Friday, March 25, 2016

‘தேர்தல் சூட்டில் உருகும் பூமி’’ ரவிக்குமார்


( 2009 பாராளுமன்றத் தேர்தலின்போது ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை ) 

கோடை வெயிலின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருக்கிறது. இதில் தேர்தல் உஷ்ணமும் சேர்ந்து சூட்டைக்கிளப்ப மண்டை காய்ந்துகொண்டிருக்கிறது இந்திய பொதுஜனம். 

ஏற்கனவே கொதித்துக் கிடக்கும் பூமி இந்தக் கூடுதல் வெப்பத்தால் தகிப்பு ஏறித் தவிக்கிறது. தேர்தல் செலவைக் குறைக்கவும், வன்முறை நிகழாமல் தடுக்கவும் தேர்தல் சமயத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. அந்த விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்று கண்காணிக்க பெரிய படையே கிளம்பியிருக்கிறது. ஆனால் அவர்கள் கண்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு நமது வேட்பாளர்கள் வாக்காளர்களை பாடாய்படுத்துவது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்வதற்கான காலவரம்பை எல்லா வேட்பாளர்களுமே மீறத்தான் செய்கிறார்கள். அதுபோலவே தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு வரம்பை சுயேச்சைகள் கூட பின்பற்றுவதில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பிரச்சாரம் செய்தால் நமது நாட்டின் தேர்தல் இந்தளவுக்கு ‘காஸ்ட்லியாக’ மாறியிருக்காது. என்னதான் தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கண்காணித்தாலும் அதை ஏமாற்றுகிற திறமை நம்முடைய வேட்பாளர்களுக்கு இருக்கிறது என்பதுதான் உண்மை.

தேர்தல் காலம் வந்துவிட்டாலே நமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும். சாதாரண குக்கிராமங்களில்கூட சாரிசாரியாக வாகனங்கள் புழுதிகிளப்பும். இதுவெல்லாம் நமக்கு பழக்கமானவைதான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் வாகனங்களைப் பார்த்து மக்கள் சந்தோஷப்படுகிறார்களா? அல்லது எரிச்சலடைகிறார்களா? இப்படியெல்லாம் போய் ஓட்டு கேட்டால்தான் மக்கள் போடுவேன் என்று சொல்கிறார்களா? இவைப்பற்றி அரசியல் கட்சிகள் ஏன் சிந்திக்கக்கூடாது? அரசியல் தலைவர்களிடம் கேட்டால், ‘‘அவங்கள நிறுத்தச் சொல்லுங்க. நாங்க நிறுத்துறோம்’’ என்று கூலாகச் சொல்லிவிடுவார்கள்.

கணக்கிலடங்கா வாகனங்களில் சென்று வாக்குச் சேகரிப்பது அரசியல் கட்சிகள் தமக்கிருக்கும் வலிமையை காட்டுவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு யுக்தியாகும். அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் இந்தச் சமயத்தில்தான் வண்டி, வாகனங்களில் ஏறிக்கொண்டு ஊரை வலம்வந்து தங்களது செல்வாக்கை காட்டமுடியும் என்று நம்புவதால் இத்தகைய சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடுவதில்லை. முன்பெல்லாம் அம்பாசிடர் கார்கள்தான் அதிகமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும். இப்போது அதெல்லாம் அவுட் ஆஃப் பேஷன் ஆகிவிட்டது. சுமோ, ஸ்கார்பியோவுக்கு குறைந்து வேறு எந்த வாகனத்திலும் தொண்டர்கள் ஏறுவதில்லை. வாகன அணிவகுப்பைப் பார்த்து பிரமித்து வாய்பிளந்து நிற்கின்ற ஏழை மக்கள் அந்த ஆச்சரியத்திலேயே வாக்களித்து விடுவார்கள் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன போலும்.

தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரத்திற்கு எவ்வளவு வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில வரையறைகளை வகுத்திருக்கிறது. வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு போகும்போது தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு அருகில் மூன்று வாகனங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் ஏராளமாக வாகனங்களை கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் கடுமையானக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வாகனங்கள் முறையாக தேர்தல் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி ரசீதை வாகனத்தின் முகப்பில் ஒட்டிவைக்க வேண்டும். அப்படி அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஒரு பாராளுமன்றத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நாற்பது வாகனங்கள் வரை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு இருபது வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த அளவைவிடவும் தாண்டி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கிராம அளவில்கூட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய கட்டுப்பாடுகள் வரவேற்கப்படவேண்டியவைதான். தேர்தல் செலவைக் குறைப்பது என்ற நோக்கத்தில் மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளை பார்க்கக்கூடாது. நமது ஜனநாயக அமைப்பை கட்டிக்காப்பாற்றுகிற மாபெரும் பொறுப்பும் இந்த கட்டுப்பாடுகளில் அடங்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் வாகனங்கள் பற்றிய கட்டுப்பாடு மிகவும் முக்கியமானதாகப் படுகிறது. ஏனென்றால், புவி வெப்பமடைந்து வரும் பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ள இன்றையச் சூழலில் கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் வெளியேற்றுவதில் வாகனங்கள் பெருமளவு பங்கு வகிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். தேர்தல் காலத்தில் வாகனப் பயன்பாடு பலமடங்கு கூடிவிடுவதை நாம் அறிவோம். இப்படி பெருமளவில் வாகனங்கள் பயன்படுத்தப்படும்போது ஏராளமாக கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. உலகில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை வகித்து வருகிறது. அமெரிக்காவுக்கு முதலிடம். சீனா இரண்டாவது இடத்திலிருக்கிறது. ரஷ்யாவுக்கு மூன்றாவது இடம். நமது நாட்டில் வாகனக் கட்டுப்பாட்டுக்கு தீவிர முயற்சி எடுக்கப்படாவிட்டால் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடிப்பது வெகுதொலைவில் இல்லை.

