இந்திய எழுத்தாளர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கும் சந்தடியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கப்போகிறது என்று பேசுவதற்கு இங்கு எவரும் இல்லை. இந்த ஆண்டு விருது பெரும் வாய்ப்பு உள்ள ஐந்துபேரின் பெயர்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கிறது. அதில் ஸ்வேத்லேனா அலெக்ஸீவிச் என்ற எழுத்தாளரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. பத்திரிகையாளராக இருக்கும் ஸ்வேத்லேனா அலெக்ஸீவிச் ஆப்கானிஸ்தான் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் குடும்பத்தினரைப் பேட்டிகண்டு எழுதிய புத்தகம் முக்கியமானதெனச் சொல்கிறார்கள் . அவருக்கு ஒருவேளை நோபல் பரிசு கொடுக்கப்பட்டால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உரைநடை நூலுக்காகப் பரிசு பெறுபவராக அவர் இருப்பார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பட்டியலில் கடைசியாக அடோனிஸின் பெயர் இருந்தபோதிலும் அவருக்கு இந்த ஆண்டாவது நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்பது எனது கருத்து.“ கவிஞன் எனச் சொன்னால் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என அர்த்தம். உண்மையில் நான் எதுவும் எழுதவே இல்லை. கவிதை என்பது துவக்கமும் முடிவும் இல்லாத ஒரு செயல்பாடு. அது துவக்கத்துக்கான, முடிவற்ற துவக்கத்துக்கான ஒரு உறுதிமொழி” எனக் குறிப்பிடும் அடோனிஸின் கவிதைகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது பெயர் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகப் பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் பாரிஸ் நகரில் வாழ்கிறார்.
நான் மொழிபெயர்த்து மணற்கேணி வெளியிட்டிருக்கும் ' குரல் என்பது மொழியின் விடியல் ' என்ற அரபுக் கவிதைகளின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ' பாலை ' என்ற நீண்ட கவிதையைப் படித்துப் பாருங்கள் நான் சொல்வதன் நியாயம் புரியும். அந்தக் கவிதையிலிருந்து ஒரு பகுதி:
அவன் கவிதை ஒன்றை எழுதினான்
” சாலை எங்கே தொடங்குகிறதென்பதோ சூரியனுக்கு எதிரே எனது நெற்றியை எப்படி வைத்துக்கொள்வது என்பதோ எனக்குத் தெரியவில்லை”
அவன் கவிதை ஒன்றை எழுதினான்
“ என் எதிர்காலம் ஒரு பாலை என் ரத்தம் ஒரு கானல்”
அவன் கவிதை ஒன்றை எழுதினான் அது என்னை மிருதுவாக்கியது
அவன் கவிதை ஒன்றை எழுதினான் என் சகோதரனைக் கொலைசெய்து என்னைத்
தகுதியுள்ளவனாக்கிக்கொள்ளும்படி
அவன் கவிதை ஒன்றை எழுதினான் அது எதிர்காலம் ஒன்றை முன்மொழிந்தது
எவரும் எதிர்பாராத சாத்தியம் என எண்ணிப் பார்க்காத
அவன் கவிதை ஒன்றை எழுதினான்
அது உண்மைக்கும் அதற்கும் இடையில் மொழியை ஒரு திருடனைப்போல இடைநீக்கம் செய்துவிட்டது
அவன் கவிதை ஒன்றை எழுதினான்
அது மெழுகுவர்த்தியைப்போல இருக்குமாறு நிலவிடம் சொன்னது
அவன் கவிதை ஒன்றை எழுதினான்
அது சூரியனின் முகத்தை வானத்துடன் குழப்பிவிட்டது
அவன் கவிதை ஒன்றை எழுதினான்
அது அவனைக் கொன்றுவிட்டது