Thursday, May 5, 2016

மெஜாரிட்டி ஆட்சியின் கேடு!

( 2014 ஆம் ஆண்டு நான் எழுதிய முகநூல் பதிவு ) 

இந்தத் தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்ற இலக்கோடு பாஜக பிரச்சாரம் செய்தாலும் அதற்கு 172 இடங்களாவது கிடைக்குமா என்ற நிலைதான் உள்ளது. பாஜகவுக்கு மட்டுமல்ல எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

ஒரு கட்சி ஆட்சி அமைவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதே எனது கருத்து. ஒரு கட்சி ஆட்சியின்போதும் கூட்டணி ஆட்சிகளின்போதும் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை உணரலாம். ஜனநாயக ஆட்சி முறையைவிட சர்வாதிகார ஆட்சி முறையைத்தான் நமது தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதைப் பல உதாரணங்களின்மூலம் நிரூபிக்க முடியும். ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவேண்டும் என்பதுகூட இல்லை அதற்கு 200 இடங்கள் கிடைத்துவிட்டாலே ஆபத்துதான். ஏனெனில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க மாநிலக் கட்சிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. 200 இடங்களை வைத்துக்கொண்டே தனிக்கட்சி ஆட்சிபோல ஆளமுடியும் என்பதைக் கடந்தமுறை காங்கிரஸ் காட்டிவிட்டது. 

2004 ஆம் ஆண்டைப்போல 2009 தேர்தலிலும் காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தால் இடதுசாரிக் கட்சிகளும் அதே அளவு இடங்களைப் பெற்றிருந்தால் இந்த அளவுக்கு மோசமான ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்திருக்காது. 

கூட்டணி ஆட்சி என்றால் அதற்குக் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் இருக்கவேண்டும். அந்த ஆட்சியை வழிநடத்த கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும். பெரிய கட்சியின் விருப்பத்துக்கு அதை விட்டுவிடாமல் இவை இரண்டும் கட்டாயமாக்கப்படவேண்டும். 

உருவாகப்போகும் ஆட்சியில் மாநிலக் கட்சிகளுக்கு முக்கிய பங்கிருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த வாய்ப்பைப் பெறப்போகும் கட்சிகள் மாநில நலன்களை முன்னிறுத்தி அதுவொரு கூட்டணி ஆட்சியாக மட்டும் இருந்துவிடாமல் கூட்டாட்சியாக மாறுவதற்கு வழிவகுக்கவேண்டும் என்பதே என் அவா.

Wednesday, May 4, 2016

காயும் புளி



அக்னி நட்சத்திர வெயிலில் வாக்கு சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். உச்சி வெயிலில் ஓட்டுக் கேட்கும்போது வெயிலின் கொடுமையை உடம்பு உணராமல் இருக்க மனதை அவிழ்த்துவிட்டுவிடுவேன். இன்று 'காயும் புளி 'அதன் கண்ணில் பட்டது. 

வானூர் தொகுதி கிராமங்களில் இன்னும்கூட நிறைய புளிய மரங்கள் இருக்கின்றன. ஆங்காங்கே வீடுகளில் புளியம் பழங்களை குவித்து வைத்துக்கொண்டு உடைத்து கொட்டை நீக்கிக் கொண்டிருந்தார்கள். கொட்டை நீக்கிய பிறகுதான் இப்படி காயவைப்பது நடக்கும். நன்றாக காய்ந்த பிறகு பானைகளில் அடைத்துவைத்தால் அடுத்த கோடை வரை குழம்புக்குக் கவலை இல்லை.   

ஊரில் அப்பா வைத்த புளியமரம் உலுக்குவாரின்றி தானே பழம் உதிர்க்கிறது. விரும்புகிறவர்கள் பறித்துக்கொள்கிறார்கள். அப்பா இல்லாவிட்டாலும் அவரைப்போலவே அவர் வைத்த புளியமரம் ஊருக்கு உதவிக்கொண்டிருக்கிறது. 

Monday, May 2, 2016

அம்பேத்கரை நினைவுகூர்தல்….. ரவிக்குமார்

( 2013 டிசம்பர் 6 அன்று தினமணி நாளேட்டில் வெளியான கட்டுரை )  


ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று; அந்தத் தலைவரின் கொள்கைகளை உயிர்ப்புடன் சமூகத்தில் பரவச் செய்வது இன்னொன்று. அம்பேத்கரை நினைவுகூர்கிறவர்களில் பெரும்பாலோர் இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால்தானோ என்னவோ திரும்பிய பக்கமெல்லாம் அவருக்குச் சிலைகள் இருக்கின்றன.ஆனால் அவரது சிந்தனைகளோ புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்றன. 