அங்கீகாரம்பெற்ற கட்சிக்கு நாற்பது வாகனங்கள், அங்கீகாரம் பெறாத கட்சிக்கு இருபது வாகனங்கள் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்திருந்தாலும், அந்த வாகனங்களின் தன்மைக் குறித்து அது எந்த வரையறையையும் வகுக்கவில்லை. கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவது குறித்த கட்டுப்பாடுகள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இங்கு பயன்படுத்தப் படுகின்ற நான்கு சக்கர வாகனங்கள் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து தேசிய வாகன எரிபொருள் கொள்கை ஒன்று 2003ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற வாகன தர கட்டுப்பாட்டு முறை இங்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனங்கள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என அரசு எச்சரித்தது. ஈரோ&1 தர அளவுகோல் இந்திய அளவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஈரோ-3 தர அளவுகோல்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் ஏராளமாக வாகனங்கள் தேவைப்படுவதால் ஓட்டை உடைசல் வண்டிகளைக்கூட அப்போது வாடகைக்கு விட்டுவிடுவார்கள். அத்தகைய வாகனங்கள் ஏராளமாக எரிபொருளை குடிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் மாசு படுத்துகின்றன. ஏற்கனவே நமக்கு எரிபொருள் பற்றாக்குறை இருக்கிறது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தால் நமது பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்து விடுவதை நாம் அறிவோம். இப்போது நாள் ஒன்றுக்கு இருபத்தேழு லட்சத்து இருபத்திரெண்டாயிரம் பேரல்கள் எண்ணெய்யை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த தேர்தல் காலத்தில் இந்தப் பயன்பாடு பல மடங்கு கூடும். இதனால் நமது எண்ணெய் இறக்குமதியின் அளவும் அதிகரிக்கும். அது அன்னிய செலாவணி இழப்பில் கொண்டுபோய் விடும். ஆக, வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்பது வெறும் ஆடம்பரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நமது அரசியல் கட்சிகள் தம்மை விபரம்தெரிந்த கட்சிகளாக காட்டிக்கொள்வதற்கு குளோபல் வார்மிங் போன்ற பிரச்சனைகளையும்கூட பேசுகின்றன. இந்த நிலையில், வாகனப் பயன்பாடு குறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை பிறழாமல் கடைபிடிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். புவி வெப்பமடைவது பற்றிய பிரச்சனைகளை இந்த அரசியல் கட்சிகள் எப்படி அணுகப்போகின்றன? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளப்போகின்றன? என்பதைப் பற்றியெல்லாம் தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறவேண்டும் என அரசியல் கட்சிகளிடம் சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒன்றிணைந்து இப்படியான பிரச்சனைகள் குறித்த மாற்றுத் தேர்தல் அறிக்கை ஒன்றை முன்வைத்தாலும் நல்லது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வாகன பயன்பாடு குறித்து தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மேலும் வலிமைப்படுத்தப்பட வேண்டும். வாகனங்களுக்கு அனுமதி பாஸ் வழங்கும்போது அந்த வாகனங்கள் கார்பன் டை ஆக்ஸைடு பற்றிய தர அளவுகோல்களை நிறைவேற்றுகின்றனவா என்பதை ஆராய்ந்து அதன்பிறகே அனுமதி வழங்கவேண்டும். இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளையும், உதவியையும் தேர்தல் ஆணையம் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் நேரத்தில் ஊழல், வன்முறை ஆகியவை தலையெடுத்துவிடக் கூடாது. அப்படி அவை தலைதூக்குமேயானால் அது நமது ஜனநாயகத்தை மாசுபடுத்திவிடும் என்று விழிப்போடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதுதான். ஜனநாயகம் மாசு படாமல் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நமது சுற்றுச்சூழல் மாசு படாமல் காக்கவேண்டியதும் அவசியம். இதை தேர்தல் ஆணையமும், நமது அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்வார்களா?

No comments:

Post a Comment