள் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
2. அந்தப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பிலிருந்து தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்க ஆவனசெய்யவேண்டும். அது மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற அண்டை மாநில மொழிகளாகவோ அல்லது இந்தியாகவோ அல்லது சீனம், ஃபிரெஞ்ச் முதலான அயல்நாட்டுமொழிகளாகவோ இருக்கலாம்.
3. அந்தப் பள்ளிகளில் இப்போதிருக்கும் சமச்சீர்க் கல்வித்திட்ட பாடநூல்களைவிடவும் தரமான NCERT பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயிற்றுவிக்கவேண்டும்.