 

இந்தியாவில் தனது சமகாலத்தில் வாழ்ந்திருந்த மேதைகளையெல்லாம் மிஞ்சக்கூடிய மேதமையோடு திகழ்ந்தவர் அம்பேத்கர். இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு எத்தனையோ நிபுணர்கள் இந்தியாவில் உருவாகிவிட்டார்கள். ஆனால் அவரைப்போல சமூகத்தின் சகல அம்சங்களையும் கணக்கில்கொண்டு மாற்றத்துக்கான வழிகளை முன்மொழியும் ஆற்றல்கொண்ட சிந்தனையாளர் எவரும் உருவானதாகத் தெரியவில்லை.அவர் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார் என்றபோதிலும் சட்டத் துறையில் அவருக்கிருந்த ஞானம் அபாரமானது என்பதை நாடு அறியும். 

 

சட்டத்தின் முதன்மையான பணி என்னவென்று கேட்டால் சமூக ஒழுங்கைக் காப்பதுதான் என நாம் தயங்காமல் பதில் சொல்வோம். ஆனால் சமூகத்தின் குறைபாடுகளைக் களைவதுதான் சட்டத்தின் பணி என்றார் அம்பேத்கர். ஒரு நாட்டின் நாகரிகத்துக்கும் அதன் சட்டங்களுக்கும் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், பண்டைய சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு பண்டைய சமூகங்களில் சட்டம் என்பது தெய்வீகத் தன்மை கொண்டதாகவும் மாற்றப்பட முடியாததாகவும் கருதப்பட்டது. ஆனால் நவீன சமூகங்களிலோ காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப அது மாற்றங்கண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். ”சட்டத்தைத் தெய்வீகத் தன்மை கொண்டதாகக் கருதிய சமூகங்கள் வளர்ச்சி காணாமல் தேங்கிப் போய்விட்டன. அப்படியான நாட்டுக்கு இந்தியா நல்லதொரு உதாரணம்” என்று அவர் விமர்சித்தார். 

 

இந்திய சமூகம் எல்லா காலங்களிலும் அப்படி இருக்கவில்லை. “ உலகில் இந்தியாவைப்போல புரட்சிகள் பலவற்றைக் கண்ட நாடு வேறு எதுவும் இருக்கமுடியாது. ஐரோப்பியர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கு முன்பே தெய்வீகத் தன்மை பொருந்தியதெனக் கூறப்பட்ட சட்டத்துக்கும் மதச்சார்பற்ற சட்டத்துக்கும் இடையிலான மோதலை இந்தியா பார்த்துவிட்டது. மதச்சார்பற்ற சட்டத்துக்கான அடித்தளத்தை நாம் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் பார்க்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கே ’தெய்வத்தின் சட்டம்’ வெற்றிபெற்றுவிட்டது. அதுதான் இந்தியா சந்தித்த பேரழிவுகளிலேயே முக்கியமானது” என்றார் அம்பேத்கர். சட்டம் குறித்த அவரது இந்தப் புரிதலை அவர் தலைமையேற்று உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் காணலாம். சட்டத்தை மாற்றவேண்டும் என அவர் கூறினாரே தவிர எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டபோதிலும் வன்முறைப் பாதையில் ஈடுபடுங்கள் என ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருபோதும் அவர் கூறவில்லை. அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் எந்த சட்டங்கள் அந்த மக்களைப் பாதுகாக்கும் என நினைத்தாரோ அந்த சட்டங்களே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்

 

இந்தியாவைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை இந்த நாடு அங்கீகரிக்கத் தவறிவிட்டது மட்டுமின்றி அவர் எந்த மக்களின் விடிவுக்காக அதிகம் பாடுப்பட்டாரோ அவர்களையே குற்றப் பரம்பரையினராக்கிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் சாதியவாதிகளின் வன்கொடுமைகள் இன்னொருபுறம் அரசு எந்திரத்தின் பாரபட்சம் என இரண்டுவிதமான ஒடுக்குமுறைகளுக்கு இடையே சிக்கி அவர்கள் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய சிறைகளில் அடைப்பட்டுக் இடப்போரின் சமூகப் பின்னணியைப் பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ளலாம்.        

 

இந்திய சிறைவாசிகளை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்: 1.தண்டனை சிறைவாசிகள் 2. விசாரணை சிறைவாசிகள். இதில் விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கையே அதிகம். இந்திய சிறைவாசிகளின் எண்ணிக்கையில் சுமார் 70 விழுக்காட்டினர் விசாரணை சிறைவாசிகள்தான் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது (Delay in Process, Denial of Justice: The Jurisprudence and Empirics of Speedy Trials in Comparative PerspectiveJayanth K.Krishnan,Indiana University Maurer School of Law; C.Rajkumar,O.P. Jindal Global University (JGU) - Jindal Global Law School (JGLS)2007 ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த ஆய்வு,

அப்போது சிறையிலிருந்த 241413 விசாரணை சிறைவாசிகளில் 54324 பேர் (22.50%) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றும், 29941 பேர் (12.40%) பழங்குடியினர் என்றும் தெரிவிக்கிறது. அதாவது ஒட்டுமொத்த விசாரணை சிறைவாசிகளில் 35% பேர் எஸ்சி/எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள். 

 

தேசிய குற்ற ஆவண மையம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி ( Prison Statistics India 2011, Narional Crime Records Bureau, Ministry of Home Affairs, New Delhi ) இந்தியாவிலிருக்கும் மொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கை 366903. அதில் விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கை 241200. அதாவது 65.74% . அதிக காலத்துக்கு விசாரணை சிறைவாசிகளை சிறையில் வைத்திருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறிய பின்னரும்கூட விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

 

2011 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்த 128592 தண்டனைக் கைதிகளில். 28033 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 18292 பேர் பழங்குடியினத்தவர். இதில் எஸ்சி/எஸ்டி/முஸ்லிம் ஆகிய மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் கூட்டிப் பார்த்தால் 69268 வருகிறது. அதாவது ஒட்டுமொத்த தண்டனைக் கைதிகளில் அவர்கள் மட்டும் 53.87 %  உள்ளனர். 

 

அப்போதிருந்த 241200 விசாரணைக் கைதிகளில் முஸ்லிம்கள் 51206 பேர், கிறித்தவர்கள் 7699 பேர்,தாழ்த்தப்பட்டோர் 53794 பேர், பழங்குடியினர் 31652 பேர். இந்த நான்கு சமூகத்தவரையும் சேர்த்துப் பார்த்தால் 144351 வருகிறது. அதாவது மொத்த விசாரணைக் கைதிகளில் இந்த நான்கு சமூகத்தவரின் பங்கு 59.85% ஆகும். 

 

இந்திய அளவில்தான் இந்த நிலையென்றால் தமிழகத்தின் நிலையோ இன்னும் மோசமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்த தண்டனை சிறைவாசிகள் 5200 பேரில் தாழ்த்தப்பட்டோர் 1609 ( 30.95%), பழங்குடியினர் 176 (3.38%), முஸ்லிம்கள் 671 (12.90%), கிறித்தவர்கள் 999 (19.21%) . இந்த நான்கு பிரிவினரையும் சேர்த்தால் மொத்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் அது 66.44% ஆகும். 

 

அதே ஆண்டில் தமிழக சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 7682. அதில் முஸ்லிம்கள் 943 (12.27%) தாழ்த்தப்பட்டோர் 2783 (36.22%) பழங்குடியினர் 757 (9.85%).கிறித்தவர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை 1213 பேர் ( 15.79%) இந்த  நான்கு பிரிவினரையும் சேர்த்தால் 2011 ஆம் ஆண்டில் மொத்தமாக இருந்த  7682 விசாரணைக் கைதிகளில் அவர்களது எண்ணிக்கை 74.14% ஆகும். இந்திய அளவிலான விழுக்காட்டைவிடவும் தமிழகத்தில் அதிக அளவில் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டைவிடவும் 2012 இல் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. முந்தைய ஆண்டில் 1609 ஆக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1748 ஆகவும் , 2783 ஆக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 3442 ஆகவும் உயர்ந்துவிட்டது.அது போதாதென்று தடுப்புக் காவல் சட்டங்களிலும்கூட அதிக என்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களே சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில்தான்  523 பேர் தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 202 பேர் தாழ்த்தப்பட்டவர்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும் பழங்குடியினர் 36 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.      

 

குற்றமிழைப்பவர்களைத் தண்டிப்பது இயல்புதானே இதில் சாதி பார்க்கலாமா என கேட்கப்படலாம். குற்றமிழைப்பவர்கள் தப்பிவிடுவதும் அப்பாவிகள் வேண்டுமென்றே குற்றவாளிகளாக்கப்படுவதும் அதிகரித்து வருவதால்தான் இதை நமது தண்டனை அமைப்பின் ஓரவஞ்சனை என நாம் குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் எப்படி கறுப்பின மக்கள் பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறார்களோ அப்படித்தான் இங்கே தலித் மக்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.அவர்களை சாதிய வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்கென இயற்றப்பட்ட சட்டத்தை செயல்படுத்தாமலிருப்பதும் அவர்கள்மீது பொய்வழக்குகளைத் தொடுப்பதும் அன்றாட நடைமுறையாகிவிட்டது. இப்போது அதிகம் விவாதிக்கப்படும் குஜராத்தை விடவும் தமிழ்நாட்டில் தலித்துகளின் நிலையும் சிறுபான்மையினரின் நிலையும் மோசமாக இருக்கிறது. இந்த இழிநிலையை மாற்றுவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுதான்  அம்பேத்கரை நினைவுகூரும் சிறப்பான வழிமுறையாக இருக்கும். தமிழ்நாட்டின் தலித் அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் அதற்காக இன்று உறுதியேற்றுக்கொள்வார்களா?